ArumugaKaumaram dot com - Dedicated Website for Lord Muruga and His Devotees

புலவர் பெருமான் நக்கீரர்
அருளிய
திருமுருகாற்றுப்படை

ThirumurugAtruppadai
by Poet Nakkeerar

Kaumara Chellam
திருமுருகாற்றுப்படை - முழுப்பாடல்
ThirumurugAtruppadai - complete
thirumurugatruppadai 1 திருப்பரங்குன்றம்   2 திருச்சீரலைவாய் (திருச்செந்தூர்) 
 3 திரு ஆவினன்குடி (பழநி)   4 திரு ஏரகம் (சுவாமிமலை) 
 5 குன்றுதோறாடல்   6 பழமுதிர்சோலை 
 நேரிசை வெண்பாக்கள் 

 முகப்பு   அட்டவணை   முன்னுரை   நன்றி   தேடல்   முழுப்பாடல் 
 home   contents  PDF in English search
select previous page
select next page

தமிழிலும் ஆங்கிலத்திலும் பொருள் எழுதியது
பேராசிரியர் சிங்காரவேலு சச்சிதானந்தம் (மலேசியா)

Meanings in Tamil and English by Dr. Singaravelu Sachithanantham (Malaysia)

Dr. Singaravelu Sachithanantham  

1 - திருப்பரங்குன்றம்
   பொருள் பக்கத்திற்கு

" உலகம் உவப்ப வலன் ஏர்பு திரிதரு - - - - - - 1
பலர்புகழ் ஞாயிறு கடல்கண் டாஅங்கு
ஓஅற இமைக்கும் சேண்விளங்கு அவிர்ஒளி ... " - - - - - - 3 - - - பொருளுக்கு

" உறுநர்த் தாங்கிய மதன் உடை நோன்தாள் - - - - - - 4
செறுநர்த் தேய்த்த செல் உறழ் தடக்கை
மறு இல் கற்பின் வாள்நுதல் கணவன் ... " - - - - - - 6 - - - பொருளுக்கு

" கார்கோள் முகந்த கமம் சூல் மாமழை - - - - - - 7
வாள்போழ் விசும்பில் வள்உறை சிதறி
தலைப்பெயல் தலைஇய தண்நறுங் கானத்து
இருள்படப் பொதுளிய பராரை மராஅத்து
உருள்பூந் தண்தார் புரளும் மார்பினன் ... " - - - - - - 11 - - - பொருளுக்கு

" மால்வரை நிவந்த சேண்உயர் வெற்பில் - - - - - - 12
கிண்கிணி கவைஅய ஒண்செஞ் சீறடி
கணைக்கால் வாங்கிய நுசுப்பின் பணைத்தோள்
கோபத்து அன்ன தோயாப் பூந்துகில் - - - - - - 15
பல்காசு நிரைத்த சில்காழ் அல்குல்
கைபுனைந்து இயற்றாக் கவின்பெறு வனப்பின்
நாவலொடு பெயரிய பொலம்புனை அவிர்இழை
சேண்இகந்து விளங்கும் செயிர்தீர் மேனி ... " - - - - - - 19 - - - பொருளுக்கு

" துணையோர் ஆய்ந்த இணைஈர் ஓதிச் - - - - - - 20
செங்கால் வெட்சிச் சீறிதழ் இடைஇடுபு
பைந்தாள் குவளைத் தூஇதழ் கிள்ளி
தெய்வ உத்தியொடு வலம்புரி வயின்வைத்து
திலகம் தைஇய தேம்கமழ் திருநுதல்
மகரப் பகுவாய் தாழமண் ணுறுத்து - - - - - - 25
துவர் முடித்த துகள்அறும் உச்சிப்
பெருந்தண் சண்பகம் செரீஇ கருந்தகட்டு
உளைப்பூ மருதின் ஒள்இணர் அட்டி
கிளைக்கவின்று எழுதரு கீழ்நீர்ச் செவ்வரும்பு
இணைப்புறு பிணையல் வளைஇ ... " - - - - - - 30 - - - பொருளுக்கு

" ... ... ... துணைத்தக
வண்காது நிறைந்த பிண்டி ஒண்தளிர் - - - - - - 31
நுண்பூண் ஆகம் திளைப்பத் திண்காழ்
நறுங்குறடு உரிஞ்சிய பூங்கேழ்த் தேய்வை
தேம்கமழ் மருது இணர்கடுப்பக் கோங்கின்
குவிமுகிழ் இளமுலைக் கொட்டி விரிமலர் - - - - - - 35
வேங்கை நுண்தாது அப்பிக் காண்வர
வெள்ளில் குறுமுறி கிள்ளுபு தெரியா
கோழி ஓங்கிய வென்றுஅடு விறல்கொடி
வாழிய பெரிது என்று ஏத்திப் பலருடன்
சீர்திகழ் சிலம்பு அகம் சிலம்பப் பாடி
சூரர மகளிர் ஆடும் சோலை ... " - - - - - - 41 - - - பொருளுக்கு

" மந்தியும் அறியா மரன்பயில் அடுக்கத்து - - - - - - 42
சுரும்பும் மூசாச் சுடர்ப்பூங் காந்தள்
பெருந்தண் கண்ணி மிலைந்த சென்னியன் ... " - - - - - - 44 - - - பொருளுக்கு

" பார்முதிர் பனிக்கடல் கலங்க உள்புக்கு - - - - - - 45
சூர்முதல் தடிந்த சுடர்இலை நெடுவேல் ... " - - - - - - 46 - - - பொருளுக்கு

" உலறிய கதுப்பின் பிறழ்பல் பேழ்வாய் - - - - - - 47
சுழல்விழிப் பசுங்கண் சூர்த்த நோக்கின்
கழல்கண் கூகையொடு கடும்பாம்பு தூங்கப்
பெருமுலை அலைக்கும் காதின் பிணர்மோட்டு - - - - - - 50
உருகெழு செலவின் அஞ்சுவரு பேய்மகள்
குருதிஆடிய கூர்உகிர்க் கொடு விரல்
கண்தொட்டு உண்ட கழிமுடைக் கருந்தலை
ஒண்தொடித் தடக்கையின் ஏந்தி வெருவர
வென்று அடு விறல்களம் பாடித் தோள்பெயரா
நிணம்தின் வாயள் துணங்கை தூங்க ... " - - - - - - 56 - - - பொருளுக்கு

" இருபேர் உருவின் ஒருபேர் யாக்கை - - - - - - 57
அறுவேறு வகையின் அஞ்சுவர மண்டி
அவுணர் நல்வலம் அடங்கக் கவிழ்இணர்
மாமுதல் தடிந்த மறுஇல் கொற்றத்து
எய்யா நல்இசை செவ்வேல் சேஎய் ... " - - - - - - 61 - - - பொருளுக்கு

" சேவடி படரும் செம்மல் உள்ளமொடு - - - - - - 62
நலம்புரி கொள்கைப் புலம்பிரிந்து உறையும்
செலவுநீ நயந்தனை ஆயின் பலஉடன்
நன்னர் நெஞ்சத்து இன்னசை வாய்ப்ப
இன்னே பெறுதி நீமுன்னிய வினையே ... " - - - - - - 66 - - - பொருளுக்கு

" செருப் புகன்றுஎடுத்த சேண்உயர் நெடுங்கொடி - - - - - - 67
வரிப்புனை பந்தொடு பாவை தூங்க
பொருநர்த் தேய்த்த போர் அருவாயில்
திருவீற்றிருந்த தீதுதீர் நியமத்து - - - - - - 70
மாடம் மலிமறுகின் கூடல் குடவயின்
இருஞ்சேற்று அகல்வயல்விரிந்து வாய்அவிழ்ந்த
முள்தாள் தாமரைத் துஞ்சி வைகறைக்
கள்கமழ் நெய்தல் ஊதி எல்படக்
கண்போல் மலர்ந்த காமரு சுனைமலர் - - - - - - 75
அஞ்சிறை வண்டின் அரிக்கணம் ஒலிக்கும்
குன்று அமர்ந்து உறைதலும் உரியன், அதான்று ... " - - - - - - 77 - - - பொருளுக்கு

2 - திருச்சீரலைவாய் [திருச்செந்தூர்]   பொருள் பக்கத்திற்கு

" வைந்நுதி பொருத வடுஆழ் வரிநுதல் - - - - - - 78
வாடா மாலை ஓடையொடு துயல்வர
படுமணி இரட்டும் மருங்கின் கடுநடை - - - - - - 80
கூற்றத் தன்ன மாற்றஅரு மொய்ம்பின்
கால் கிளர்ந்தன்ன வேழம் மேல்கொண்டு
ஐவேறு உருவின் செய்வினை முற்றிய
முடியொடு விளங்கிய முரண்மிகு திருமணி
மின்உறழ் இமைப்பின் சென்னிப் பொற்ப - - - - - - 85
நகைதாழ்பு துயல்வரூஉம் வகைஅமை பொலங்குழை
சேண்விளங்கு இயற்கை வாள்மதி கவைஇ
அகலா மீனின் அவிர்வன இமைப்ப
தாஇல் கொள்கைத் தம்தொழில் முடிமார்
மனன்நேர்பு எழுதரு வாள் நிறமுகனே ... " - - - - - - 90 - - - பொருளுக்கு

" மாஇருள் ஞாலம் மறுஇன்றி விளங்க - - - - - - 91
பல்கதிர் விரிந்தன்று ஒருமுகம்;
ஒருமுகம் - ஆர்வலர் ஏத்த அமர்ந்து இனிது ஒழுகி
காதலின் உவந்து வரம் கொடுத்தன்றே;
ஒருமுகம் - மந்திர விதியின் மரபுளி வழாஅ - - - - - - 95
அந்தணர் வேள்வி ஓர்க்கும்மே;
ஒருமுகம் - எஞ்சிய பொருள்களை ஏமுற நாடித்
திங்கள்போலத் திசை விளக்கும்மே;
ஒருமுகம் - செறுநர்த் தேய்த்துச் செல்சமம் முருக்கி
கறுவுகொள் நெஞ்சமொடு களம்வேட்டன்றே; - - - - - - 100
ஒருமுகம் - குறவர் மடமகள் கொடிபோல் நுசுப்பின்
மடவரல் வள்ளியொடு நகை அமர்ந்தன்றே
ஆங்கு அம்மூஇருமுகனும் முறைநவின்று ஒழுகலின் ... " - - - - - - 103 - - - பொருளுக்கு

" ஆரம் தாழ்ந்த அம்பகட்டு மார்பின் - - - - - - 104
செம்பொறி வாங்கிய மொய்ம்பின் சுடர்விடுபு
வண்புகழ் நிறைந்து வசிந்துவாங்கு நிமிர்தோள்
விண்செலல் மரபின் ஐயர்க்கு ஏந்தியது ஒருகை;
உக்கம் சேர்த்தியது ஒருகை;
நலம்பெறு கலிங்கத்துக் குறங்கின்மிசை அசைஇயது ஒருகை;
அங்குசம் கடாவ ஒருகை; - - - - - - 110
இருகை - ஐஇரு வட்டமொடு எஃகுவலம் திரிப்ப;
ஒருகை - மார்பொடு விளங்க;
ஒருகை - தாரொடு பொலிய;
ஒருகை - கீழ்வீழ் தொடியொடு மீமிசைக் கொட்ப;
ஒருகை - பாடுஇன் படுமணி இரட்ட; - - - - - - 115
ஒருகை - நீல்நிற விசும்பின் மலிதுளி பொழிய;
ஒருகை - வான்அர மகளிர்க்கு வதுவை சூட்ட
ஆங்கு அப்பன்னிருகையும் பாற்பட இயற்றி ... " - - - - - - 118 - - - பொருளுக்கு

" அந்தரப்பல்லியம் கறங்கத் திண்காழ் - - - - - - 119
வயிர்எழுந்து இசைப்ப வால்வளை ஞரல
உரம் தலைக்கொண்ட உரும்இடி முரசமொடு
பல்பொறி மஞ்ஞை வெல்கொடி அகவ
விசும்பு ஆறுஆக விரைசெலல் முன்னி
உலகம் புகழ்ந்த ஒங்குஉயர் விழுச்சீர்
அலைவாய்ச் சேறலும் நிலைஇயபண்பே, அதான்று ... " - - - - - - 125 - - - பொருளுக்கு

3 - திரு ஆவினன்குடி [பழநி]   பொருள் பக்கத்திற்கு

" சீரை தைஇய உடுக்கையர் சீரொடு - - - - - - 126
வலம்புரி புரையும் வால்நரை முடியினர்
மாசுஅற இமைக்கும் உருவினர் மானின்
உரிவை தைஇய ஊன்கெடு மார்பின்
என்புஎழுந்து இயங்கும் யாக்கையர் நன்பகல் - - - - - - 130
பலஉடன் கழிந்த உண்டியர் இகலொடு
செற்றம் நீக்கிய மனத்தினர் யாவதும்
கற்றோர் அறியா அறிவினர் கற்றோர்க்குத்
தாம்வரம்பு ஆகிய தலைமையர் காமமொடு
கடும்சினம் கடிந்த காட்சியர் இடும்பை - - - - - - 135
யாவதும் அறியா இயல்பினர் மேவரத்
துனிஇல் காட்சி முனிவர் முன்புக ... " - - - - - - 137 - - - பொருளுக்கு

" புகை முகந்தன்ன மாசுஇல் தூஉடை - - - - - - 138
முகைவாய் அவிழ்ந்த தகைசூழ் ஆகத்து
செவிநேர்பு வைத்த செய்வுறு திவவின்
நல்யாழ் நவின்ற நயனுடை நெஞ்சின்
மென்மொழி மேவலர், இன்நரம்பு உளர - - - - - - 142
நோய்இன்று இயன்ற யாக்கையர் மாவின்
அவிர்தளிர் புரையும் மேனியர் அவிர்தொறும்
பொன்னுரை கடுக்கும் திதலையர் இன்நகைப் - - - - - - 145
பருமம் தாங்கிய பணிந்துஏந்து அல்குல்
மாசுஇல் மகளிரொடு மறுஇன்றி விளங்க ... " - - - - - - 147 - - - பொருளுக்கு

" கடுவொடு ஒடுங்கிய தூம்புடை வால்எயிற்று - - - - - - 148
அழல்என உயிர்க்கும் அஞ்சுவரு கடுந்திறல்
பாம்புபடப் புடைக்கும் பல்வரிக் கொடுஞ்சிறைப் - - - - - - 150
புள்அணி நீள்கொடிச் செல்வனும் வெள் ஏறு
வலம்வயின் உயரிய பலர்புகழ் திணிதோள்
உமைஅமர்ந்து விளங்கும் இமையா முக்கண்
மூஎயில் முருக்கிய முரண்மிகு செல்வனும்
நூற்றுப்பத்து அடுக்கிய நாட்டத்து நூறுபல் - - - - - - 155
வேள்வி முற்றிய வென்றுஅடு கொற்றத்து
ஈர்இரண்டு ஏந்திய மருப்பின் எழில்நடை
தாழ்பெருந் தடக்கை உயர்த்த யானை
எருத்தம் ஏறிய திருக்கிளர் செல்வனும் ... " - - - - - - 159 - - - பொருளுக்கு

" நாற்பெருந் தெய்வத்து நல்நகர் நிலைஇய - - - - - - 160
உலகம் காக்கும் ஒன்றுபுரி கொள்கைப்
பலர்புகழ் மூவரும் தலைவர் ஆக
ஏமுறு ஞாலம் தன்னில் தோன்றி
தாமரைப் பயந்த தாஇல் ஊழி
நான்முக ஒருவற் சுட்டி காண்வர - - - - - - 165
பகலில் தோன்றும் இகல்இல் காட்சி
நால்வேறு இயற்கைப் பதினொரு மூவரொடு
ஒன்பதிற்று இரட்டி உயர்நிலை பெறீஇயர்
மீன்பூத்தன்ன தோன்றலர் மீன்சேர்பு
வளிகிளர்ந்தன்ன செலவினர் வளியிடைத் - - - - - - 170
தீஎழுந்தன்ன திறலினர் தீப்பட
உரும்இடித் தன்ன குரலினர் விழுமிய
உறுகுறை மருங்கில் தம்பெறு முறைகொண்மார்
அந்தரக் கொட்பினர் வந்து உடன்காண
தாஇல் கொள்கை மடந்தையொடு சில்நால்
ஆவினன்குடி அசைதலும் உரியன், அதான்று ... " - - - - - - 176 - - - பொருளுக்கு

4 - திரு ஏரகம் [சுவாமிமலை]   பொருள் பக்கத்திற்கு

" இரு மூன்று எய்திய இயல்பினின் வழாஅது - - - - - - 177
இருவர்ச் சுட்டிய பல்வேறு தொல்குடி
அறு நான்கு இரட்டி இளைமைநல் யாண்டு
ஆறினில் கழிப்பிய அறன்நவில் கொள்கை - - - - - - 180
மூன்றுவகைக் குறித்த முத்தீச் செல்வத்து
இருபிறப்பாளர் பொழுது அறிந்து நுவல
ஒன்பது கொண்ட மூன்றுபுரி நுண்ஞாண்
புலராக் காழகம் புலர் உடீஇ
உச்சிக்கூப்பிய கையினர் தற்புகழ்ந்து - - - - - - 185
ஆறுஎழுத்து அடக்கிய அருமறைக் கேள்வி
நாஇயல் மருங்கில் நவிலப் பாடி
விரைஉறு நறுமலர் ஏந்தி பெரிதுஉவந்து
ஏரகத்து உறைதலும் உரியன், அதான்று ... " - - - - - - 189 - - - பொருளுக்கு

5 - குன்றுதோறாடல்   பொருள் பக்கத்திற்கு

" பைங்கொடி நறைக்காய் இடைஇடுபு வேலன் - - - - - - 190
அம்பொதிப் புட்டில் விரைஇ குளவியொடு
வெண்கூ தாளம் தொடுத்த கண்ணியன்
நறுஞ்சாந்து அணிந்த கேழ்கிளர் மார்பின்
கொடுந்தொழில் வல்வில் கொலைஇய கானவர்
நீடுஅமை விளைந்த தேக்கள் தேறல் - - - - - - 195
குன்றகச் சிறுகுடிக் கிளையுடன் மகிழ்ந்து
தொண்டகச் சிறுபறைக் குரவை அயர ..." - - - - - - 197 - - - பொருளுக்கு

" விரல்உளர்ப்பு அவிழ்ந்த வேறுபடு நறுங்கான் - - - - - - 198
குண்டுசுனை பூத்த வண்டுபடு கண்ணி
இணைத்த கோதை அணைத்த கூந்தல் - - - - - - 200
முடித்த குல்லை இலையுடை நறும்பூ
செங்கால் மராஅத்த வால்இணர் இடைஇடுபு
சுரும்புஉணத் தொடுத்த பெருந்தண் மாத்தழை
திருந்துகாழ் அல்குல் திளைப்ப உடீஇ
மயில்கண் டன்ன மடநடை மகளிரொடு ... " - - - - - - 205 - - - பொருளுக்கு

" செய்யன் சிவந்த ஆடையன் செவ்வரைச் - - - - - - 206
செயலைத் தண்தளிர் துயல்வரும் காதினன்
கச்சினன் கழலினன் செச்சைக் கண்ணியன்
குழலன் கோட்டன் குறும்பல் லியத்தன்
தகரன் மஞ்ஞையன் புகர்இல் சேவல்அம் - - - - - - 210
கொடியன் நெடியன் தொடிஅணி தோளன்
நரம்பு ஆர்த்தன்ன இன்குரல் தொகுதியொடு
குறும்பொறிக் கொண்ட நறுந்தண் சாயல்
மருங்கில் கட்டிய நிலன்நேர்பு துகிலினன்
முழவுஉறழ் தடக்கையின் இயல ஏந்தி - - - - - - 215
மென்தோள் பல்பிணை தழீஇ தலைத்தந்து
குன்றுதொறு ஆடலும்நின்ற தன்பண்பே, அதான்று ... " - - - - - - 217 - - - பொருளுக்கு

6 - பழமுதிர்சோலை   பொருள் பக்கத்திற்கு

" சிறுதினை மலரொடு விரைஇ மறிஅறுத்து - - - - - - 218
வாரணக்கொடியொடு வயிற்பட நிறீஇ
ஊர்ஊர் கொண்ட சீர்கெழு விழவினும் - - - - - - 220
ஆர்வலர் ஏத்த மேவரு நிலையினும்
வேலன் தைஇய வெறிஅயர் களனும்
காடும் காவும் கவின்பெறு துருத்தியும்
யாறும் குளனும் வேறுபல் வைப்பும்
சதுக்கமும் சந்தியும் புதுப்பூங் கடம்பும்
மன்றமும் பொதியிலும் கந்துடை நிலையினும் ... " - - - - - - 226 - - - பொருளுக்கு

" மாண்தலைக் கொடியொடு மண்ணி அமைவர - - - - - - 227
நெய்யோடு ஐயவி அப்பி ஐதுஉரைத்து
குடந்தம்பட்டு கொழு மலர் சிதறி
முரண்கொள் உருவின் இரண்டுஉடன் உடீஇ - - - - - - 230
செந்நூல் யாத்து வெண்பொறி சிதறி
மதவலி நிலைஇய மாத்தாள் கொழுவிடைக்
குருதியொடு விரைஇய தூவெள் அரிசி
சில்பலிச் செய்து பல்பிரப்பு இரீஇ
சிறுபசு மஞ்சளொடு நறுவிரை தெளித்து - - - - - - 235
பெருந்தண் கணவீர நறுந்தண் மாலை
துணைஅற அறுத்துத் தூங்க நாற்றி
நளிமலைச் சிலம்பில் நல்நகர் வாழ்த்தி
நறும்புகை எடுத்து குறிஞ்சி பாடி
இமிழ்இசை அருவியொடு இன்இயம் கறங்க - - - - - - 240
உருவப் பல்பூத் தூஉய் வெருவரக்
குருதிச் செந்தினைப் பரப்பி குறமகள்
முருகுஇயம் நிறுத்து முரணினர் உட்க
முருகுஆற்றுப்படுத்த உருகெழு வியல்நகர் ... " - - - - - - 244 - - - பொருளுக்கு

" ஆடுகளம் சிலம்பப் பாடி பலவுடன் - - - - - - 245
கோடு வாய்வைத்து கொடுமணி இயக்கி
ஓடாப் பூட்கைப் பிணிமுகம் வாழ்த்தி
வேண்டுநர் வேண்டியாங்கு எய்தினர் வழிபட
ஆண்டுஆண்டு உறைதலும் அறிந்த வாறே ... " - - - - - - 249 - - - பொருளுக்கு

" ஆண்டு ஆண்டு ஆயினும்ஆக காண்தக - - - - - - 250
முந்துநீ கண்டுழி முகன்அமர்ந்து ஏத்தி
கைதொழூஉப் பரவி காலுற வணங்கி
நெடும்பெருஞ் சிமையத்து நீலப்பைஞ்சுனை
ஐவருள் ஒருவன் அங்கை ஏற்ப
அறுவர் பயந்த ஆறுஅமர் செல்வ - - - - - - 255
ஆல்கெழுகடவுள் புதல்வ மால்வரை
மலைமகள் மகனே மாற்றோர் கூற்றே
வெற்றி வெல்போர்க் கொற்றவை சிறுவ
இழையணி சிறப்பின் பழையோள் குழவி
வானோர் வணங்கு வில் தானைத்தலைவ - - - - - - 260
மாலை மார்ப நூல்அறி புலவ
செருவில் ஒருவ பொருவிறல் மள்ள
அந்தணர் வெறுக்கை அறிந்தோர் சொல்மலை
மங்கையர் கணவ மைந்தர் ஏறே
வேல்கெழு தடக்கைச் சால்பெருஞ் செல்வ - - - - - - 265
குன்றம் கொன்ற குன்றாக் கொற்றத்து
விண்பொரு நெடுவரைக் குறிஞ்சிக்கிழவ
பலர்புகழ் நன்மொழிப் புலவர் ஏறே
அரும்பெறல் மரபின் பெரும்பெயர் முருக
நசையுநர்க்கு ஆர்த்தும் இசைபேர் ஆள - - - - - - 270
அலந்தோர்க்கு அளிக்கும் பொலம்பூண் சேஎய்
மண்டுஅமர் கடந்தநின் வென்றுஆடு அகலத்து
பரிசிலர்த் தாங்கும் உருகெழு நெடுவேஎள்
பெரியோர் ஏத்தும் பெரும்பெயர் இயவுள்
சூர் மருங்கு அறுத்த மொய்ம்பின் மதவலி - - - - - - 275
போர்மிகு பொருந குரிசில் எனப்பல
யான்அறி அளவையின் ஏத்தி ஆனாது ... " - - - - - - 277 - - - பொருளுக்கு

" நின்அளந்து அறிதல் மன்உயிர்க்கு அருமையின் - - - - - - 278
நின்அடி உள்ளி வந்தனென் நின்னொடு
புரையுநர் இல்லாப் புலமையோய் எனக் - - - - - - 280
குறித்தது மொழியா அளவையின் குறித்துஉடன்
வேறுபல் உருவின் குறும்பல் கூளியர்
சாறுஅயர் களத்து வீறுபெறத் தோன்றி
அளியன் தானே முதுவாய் இரவலன்
வந்தோன் பெரும நின் வண்புகழ் நயந்து என - - - - - - 285
இனியவும் நல்லவும் நனிபல ஏத்தி
தெய்வம்சான்ற திறல்விளங்கு உருவின்
வான்தோய் நிவப்பின் தான்வந்து எய்தி
அணங்குசால் உயர்நிலை தழீஇ பண்டைத்தன்
மணங்கமழ் தெய்வத்து இளநலம் காட்டி - - - - - - 290
அஞ்சல் ஓம்புமதி அறிவல்நின் வரவு என
அன்புடை நல்மொழி அளைஇ விளிவுஇன்று
இருள்நிற முந்நீர் வளைஇய உலகத்து
ஒருநீ ஆகித் தோன்ற விழுமிய
பெறல் அரும் பரிசில் நல்குமதி பலவுடன் ... " - - - - - - 295 - - - பொருளுக்கு

" வேறுபல் துகிலின் நுடங்கி அகில் சுமந்து - - - - - - 296
ஆர முழுமுதல் உருட்டி வேரல்
பூவுடை அலங்கு சினைபுலம்ப வேர்கீண்டு
விண்பொரு நெடுவரைப் பரிதியின் தொடுத்த
தண்கமழ் அலர்இறால் சிதைய நன்பல - - - - - - 300
ஆசினி முதுசுளை கலாவ மீமிசை
நாக நறுமலர் உதிர யூகமொடு
மாமுக முசுக்கலை பனிப்பப் பூநுதல்
இரும்பிடி குளிர்ப்ப வீசிப் பெருங்களிற்று
முத்துடை வான்கோடு தழீஇ தத்துற்று - - - - - - 305
நன்பொன் மணிநிறம் கிளர பொன்கொழியா
வாழை முழுமுதல் துமியத் தாழை
இளநீர் விழுக்குலை உதிரத் தாக்கி
கறிக்கொடிக் கருந்துணர் சாயப் பொறிப்புற
மடநடை மஞ்ஞை பலவுடன் வெரீஇ - - - - - - 310
கோழி வயப்பெடை இரிய கேழலொடு
இரும்பனை வெளிற்றின் புன்சாய் அன்ன
குரூஉமயிர் யாக்கைக் குடாஅடி உளியம்
பெருங்கல் விடர்அளைச் செறியக் கருங்கோட்டு
ஆமா நல்ஏறு சிலைப்பச் சேண்நின்று - - - - - - 315
இழுமென இழிதரும் அருவி
பழமுதிர் சோலை மலைகிழ வோனே. " - - - - - - 317 - - - பொருளுக்கு

திருமுருகாற்றுப்படை - நேரிசை வெண்பாக்கள்

திருமுருகாற்றுப்படை தோன்றிய பின்னர், பிற்காலச் சான்றோர்கள் பாடியருளிய நேரிசை வெண்பாக்கள் சில பின்வருமாறு:

   "குன்றம் எறிந்தாய்! குரைகடலில் சூர்தடிந்தாய்!
      புன்தலைய பூதப்பொரு படையாய் - என்றும்
         இளையாய்! அழகியாய்! ஏறுஊர்ந்தான் ஏறே!
            உளையாய்! என் உள்ளத்து உறை." - - - - - - - - - - - - 1

   "குன்றம் எறிந்ததுவும் குன்றப்போர் செய்ததுவும்
      அன்றுஅங்கு அமரர் இடர் தீர்த்ததுவும் - இன்று என்னைக்
         கைவிடா நின்றதுவும் கற்பொதும்பில் காத்ததுவும்
            மெய்விடா வீரன்கை வேல்!" - - - - - - - - - - - - 2

   "வீரவேல் தாரைவேல் விண்ணோர் சிறைமீட்ட
      தீரவேல் செவ்வேள் திருக்கைவேல் - வாரி
         குளித்தவேல் கொற்றவேல் சூர்மார்பும் குன்றும்
            துளைத்தவேல் உண்டே துணை." - - - - - - - - - - - - 3

   "இன்னம் ஒருகால் எனது இடும்பைக் குன்றுக்கும்
      கொல்நவில் வேல்சூர் தடிந்த கொற்றவா! - முன்னம்
         பனிவேய்நெடுங் குன்றம்பட்டு உருவத் தொட்ட
            தனி வேலை வாங்கத் தகும்." - - - - - - - - - - - - 4

   "உன்னை ஒழிய ஒருவரையும் நம்புகிலேன்
      பின்னை ஒருவரையான் பின்செல்லேன் - பன்னிருகைக்
         கோலப்பா! வானோர் கொடியவினை தீர்த்தருளும்
            வேலப்பா! செந்தில் வாழ்வே!" - - - - - - - - - - - - 5

   "அஞ்சுமுகம் தோன்றின் ஆறுமுகம் தோன்றும்
      வெஞ்சமரில் 'அஞ்சல்!' எனவேல் தோன்றும் - நெஞ்சில்
         ஒருகால் நினைக்கின் இருகாலும் தோன்றும்
            'முருகா!' என்று ஓதுவார் முன்." - - - - - - - - - - - - 6

   "முருகனே! செந்தில் முதல்வனே! மாயோன்
      மருகனே! ஈசன் மகனே! ஒருகை முகன்
         தம்பியே! நின்னுடைய தண்டைக்கால் எப்பொழுதும்
            நம்பியே கைதொழுவேன் நான்." - - - - - - - - - - - - 7

   "காக்க கடவியநீ காவாது இருந்தக்கால்
      ஆர்க்குப் பரமாம் அறுமுகவா! - பூக்கும்
         கடம்பா! முருகா! கதிர்வேலா! நல்ல
            இடம்காண் இரங்காய் இனி!" - - - - - - - - - - - - 8

   "பரங்குன்றில் பன்னிருகைக் கோமான்தன் பாதம்
      கரம்கூப்பி கண்குளிரக்கண்டு - சுருங்காமல்
         ஆசையால் நெஞ்சே! அணிமுருகு ஆற்றுப்படையைப்
            பூசையாக் கொண்டே புகல்." - - - - - - - - - - - - 9

   "நக்கீரர்தாம் உரைத்த நல்முருகு ஆற்றுப்படையை
      தற்கோல நாள்தோறும் சாற்றினால் - முன்கோல
         மாமுருகன் வந்து மனக்கவலை தீர்த்தருளி
            தான் நினைத்த எல்லாம் தரும்." - - - - - - - - - - - - 10

திருமுருகாற்றுப்படை முற்றிட்டு


திருமுருகாற்றுப்படை - முழுப்பாடல்
ThirumurugAtruppadai - complete
 1 திருப்பரங்குன்றம்   2 திருச்சீரலைவாய் (திருச்செந்தூர்) 
 3 திரு ஆவினன்குடி (பழநி)   4 திரு ஏரகம் (சுவாமிமலை) 
 5 குன்றுதோறாடல்   6 பழமுதிர்சோலை 
 நேரிசை வெண்பாக்கள் 

 முன்னுரை   நன்றி   முழுப்பாடல் 
PDF in English
select previous page
select next page

ThirumurugAtruppadai - complete

Meanings in Tamil and English by Dr. Singaravelu Sachithanantham (Malaysia)

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 
Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] .[css]