ArumugaKaumaram dot com - Dedicated Website for Lord Muruga and His Devotees

புலவர் பெருமான் நக்கீரர்
அருளிய
திருமுருகாற்றுப்படை

ThirumurugAtruppadai
by Poet Nakkeerar

Kaumara Chellam
திருமுருகாற்றுப்படை - 6 - பழமுதிர்சோலை
ThirumurugAtruppadai - 6 - PazhamuthirchOlai
thirumurugatruppadai 1 திருப்பரங்குன்றம்   2 திருச்சீரலைவாய் (திருச்செந்தூர்) 
 3 திரு ஆவினன்குடி (பழநி)   4 திரு ஏரகம் (சுவாமிமலை) 
 5 குன்றுதோறாடல்   6 பழமுதிர்சோலை 
 நேரிசை வெண்பாக்கள் 

 முகப்பு   அட்டவணை   முன்னுரை   நன்றி   தேடல்   முழுப்பாடல் 
 home   contents  PDF in English search
select previous page
select next page

தமிழிலும் ஆங்கிலத்திலும் பொருள் எழுதியது
பேராசிரியர் சிங்காரவேலு சச்சிதானந்தம் (மலேசியா)

Meanings in Tamil and English by Dr. Singaravelu Sachithanantham (Malaysia)

Dr. Singaravelu Sachithanantham  

திருமுருகாற்றுப்படை 6 - பழமுதிர்சோலை " சிறுதினை மலரொடு விரைஇ மறிஅறுத்து - - - - - - 218

 வாரணக்கொடியொடு வயிற்பட நிறீஇ

 ஊர்ஊர் கொண்ட சீர்கெழு விழவினும் - - - - - - 220

 ஆர்வலர் ஏத்த மேவரு நிலையினும்

 வேலன் தைஇய வெறிஅயர் களனும்

 காடும் காவும் கவின்பெறு துருத்தியும்

 யாறும் குளனும் வேறுபல் வைப்பும்

 சதுக்கமும் சந்தியும் புதுப்பூங் கடம்பும்

 மன்றமும் பொதியிலும் கந்துடை நிலையினும் ..." - - - - - - 226


தெளிவுரை:

"சிறிய தினை அரிசியைப் பூக்களுடன் கலந்து பல பாத்திரங்களில்
பரப்பி 'பிரப்பு அரிசி'யாய் வைத்து, ஆட்டுக் கிடாயை அறுத்து,
கோழிக் கொடியை அதற்குரிய இடத்தில் நிறுத்தி ஊர்தோறும்
கொண்டாடப்படும் பெருமையுடைய விழாவிலும், அன்புடைய பக்தர்கள்
திருமுருகப்பெருமானை வழிபட்டு போற்றும் பொருத்தமான இடத்திலும்
வேலன் மிக்க மகிழ்ச்சியுடன் ஆடும் 'வெறியாடு' களத்திலும், காட்டிலும்,
சோலையிலும், அழகான [தீவு போன்ற] ஆற்றிடைக்குறையிலும், ஆறு,
குளம் ஆகியவற்றின் கரைகளிலும், வேறு பல இடங்களிலும், நான்கு
தெருக்கள் சந்திக்கும் சதுக்கத்திலும், மூன்று தெருக்கள் சந்திக்கும்
முச்சந்தியிலும், புதுமலர்களை உடைய கடம்பு மரத்தினடியிலும், ஊரின்
நடுவில் உள்ள மரத்தினடியிலும், அம்பலத்திலும், கந்து நடப்பட்டுள்ள
இடத்திலும் ..."

அரும்பத அகராதி:

சிறு தினை = சிறிய தினை அரிசி;
விரைஇ = கலந்து;
மறி = ஆட்டுக்கிடாய்;
வாரணக்கொடி = கோழிக்கொடி;
வயிற்பட = தக்க இடத்தில் அமையுமாறு;
நிறீஇ = நிறுத்தி;
ஆர்வலர் = திருமுருகப்பெருமானின் பக்தர்கள்;
மேவரு நிலையினும் = விரும்பி வருகின்ற இடந்தோறும்;
வேலன் தைஇய = வேலன் இயற்றிய;
வெறிஅயர் களனும் = மிகுதியான மகிழ்ச்சியோடு ஆடும் களத்திலும்;
காடும் காவும் = காட்டிலும் சோலையிலும்;
கவின்பெரு துருத்தியும் = அழகு பொருந்திய [சிறு தீவு போன்ற]
        ஆற்றிடைக்குறையிலும்;
யாறும் குளனும் = ஆறு, குளம் ஆகியவற்றின் கரைகளிலும்;
சதுக்கமும் = நான்கு தெருக்கள் சந்திக்கும் சதுக்கத்திலும்;
சந்தியும் = மூன்று தெருக்கள் சந்திக்கும் முச்சந்தியிலும்;
புதுபூங் கடம்பும் = புதிய பூக்களை உடைய கடம்பு மரத்தினடியிலும்;
மன்றமும் = ஊரின் நடுவே உள்ள மரத்தினடியிலும்;
பொதியிலும் = மக்கள் கூடும் பொது இடமான 'பொதியில்'
        அல்லது அம்பலத்திலும்;
கந்து உடை நிலையினும் = கந்து நடப்பட்டுள்ள இடத்திலும்.

- - - - - - - - -


 " மாண்தலைக் கொடியொடு மண்ணி அமைவர - - - - - - 227

 நெய்யோடு ஐயவி அப்பி ஐதுஉரைத்து

 குடந்தம்பட்டு கொழு மலர் சிதறி

 முரண்கொள் உருவின் இரண்டுஉடன் உடீஇ - - - - - - 230

 செந்நூல் யாத்து வெண்பொறி சிதறி

 மதவலி நிலைஇய மாத்தாள் கொழுவிடைக்

 குருதியொடு விரைஇய தூவெள் அரிசி

 சில்பலிச் செய்து பல்பிரப்பு இரீஇ

 சிறுபசு மஞ்சளொடு நறுவிரை தெளித்து - - - - - - 235

 பெருந்தண் கணவீர நறுந்தண் மாலை

 துணைஅற அறுத்துத் தூங்க நாற்றி

 நளிமலைச் சிலம்பில் நல்நகர் வாழ்த்தி

 நறும்புகை எடுத்து குறிஞ்சி பாடி

 இமிழ்இசை அருவியொடு இன்இயம் கறங்க - - - - - - 240

 உருவப் பல்பூத் தூஉய் வெருவரக்

 குருதிச் செந்தினைப் பரப்பி குறமகள்

 முருகுஇயம் நிறுத்து முரணினர் உட்க

 முருகுஆற்றுப்படுத்த உருகெழு வியல்நகர் ..." - - - - - - 244


தெளிவுரை:

"சிறப்பான முதன்மை பொருந்திய கோழிக் கொடியைப் பொருத்தமாக
நிறுத்தி, நெய்யுடன் வெண்மையான சிறு கடுகினைக் கலந்து [கோயிலின்
வாயிலில்] அப்பி, [திருமுருகப்பெருமானின் திருப்பெயரை] மென்மையாக
உரைத்து, இரு கைகளையும் கூப்பி வணங்கி, வளம் பொருந்திய
செழுமையான மலர்களைத் தூவி, வெவ்வேறு நிறமுடைய இரு
ஆடைகளை ஒன்றன் மேல் ஒன்றாக அணிந்து, கையில் சிவப்பு நூல்
[காப்பு நூலாக] கட்டப்பெற்று, வெண்மையான பொரியைத் தூவி,
வலிமை வாய்ந்த ஆட்டு கிடாயின் இரத்தம் கலந்த தூய வெண்மையான
பிரப்பு அரிசியை பலி அமுதாக பல இடங்களில் வைத்து, சிறு
பசுமஞ்சளையும் நல்ல நறுமணப் பொருள்களையும் பல இடங்களில்
தூவித் தெளித்து, செவ்வரளி மலரால் ஆகிய மாலையை சீராக நறுக்கி
கோயிலைச் சுற்றித் தொங்கவிட்டு, செறிவான மலைப் பக்கங்களிலுள்ள
ஊர் வாசிகள் அனைவரும் திருமுருகப்பெருமானை வாழ்த்திப்
பாடுகின்றனர்; மணப் புகையை எடுத்து ஆராதனை செய்கின்றனர்;
குறிஞ்சிப் பண்ணில் இயற்றப்பெற்ற பாடல்களைப் பாடுகின்றனர்;
மலை மீதிருந்து விழும் அருவியின் ஓசைக்கேற்ப இசைக் கருவிகளை
ஒலிக்கின்றனர்; பல்வேறு வடிவமுடைய அழகான பூக்களைத்
தூவுகின்றனர்; காண்பவர்களுக்கு அச்சம் விளைவிக்கும் வகையில்
இரத்தத்தோடு கலந்த தினை அரிசியைப் பரப்பி வைத்துள்ளனர்;
திருமுருகப்பெருமானுக்கு விருப்பமான [குறிஞ்சி யாழ், துடி,
தொண்டகம், சிறுபறை போன்ற] இசைக் கருவிகளைக் குறமகள்
இயக்குகின்றாள். மாறுபட்ட உள்ளம் உடையவர்களும் அஞ்சுமாறு
அந்த சூழ்நிலை அமைகின்றது; இவ்வாறு திருமுருகன்பால்
வழிப்படுத்துகின்ற அழகு பொருந்திய அகன்ற ஊரில் கோயில் வழிபாடு
அமைகின்றது ..."

அரும்பத அகராதி:

மாண்தலை = சிறப்பான முதன்மையுடைய;
கொடி = கோழிக் கொடி;
மண்ணி = நிறுவி, அமைத்து;
ஐயவி = வெண்மையான சிறு கடுகு;
ஐது உரைத்து = [திருமுருகப்பெருமானின் திருப்பெயரை]
        மென்மையாக உரைத்து;
குடந்தம் பட்டு = கைகளைக் குவித்து வணங்கி; நான்கு
        விரல்களையும் மடக்கி பெருவிரலை மார்பில் நிறுத்தி வணங்குவது
        'குடந்தம்' எனப்படும் [மாணிக்கனார் 1999: 179];
முரண்கொள் உருவின் இரண்டு உடன் உடீஇ = வெவ்வேறு
        நிறமுடைய இரு ஆடைகளை ஒன்றன் மேல் ஒன்றாக ஒருங்கே
        அணிந்து;
செந்நூல் = சிவப்பு நூல்;
யாத்து = கட்டி, அணிந்து;
மதவலி நிலைஇய மாத்தாள் கொழுவிடைக் குருதியொடு
விரைஇய தூவெள் அரிசி'
= மிகுதியான வலிமையினையும்
        நிலைபெற்ற பெரிய தொடையினையும் உடைய கொழுவிய
        ஆட்டுக்கிடாயின் இரத்தத்துடன் கலந்த தூய
        வெண்மையான அரிசி;
சில்பலி செய்து = சிறுபலி அமுதாக இட்டு;
பல் பிரப்பு இரீஇ = தினை அரிசியைப் பல பாத்திரங்களில்
        இட்டு பரப்பி வைத்து;
சிறு பசுமஞ்சள் = ஒருவகையான மஞ்சள்;
நறுவிரை = சந்தனம் போன்ற நறுமணமுடைய பொருட்கள்;
பெருந்தண் கணவீரம் = பெரிய குளிர்ந்த சிவந்த அலரிமாலை
        [செவ்வலரிப் பூக்களாலாகிய மாலை];
நறுந்தண்மாலை அறுத்து துணையற தூங்க நாற்றி = நறுமண
        மாலையை, முனை ஒத்திருக்கும்படி அறுத்து [அவற்றிற்கு]
        இணையில்லாத வகையில் [அவை] அசையுமாறு
        அவற்றைத் தொங்கவிட்டு;
நளி மலை சிலம்பில் = செறிந்த மலைப் பக்கத்தில் உள்ள;
நல் நகர் வாழ்த்தி = நல்ல ஊர்களை வாழ்த்தி;
நறும்புகை எடுத்து = நறுமணம் உடைய புகையை கையில் எடுத்து
        ஆராதனை செய்து;
குறிஞ்சி பாடி = குறிஞ்சி நிலத்திற்குரிய பண்ணில் இயற்றப்பெற்ற
        பாடல்களைப் பாடி;
இமிழ் இசை அருவியொடு இன் இயம் கறங்க = மலை மீதிருந்து
        விழும் அருவியின் ஓசைக்கேற்ப இனிய இசை முழங்க;
வெருவரக் குருதிச் செந்தினை பரப்பி = [காண்பவர்களுக்கு]
        அச்சத்தை விளைவிக்கும் வகையில் இரத்தத்துடன் கலந்த சிவந்த
        தினையைப் பரவலாக வைத்து;
முருகு இயம் = திருமுருகப்பெருமான் விரும்பும் குறிஞ்சி யாழ், துடி,
        தொண்டகப் பறை போன்ற இசைக் கருவிகள்;
உருகெழு = அச்சம் பொருந்திய;
வியன் நகர் = மலைப் பக்கத்தில் உள்ள பெரிய ஊர்களில்
        அமைந்துள்ள கோயில்கள்.

- - - - - - - - -


 " ஆடுகளம் சிலம்பப் பாடி பலவுடன் - - - - - - 245

 கோடு வாய்வைத்து கொடுமணி இயக்கி

 ஓடாப் பூட்கைப் பிணிமுகம் வாழ்த்தி

 வேண்டுநர் வேண்டியாங்கு எய்தினர் வழிபட

 ஆண்டுஆண்டு உறைதலும் அறிந்த வாறே ..." - - - - - - 249


தெளிவுரை:

"அவ்வாறு, மிகுதியான மகிழ்ச்சியுடன் ஆடிய களத்தில் ஆரவாரம்
ஏற்படுவதற்குரிய பாடல்களைப் பாடி, ஊது கொம்புகள் பலவற்றையும்
ஊதி, வளைந்த மணியினையும் ஒலிக்கச் செய்து, என்றென்றும் கெடாத
வலிமையை உடைய 'பிணிமுகம்' எனப்படும் யானையை [அல்லது
மயிலினை] வாழ்த்தி, தாம் விரும்பும் அருட்கொடைகளை விரும்பியவாறு
அடையவேண்டி அடியார்கள் வழிபடுவதற்கென்று, அந்தந்த இடங்களில்
திருமுருகப்பெருமான் தங்கவும் செய்வான் என்று யான் அறிந்தவற்றை
அறிந்த வண்ணமே உரைத்தேன் ..."

அரும்பத அகராதி:

ஆடுகளம் = மிகுதியான மகிழ்ச்சியுடன் ஆடும் இடம்;
சிலம்ப = ஒலிக்க;
பலவுடன் கோடு வாய்வைத்து = பல ஊது கொம்புகளை வாயில்
        வைத்து ஊதி;
கொடுமணி இயக்கி = வளைந்த மணியினை ஒலிக்கசெய்து;
ஓடாப்பூட்கை = என்றென்றும் கெடாத வலிமை;
பிணிமுகம் = யானை/மயில்;
வேண்டுநர் வேண்டியாங்கு எய்தினர் வழிபட = விரும்பும்
        அருட்கொடைகளை விரும்பியவாறே பெறவேண்டியவர்கள்
        வழிபடும் பொருட்டு;
ஆண்டு ஆண்டு உறைதலும் அறிந்த வாறே = அந்தந்த
        இடங்களில் திருமுருகப்பெருமான் தங்கவும் செய்வான் என்று
        யான் அறிந்தவற்றை அறிந்த வண்ணமே உரைத்தேன் [என்று
        திருமுருகப்பெருமான்பால் அடியார்களை ஆற்றுபடுத்தும் புலவர்
        பெருமான் கூறுகின்றார்].

- - - - - - - - -


 " ஆண்டு ஆண்டு ஆயினும்ஆக காண்தக - - - - - - 250

 முந்துநீ கண்டுழி முகன்அமர்ந்து ஏத்தி

 கைதொழூஉப் பரவி காலுற வணங்கி

 நெடும்பெருஞ் சிமையத்து நீலப்பைஞ்சுனை

 ஐவருள் ஒருவன் அங்கை ஏற்ப

 அறுவர் பயந்த ஆறுஅமர் செல்வ - - - - - - 255

 ஆல்கெழுகடவுள் புதல்வ மால்வரை

 மலைமகள் மகனே மாற்றோர் கூற்றே

 வெற்றி வெல்போர்க் கொற்றவை சிறுவ

 இழையணி சிறப்பின் பழையோள் குழவி

 வானோர் வணங்கு வில் தானைத்தலைவ - - - - - - 260

 மாலை மார்ப நூல்அறி புலவ

 செருவில் ஒருவ பொருவிறல் மள்ள

 அந்தணர் வெறுக்கை அறிந்தோர் சொல்மலை

 மங்கையர் கணவ மைந்தர் ஏறே

 வேல்கெழு தடக்கைச் சால்பெருஞ் செல்வ - - - - - - 265

 குன்றம் கொன்ற குன்றாக் கொற்றத்து

 விண்பொரு நெடுவரைக் குறிஞ்சிக்கிழவ

 பலர்புகழ் நன்மொழிப் புலவர் ஏறே

 அரும்பெறல் மரபின் பெரும்பெயர் முருக

 நசையுநர்க்கு ஆர்த்தும் இசைபேர் ஆள - - - - - - 270

 அலந்தோர்க்கு அளிக்கும் பொலம்பூண் சேஎய்

 மண்டுஅமர் கடந்தநின் வென்றுஆடு அகலத்து

 பரிசிலர்த் தாங்கும் உருகெழு நெடுவேஎள்

 பெரியோர் ஏத்தும் பெரும்பெயர் இயவுள்

 சூர் மருங்கு அறுத்த மொய்ம்பின் மதவலி - - - - - - 275

 போர்மிகு பொருந குரிசில் எனப்பல

 யான்அறி அளவையின் ஏத்தி ஆனாது ..." - - - - - - 277


தெளிவுரை:

"அந்தந்த இடங்களில் திருமுருகப்பெருமானைக் காணும் நற்பேறுடைய
அடியார்கள் திருமுருகப்பெருமானைக் காணும் நல்லதொரு
வாய்ப்பினைப் பெற்றால், முகம் மலர்ந்து திருமுருகப்பெருமானை
விரும்பி நோக்கி, வாயால் வாழ்த்தி கைகளைத் தலை மீது குவித்து
வணங்கி, திருமுருகப்பெருமானின் திருவடிகளில் தலை பொருந்தும்படி
விழுந்து வணங்கி, '[சிவபெருமானின் நெற்றிக் கண்ணிலிருந்து தோன்றிய
தீப்பொறிகளை வானம், காற்று, தீ, நீர், நிலம் ஆகிய ஐவருள் ஒருவரான]
தீயானது தன் அழகிய கையிலே தாங்கிக் கொண்டுவந்து நெடிய பெரிய
இமய மலையின் உச்சியில் 'சரவணம்' எனப்படும் தருப்பை வளர்ந்த
பசுமையான சுனையில் இடவும், கார்த்திகைப் பெண்டிர் அறுவரால்
பாலூட்டப்பெற்று வளர்ந்த ஆறு திருமுகங்களையுடைய பெருமானே!

கல்லால மரத்தின் கீழ் எழுந்தருளிய சிவபெருமானின் புதல்வரே!

இமயவான் மகளான பார்வதி தேவியாரின் மைந்தரே!

[தீயோராகிய] பகைவர்களுக்கு யமன் போன்றவறே!

வெற்றியை உடைய வெல்லும் போர்த் தெய்வமான கொற்றவையின்
மைந்தரே!

அணிகலன்களை அணிந்த தலைமைத்துவம் உடைய காடுகிழாளின்
குழந்தையே!

வானவர்களாகிய தேவர்களின் விற்படைகளுக்குத் தலைவரே!

கடம்பு மலர்களாலாகிய மாலையினை அணிந்த மார்பினை உடையவரே!

அனைத்து மெய்யான நூல்களின் உண்மையான பொருளை அறியும்
புலமை உடையவரே!

போர்த் தொழிலில் ஒப்பற்றவரே!

[உலகமெலாம் அழியும் காலத்திலும் தீயோரை எதிர்த்துப்]
போரிடுவதற்கென்று எஞ்சி நிற்கும் ஒரே கடவுளே!

அந்தணர்களுக்குச் செல்வமாக விளங்குபவரே!

புலைமையுடைவர்கள் புகழ்ந்து கூறும் சொற் கூட்டமாய் விளங்குபவரே!

தெய்வயானை-அம்மையார், வள்ளி-அம்மையார் ஆகிய மங்கையரின்
கணவரே!

வலிமை உடைய வீரர்களுக்குள் அரியேறு போன்றவரே!

ஞானசக்தியாகிய வேலினைப்பெற்று விளங்கும் பெருமை பொருந்திய
கையினை உடைய செல்வரே!

கிரௌஞ்ச மலையில் ஒளிந்திருந்த சூரபன்மனை அழித்து வென்ற
குறையில்லாத வெற்றியையும் பெருமையையும் உடையவரே!

வானத்தைத் தொடும் குறிஞ்சி நிலத்திற்கு உரிமை இடைய தலைவரே!

உலகில் உள்ள எல்லா மொழிகளிலும் நூல் இயற்றும்
புலவர்களுக்கெல்லாம் தலைவரே!

மூத்த பரம்பரையினையும் சிறந்த புகழினையும் உடையவராக
என்றென்றும் இளைஞனாகவும் அழகனாகவும் திகழ்வதால் முருகன்
என்னும் திருப்பெயரை உடையவரே!

விரும்பிச் செல்கின்றவர் வேண்டும் எல்லாவற்றையும் தந்தருளும்
கொடை வள்ளலே!

பொருள் இல்லாது துன்புறுவோர்களுக்குத் தரவேண்டியே
பொன்னாலாகிய அணிகலன்களை அணிந்துள்ளவரே!

பரிசில் பெற வருகின்ற அனைவரையும் தழுவித் தாங்கிக் காத்து
அருள்பவரே!

அசுரன் சூரபன்மனையும் அவன் தன் சுற்றத்தினரையும் அழித்து
வென்ற காரணத்தால் 'மதவலி' என்னும் பெயரை உடையவரே!

மிகச் சிறப்பாகப் போரிடும் இளமை பொருந்திய வீரரே!

உண்மையான தலைவரே!'

... எனப் பல வகைகளில் யான் அறியும் அளவு கூறியவாறு
திருமுருகப்பெருமானைத் துதித்து வணங்குவாயாக ..."

அரும்பத அகராதி:

ஆண்டாண்டு ஆயினும் ஆக = [திருமுருகப்பெருமான் மகிழ்ந்து
        உறையும் அனைத்து இடங்களிலும், அல்லது
        திருமுருகப்பெருமானைக் கண்டு தரிசிக்கும் அனைத்து
        இடங்களிலும்;
காண் தக முந்துநீ கண்டுழி = [திருமுருகப்பெருமானைத்
        தரிசிக்கும் நற் பேற்றினைப் பெற்றிருந்து] அப்பெருமானைக்
        காணப்பெற்றால்;
முகன் அமர்ந்து ஏத்தி = முகம் மலர்ந்து வாய்ச் சொற்களால் போற்றி;
கைதொழூஉப் பரவி கால்உற வணங்கி = இரு கைகளையும்
        தலை மீது குவித்து புகழ்ந்து வணங்கி, திருமுருகப்பெருமானின்
        திருவடிகளில் தலை பொருந்தும்படி விழுந்து வணங்கி;
சிமையம் = இமயமலையின் உச்சி;
நீலப் பைஞ்சுனை = நீல நிறமுடைய 'சரவணம்' எனப்படும்
        தருப்பையை உடைய பசுமையான சுனையில் [பொய்கையில்];
ஐவருள் ஒருவன் = 'வானம், நிலம், நீர், காற்று, நெருப்பு' ஆகிய
        ஐம் பூதங்களில் ஒன்றாகிய நெருப்பு;
அங்கை = உள்ளங்கை;
அறுவர் = [செவிலித் தாய்களாகப் பணியாற்றிய] கார்த்திகைப்
        பெண்டிர் அறுவர்;
ஆல்கெழு கடவுள் = கல்லால மரத்தின் கீழ் இருந்த சிவபெருமான்;
மால்வரை = பெருமையுடைய இமயமலையின் அரசன்;
மலைமகள் = இமயமலை அரசனின் திருமகளான பார்வதி தேவியார்;
மாற்றோர் கூற்றே = [தீயோராகிய] பகைவருக்கு எமன் போன்றவரே;
வெற்றி வெல்போர்க் கொற்றவை = வெற்றியை உடைய வெல்லும்
        போர்க் கடவுளான கொற்றவை [துர்க்கை];
பழையோள் = காடுகிழாள் [சிவபெருமானின் சக்தி];
வானோர் வணங்கு, வில்தானைத் தலைவ = வானவராகிய
        தேவர்கள் வணங்குவதற்குரியவரும், 'தேவசேனாபதி' எனப்படும்
        வானவர்களின் விற்படைகளுக்குத் தலைவருமான
        திருமுருகப்பெருமான்;
மாலை மார்ப = கடம்பு மரத்தின் மலர்களாலாகிய மாலை
        அணியபெற்ற மார்பினையுடைய திருமுருகப்பெருமான்;
நூல்அறி புலவ = மெய்யான நூல்களின் உண்மையான பொருளை
        அறியும் புலமையுடைய திருமுருகப்பெருமான்;
செருவில் ஒருவ = [உலகமெல்லாம் அழியும் காலத்திலும் தீய
        சக்திகளை எதிர்த்துப்] போரிடுவதற்கென்று எஞ்சி நிற்கும் ஒரே
        கடவுள் திருமுருகப்பெருமான்;
பொருவிறல் மள்ள = போரில் வெற்றிபெறும் மாவீரராகிய
        திருமுருகப்பெருமான்;
அந்தணர் வெறுக்கை = அழகிய கருணை உடைய அந்தணர்களுக்கு
        செல்வமாக விளங்கும் திருமுருகப்பெருமான்;
அறிந்தோர் சொல்மலை = திருமுருகப்பெருமானின் இயல்பை
        உண்மையாக அறிந்தோர் இயற்றியுள்ள மெய்ந்நூல்களில் அடங்கிய
        சொற்களின் மலையாகக் காட்சியளிப்பவர் திருமுருகப்பெருமான்;
மங்கையர் கணவ = தெய்வயானை-அம்மையார், வள்ளியம்மையார்
        ஆகிய மங்கையரின் கணவராகிய திருமுருகப்பெருமான்;
மைந்தர் ஏறே = வலிமை உடையோர், அல்லது இளைஞர்
        அனைவருக்கும் 'அரிமா' போன்ற தலைவரான
        திருமுருகப்பெருமான்;
வேல்கெழு தடக்கைச் சால்பெருஞ்செல்வ = தீமையை அழிக்க
        வல்ல ஞானசக்தியாகிய வேலினைப் பெற்று விளங்கும் பெருமை
        பொருந்திய கையினை உடைய செல்வன் திருமுருகப்பெருமான்;
குன்றம் கொன்ற குன்றாக் கொற்றத்து = கிரௌஞ்ச மலையில்
        ஒளிந்திருந்த அசுரர் தலைவன் சூரபன்மனைக் கொன்று
        அழித்தவரும், குறையில்லாத வெற்றியை உடையவருமான
        திருமுருகப்பெருமான்;
விண்பொரு நெடுவரைக் குறிஞ்சிக்கிழவ = வானத்தைத் தொடும்
        வகையில் மிக உயரமான குறிஞ்சி நிலத்திற்கு உரிமையுடைய
        தலைவர் திருமுருகப்பெருமான்;
பல்புகழ் நன்மொழிப் புலவர் ஏறே = பலரும் புகழும்படி
        உலகத்தின் அனைத்து மொழிகளிலும் நூல் இயற்றும் புலவர்கள்
        அனைவருக்கும் 'அரிமா' போன்ற தலைவராக விளங்கும்
        திருமுருகப்பெருமான்;
அரும்பெறல் மரபின் பெரும்பெயர் முருக = பெறுதற்கு அரிய
        மூத்த பரம்பரையினையும் சிறந்த புகழினையும் உடைய
        என்றென்றும் இளமையும் அழகும் உடையவர் என்னும் பொருளைத்
        தரும் பெருமையுடைய 'முருகன்' என்னும் திருப்பெயரை உடைய
        திருமுருகப்பெருமான்;
நசையுநர்க்கு ஆர்த்தும் இசைபேர் ஆள = 'விரும்பிச் செல்கின்றவர்
        வேண்டிய அனைத்தையும் தரும் புகழையுடைய வள்ளல் பெருமான்
        திருமுருகப்பெருமான்;
அலந்தோர்க்கு அளிக்கும் பொலம்பூண் சேஎய் = பொருள்
        இல்லாது துன்புறுவோர்களுக்குக் கொடுப்பதற்காகவே
        பொன்னாலாகிய அணிகலன்களை அணிந்துள்ள சிவந்த
        திருமேனியன் திருமுருகப்பெருமான்;
மண்டுஅமர் கடந்த நின் வென்றுஆடு அகலத்து
பரிசிலர்த்தாங்கும் உருகெழு நெடுவேஎள்
= போர்க் களத்தில்
        தீயவர்கள் பலரையும் கொன்ற பரந்த மார்பால் பரிசில்பெற
        வருகின்றவர்கள் அனைவரையும் மார்போடு தழுவித்
        தாங்கிக்கொண்டு, தீயவர்களாகிய மற்றவர்களுக்கு அச்சத்தை
        விளைவிக்கும் பெருமையுடைய தலைவராக விளங்கும்
        திருமுருகப்பெருமான்;
பெரியோர் ஏத்தும் பெரும்பெயர் இயவுள் = நற்பண்புடைய
        பெரியோர்கள் போற்றும் பெரும் புகழினையுடைய கடவுள்
        திருமுருகப்பெருமான்;
சூர் மருங்கு அறுத்த மொய்ம்பின் மதவலி = அசுரர் தலைவன்
        சூரபன்மனும் அவன்தன் சுற்றத்தாரும் அழியும்படிச் செய்த
        வலிமையின் தலைசிறந்த 'மதவலி' என்னும் பெயருக்குரிய
        திருமுருகப்பெருமான்;
போர்மிகு பொருந = மிகவும் சிறப்பாகப் போரிடும் வீரர்'
        எனப்போற்றப்படும் திருமுருகப்பெருமான்;
குரிசில் = உண்மைத் தலைவராக விளங்கும் திருமுருகப்பெருமான்;
யான் அறி அளவையின் ஏத்தி = [இறைவனின் தன்மை
        அனைத்தையும் அறிதல் இயலாது ஆகையால்] யான்
        அறிந்துள்ளதை மட்டும் கூறியவாறு போற்றி;
ஆனாது = [அஃதோடு] அமையாமல்.

- - - - - - - - -


 " நின்அளந்து அறிதல் மன்உயிர்க்கு அருமையின் - - - - - - 278

 நின்அடி உள்ளி வந்தனென் நின்னொடு

 புரையுநர் இல்லாப் புலமையோய் எனக் - - - - - - 280

 குறித்தது மொழியா அளவையின் குறித்துஉடன்

 வேறுபல் உருவின் குறும்பல் கூளியர்

 சாறுஅயர் களத்து வீறுபெறத் தோன்றி

 அளியன் தானே முதுவாய் இரவலன்

 வந்தோன் பெரும நின் வண்புகழ் நயந்து என - - - - - - 285

 இனியவும் நல்லவும் நனிபல ஏத்தி

 தெய்வம்சான்ற திறல்விளங்கு உருவின்

 வான்தோய் நிவப்பின் தான்வந்து எய்தி

 அணங்குசால் உயர்நிலை தழீஇ பண்டைத்தன்

 மணங்கமழ் தெய்வத்து இளநலம் காட்டி - - - - - - 290

 அஞ்சல் ஓம்புமதி அறிவல்நின் வரவு என

 அன்புடை நல்மொழி அளைஇ விளிவுஇன்று

 இருள்நிற முந்நீர் வளைஇய உலகத்து

 ஒருநீ ஆகித் தோன்ற விழுமிய

 பெறல் அரும் பரிசில் நல்குமதி பலவுடன் ..." - - - - - - 295


தெளிவுரை:

" 'இறைவனின் தன்மை அனைத்தையும் அளவிட்டறிதல் இயலாது;
எனவே நின் திருவடிகளை அடைய எண்ணி வந்தேன், ஒப்பில்லாத
மெய்யறிவினை உடைய பெருமானே', என்று உரைத்து நீ எண்ணிய
பரிசிலைப்பற்றிக் குறிப்பிடுவதற்கு முன்னர், வெவ்வேறான பல
வடிவுடைய ஏவலாளர்கள், திருவிழா நிகழும் களத்தில் தோன்றுவது
போல பொலிவுடன் தோன்றி, [திருமுருகப்பெருமானை நோக்கி]
'பெருமானே, அறிவு முதிர்ந்த சொற்களையுடைய இந்த இரவலன்
இரங்கத்தக்கவன்; நின் அருளுக்குரியவன்; நின்னுடைய புகழை விரும்பி
வந்துள்ளான்' என்று உரைத்து இனிமையும் உறுதியும் பயக்கும்
சொற்களைக் கூறி நிற்ப, தெய்வத்தன்மையும் வலிமையும் பொருந்திய,
வானத்தைத் தொடும் வடிவினையுடைய திருமுருகப்பெருமான்
நின்முன்னே எழுந்தருள்வான்; ஆயினும் [காண்பவர்களுக்கு]
அச்சத்தைத் தரும் தெய்வ வடிவினை உள்ளடக்கிக்கொண்டு முந்தைய
மணம் கமழும் தெய்வத்தன்மை உடைய இளமை பொருந்திய
வடிவினைக் காட்டி, 'நீ அஞ்சவேண்டாம், உன்னைக் காத்தருள்வேன்,
நின்வருகையை யான் முன்னரே அறிவேன்,' என்று உரைத்து,
அன்புகூர்ந்த பல சொற்களையும் கூறி அருள்வதோடு, இருண்ட
கடலால் சூழப்பட்ட இப் பெரிய உலகத்தில் தனிப்பெருமை வாய்ந்த
ஒருவனாக நீ விளங்குமாறு மற்றவர்களும் பெறுவதற்கு அரிய
பரிசிலைத் தந்தருள்வான்."

அரும்பத அகராதி:

புரையுனர் = ஒத்தவர்;
குறித்து உடன் = குறிப்பிட்ட அப்போதே;
வேறு பல் உரு = பல்வேறு வடிவினை உடைய;
குறும்பல் கூளியர் = குட்டையான பல ஏவலாளர்;
சாறு அயர் களம் = திருவிழா நடைபெறும் இடம்;
வீறுபெறத்தோன்றி = பொலிவுடன் தோன்றி;
அளியன் = இரங்கத்தக்கவன்;
முதுவாய் இரவலன் = அறிவுமுதிர்ந்த சொற்களையுடைய இரவலன்;
தெய்வம் சான்ற = தெய்வத்தன்மை பொருந்திய;
திறல் விளங்கு உரு = வலிமையுடன் விளங்கும் வடிவம்;
வான்தோய் நிவப்பு = வானைத் தொடும் உயரம்;
அணங்கு = வருத்தம், அல்லது அச்சம் விளைவிக்கும் தோற்றம்;
உயர்நிலை தழீஇ = தெய்வத்தன்மையை உள்ளடக்கி;
இளநலம் = என்றென்றும் இளமையுடைய தன்மை;
விளிவு இன்று = கேடு இல்லாமல்;
ஒரு நீயாகித் தோன்ற = உலகத்தில் தனிப்பெரும்
        சிறப்புடையவனாக நீ விளங்குமாறு;
விழுமிய பெறல் அரும் பரிசில் = பெறுவதற்கு அரிதான
        சிறப்புமிகுந்த பரிசில்.

- - - - - - - - -


 " வேறுபல் துகிலின் நுடங்கி அகில் சுமந்து - - - - - - 296

 ஆர முழுமுதல் உருட்டி வேரல்

 பூவுடை அலங்கு சினைபுலம்ப வேர்கீண்டு

 விண்பொரு நெடுவரைப் பரிதியின் தொடுத்த

 தண்கமழ் அலர்இறால் சிதைய நன்பல - - - - - - 300

 ஆசினி முதுசுளை கலாவ மீமிசை

 நாக நறுமலர் உதிர யூகமொடு

 மாமுக முசுக்கலை பனிப்பப் பூநுதல்

 இரும்பிடி குளிர்ப்ப வீசிப் பெருங்களிற்று

 முத்துடை வான்கோடு தழீஇ தத்துற்று - - - - - - 305

 நன்பொன் மணிநிறம் கிளர பொன்கொழியா

 வாழை முழுமுதல் துமியத் தாழை

 இளநீர் விழுக்குலை உதிரத் தாக்கி

 கறிக்கொடிக் கருந்துணர் சாயப் பொறிப்புற

 மடநடை மஞ்ஞை பலவுடன் வெரீஇ - - - - - - 310

 கோழி வயப்பெடை இரிய கேழலொடு

 இரும்பனை வெளிற்றின் புன்சாய் அன்ன

 குரூஉமயிர் யாக்கைக் குடாஅடி உளியம்

 பெருங்கல் விடர்அளைச் செறியக் கருங்கோட்டு

 ஆமா நல்ஏறு சிலைப்பச் சேண்நின்று - - - - - - 315

 இழுமென இழிதரும் அருவி

 பழமுதிர் சோலை மலைகிழ வோனே." - - - - - - 317


தெளிவுரை:

"பலவாகவும் ஒன்றாகவும் கூடிய வெவ்வேறான துகிலால் ஆகிய பல
கொடிகளைப் போன்று [மலை உச்சியிலிருந்து அசைந்து வீழ்கின்ற
நீர்வீழ்ச்சியானது] அகிற்கட்டையைச் சுமந்துகொண்டும், பெரிய சந்தன
மரத்தைச் சாய்த்துத் தள்ளியும், சிறு மூங்கிலின் மலர் பொருந்திய கொம்பு
தனிப்ப வேரைப் பிளந்தும், வானத்தைத் தொடுவது போன்ற நெடிய
மலை மீது கதிரவனைப் போல் தோன்றி ஈக்கள் மொய்க்கின்ற
குளிர்ச்சியும் மணமும் பொருந்திய தேன் கூடு சிதையவும், நல்ல 'ஆசினி'
எனப்படும் பலாப் பழத்தின் பல முற்றிய சுளைகள் நீர்விழ்ச்சியில்
விழுந்து கலக்கவும், மலையின் உச்சியில் உள்ள சுரபுன்னை மரத்தின்
பூக்கள் உதிரவும், கருங்குரங்குடன், கரியமுகத்தை உடைய முசுக்கலை
எனப்படும் பெண் குரங்குகளும் குளிரால் நடுங்கவும், நெற்றியில்
புள்ளிகளை உடைய 'பிடி' எனப்படும் பெண் யானையும் மிகுதியான
குளிர்ச்சியை உணரவும், பெரிய யானையின் முத்தினை ஒத்த
கொம்புகளையும், நல்ல பொன், மணிகள் ஆகியவற்றையும், பொடி
வடிவத்தில் உடைய பொன்னையும் கொண்டு சேர்க்கவும், வாழை
மரத்தின் அடிப்பாகம் ஒடிந்து விழவும், தென்னையின் இளநீர்க்
குலைகள் உதிரவும், மிளகின் கரிய கொத்துகள் விழுந்து சாயவும்,
அழகான இறகைப் புறத்தேயுடையதும் இளமையுடன் கூடிய
நடையையும் உடைய பல மயில்கள் அச்சமுறவும், வலிமையுடைய பெண்
கோழிகளும் அஞ்சி ஓடவும், ஆண் பன்றியுடன், கரிய பனையின் புல்லிய
செறும்பைப் போன்ற கரிய மயிரை உடைய உடலையும் வளைந்த
அடியினையும் உடைய கரடியும் பெரிய கற்குகைக்குள் சென்று சேரவும்,
கரிய கொம்பினையுடைய காட்டுப் பசுவின் நல் எருது அச்சத்தால்
கதறவும், மலையின் உச்சியிலிருந்து 'இழும்' என்னும் ஓசையுடன் குதித்து
விழும் அருவியினையும் முற்றிய பழங்களையும் உடைய
சோலைகளைப்பெற்று விளங்கும் குறிஞ்சி நிலத்திற்கு உரிமை
உடையவர் திருமுருகப்பெருமான்."

அரும்பத அகராதி:

துகிற்கொடி = வெண்ணிறத் துகிலாலான [துணியாலான] கொடி;
அகில் சுமந்து = சாய்த்துத் தள்ளிய அகில் மரக்கட்டைகளைச்
        சுமந்துகொண்டு வரவும்;
ஆரம் = சந்தன மரம்;
முழுமுதல் = பருத்த அடி மரம்;
வேரல் = சிறு மூங்கில்;
அலங்குசினை = அசைகின்ற கிளை;
புலம்புதல் = தனிப்படல்;
வேர் கீண்டு = வேரைப் பிடுங்கி;
விண்பொரு நெடுவரை = வானத்தைத் தொடுவது போன்ற
        உயரமுடைய மலை;
பரிதியின் தொடுத்த = மலை உச்சியில் கதிரவனைப் போல்
        அமைந்த [தேன் கூடு];
தண் கமழ் இறால் = குளிர்ச்சியும் மணமும் உடைய தேன் அடை;
நன் பல் ஆசினி = நல்ல பலாமர வகையில் ஒன்றான ஆசினிப்பலா;
மீமிசை = மிக உயர்ந்த;
நாகம் = சுரபுன்னை மரம்;
யூகம் = கருங்குரங்கு;
முசுக்கலை = ஒருவகை பெண் குரங்கு;
பனிப்ப = குளிரால் நடுங்க;
பூநுதல் இரும்பிடி = நெற்றியில் புள்ளிகளை உடைய கரிய
        பெண் யானை;
வான் கோடு = யானையின் வெண்மையான கொம்பு;
தழீஇ = உள்ளடக்கிக் கொண்டு;
தத்துற்று = குதித்து;
பொன் கொழியா = பொன்னினைப் பொடி வடிவில் கொண்டுவந்து
        கரையோரத்தில் ஒதுக்கி;
வாழை முழுமுதல் = வாழை மரத்தின் அடிப்பகுதி;
துமிய = துண்டாகுமாறு செய்து;
இளநீர் விழுகுலை = உதிர்கின்ற இளநீர்க் குலைகள்;
கறிக்கொடி = மிளகுக் கொடி;
கருந்துணர் சாய = கரிய கொத்துகள் சாய்ந்து விழ;
பொறி = மயிலின் இறகு;
மட நடை மஞ்ஞை = இளமை பொருந்திய நடையை உடைய
        மயில்;
வெரீஇ = அச்சமுற்று;
இரிய = பதறி ஓட;
கேழல் = ஆண் பன்றி;
சாய் = செறும்பு;
வெளிறு = வயிரம் இன்மை;
இரும்பனை = கரிய பனை மரம்;
குரூஉ மயிர் யாக்கை = [கரிய] நிறம் பொருந்திய மயிரை உடைய
        உடல்;
விடர் = வெடிப்பு;
அளை = குகை;
ஆமா = காட்டுப் பசு;
நல் ஏறு = நல்ல எருது;
சிலப்ப = கதற, ஒலிக்க;
இழும் = அருவி மலை உச்சியிலிருந்து விழும்போது கேட்கும் ஒலி.

திருமுருகாற்றுப்படை - 6 - பழமுதிர்சோலை
ThirumurugAtruppadai - 6 - PazhamuthirchOlai
 1 திருப்பரங்குன்றம்   2 திருச்சீரலைவாய் (திருச்செந்தூர்) 
 3 திரு ஆவினன்குடி (பழநி)   4 திரு ஏரகம் (சுவாமிமலை) 
 5 குன்றுதோறாடல்   6 பழமுதிர்சோலை 
 நேரிசை வெண்பாக்கள் 

 முன்னுரை   நன்றி   முழுப்பாடல் 
PDF in English
select previous page
select next page

ThirumurugAtruppadai - 6 - PazhamuthirchOlai

Meanings in Tamil and English by Dr. Singaravelu Sachithanantham (Malaysia)

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 
Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] .[css]