Kaumaram dot com - The Website for Lord Muruga and His Devotees

Kandha Puranam
by
Sri Kachiyappa
Sivachariyar

ஸ்ரீ கச்சியப்ப சிவாச்சாரியார்
அருளிய
கந்த புராணம்

Lord MuruganSri Kaumara Chellam

காண்டம் - படலம் பட்டியலுக்கு அகர வரிசையில் முதற்குறிப்புக்கு செய்யுள் முதற்குறிப்பு pdf வடிவம்

kANdam - padalam List Tamil alphabetical index verse index pdf version

previous kandam   1 - உற்பத்தி காண்டம்   next kandam1 - uRpaththi kANdam

previous padalam   24 - குமாரபுரிப் படலம்   next padalamkumAraburip padalam

Ms Revathi Sankaran (8.79mb)




(அளவில் பூதவெம்)

அளவில் பூதவெம் படையொடு மண்ணியா றதன்கட்
     குளகன் வந்துழி எழுந்திடு பூழிவான் குறுகி
          ஒளிரும் வெய்யவன் கதிர்தனை மறைத்தலா லோடி
               வளைநெ டுங்கடல் மூழ்குவான் புக்கென மறைந்தான். ......    1

(மறைந்த காலை)

மறைந்த காலையில் தோன்றின மாலையும் நிசியுங்
     குறைந்த திங்கள்வந் துதித்தது தாரகை குறுகி
          நிறைந்தெ ழுந்தவோர் மன்னவன் இறந்துழி நீங்கா
               துறைந்த ஒன்னலர் யாவருங் கிளர்ந்தவா றொப்ப. ......    2

(மிக்க தாருக)

மிக்க தாருக வனத்தினை யொத்தது விசும்பில்
     தொக்க பேரிருள் மாதரொத் தனஉடுத் தோற்றஞ்
          செக்கர் ஈசனை யொத்ததொண் போனகஞ் செறிந்த
               கைக்க பாலம தொத்தது கதிரிளம் பிறையே. ......    3

(நிலவு லாவிய)

நிலவு லாவிய ககனமா நீடுபாற் கடலில்
     குலவு கின்றதோர் பொருளெலாங் கொண்டுகொண் டேகி
          உலகில் நல்குவான் முயலெனும் ஒருமகன் உய்ப்பச்
               செலவு கொண்டதோர் தோணிபோன் றதுசிறு திங்கள். ......    4

(ஆன காலையில் அறுமுகப்)

ஆன காலையில் அறுமுகப் புங்கவன் அமல
     மேனி சேரொளி நிலவொடு கங்குலை வீட்டிப்
          பானு மேவரு மெல்லெனச் செய்தலிற் பரமாம்
               வான நாயகன் கயிலைபோன் றிருந்ததவ் வையம். ......    5

வேறு

(வீசு பேரொளி)

வீசு பேரொளி விறற்குகன் இவ்வா
     றாசின் மண்ணியின் அகன்கரை நண்ண
          ஈச னாம்அவனை எய்துபு வேதாக்
               கேச வன்முதல்வர் இன்ன கிளப்பார். ......    6

(ஆண்ட இந்நதி)

ஆண்ட இந்நதி யகன்கரை எல்லாம்
     மாண்ட வாலுகம் மலிந்தினி தாகும்
          நீண்ட சோலைகள் நிரந்தன தோன்றி
               ஈண்டி ஈண்டையின் இறுத்துள அன்றே. ......    7

(பிறைபு னைந்திடு)

பிறைபு னைந்திடு பெருந்தகை தானம்
     இறுதி யில்லன இருந்தன வற்றால்
          நறிய தாகுமிந் நதிக்கரை தன்னில்
               இறைவ இவ்விடை இருந்தருள் என்றார். ......    8

(வனையும் மேனி)

வனையும் மேனிஅயன் மால்முதல் வானோர்
     இனைய செப்புதலும் யாரினும் மேலோன்
          வினைய மெத்தவுள விச்சுவ கன்மப்
               புனைவ னுக்கிது புகன்றிடு கின்றான். ......    9

(மெய்வி தித்தொழி)

மெய்வி தித்தொழிலில் வேதன் நிகர்க்குங்
     கைவ லோய்ஒரு கணம்படு முன்னர்
          இவ்வி டத்தினில் எமக்கொரு மூதூர்
               செவ்வி திற்புனைவு செய்குதி யென்றான். ......    10

(என்ன லோடும்அவ்)

என்ன லோடும்அவ் விடந்தனில் எங்கோன்
     துன்னு தொல்படை சுராதிப ரோடு
          மன்ன அங்கணொரு மாநகர் நெஞ்சத்
               துன்னி நல்கலும் உவந்தனர் யாரும். ......    11

(அப்பு ரத்தையறி)

அப்பு ரத்தையறி வன்கடி தாற்றி
     முப்பு ரத்தையடு முன்னவன் நல்கும்
          மெய்ப்பு ரத்தவனை நோக்குபு மேலோய்
               இப்பு ரத்திடை எழுந்தரு ளென்றான். ......    12

(என்ற லோடும்இர தத்)

என்ற லோடும்இர தத்தின் இழிந்தே
     துன்றும் வானவர் சுராதிப ரானோர்
          சென்ற பூதர்கள் செறிந்துடன் ஏக
               மன்றல் மாநகரில் வள்ளல் புகுந்தான். ......    13

(செல்லு மாமுகில்)

செல்லு மாமுகில் செறிந்திடு காப்பின்
     மல்லல் மாநகர் வளந்தனை நோக்கி
          எல்லை யில்அறிவன் யாமுறை தற்கு
               நல்ல மாநகரி தென்று நவின்றான். ......    14

(வீர வேளிது)

வீர வேளிது விளம்புத லோடும்
     ஆரும் வானவர்கள் அம்மொழி கேளா
          ஏரெ லாமுடைய இந்நகர் சேய்ஞ
               லூர தென்றுபெயர் ஓதினர் அன்றே. ......    15

(ஆய காலையனி)

ஆய காலையனி கப்படை சூழ
     ஏய பின்னிளைஞர் இந்திரன் வேதா
          மாயன் ஏனையர் வழுத்திட ஆண்டைக்
               கோயில் செல்லுபு குமாரன் இருந்தான். ......    16

வேறு

(பன்னிரு புயத்தொ)

பன்னிரு புயத்தொகை படைத்தகும ரேசன்
     தன்னருள் அடைந்துவிதி தன்னைமுத லானோர்
          அன்னவன் விடுத்திட வகன்றுபுடை யேகித்
               தொன்னிலை இருக்கைகள் தொறுந்தொறும் அடைந்தார். ......    17

(தானைகள் தமக்கு)

தானைகள் தமக்குரிய சாரதர் இலக்கர்
     ஏனையர் வழுத்த எமை யாளுடைய வள்ளல்
          கோனகர் இருக்கவிடை கொண்டுசெல் குழாத்துள்
               வானவர் தமக்கிறை செயற்கையை வகுப்பாம். ......    18

வேறு

(தாங்கரும் பெருந்தி)

தாங்கரும் பெருந்திறல் தார காசுரன்
     பாங்கமர் குன்றொடும் பட்ட பான்மையால்
          ஆங்கனம் புரந்தரன் அவலம் யாவதும்
               நீங்கினன் உவகையால் நிறைந்த நெஞ்சினான். ......    19

(விருந்தியல் அமிர்தி)

விருந்தியல் அமிர்தினை விழும மில்வழி
     அருந்தின னாமென ஆகந் தண்ணெனப்
          புரந்தரன் இருந்துழிப் புக்குத் தாழ்ந்ததால்
               வரந்திகழ் சிரபுர வனத்தில் தெய்வதம். ......    20

(முகில்பொதி விண்ண)

முகில்பொதி விண்ணகம் முதல்வன் பூண்களும்
     நகில்பொதி சாந்துடை நங்கை பூண்களுந்
          துகில்பொதி கிழியொடு தொல்லை வைத்தவை
               அகில்பொதி காட்டகத் தடிகள் உய்த்ததே. ......    21

(முந்துற உய்த்த)

முந்துற உய்த்தபின் முதல்வ கேட்டிநீ
     பைந்தொடி அணங்கொடு பரமன் காழியில்
          வந்தனை நோற்றநாள் வைத்த பூணிது
               தந்தனன் கொள்கெனச் சாற்றி நின்றதே. ......    22

(நிற்புறு கின்றுழி)

நிற்புறு கின்றுழி நேமி அண்ணற்கு
     முற்படு கின்றவன் முளரிப் பண்ணவன்
          கிற்புறு செய்யபூண் கிழியை நோக்கினான்
               கற்புடை யாள்விடுந் தூதின் காட்சிபோல். ......    23

(எரிமணி அணி)

எரிமணி அணிகலன் இட்ட பூந்துகில்
     விரிதரு பொதியினை விரலின் நீக்கினான்
          திருமகள் அமர்தரு தெய்வத் தாமரை
               வரியளி சூழ்வுற மலர்ந்த தென்னவே. ......    24

(துண்ணெனக் கிழி)

துண்ணெனக் கிழியதன் தொடர்பு நீக்கலும்
     ஒண்ணுதற் றுணைவிபூண் உம்பர் தோன்றலுங்
          கண்ணுறக் கண்டவட் கருதி னானரோ
               எண்ணுதற் கரியதோர் இன்பந் துய்த்துளான். ......    25

(பூட்கையின் முலை)

பூட்கையின் முலையுடைப் பொன்னங் கொம்பின்மேல்
     வேட்கைய தாயினன் மிகவும் பற்பகல்
          வாட்கையின் றிருந்தது மனத்தின் முன்னினான்
               காட்கொளுங் காமநோய்க் கவலை எய்தினான். ......    26

(நெய்ம்மலி தழலென)

நெய்ம்மலி தழலென நீடிக் காமநோய்
     இம்மென மிசைக்கொள இரங்கி ஏங்கினான்
          விம்மினன் வெதும்பினன் வெய்து யிர்த்தனன்
               மைம்மலி சிந்தையன் மருட்கை எய்தினான். ......    27

(பசையற வுலர்வுறு)

பசையற வுலர்வுறு பராரைப் பிண்டியின்
     தசைமலி முழுதுடல் தளர்ந்து வாடினான்
          இசைவரு கைவலோன் எழுது பாவைபோல்
               அசைவிலன் இருந்தனன் அணங்குற் றென்னவே. ......    28

(முருந்துறழ் எயிற்றி)

முருந்துறழ் எயிற்றினாள் முலைத்த டங்களில்
     பொருந்துற மூழ்கியே புணர்ந்து வைகலும்
          இருந்திடு கின்றவன் இடர்ப்பட் டின்னணம்
               பிரிந்திடின் வருந்துதல் பேசல் வேண்டுமோ. ......    29

(மெய்ந்நனி அலசுற)

மெய்ந்நனி அலசுற விரக மீக்கொள
     இன்னணஞ் சசிபொருட் டினையும் நீர்மையோன்
          பொன்னணி தன்னையும் புனைதல் வேண்டலன்
               தன்னுழை யவர்தமை நோக்கிச் சாற்றுவான். ......    30

(இக்கிழி யொன்றி)

இக்கிழி யொன்றினை ஏந்தி முந்துபோற்
     சிக்குற வீக்கியே சேமித் துங்கள்பால்
          வைக்குதிர் என்றலும் வணங்கி நன்றெனா
               அக்கணம் அனையவர் அதனை யாற்றினார். ......    31

(அன்னதோர் அளவையில் அட)

அன்னதோர் அளவையில் அடவித் தேவினைக்
     கொன்னுனை வச்சிரக் குரிசில் நோக்குறா
          நின்னுழை அளித்திட நீசெல் கென்றலும்
               மன்னவ நன்றென வணங்கிப் போயதே. ......    32

(போந்திடு காலையிற்)

போந்திடு காலையிற் புலோம சைப்பெயர்
     ஏந்திழை காமநோய் எரியின் துப்பினாற்
          காந்திய வுளத்தினன் கனலும் யாக்கையன்
               ஓய்ந்தனன் தட்பமேல் உளம்வைத் தேகினான். ......    33

(ஒளியிழை உழத்தி)

ஒளியிழை உழத்தியர் ஒளிமென் கூந்தலின்
     அளியினம் நறவுதுய்த் தலரிற் கண்படு
          நளியிருந் தண்டலை ஞாங்கர் பொங்கிய
               புளினமொன் றதன்மிசை புக்கு வைகினான். ......    34

(தீந்தழல் வெங்கதிர்)

தீந்தழல் வெங்கதிர் திளைத்த வாறென
     நீந்தருங் கங்குலின் நிலவுத் தீப்படப்
          பூந்துணர் பரவிய புளினம் பொன்னகர்
               வேந்தனுக் காற்றவும் வெம்மை செய்ததே. ......    35

(சூற்புயல் மாறிய)

சூற்புயல் மாறிய சுரத்தில் தொக்குறு
     மாற்பரல் வரைபுரை மணலின் திட்டையின்
          பாற்படு கின்றனன் பனிம திக்கதிர்
               மேற்பட அசைந்தனன் வினையம் வேறிலான். ......    36

(திங்களும் வெங்க)

திங்களும் வெங்கனல் சிதறிக் காய்ந்திடத்
     துங்கவேள் படையுடன் பிறவுஞ் சூழ்ந்திட
          மங்கிய உணர்ச்சியன் மயலின் வன்மையான்
               புங்கவர் மன்னவன் புலம்பல் எய்தினான். ......    37

(மட்டமர் புரிகுழல்)

மட்டமர் புரிகுழல் மடந்தை என்னுடல்
     இட்டுயிர் வவ்வினள் இருந்த யாக்கையுஞ்
          சுட்டிடு கிற்றியால் தூய திங்கள்நீ
               பட்டவர் தம்மையும் படுப்ப ரோவென்பான். ......    38

(எஞ்சலில் அமுதி)

எஞ்சலில் அமுதினை யார்க்கும் நல்குநீ
     நஞ்சினை யுகுத்திநண் ணலரில் தப்பியே
          உஞ்சனன் இவனுயிர் ஒழிப்பன் யானெனா
               வஞ்சினம் பிடித்தியோ மதிய மேயென்பான். ......    39

(நிற்றலும் வருதிநீ)

நிற்றலும் வருதிநீ நீடு தண்ணளி
     உற்றிடல் அன்றியே ஒறுத்தி லாய்மதி
          அற்றமின் றுன்னிவந் தடுதி யாரிடைக்
               கற்றனை இத்திறங் கள்வ நீயென்பான். ......    40

(பெண்ணிய லாரிடை)

பெண்ணிய லாரிடைப் பிறங்கு காமமும்
     உண்ணிகழ் விரகமும் உனக்கும் உண்டதை
          எண்ணலை யழல்சொரிந் தென்னைக் காய்தியால்
               தண்ணளி மதிக்கிது தகுவ தோவென்பான். ......    41

(அரியநற் றவம்பல)

அரியநற் றவம்பல ஆற்றி இன்றுகா
     றுரியதோர் என்பல தூனில் யாக்கையேன்
          பரிவுறச் சுடுவதிற் பயனென் பாரிலிவ்
               வொருவனை விடுகென உரைத்து வேண்டுவான். ......    42

(அண்டமேல் நின்ற)

அண்டமேல் நின்றனை அவனி வானகம்
     எண்டிசை எங்கணும் எளிது காண்டியால்
          ஒண்டொடி யொருத்திஎன் னுயிர்கொண் டுற்றனள்
               கண்டதுண் டோமதிக் கடவுள் நீயென்பான். ......    43

(யான்முதல் தோன்றி)

யான்முதல் தோன்றினன் எனது பின்னவன்
     கான்முளை யாகிய காம நீபல
          பான்மையின் எனையடல் பழிய தேயலால்
               மேன்மைய தாகுமோ விளம்பு வாயென்பான். ......    44

(பரேருள உனதுமெய்)

பரேருள உனதுமெய் படுத்த கண்ணுதல்
     ஞெரேலென உதவிய நிமலன் ஈண்டுளன்
          ஒரேகணம் ஒடுங்குமுன் உயிரும் வாங்குமால்
               பொரேலினி மதனநீ போகு போகென்பான். ......    45

(வானுழை திரிதரு)

வானுழை திரிதரு மதியம் போக்கிய
     தீநுழை புண்ணில்வேல் செறித்த தென்னவேள்
          கோனுழை கின்றன அதனில் கூடளி
               ஈநுழை கின்றன போலும் என்கின்றான். ......    46

(வன்றிறல் கொலை)

வன்றிறல் கொலைஞர்கள் மானில் கூவிமான்
     ஒன்றறக் கவர்தல்போல் உயிரென் காலினை
          இன்றது போலவந் துள்புக் கீர்த்ததால்
               தென்றலுக் கியான்செய்த தீதுண் டோவென்பான். ......    47

(வாகுலப் பரியதோர்)

வாகுலப் பரியதோர் மாதர் மாலெனும்
     ஆகுலப் புணரியுள் அழுந்தி னோரையும்
          வீகுலத் தொகையினுள் விட்டி சைத்திடுங்
               கோகிலப் பறவையுங் கொல்லு மோவென்பான். ......    48

(நம்முரு வாயினன்)

நம்முரு வாயினன் நாகர் கோனெனாத்
     தம்மன முன்னியே தளர்வு நீக்கில
          கொம்மென அரற்றியுங் கூவ லின்றியும்
               எம்முயிர் கொள்வன இருபுளா மென்பான். ......    49

(தண்டுதல் இன்றி)

தண்டுதல் இன்றியே தானு நானுமாய்ப்
     பண்டொரு வனிதை*1 யைப் பரிவிற் கூடினேம்
          அண்டரும் அறிகுவர் அற்றை நாட்சினம்
               உண்டுகொல் கதிரினம் உதிக்கி லானென்பான். ......    50

(கோழிலை மடற்ப)

கோழிலை மடற்பனைக் குடம்பை சேர்தரு
     மாழையம் பசலைவாய் மகன்றி லென்பவை
          காழக வரிசிலைக் காமன் கோடுபோல்
               ஊழியும் வீந்திடா தொலிக்கு மோவென்பான். ......    51

(துன்னல ராகிய)

துன்னல ராகிய தொகையி னோர்தமைத்
     தன்னிடை வைத்தெனைத் தளர்வு கண்டதால்
          அன்னதும் அன்றியின் றாவி கொள்ளவும்
               உன்னிய தோகடல் உறங்க லாதென்பான். ......    52

(இவ்வகை யாமினி)

இவ்வகை யாமினி யெல்லை முற்றவும்
     வெவ்வழல் சுற்றிடும் விரக நோய்தெற
          உய்வகை யொன்றிலன் உயங்கல் அல்லது
               செய்வது பிறிதிலன் தெருளில் சிந்தையான். ......    53

வேறு

(ஆக்கம் இத்திறம்)

ஆக்கம் இத்திறம் அடைவுழிப் பத்துநூ றடுத்த
     நோக்க முற்றவன் சசிபொருட் டுற்றநோய் அதனை
          நீக்கு கின்றனன் யானெனா நினைந்துளான் என்ன
               மாக்கள் பூண்டதேர் வெய்யவன் குணதிசை வந்தான். ......    54

(வெம்பு தொல்லி)

வெம்பு தொல்லிருள் அவுணர்தங் குழுவினை வீட்டி
     உம்பர் மேற்செலும் மதியெனும் மடங்கலை உருத்துப்
          பைம்பொன் வெஞ்சுடர்க் கரங்களால் அதன்வலி படுக்குஞ்
               சிம்பு ளாமெனத் தோன்றினன் செங்கதிர்க் கடவுள். ......    55

(தொடர்ந்த ஞாயிறு)

தொடர்ந்த ஞாயிறு விடுத்திடுங் கதிர்களாந் தூசி
     படர்ந்த காலையில் நிலவெனும் அனிகமுன் பட்ட
          அடைந்த மீனெனுந் துணைவரும் பொன்றினர் அமர்செய்
               துடைந்த மன்னரில் போயினன் உடுபதிக் கடவுள். ......    56

(விரிந்த பல்கதிர்)

விரிந்த பல்கதிர் அனிகத்தை வெய்யவன் விடுப்பத்
     துரந்த சோமனை அவன்புறங் காட்டினன் தொலைந்து
          கரந்து போதலும் பின்னுறச் சென்றில களத்தில்
               இரிந்து ளோரையுந் தொடர்வரோ சூரர்தம் இனத்தோர். ......    57

(திங்கள் தன்குறை)

திங்கள் தன்குறை உணர்த்தவாய் திறந்தெனச் செய்ய
     பங்க யங்கள்போ தவிழ்ந்தன குமுதங்கள் பலவுந்
          தங்கள் நாயகன் உடைந்தது நோக்கியே தபனற்
               கங்கை கூப்பிய திறனென ஒடுங்கிய அன்றே. ......    58

(வனமெ ழுந்தன)

வனமெ ழுந்தன வனசமு மெழுந்தன வரியின்
     இனமெ ழுந்தன மாக்களும் எழுந்தன எழில்சேர்
          அனமெ ழுந்தன புள்ளெலாம் எழுந்தன அவற்றின்
               மனமெ ழுந்தன எழுந்தன மக்களின் தொகையே. ......    59

(ஞாயி றுற்றவவ்)

ஞாயி றுற்றவவ் வளவையின் நனந்தலை உலகில்
     ஏயெ னச்செறி இருளெலாம் மறைந்திருந் தென்னச்
          சேய ரிக்கணி தந்திடு தெளிவில்கா மத்து
               மாயி ருட்டொகை யொடுங்கிய திந்திரன் மனத்துள். ......    60

(கையி கந்துபோய்)

கையி கந்துபோய்த் தன்னுயிர் அலைத்தகா மத்தீப்
     பைய விந்திடு பாந்தள்போல் தணிதலும் பதைப்புற்
          றொய்யெ னக்கடி தெழுந்தனன் நகைத்துவெள் குற்றான்
               ஐய கோவிது வருவதே எனக்கென அறைந்தான். ......    61

(தீமை யுள்ளன)

தீமை யுள்ளன யாவையுந் தந்திடுஞ் சிறப்புந்
     தோமில் செல்வமுங் கெடுக்கும்நல் லுணர்வினைத் தொலைக்கும்
          ஏம நன்னெறி தடுத்திருள் உய்த்திடும் இதனால்
               காம மன்றியே ஒருபகை உண்டுகொல் கருதில். ......    62

(என்ப துன்னியே)

என்ப துன்னியே இந்திரன் ஆண்டைவைப் பிகந்து
     தன்பு றந்தனிற் கடவுளர் குழுவெலாஞ் சார
          அன்பொ டேபடர்ந் தறுமுகன் அடிகளை அடைந்து
               முன்பு தாழ்ந்தனன் உரோமமுஞ் செங்கையும் முகிழ்ப்ப. ......    63

(தொழுத கையினன்)

தொழுத கையினன் கோட்டிய மெய்யினன் துகிலத்
     தெழுது பாவையில் ஆன்றமை புலத்தினன் இறைஞ்சிப்
          புழுதி தோய்தரும் உறுப்பினன் சுருதியின் பொருண்மை
               முழுதும் ஊறிய துதியின னாகிமுன் நின்றான். ......    64

(கரிய வன்றனை)

கரிய வன்றனைச் செய்யவன் கருணைசெய் தருளி
     வருதி யென்றுகூய் மறைகளும் வரம்புகாண் கில்லா
          அரன தாள்களை அருச்சனை புரிதுநாம் அதனுக்
               குரிய வாயபல் கரணமுந் தருதியென் றுரைத்தான். ......    65

(உரைத்த வெல்லை)

உரைத்த வெல்லையில் தொழுதுபோய் உழையரில் பலரைக்
     கரைத்து வீற்றுவீற் றேவியே கடிமலர்க் கண்ணி
          திரைத்து கிற்படா நறும்புனல் அவிபுகை தீபம்
               விரைத்த கந்தங்க ளேனவுந் தந்தனன் விரைவில். ......    66

(அவ்வக் காலையில்)

அவ்வக் காலையில் ஆறுமா முகனுடை யடிகள்
     தெய்வக் கம்மியற் கொண்டொரு சினகரம் இயற்றிச்
          சைவத் தந்திர விதியுளி நாடியே தாதை
               எவ்வெக் காலமும் நிலையதோர் உருவுசெய் திட்டான். ......    67

(தேவு சால்மணி)

தேவு சால்மணிப் பீடத்தில் ஈசனைச் சேர்த்தி
     ஆவின் ஓரைந்தும் அமுதமும் வரிசையால் ஆட்டித்
          தாவி லாததோர் வாலிதாம் அணித்துகில் சாத்திப்
               பூவின் மாலிகை செய்யசாந் தத்தொடும் புனைந்தான். ......    68

(மருந்தி னாற்ற)

மருந்தி னாற்றவுஞ் சுவையன வாலுவ நூல்போய்த்
     திருந்தி னார்களும் வியப்பன திறம்பல வாகிப்
          பொருந்து கின்றன நிரல்அமை கருனையம் புழுக்கல்
               சொரிந்து பொற்கலத் தருத்தினன் மந்திரத் தொடர்பால். ......    69

(கந்தம் வெள்ளிலை)

கந்தம் வெள்ளிலை பூகநற் காயிவை கலந்து
     தந்து பின்முறை அருத்தினன் புகைசுடர் தலையா
          வந்த பான்மைக ளியாவையும் வரிசையா லுதவி
               முந்து கைதொழூஉப் போற்றினன் மும்முறை வணங்கி. ......    70

வேறு

(இருவரும் உணர்)

இருவரும் உணர்கிலா திருந்த தாள்களைச்
     சரவண மிசைவரு தனயன் பூசனை
          புரிதலும் உமையொரு புடையிற் சேர்தர
               அருள்விடை மீமிசை அண்ணல் தோன்றினான். ......    71

(கார்த்திகை காத)

கார்த்திகை காதலன் கறைமி டற்றுடை
     மூர்த்திநல் லருள்செய முன்னி வந்தது
          பார்த்தனன் எழுந்தனன் பணிந்து சென்னிமேற்
               சேர்த்திய கரத்தொடு சென்று போற்றினான். ......    72

(செயிர்ப்பறு நந்தி)

செயிர்ப்பறு நந்திதன் திறத்தில் வீரரும்
     வியர்ப்பினில் வந்தெழு வீர ருங்குழீஇக்
          கயற்புரை கண்ணுமை கணவற் காணுறீஇ
               மயிர்ப்புறம் பொடிப்புற வணங்கி ஏத்தினார். ......    73

(முண்டகன் முதல்)

முண்டகன் முதல்வரும் முரண்கொள் பூதருங்
     கண்டனர் அனையது கரங்கள் கூப்பியே
          மண்டனின் மும்முறை வணங்கி வானகம்
               எண்டிசை செவிடுற ஏத்தல் மேயினார். ......    74

வேறு

(ஆயது காலை தன்னில் அரு)

ஆயது காலை தன்னில் அருவுரு வாகும் அண்ணல்
     சேயினை நோக்கி உன்றன் வழிபடற் குவகை செய்தேம்
          நீயிது கோடி யென்னா நிரந்தபல் புவன முற்றும்
               ஏயென முடிவு செய்யும் படைக்கலத் திறையை ஈந்தான். ......    75

(மற்றிது நம்பால்)

மற்றிது நம்பால் தோன்றும் வான்படை மாயன் வேதாப்
     பெற்றுள தன்றி யார்இப் பெரும்படை பரிக்கும் நீரார்
          முற்றுயிர் உண்ணும் வெஞ்சூர் முரட்படை தொலைப்பான் ஈது
               பற்றுதி மைந்த என்னாப் பராபரன் அருளிப் போனான். ......    76

(கருணைசெய் பரம)

கருணைசெய் பரமன் சேணிற் கரந்தனன் போன காலை
     அருள்பெறு நெடுவேல் அண்ணல் அன்னவற் போற்றிப் பின்னை
          விரவிய இலக்கத் தொன்பான் வீரரும் அயனும் ஏனைச்
               சுரர்களும் வழுத்திச் செல்லத் தூயதன் தேரிற் புக்கான். ......    77

(சில்லியந் தேர்மே)

சில்லியந் தேர்மேற் செவ்வேள் சேர்தலும் உலவை வேந்தன்
     வல்லைதன் தமர்க ளோடும் வாம்பரி கடாவி உய்ப்ப
          எல்லையிற் பரிதி தோன்ற எழுதரும் உயிர்க ளேபோல்
               ஒல்லென எழுந்த தம்மா உருகெழு பூத வெள்ளம். ......    78

(சாரத நீத்த மெல்)

சாரத நீத்த மெல்லாந் தரையின்நின் றெழுந்து சூழ்ந்து
     போரணி யணிந்து போந்த புடைதனில் இலக்கத் தொன்பான்
          வீரருஞ் சுரர்கள் யாரும் மேவினர் வந்தார் வான்றோய்
               தேர்மிசை அவர்க்கு நாப்பட் சென்றனன் குமரச் செம்மல். ......    79

(மண்ணியங் கரை)

மண்ணியங் கரையிற் றென்பால் வகுத்தசேய் ஞல்லூர் நீங்கி
     எண்ணிய வுதவும் பொன்னி யிகந்திடை மருதி னோடு
          தண்ணியல் மஞ்ஞை யாடுந் தண்டுறை பறிய லூருங்
               கண்ணுதல் இறைவன் தானம் ஏனவுங் கண்டு போனான். ......    80

(எழில்வளஞ் சுரக்)

எழில்வளஞ் சுரக்குந் தொல்லை இலஞ்சியங் கானம் நோக்கி
     மழவிடை இறைவன் பொற்றாள் வணங்கியே மலர்மென் பாவை
          முழுதுள திருவும் என்றும் முடிவில்மங் கலமும் எய்த
               விழுமிதின் நோற்றுப் பெற்ற வியன்திரு வாரூர் கண்டான். ......    81

ஆகத் திருவிருத்தம் - 1725




*1. பண்டொருவனிதை - பெண் வடிவங்கொண்ட அருணன்.



previous padalam   24 - குமாரபுரிப் படலம்   next padalamkumAraburip padalam

previous kandam   1 - உற்பத்தி காண்டம்   next kandam1 - uRpaththi kANdam

காண்டம் - படலம் பட்டியலுக்கு அகர வரிசையில் முதற்குறிப்புக்கு செய்யுள் முதற்குறிப்பு pdf வடிவம்

kANdam - padalam List Tamil alphabetical index verse index pdf version

Kandha Puranam - The Story of Lord Murugan

Sri Kachchiappa Sivachariyar

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



   Kaumaram.com சமீபத்தில் DDOS தாக்குதலால் பாதிக்கப்பட்டது.
எனவே, படங்கள் மற்றும் ஆடியோ தற்காலிகமாக கிடைக்காது.
நான் இதை படிப்படியாக சரிசெய்ய முயற்சிக்கிறேன்.
உங்கள் பொறுமைக்கும் புரிந்துணர்வுக்கும் நன்றி. ... வலைத்தள நிர்வாகி.  




  Kaumaram.com was recently affected by DDOS attack.
As such, images and audio will be temporarily unavailable.
I am trying to correct this progressively.
Thank you for your patience and understanding. ... webmaster.  



Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

© Copyright Kaumaram dot com - 2001-2040

COMMERCIAL USE OF MATERIAL IN THIS WEBSITE IS NOT PERMITTED.

Please contact me (the webmaster), if you wish to place a link in your website.

email: kaumaram@gmail.com

Disclaimer:

Although necessary efforts have been taken by me (the webmaster),
to keep the items in www.kaumaram.com safe from viruses etc.,
I am NOT responsible for any damage caused by use of
and/or downloading of any item from this website or from linked external sites.
Please use updated ANTI-VIRUS program to rescan all downloaded items
from the internet for maximum safety and security.

[W3]