Kaumara ChellamKaumaram dot com - The Website for Lord Muruga and His Devotees

வள்ளி கல்யாணம்

சாந்தா ராஜன்
(பெங்களூர்)

VaLLi kalyANam

Aarumuga


    இப்பக்கத்தை TSCII தமிழில் காண   கௌமாரம் இணையத்தில் தேடல் 

    view this page in TSCII Tamil 
 search Kaumaram Website 



  வள்ளி கல்யாணம்  

(சாந்தா ராஜன், பெங்களூர்)

   நம் ஸநாதன தர்மம் (Sanatana Dharma) வேதங்களை அடிப்படையாகக் கொண்டு அதன் நெறியில் அறம், பொருள், இன்பம்,
வீடு என்ற நான்கு பேறுகளையும் விரிவாக உணர்த்துகிறது. உபநிஷத்துக்கள் வேதங்களின் சாரத்தை வேதாந்தமாக
எடுத்துரைக்கின்றன. ஆனால் இவையெல்லாம் கற்றறிந்த பண்டிதருக்கே உதவுகின்றன. சமுதாயத்தில் உள்ள பாமரர்களும் வேத
நெறியில் செல்லவேண்டுமென்றால், உண்மையான மெய்ப்பொருளை அறியவேண்டுமென்றால் அவர்களுக்கு எளிதாகப் புரியும்படி
எடுத்துச் சொல்ல வேண்டும். தேனில் குழைத்து கொடுப்பதுபோல் புராணங்களின் மூலம் புகட்டினால் ஒவ்வொன்றின் தத்வார்த்ங்கள்
புரியும்.

முருகன் வள்ளியை ஆட்கொள்ள வேண்டி பல திருவிளையாடல்களைப் புரிந்துள்ளான். பரமாத்மாவான முருகன் வலியச் சென்று
ஜீவாத்மாவான வள்ளியை தனதாக்கிக் கொண்டதே இதன் தத்துவம்.

இது வள்ளியின் திருமணம் மட்டுமல்ல. நம் ஒவ்வொருவரின் திருமணமும் கூட. ஆண்டவனை அடையும் பொருட்டு ஒவ்வொரு
ஜீவனும் கொண்டுள்ள ஏக்கத்தை பக்தி பூர்வமாகவும், உணர்வு பூர்வமாகவும் பாடி, ஆடி, கசிந்து உருகி, ப்ரபஞ்சத்தின் ஒரே
புருஷனாகிய ஸுப்ரமண்யனை (பரப்ரம்மத்தை) அடைவதே இந்த திருமணத்தின் நோக்கமாகும்.

   அருவமும் உருவமாகி, அநாதியாய்ப் பலவாய் ஒன்றாய்
   ப்ரம்மமாய் நின்ற சோதிப் பிழம்பு (பரப்ரம்மம்)
   ஒரு மேனியாகி, முருகனாய் உலகமுய்ய உதித்தனன்.


உலகில் உள்ள ஜீவராசிகளுக்கெல்லாம் பிரதிநிதியாய் வள்ளி நிற்கிறாள். அவள் இச்சா சக்தியின் உருவகம். பரம்பொருளுக்கு
எப்பொழுதுமே ஜீவன் மேல் கருணையுண்டு. ஒவ்வொரு ஜீவனும் பாச பந்தங்களுக்கு அப்பாற்பட்டு, பக்குவப்பட வேண்டிய
தருணத்திற்காகத்தான் காத்துக் கொண்டிருக்கிறார்.

வள்ளி என்ற உருவகம் கொண்ட ஜீவாத்மாவை இப்பொழுது சந்திப்போம். அவள் பிறந்த குலம் வேடுவர் குலம். வேடுவர்கள்
அற்றைக்கு இரை தேடுபவர்கள். அன்றைய பசியைத் தீர்த்துக்கொள்பவர்கள். அத்தத்திலும் (பொ: அன்றாட தேவைகளிலும்) ஆசை
கொண்டவர்கள். இறைவனைப் பற்றி அறியாதவர்கள், அவனைப் பற்றத் தெரியாதவர்கள். அவர்களின் அரசனான நம்பி ராஜன்
முன்செய் பயனாய் ஒரு பெண் முத்தை வள்ளிக்கிழங்கு செடியடியில் கண்டெடுத்து வளர்த்து வருகிறான். வள்ளி என்ற ஜீவன் மற்ற
ஜீவன்களைவிட மேம்பட்டு இருக்கிறது. அவள் இறைவனைப் பற்றி தெரிந்து இருக்கிறாள், இன்னும் அறியவில்லை. நேரே காண
விழைகிறாள். அற்றைக்கு இரை தேடாமல் மறுமைக்கு முக்தியை தேடுகிறாள்.

அஷ்டாங்க யோகம் மூலமாகப் பெரு முயற்சி செய்கிறாள். முதல் இரண்டு அங்கங்களான இயமம், நியமம் மூலம் உயிர் குடி
கொண்டுள்ள உடலை கோவிலாக பேணுகிறாள். புற அழுக்குகள் படாமல் 'சிற்றேனல்' காக்கின்றாள். இதற்காக யோகாசனம்
பயில்கிறாள். 'ஆலோலம்' பாடி மகிழ்கிறாள். 'ஹம்ஸோஹம்' என்ற பிராணாயாம தியான வழிபாடு உதவுகிறது. சுவை, ஒலி, ஊரு, ஓசை,
நாற்றம் என்னும் பஞ்சேந்திரியங்களை வெளி விஷயங்களிருந்து தன்னை அப்புறப்படுத்துகிறாள். ப்ரத்தியாகாரம் என்னும் யோக
வகையில் எதிர்மறைகளான கோபம் மற்றும் மத மாச்சரியங்களை (பொ: பகைமை, பொறாமை) அறவே நீக்குகிறாள். இதையே 'குருவி
ஓட்டித்' திரிந்த பெண்ணாக அருணகிரியார் காண்கிறார். 'தியானம்' மற்றும் 'தாரணை' மூலாமாக மனதை ஒருமுகப்படுத்தித் தவம்
மேற்கொள்கிறாள். 'சமாதி' எனப்படும் எட்டாவது அங்கத்தில் பரப்ரம்மத்துடன் ஒன்றுவதற்குண்டான நிலை பெற அவளுடைய
முயற்சி மட்டும் போதவில்லை. அத்தருணத்தில் பரமாத்மாவான முருகன் அவளை ஆட்கொள்ள வருகிறான்.


Valli_Vedan

முதலில் அவளை பரீட்சை செய்ய அவர்களில் ஒருவனான வேடுவனாக வந்து மணம் புரியக் கேட்கிறான். வள்ளி உலக
வாழ்க்கையில் உழல மறுக்கிறாள். ஆனால் வந்தது பரப்ப்ரம்மம் என்று அறியவில்லை. முருகன் வேங்கை மரமாக உரு எடுக்கிறான்.
அஞ்ஞான இருளை அகற்றி ஞானம் தரும் தருவாக நிற்கிறான். அதன் பின் கிழவனாக (தலைவனாக) வந்து ஆச்ரயிக்கிறான்.
குருவாகி தீட்சை (தீக்கை) தந்து மும்மலங்களையும் இருவினையையும் போக்குகிறான்.

இப்பொழுது வள்ளி என்னும் ஜீவன், சத்தினிபாதத்திற்கு (பொ: மறைந்திருந்து அருள் பாலித்தல்) உரியவள் ஆகிறாள். ஓம்கார
மந்திரத்தின் உட்பொருளை முருகன் உணர்த்துகிறான். ப்ரவணத்தின் நாயகனான விநாயகர், யானையின் உருவம் தாங்கி வருவது
இதை குறிக்கிறது. பரமாத்ம - ஜீவ - ஸ்வருப - ஐக்யத்தை உலகுக்கு உணர்த்துவதுதான் வள்ளி திருமணத்தின் உட்கருத்து.

சிவ யோகநிலையில் சித்திர தீபம் போன்ற அநுபூதி பெற அஷ்டாங்க யோகத்தை அருணகிரிநாதர், 'ஆசை நாலு சதுரக்கமல' 
என்ற பாடலில் எடுத்துரைக்கிறார். அவன் அருள் அல்லாது அதை அடைய முடியாது. ஆகவே நம் சார்பாக ஆண்டவனிடம் 'யோக பேத
வகை எட்டும்' தந்தருள வேண்டுகிறார்.

   ஊமையேனை ஒளிர்வித்து உனது முத்திபெற
   மூலவாசல் வெளி விட்டு உனது உரத்தில் ஒளிர்
   யோக பேத வகை எட்டும் இதில் ஒட்டும் வகை இன்று தாராய்
   காதல் சோலை வளர் வெற்பில் உறை முத்தர்புகழ் ...... தம்பிரானே.

Articles in Kaumaram dot com - The Website for Lord Murugan and His Devotees

Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com

If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com

 download Free Azhagi software and Tamil fonts (SaiIndira) 
 download free Tamil fonts only (SaiIndira) 


... www.kaumaram.com ...

The website for Lord Murugan and His Devotees

top

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] .[css]