ArumugaKaumaram dot com - Dedicated Website for Lord Muruga and His Devotees

புலவர் பெருமான் நக்கீரர்
அருளிய
திருமுருகாற்றுப்படை

ThirumurugAtruppadai
by Poet Nakkeerar

Kaumara Chellam
திருமுருகாற்றுப்படை - 2 - திருச்சீரலைவாய் (திருச்செந்தூர்)
ThirumurugAtruppadai - 2 - ThiruchcheeralaivAi (ThiruchchendhUr)
thirumurugatruppadai 1 திருப்பரங்குன்றம்   2 திருச்சீரலைவாய் (திருச்செந்தூர்) 
 3 திரு ஆவினன்குடி (பழநி)   4 திரு ஏரகம் (சுவாமிமலை) 
 5 குன்றுதோறாடல்   6 பழமுதிர்சோலை 
 நேரிசை வெண்பாக்கள் 

 முகப்பு   அட்டவணை   முன்னுரை   நன்றி   தேடல்   முழுப்பாடல் 
 home   contents  PDF in English search
select previous page
select next page

தமிழிலும் ஆங்கிலத்திலும் பொருள் எழுதியது
பேராசிரியர் சிங்காரவேலு சச்சிதானந்தம் (மலேசியா)

Meanings in Tamil and English by Dr. Singaravelu Sachithanantham (Malaysia)

Dr. Singaravelu Sachithanantham  

திருமுருகாற்றுப்படை 2 - திருச்சீரலைவாய் [திருச்செந்தூர்] " வைந்நுதி பொருத வடுஆழ் வரிநுதல் - - - - - - 78

 வாடா மாலை ஓடையொடு துயல்வர

 படுமணி இரட்டும் மருங்கின் கடுநடை - - - - - - 80

 கூற்றத் தன்ன மாற்றஅரு மொய்ம்பின்

 கால் கிளர்ந்தன்ன வேழம் மேல்கொண்டு

 ஐவேறு உருவின் செய்வினை முற்றிய

 முடியொடு விளங்கிய முரண்மிகு திருமணி

 மின்உறழ் இமைப்பின் சென்னிப் பொற்ப - - - - - - 85

 நகைதாழ்பு துயல்வரூஉம் வகைஅமை பொலங்குழை

 சேண்விளங்கு இயற்கை வாள்மதி கவைஇ

 அகலா மீனின் அவிர்வன இமைப்ப

 தாஇல் கொள்கைத் தம்தொழில் முடிமார்

 மனன்நேர்பு எழுதரு வாள் நிறமுகனே ..." - - - - - - 90


தெளிவுரை:

"கூர்மையான முனையை உடைய அங்குசம் குத்துவதால் மத்தகத்தில்
ஏற்பட்ட வடுவினையும், புகர் எனப்படும் செம் புள்ளிகளை உடைய
நெற்றியையும், அசையும் நெற்றிப் பட்டத்தையும், [பொன்னாலான]
வாடாத மாலையினையும், இரு பக்கங்களிலும் தாழ்ந்து தொங்குகின்ற
மணியானது மாறி மாறி ஒலிக்கின்ற ஒலியினையும், கடுமையான
வேகத்துடன் நடக்கும் நடையினையும், யமனைப் போன்று தடுப்பதற்கு
அரிதான வலிமையினையும் உடைய, கடுமையாக வீசும் காற்றைப்
போன்று விரைவாகச் செல்லும் ஆண் யானை மீது திருமுருகப்பெருமான்
வீற்றிருக்கின்றார்;

திருமுருகப்பெருமானின் திருமுடியானது, 'தாமம், முகுடம், பதுமம்,
கிம்புரி, கோடகம்' எனப்படும் ஐவ்வேறு வகையில் அலங்கரிக்கப்பட்டு,
மின்னலையொத்த ஒன்றுக்கொன்று நிறத்தால் மாறுபடும் மணிகளாலான
முடியுடன் [கிரீடத்துடன்] காட்சியளிக்கின்றது; திருமுருகப்பெருமானின்
ஒளி பொருந்திய பொன்னால் ஆகிய 'மகரக் குழை' வடிவில் அமைந்த
காதணிகள் தொலை தூரத்தில் உள்ள நிலமெங்கும் ஒளி வீசும் சந்திரனைச்
சூழ்ந்துள்ள விண் மீன்களைப் போல ஒளி வீசி விளங்குகின்றன; குற்றம்
இல்லாத நோன்போடு தாம் மேற்கொண்ட செயல்களை நிறைவு செய்யும்
அடியார்களின் மனத்தில் பொருந்தித் தோன்றும் ஒளிமிக்க நிறமுடைய
திருமுருகப்பெருமானின் [ஆறு] திருமுகங்களில் ..."

அரும்பத அகராதி:

வைந்நுதி = கூர்மையான நுனியை/முனையை உடைய
        அங்குசம் [தோட்டி];
வடு = தழும்பு;
வரி = செம்புள்ளி/புகர்;
நுதல் = நெற்றி;
வாடா மாலை = [பொன்னால் செய்யப்பட்டதால்] வாடாத
        பொன்னரி மாலை;
ஓடை = [யானை முகத்தில் அணியப்படும்] நெற்றிப் பட்டம்;
துயல்வர = அசைய;
படுமணி இரட்டும் மருங்கின் = [யானை தன் கால்களை மாற்றி
        மாற்றி வைத்து நடக்கும்போது] அதன் இரு பக்கங்களிலும் தொங்கும்
        மணிகளும் மாறி மாறி ஒலிக்கும்;
கடு நடை = விரைவான நடை;
கூற்றம் = யமன்;
மொய்ம்பு = வலிமை;
கால் = காற்று;
கிளர்தல் = எழுதல்;
வேழம் = யானை;
முரண்மிகு திருமணி = ஒன்றுடன் ஒன்று நிறத்தால்
        மாறுபட்டிருக்கும் அழகான மணிகள்;
மின் உறழ் = மின்னலைப் போன்று;
இமைப்பு = விளங்குதல்;
சென்னி பொற்ப = திருமுடியில் அழகு செய்ய;
நகை தாழ்பு = ஒளி பொருந்தி;
துயல்வரூஉம் = அசையும்;
பொலங்குழை = பொன்னாலாகிய மகரக் குழை எனப்படும் காதணி;
சேண் விளங்கு = தொலை தூரத்தில் ஒளியுடன் விளங்கும்;
வாள் மதி = ஒளியையுடைய திங்கள் [சந்திரன்];
கவைஇ = சூழ்ந்து;
அகலா மீனின் = நீங்காத விண் மீன்களைப் போன்று;
அவிர்வன இமைப்ப = விளக்கமாக ஒளி வீச;
தாஇல் = குற்றம் இல்லாத;
கொள்கை = நோன்பு;
தம் தொழில் முடிமார் = தாம் மேற்கொண்ட செயலை
        நிறைவு செய்பவரது;
மனன் நேர்பு எழுதரு = மனத்தில் பொருந்தித் தோன்றும்;
வாள் நிற முகனே = ஒளிமிக்க செந்நிறமான திருமுருகப்பெருமானின்
        [ஆறு] திருமுகங்களில்.

- - - - - - - - -


 " மாஇருள் ஞாலம் மறுஇன்றி விளங்க - - - - - - 91

 பல்கதிர் விரிந்தன்று ஒருமுகம்;

 ஒருமுகம்

 ஆர்வலர் ஏத்த அமர்ந்து இனிது ஒழுகி

 காதலின் உவந்து வரம் கொடுத்தன்றே;

 ஒருமுகம்

 மந்திர விதியின் மரபுளி வழாஅ - - - - - - 95

 அந்தணர் வேள்வி ஓர்க்கும்மே;

 ஒருமுகம்

 எஞ்சிய பொருள்களை ஏமுற நாடித்

 திங்கள்போலத் திசை விளக்கும்மே;

 ஒருமுகம்

 செறுநர்த் தேய்த்துச் செல்சமம் முருக்கி

 கறுவுகொள் நெஞ்சமொடு களம்வேட்டன்றே;

 ஒருமுகம் - - - - - - 100

 குறவர் மடமகள் கொடிபோல் நுசுப்பின்

 மடவரல் வள்ளியொடு நகை அமர்ந்தன்றே

 ஆங்கு அம்மூஇருமுகனும் முறைநவின்று ஒழுகலின் ..." - - - - - - 103


தெளிவுரை:

"உலகத்தைச் சூழ்ந்துள்ள மிகுதியான இருள் நீங்கி, அவ்வுலகம் குற்றம்
இல்லாது விளங்கும் பொருட்டு பல கதிர்களை உடைய கதிரவன்
தோன்றுவதற்குக் காரணமாய் விளங்குவது திருமுருகப்பெருமானின்
ஒரு திருமுகம்;

பக்தர்கள்/அடியார்கள் வேண்டிய வரங்களை அவர்களுக்கு அன்புடன்
மகிழ்ந்து வழங்குவது மற்றொரு திருமுகம்;

அந்தணர்கள் தம் மரபு வழியில் மந்திரங்களை ஒலித்து இயற்றுகின்ற
வேள்விகளை [யாகங்களை] ஏற்று மகிழ்வது மற்றொரு திருமுகம்;

எந்த நூல்களும் ஆராய்ந்து உணர்த்த இயலாத மெய்ப் பொருளை,
அனைத்துத் திசைகளையும் தன் ஒளியால் விளக்கும் திங்களைப் போல,
முனிவர்களுக்கு உணர்த்தி விளக்குவது மற்றொரு திருமுகம்;

தீய சக்திகளாகிய அசுரர்களைப் போரில் கொன்று அழித்து கள
வேள்வியை இயற்றச் செய்வது மற்றொரு திருமுகம்;

பூங்கொடி போன்ற இடையையும் இளமையையும் உடைய குறவர் மகள்
வள்ளியுடன் மகிழ்ச்சி அடைவது மற்றொரு திருமுகம்;

மேற்கூறியவாறு, திருமுருகப்பெருமானின் ஆறு திருமுகங்களும் தத்தம்
தொழில்களை முறையாக நடத்துவதற்கு ஏற்ப ...

விளக்கவுரை:

"மா இருள் ஞாலம் மறு இன்றி விளங்க பல்கதிர் விரிந்தன்று
ஒருமுகம்"
= பல கதிர்களையுடைய கதிரவன் உலகின் புற இருளை
நீக்குவது போன்று, திருமுருகப்பெருமானின் திருமுகம் அடியார்களின்
- பக்தர்களின் அகத்தின் ஆணவ இருளை அகற்றி அருள்கின்றது.

அரும்பத அகராதி:

மாஇருள் = மிகுதியான அல்லது பெரிய இருள்;
மறு இன்றி = குற்றம் இல்லாது;
ஆர்வலர் = ஆர்வம் உடைய அடியார்கள்/பக்தர்கள்;
ஏத்த = பாராட்டிப் புகழ்ந்து துதிக்க;
உவந்து = மகிழ்ந்து;
வரம் கொடுத்தல் = பக்தர்கள் வேண்டியதை வேண்டியவாறு
        வழங்குதல்;
ஓர்க்கும் = ஏற்று மகிழும்;
மரபுளி = மரபின் வழியில்;
எஞ்சிய பொருள்கள் = சமய நூல்களால் உணர்த்தப்பட இயலாத
        மெய்ப் பொருள்கள்;
ஏம்உற = அருட்காவலில் பொருந்தியிருக்குமாறு;
செறுநர் = பகைவர்;
செல்சமம் = மேலும் செல்வதற்குரிய போர்;
முருக்கி = கொன்று அழித்து;
கறுவுதல் = [தீமையை அழிக்கும் நோக்கத்துடன்] சினத்தல்;
களம் வேட்டன்று = போர்க் களத்தில் வேள்வி நடைபெறச்
        செய்கின்றது;
கொடிபோல் நுசுப்பின் மடவரல் = பூங்கொடி போன்ற
        இடையையும் இளமையையும் உடைய [வள்ளி-அம்மையார்].

- - - - - - - - -


 " ஆரம் தாழ்ந்த அம்பகட்டு மார்பின் - - - - - - 104

 செம்பொறி வாங்கிய மொய்ம்பின் சுடர்விடுபு

 வண்புகழ் நிறைந்து வசிந்துவாங்கு நிமிர்தோள்

 விண்செலல் மரபின் ஐயர்க்கு ஏந்தியது

 ஒருகை;

 உக்கம் சேர்த்தியது ஒருகை;

 நலம்பெறு கலிங்கத்துக் குறங்கின்மிசை அசைஇயதுஒருகை;

 அங்குசம் கடாவ ஒருகை;

 இருகை - - - - - - 110

 ஐஇரு வட்டமொடு எஃகுவலம் திரிப்ப;

 ஒருகை

 மார்பொடு விளங்க;

 ஒருகை

 தாரொடு பொலிய;

 ஒருகை

 கீழ்வீழ் தொடியொடு மீமிசைக் கொட்ப;

 ஒருகை

 பாடுஇன் படுமணி இரட்ட;

 ஒருகை - - - - - - 115

 நீல்நிற விசும்பின் மலிதுளி பொழிய;

 ஒருகை

 வான்அர மகளிர்க்கு வதுவை சூட்ட

 ஆங்கு அப்பன்னிருகையும் பாற்பட இயற்றி ..." - - - - - - 118


தெளிவுரை:

"அழகும், பெருமையும், ஒளியும், வலிமையும் பொருந்திய
திருமுருகப்பெருமானின் மார்பில் அழகிய சிவந்த [மூன்று]
வரிகள் உள்ளன; ஒளி பொருந்திய வேலினை எறிந்து பகைவர்களின்
மார்பைப் பிளக்கின்ற ஆற்றல் உடைய நிமிர்ந்த தோள்களின் கீழ்
உள்ள திருமுருகப்பெருமானின் திருக்கைகளில்

ஒன்று, முக்திப் பேற்றினைப்பெற்று வானுலகம் செல்லும் முனிவர்களைப்
பாதுகாத்து ஏந்திய வண்ணம் உள்ளது;

மற்றொரு திருக்கை, இடுப்பினைச் சார்ந்து விளங்குகின்றது;

மற்றொரு திருக்கை, அழகிய செந்நிற ஆடையால் அலங்கரிக்கப்பெற்ற
தொடையைச் சார்ந்து உள்ளது;

மற்றொரு திருக்கை, யானையை அடக்குவதற்குரிய அங்குசத்தைச்
செலுத்திய வண்ணம் உள்ளது;

மற்றொரு திருக்கை, கேடயத்தைத் தாங்கிய வண்ணமும்,

மற்றொரு திருக்கை வேற்படையினை வலப் பக்கம் நோக்கி சுழற்றிய
வண்ணமும் உள்ளது;

மற்றொரு திருக்கை, அடியார்களுக்குத் தத்துவங்களை உணர்த்திய
வண்ணம் ['மோன முத்திரை'யோடு] மார்பின் மீது விளங்குகின்றது;

மற்றொரு திருக்கை, மார்பில் புரளும் மாலையைச் சார்ந்துள்ளது;

மற்றொரு திருக்கை, 'கள வேள்வி தொடங்குக' என்னும் சைகையைக்
காட்டுகின்றது;

மற்றொரு திருக்கை [கள வேள்வியின்போது] ஓதப்படும் பாடலுக்கு
ஏற்ற வகையில் இனிய ஓசையை உண்டாக்கும் மணியானது மாறி மாறி
ஒலிக்கச் செய்கின்றது;

மற்றொரு திருக்கை, வானத்திலிருந்து மேகமானது மிக்க மழையைப்
பொழியுமாறு செய்கின்றது;

மற்றொரு திருக்கை, வானுலக மகளிர்க்கு திருமண மாலையைச்
சூட்டுகின்றது;

மேற்கூறியவாறு, திருமுருகப்பெருமானின் பன்னிரு திருக்கைகளும்
தத்தம் பணியைச் செய்த வண்ணம் உள்ளன ..."

அரும்பத அகராதி:

ஆரம் = மாலை;
தாழ்ந்த = தாங்கிய;
அம்பகட்டு மார்பு = அழகிய பெரிய [விசாலமான] மார்பு;
செம்பொறி வாங்கிய = சிவந்த (மூன்று] வரிகளைப் பெற்றதாக;
மொய்ம்பு = வலிமை;
சுடர் விடுபு = ஒளி பொருந்திய வேற்படையினைச் செலுத்தி;
வசிந்து = பிளந்து;
வாங்கு நிமிர் தோள் = [முன்னர் செலுத்திய வேற்படையினை
        திரும்பப் பெறவேண்டி நிமிர்ந்து நிற்கும் தோள்;
விண் செலல் மரபின் ஐயர் = [முக்திப் பேற்றினை அடைந்து]
        விண்ணுலகு செல்லும் தலைமைப் பண்பு உடைய முனிவர்;
உக்கம் = இடுப்பு;
நலம்பெறு கலிங்கம் = செந்நிற ஆடை;
குறங்கு = தொடை;
அசைஇயது = கிடந்தது;
அங்குசம் = யானையைச் செலுத்துவதற்குரிய கருவி;
கடாவ = செலுத்த;
ஐஇரு வட்டம் = அழகான பெருமை பொருந்திய கேடயம்;
எஃகு = வேல்;
கீழ்வீழ் தொடி = [கையை மேலே உயர்த்தும்போது] கீழ்நோக்கி
        நழுவும் கையில் அணியப்பெற்ற அணிகலனாகிய தொடி,
        அல்லது வளையள்;
மீமிசை = மேலே;
கொட்ப = சுழல;
பாடுஇன் = ஓதப்படும் பாடலுக்கேற்ற இனிய [ஓசை];
படுமணி = ஓசை உண்டாக்கும் மணி;
இரட்ட = ஒலிக்க;
மலிதுளி = மிகுதியான மழை;
வதுவை = திருமணம், திருமண மாலை;
ஆங்கு = மேற்கூறியவாறு;
பாற்பட = பொருந்துமாறு;
இயற்றி = பணி செய்து.

- - - - - - - - -


 " அந்தரப்பல்லியம் கறங்கத் திண்காழ் - - - - - - 119

 வயிர்எழுந்து இசைப்ப வால்வளை ஞரல

 உரம் தலைக்கொண்ட உரும்இடி முரசமொடு

 பல்பொறி மஞ்ஞை வெல்கொடி அகவ

 விசும்பு ஆறுஆக விரைசெலல் முன்னி

 உலகம் புகழ்ந்த ஒங்குஉயர் விழுச்சீர்

 அலைவாய்ச் சேறலும் நிலைஇயபண்பே, அதான்று ..." - - - - - - 125


தெளிவுரை:

"['துந்துபி' போன்ற வானுலகத்தோரின் இசைக் கருவிகள் முழங்கவும்,
திண்ணிய வயிரம் வாய்ந்த ஊதுகொம்பு மிகுதியாக ஒலிக்கவும், வெண்
சங்கு முழங்கவும், அச்சம் தரும் இடியைப் போன்ற ஓசையுடைய
முரசுடன், பல பீலியையுடைய மயிலானது [திருமுருகப்பெருமானின்
ஆணைப்படி] வெற்றிக் கொடியில் இருந்தவாறு கூவி ஒலிக்கவும், வானின்
வழி விரைவான செலவினை மேற்கொண்டு உலக மக்கள் அனைவரும்
போற்றும் உயர்ந்த புகழை உடைய திருச்சீரலைவாய் [திருச்செந்தூர்]
என்னும் திருநகர் வந்து சேர்தலும் திருமுருகப்பெருமானின் நிலையான
பண்பேயாகும்; அதுமட்டுமன்று ..."

அரும்பத அகராதி:

அந்தரப்பல்லியம் = 'துந்துபி' போன்ற வானோரின் இசைக் கருவிகள்;
கறங்க = ஒலிக்க;
திண் காழ் வயிர் = திண்மையான வயிரத்தை உடைய ஊதுகொம்பு;
வால்வளை = வெண்மையான சங்கு;
உரம் தலைக்கொண்ட = வலிமையைத் தன்னிடத்தே உடைய;
உரும்இடி = அச்சம் தரும் வகையில் முழங்கும் இடி [உருமேறு];
பல்பொறி மஞ்ஞை = பல பீலியை [இறகுகளை] உடைய மயில்;
வெல் கொடி = வெற்றியைத் தரும் கொடி;
அகவ = கூவி ஒலிக்க;
ஆறாக = வழியாக.

திருமுருகாற்றுப்படை - 2 - திருச்சீரலைவாய் (திருச்செந்தூர்)
ThirumurugAtruppadai - 2 - ThiruchcheeralaivAi (ThiruchchendhUr)
 1 திருப்பரங்குன்றம்   2 திருச்சீரலைவாய் (திருச்செந்தூர்) 
 3 திரு ஆவினன்குடி (பழநி)   4 திரு ஏரகம் (சுவாமிமலை) 
 5 குன்றுதோறாடல்   6 பழமுதிர்சோலை 
 நேரிசை வெண்பாக்கள் 

 முன்னுரை   நன்றி   முழுப்பாடல் 
PDF in English
select previous page
select next page

ThirumurugAtruppadai - 2 - ThiruchcheeralaivAi (ThiruchchendhUr)

Meanings in Tamil and English by Dr. Singaravelu Sachithanantham (Malaysia)

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 
Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] .[css]