Sri AruNagirinAtharKaumaram dot com - Dedicated Website for Lord Muruga and His Devotees

திரு அருணகிரிநாதர் அருளிய
திருவகுப்பு

Sri AruNagirinAthar's
Thiruvaguppu

Sri Kaumara Chellam
திரு அருணகிரிநாதர் அருளிய திருவகுப்பு
9 - போர்க்களத் தலகை வகுப்பு
தமிழில் பொருள் எழுதியது
  'திருப்புகழ் அடிமை' ஸ்ரீ சு. நடராஜன், சென்னை, தமிழ்நாடு  


Sri AruNagirinAthar's Thiruvaguppu
pOrkkaLath thalagai vaguppu
Meanings in Tamil by
'Thiruppugazh adimai' Sri S. Nadarajan, Chennai, Tamil Nadu

'Thiruppugazh adimai' Sri S. Nadarajan
 அட்டவணை   எண்வரிசை   முழுப்பாடலுக்கு   PDF   தேடல் 
contents numerical index complete song  PDF  search
previous page next page
இச் செய்யுளின் ஒலிவடிவம்

audio recording of this poem
Ms Revathi Sankaran பாடலைப் பதிவிறக்க 

 to download 

பகலிர வின்றியொர் புகல்திசை நந்திய பற்பா னுத்தகை
    படமுதல் விசும்பு தூர்த்த டுக்கு பிணமலை  ...... 1

பவுரிவ ரும்பரி புரநரல் பங்கய வித்தா ரத்தன
    பயிரவி பதங்கள் வாழ்த்தெ டுத்த பசியன  ...... 2

பரியகொ ழுந்தசை பயிரவர் என்றுப லிக்கா நிற்பவர்
    பகரிடம் அறிந்து பாத்தி ரத்தில் இடுவன  ...... 3

பரவிவ ருங்குறள் பசிதணியும்படி பட்டார் கைப்படு
    பரிசையின் முகந்து சூட்டி றைச்சி சொரிவன  ...... 4

படுகள மென்பதொர் செறுவில் விளைந்தன பற்கோ வைப்பயில்
    பவுரிவி சைகொண்டு தீட்டி மெத்த அடுவன  ...... 5

பரியணி திண்பணை முடியம டிந்துடல் பப்பா தித்துணி
    படவிழு பெருங்கை மாக்க ருக்கல் பகிர்வன  ...... 6

படைவிச யந்தெரி சலதிவ லம்புரி பற்றார் பட்டுள
    பலபல விதங்கள் ஆர்ப்பெ டுக்கும் உதடின  ...... 7

பகடுபி ளந்ததன் உரிவைபு னைந்திடு குப்பா யத்தன
    பதவிய ரிணஞ்செ யூட்டு டுத்த வுடையின  ...... 8

உகமுடி வன்றினும் வெருவவ ரும்பல உற்பா தத்தன
    ஒளிமதி வகிர்ந்த கீற்றெ யிற்று நிலவின ...... 9

உருவம் இருண்டன திகிரிவி லங்கலின் உட்பாய் கிற்பன
    உலவிநி ணமொண்டு கூட்ட மைத்து நுகர்வன  ...... 10

உததியு றுஞ்சுவ வடவைநெ டுங்கனல் உட்கா கப்பெரு
    குதிரபி சிதங்கள் பேர்த்தி றக்கி யிடுவன  ...... 11

உருமுமி டைந்தென அதிர்குர லின்றமில் ஒப்பே றிட்டுநி
    ருதர்மவு லிகொண்டு கோட்டை யிட்டு மலைவன  ...... 12

உலகுகு லுங்கிட அரியது ணங்கையி னைச்சா திப்பன
    உவணப டலங்கள் காக்கை சுற்றி வருவன  ...... 13

உலைதரு மென்குட ரிடைபட இந்திர னுத்யா னத்தலர்
    உகிர்கொடு புனைந்த சூட்டு முற்றி மலைவன  ...... 14

உயரிப முங்குர கதகுல முங்கன பொற்றேர் வர்க்கமும்
    உடைபடு கலங்கள் போற்சு ழித்து விரைபட  ...... 15

ஒழுகுதி ரந்தனின் முழுகியெ ழுந்தன உச்சா டத்துடன்
    உடைகடல் அதிர்ந்து கூப்பி ளக்கு நடையின  ...... 16

செகதலம் எங்கணும் அதிரமு ழங்கிய டிப்பாய் வெற்றிய
    திரள்வரை பிடுங்கி நாட்டி யொட்டு குழையின  ...... 17

சினமலி வெங்குறள் இனமொடு திண்டிறல் மற்போர் கற்பன
    திசையள வுநின்று நீட்டி வைக்கும் அடியின  ...... 18

திசைகள்தொ றும்பல குறைகள் எழுந்துது டித்தா டச்சிறை
    செறிகழு கரங்கில் வீற்றி ருக்கும் அரசின  ...... 19

திமிரபி லங்கிழி படவிசை கொண்டுகு தித்தா லிப்பன
    சிகரவ டகுன்றி னூற்றி ரட்டி நெடியன  ...... 20

சிறியன கிண்கிணி யணிகுரு வின்சர ணத்யா னத்தின
    திசைபட அகண்ட சீர்த்தி மெச்சி யிரைவன  ...... 21

திமிலைபெ ரும்பறை சிறுபறை நின்றதி ரச்சே வித்துயர்
    சயமகள் விளங்கு வேற்க ரத்தை மொழிவன  ...... 22

திரிகட தொங்கிட திரிகட திங்கிட தித்தீ செக்கண
    செககண மொழிந்து கூத்த னைத்து நவில்வன  ...... 23

சிலைமலி திண்புய அசுரர்சி ரங்கள் அடுப்பா வைத்தவர்
    செறிகுடர் நிணங்கள் காய்ச்சி மிக்க அயில்வன  ...... 24

நிகரில் அறம்புரி குருகல பஞ்சவர் மெய்த்தூ துக்கொரு
    நிமிடம திலன்று போய்க்க வித்த மணிமுடி  ...... 25

நிருபர்ப யங்கொள நெறுநெ றெனும்படி பொற்பீடத்திடை
    நிலைபெற இருந்து நூற்று வர்க்கும் அவரறி  ...... 26

நினைவுற வன்புறும் ஒருபதி னெண்குண அக்ரோ ணிப்படை
    நிகிலமு மடிந்து கூற்று வற்கு நிறைவுற  ...... 27

நிலமகள் வன்பொறை கடியுமு குந்தன்மு தற்சேண் முட்டவு
    நெறிபட நிமிர்ந்த ஆக்கை யற்கு மருமகன்  ...... 28

நிமலைத்ரி யம்பகி கவுரிதி கம்பரி நிர்ப்பா வக்குண
    நிருமலி யிரங்கு தாய்ப்ரி யத்தன் அறுமகன்  ...... 29

நிகரக னங்குல சிகரிதொ டும்பெரு வெற்பார் உற்பல
    நிறையருவி கொஞ்ச ஓச்சி யத்தில் ஒளிர்சுனை  ...... 30

நியதியின் நன்கலர் தணிகைஎ னும்பதி நிற்பான் முற்பட
    நெடுமகர சிந்து தீப்ப றக்க வெகுவித  ...... 31

நிபுடது ரங்கக சவிரத சங்க்ரம நிட்டூ ரக்கொலை
    நிருதரை முனிந்த போர்க்க ளத்தில் அலகையே.  ...... 32

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -  top button

பகலிர வின்றியொர் புகல்திசை நந்திய பற்பா னுத்தகை
    படமுதல் விசும்பு தூர்த்த டுக்கு பிணமலை  ...... 1


......... பதவுரை .........  top button

பகல் இரவு இன்றி ... பகல் இரவு என்கிற பாகுபாடுகளைப் பார்க்காமல்,

ஓர் புகல் ... ஒப்பற்றனவாகக் கூறப்படும்,

திசை நந்திய ... எல்லாத் திசைகளிலும் ஒளியை வீசுகின்ற,

பற்பானு ... பன்னிரு சூரியர்கள் தகை பட தங்களுடைய சஞ்சாரம் தடைப்படும்படி

விசும்பு முதல் தூர்த்து ... ஆகாயம் முதல் பூமி வரை எல்லாம் மறையும்படி

அடுக்கு பிணமலை ... மலைபோல் குவிந்துள்ள அரக்கர் பிணங்களை

பவுரிவ ரும்பரி புரநரல் பங்கய வித்தா ரத்தன
    பயிரவி பதங்கள் வாழ்த்தெ டுத்த பசியன  ...... 2


......... பதவுரை .........  top button

பவுரி வரும் ... சுற்றி கூத்தாடி வரும்

பரிபுர நரல் பங்கய ... சிலம்பு சப்திக்கும் பாத தாமரைகளும்

வித்தா ரத்தன ... பருத்து கொழுத்த கொங்கைகளை உடைய

பயிரவி பதங்கள் வாழ்த்தி எடுத்த பசியன ... ரண துர்க்கையின் திருவடிகளை வாழ்த்தியபடி பச் பச் என்று கெஞ்சி நிற்பன

    (போர்க் களத்தில் அலகையே).

பரியகொ ழுந்தசை பயிரவர் என்றுப லிக்கா நிற்பவர்
    பகரிடம் அறிந்து பாத்தி ரத்தில் இடுவன  ...... 3


......... பதவுரை .........  top button

பயிரவர் என்று பலிக்கா நிற்பவர் ... தமது தலைவியான துர்க்கையின் படை வீரரான பைரவர் எனக் கருதி உணவுப் பிச்சை கேட்டு நிற்கும்

பகரிடம் அறிந்து ... அவருடைய இடத்தை தேடிச் சென்று

பரிய கொழுந்தசை ... பெருத்த கொழுத்த மாமிசத் துண்டங்களை

பாத்திரத்தில் இடுவன ... பிட்சா பாத்திரங்களில் போடுவன

    (போர்க் களத்தில் அலகையே).

பரவிவ ருங்குறள் பசிதணியும்படி பட்டார் கைப்படு
    பரிசையின் முகந்து சூட்டி றைச்சி சொரிவன  ...... 4


......... பதவுரை .........  top button

பரவி வரும் குறள் பசி தணியும்படி ... போற்றி துதி செய்து வருகின்ற குட்டை பூதங்களின் பசி தீரும்படி,

பட்டார் கைப்படு ... யுத்தகளத்தில் வீழ்ந்து இறந்தவர்களுடைய கையிலிருந்து கீழே வீழ்ந்து கிடக்கும்,

பரிசையின் முகந்து சூட்டு இறைச்சி சொரிவன ... கேடயங்களை பாத்திரங்களாகக் கொண்டு வாரி மொண்டு புதிய உஷ்ணம் குன்றாத மாமிசத்தை திரளாக கொடுப்பன

    (போர்க் களத்தில் அலகையே).

படுகள மென்பதொர் செறுவில் விளைந்தன பற்கோ வைப்பயில்
    பவுரிவி சைகொண்டு தீட்டி மெத்த அடுவன  ...... 5


......... பதவுரை .........  top button

படு களம் எனபதொர் ... யுத்த பூமியாகிய

செறுவில் விளைந்தன ... வயலில் பயிராகி உள்ள

பற்கோவைப் ... பல் வரிசைகளை தானியமாக பாவித்து

பயில்பவுரி விசை கொண்டு தீட்டி மெத்த அடுவன ... தாங்கள் பழகி வரும் சுற்றி சுற்றி ஆடும் நடனகூத்தின் வேகத்தோடு வந்து அந்தப் பல் வரிசைகளைக் குத்தி சுத்தம் செய்து சிறப்பாக சமைப்பன

    (போர்க் களத்தில் அலகையே).

பரியணி திண்பணை முடியம டிந்துடல் பப்பா தித்துணி
    படவிழு பெருங்கை மாக்க ருக்கல் பகிர்வன  ...... 6


......... பதவுரை .........  top button

அணி திண்பணை பரி முடிய மடிந்து ... அழகிய வலிமை மிக்க குதிரை லாயங்களில் குதிரைகள் அனைத்தும் மாண்டு போய்

உடல் பப்பாதித் துணி பட ... அவைகளின் உடல்கள் பாதி பாதியாய் அறுந்து விழ (அவைகளையும்)

விழு பெருங்கை மாக் கருக்கல் பகிர்வன ... வீழ்ந்து கிடக்கும் பெரிய யானைகளையும் வறுத்து பங்கிட்டு கொடுப்பன

    (போர்க் களத்தில் அலகையே).

படைவிச யந்தெரி சலதிவ லம்புரி பற்றார் பட்டுள
    பலபல விதங்கள் ஆர்ப்பெ டுக்கும் உதடின  ...... 7


......... பதவுரை .........  top button

படை விசயம் தெரி ... தமது படைகளின் வெற்றிச் செய்திகளை தெரிந்துகொண்டு,

சலதி வலம்புரி பற்றார் பட்டுள பலபல விதங்கள் ஆர்ப்பெ டுக்கும் உதடின ... சமுத்திரம் போலவும் சங்கினைப் போலவும் பலப்பல விதங்களில் பகைவர்கள் மாண்டு கிடக்கும் நிலைகளை கூச்சலிட்டு கூறும் வாயினை உடையன

    (போர்க் களத்தில் அலகையே).

பகடுபி ளந்ததன் உரிவைபு னைந்திடு குப்பா யத்தன
    பதவிய ரிணஞ்செ யூட்டு டுத்த வுடையின  ...... 8


......... பதவுரை .........  top button

பகடு பிளந்து அதன் உரிவைபு னைந்திடு குப்பா யத்தன ... துண்டமாக்கப்பட்ட யானைகளின் தோலை சட்டையாக அணிந்திருப்பன

    (போர்க் களத்தில் அலகையே).

அரிணம் பதவி ... மான் தோலைப் பதப்படுத்தி

செயூட்டு உடுத்த உடையின ... செம்மைப் படுத்த செய்யப்பட்ட உடுப்புகளை தரித்திருப்பன.

    (போர்க் களத்தில் அலகையே).

உகமுடி வன்றினும் வெருவவ ரும்பல உற்பா தத்தன
    ஒளிமதி வகிர்ந்த கீற்றெ யிற்று நிலவின  ...... 9


......... பதவுரை .........  top button

உக முடிவு அன்றினும் ... சதுர் யுகம் முடிந்து பிரளயம் வரும் போது,

வெருவ வரும் பல உற்பாதத்தன ... அச்சம் ஊட்டும் பல விதமான கெட்ட சகுனங்களை காண்பிப்பது போல,

ஒளி மதி வகிர்ந்த கீற்று எயிற்று நிலவின ... பிரகாசிக்கும் சந்திரனை பிளந்தது போன்ற கோரைப் பற்களை உடையன

    (போர்க் களத்தில் அலகையே).

உருவம் இருண்டன திகிரிவி லங்கலின் உட்பாய் கிற்பன
    உலவிநி ணமொண்டு கூட்ட மைத்து நுகர்வன  ...... 10


......... பதவுரை .........  top button

உருவம் இருண்டன ... கரிய நிறத்தன,

திகிரி விலங்கலின் உட்பாய் கிற்பன ... சக்ரவாளகிரியைப் பிளந்து உள்ளே பாயும் வலிமை உடையன,

உலவி நிண மொண்டு கூட்டு அமைத்து நுகர்வன ... திரிந்து மாமிசங்களை அள்ளி கறி சமைத்து உண்பன

    (போர்க் களத்தில் அலகையே).

உததியு றுஞ்சுவ வடவைநெ டுங்கனல் உட்கா கப்பெரு
    குதிரபி சிதங்கள் பேர்த்தி றக்கி யிடுவன  ...... 11


......... பதவுரை .........  top button

உததி உறுஞ்சுவ ... கடல் நீரை உறுஞ்சுகின்ற

வடவை நெடுங்கனல் உட்காகப் பெருகு ... வடவாமுக அக்னியாகிய பெருந்தீயும் பயப்படும்படி பெருகி வெளிப்படும்,

உதிர பிசிதங்கள் பேர்த்து இறக்கி இடுவன ... ரத்தம் தோய்ந்த கொழுப்பை பிரித்து வண்டலை எல்லாம் வடித்து பங்கீடு செய்வன

    (போர்க் களத்தில் அலகையே).

உருமுமி டைந்தென அதிர்குர லின்றமில் ஒப்பே றிட்டுநி
    ருதர்மவு லிகொண்டு கோட்டை யிட்டு மலைவன  ...... 12


......... பதவுரை .........  top button

உருமும் இடைந்து என ... இடி அருகில் சப்திப்பது போன்று

அதிர் குரலின் ... முழங்கும் வாய் ஓசையுடன்

தமில் ஒப்பு ஏறிட்டு ... தமக்குள் யாருடைய குரல் அதிகமானது என ஒப்பிட்டுக் கொண்டு

நிருதர் மவுலி கொண்டு கோட்டை இட்டு அலைவன ... அரக்கர்களின் தலைகளைக் கொண்டு கோட்டை போல அடுக்கி எதிர் எதிர் நின்று போட்டியில் ஈடுபடுவன (tug-of-war)

    (போர்க் களத்தில் அலகையே).

உலகுகு லுங்கிட அரியது ணங்கையி னைச்சா திப்பன
    உவணப டலங்கள் காக்கை சுற்றி வருவன  ...... 13


......... பதவுரை .........  top button

உலகு குலுங்கிடஅரிய துணங்கையினைச சாதிப்பன ... உலகமே அதிரும்படி அருமையான துணங்கைக் கூத்தை செய்து காட்டுவன

    (போர்க் களத்தில் அலகையே).

உவண படலங்கள் காக்கை சுற்றி வருவன ... கழுகு கூட்டங்கள் காக்கைகள் சுற்றி இருக்க உலவி வருவன

    (போர்க் களத்தில் அலகையே).

உலைதரு மென்குட ரிடைபட இந்திர னுத்யா னத்தலர்
    உகிர்கொடு புனைந்த சூட்டு முற்றி மலைவன  ...... 14


......... பதவுரை .........  top button

உலை தரு ... அழிந்து கிடக்கும்

மென் குடல் இடைபட ... மெல்லிய குடல்களை சேர்த்துக் கட்டுவதற்கு நார் போல உபயோகித்து

இந்திரன் உத்யானத்து அலர் ... கற்பகச் சோலையின் பூந்தோட்டத்து பூக்களை

உகிர்கொடு புனைந்த சூட்டு முற்றி மலைவன ... தங்கள் நக நுனிகளால் ஜோடிக்கப்பட்ட மாலைகளை கட்டி முடித்து சூட்டிக் கொள்வன

    (போர்க் களத்தில் அலகையே).

உயரிப முங்குர கதகுல முங்கன பொற்றேர் வர்க்கமும்
    உடைபடு கலங்கள் போற்சு ழித்து விரைபட  ...... 15


......... பதவுரை .........  top button

உயர் இபமும் குரகதமும் ... சிறந்த யானை குதிரைப் படைகளையும்

கன பொன்தேர் வர்க்கமும் ... பெரிய அழகிய தேர் படைகளையும்

உடைபடு கலங்கள் போற்சு ழித்து விரைபட ... சூறாவளி காற்றால் சின்னா பின்னமாக்கப்பட்ட படகுகள் போல் சுழற்சி உற்று வேகமாக அழிபட இட்டன

    (போர்க் களத்தில் அலகையே).

ஒழுகுதி ரந்தனின் முழுகியெ ழுந்தன உச்சா டத்துடன்
    உடைகடல் அதிர்ந்து கூப்பி ளக்கு நடையின  ...... 16


......... பதவுரை .........  top button

ஒழுகு உதிரந்தனின் முழுகி எழுந்தன ... யானை குதிரையின் உடல்களில் இருந்து வெளி வரும் ரத்த ஆற்றால் முழுகி எழுந்தன

உச்சாடத்துடன் நடையின ... சடுகுடு என கொக்கரித்துக்கொண்டு ஒன்றை ஒன்று துரத்துவன

உடை கடல் அதிர்ந்து கூப்பிளக்கு நடையின ... கடல் தளர்ந்து போகவும் அந்த ஓட்ட அதிர்ச்சியால் பூமி பிளவுபடும்படியான நடையை உடையன

    (போர்க் களத்தில் அலகையே).

செகதலம் எங்கணும் அதிரமு ழங்கிய டிப்பாய் வெற்றிய
    திரள்வரை பிடுங்கி நாட்டி யொட்டு குழையின  ...... 17


......... பதவுரை .........  top button

செகதலம் எங்கணும் அதிர முழங்கி ... பூமியில் எல்லா இடங்களும் அதிரும்படி முழக்கம் செய்து

அடிப்பாய் வெற்றிய ... காலை அழுத்திப் பாய்கின்ற ஜெயத்தை உடையனவாய்

திரள் வரை பிடுங்கி நாட்டி ஒட்டு குழையின ... சுற்றி உள்ள திரளான மலைகளைப் பிடுங்கி அவைகளை நேராக நிறுத்தி காதில் ஆபரணமாக பூட்டிக் கொள்வன

    (போர்க் களத்தில் அலகையே).

சினமலி வெங்குறள் இனமொடு திண்டிறல் மற்போர் கற்பன
    திசையள வுநின்று நீட்டி வைக்கும் அடியின  ...... 18


......... பதவுரை .........  top button

சினமலி வெங்குறள் இனமொடு ... கோபம் மிக்க கொடிய பேய்க் கணங்களுடன்

திண் திறல் மற்போர் கற்பன ... வலிமையுடனும் சாமர்த்தியத்துடன் மல் யுத்தம் பழகுவன

    (போர்க் களத்தில் அலகையே).

திசை அளவு நின்று நீட்டி வைக்கும் அடியின ... நான்கு திசைகளிலும் பரவலாக நின்று பாதங்களை எட்ட எட்ட வைப்பன

    (போர்க் களத்தில் அலகையே).

திசைகள்தொ றும்பல குறைகள் எழுந்துது டித்தா டச்சிறை
    செறிகழு கரங்கில் வீற்றி ருக்கும் அரசின  ...... 19


......... பதவுரை .........  top button

திசைகள் தொறும் பல குறைகள் எழுந்து ... யுத்த களத்தில் பல திசைகளிலும் சிரம் அறுபட்ட பல கவுந்தங்கள்(தலையற்ற உடல்கள்) பூமியிலிருந்து எழுந்து

துடித்து ஆட ... அங்கும் இங்கும் துடித்து ஆட

சிறை செறி கழுகு அரங்கில் வீற்றி இருக்கும் அரசின ... இறகுகள் மிகுந்து பட படக்கும் கழுகுகளின் அரங்கத்தில் தலமை பூண்டு தன் ஆணைகளைச் செலுத்துவன

    (போர்க் களத்தில் அலகையே).

திமிரபி லங்கிழி படவிசை கொண்டுகு தித்தா லிப்பன
    சிகரவ டகுன்றி னூற்றி ரட்டி நெடியன  ...... 20


......... பதவுரை .........  top button

திமிர பிலம் கிழி பட விசை கொண்டு குதித்து ஆலிப்பன ... இருண்ட பாதாள உலகம் உடைந்து போகும்படிக்கு வேகத்துடன் குதித்து ஆரவாரம் செய்வன

    (போர்க் களத்தில் அலகையே).

சிகர வட குன்றின் நூற்று இரட்டி நெடியன ... உயர்ந்து வடக்கிலுள்ள மேரு மலையைப் போல் இரு நூறு மடங்கு நீண்டு உயர்ந்த உருவத்தை கொண்டன

    (போர்க் களத்தில் அலகையே).

சிறியன கிண்கிணி யணிகுரு வின்சர ணத்யா னத்தின
    திசைபட அகண்ட சீர்த்தி மெச்சி யிரைவன  ...... 21


......... பதவுரை .........  top button

சிறியன கிண்கிணி யணி குருவின் சரண தியானத்தின ... சிறு சதங்கை அணிந்துள்ள குருபரனான முருகவேளின் திருவடிகளை தியானிக்கும் ஒழுக்கம் உடையன

திசை பட அகண்ட சீர்த்தி மெச்சி இரைவன ... நான்கு திசைகளும் உடையும்படிக்கு கணக்குக்கு எட்டாத அபரிமிதமான அவரின் பெரும் புகழை மிகுத்த சப்தங்களுடன் வாயாறப் பாடுவன

    (போர்க் களத்தில் அலகையே).

திமிலைபெ ரும்பறை சிறுபறை நின்றதி ரச்சே வித்துயர்
    சயமகள் விளங்கு வேற்க ரத்தை மொழிவன  ...... 22


......... பதவுரை .........  top button

திமிலை பெரும்பறை சிறுபறை நின்று அதிரச் சேவித்து ... திமிலை, களப்பறை, சிறிய பறை, முதலிய தோல் வாத்தியங்கள் நிலையாக ஒலி செய்ய வணங்கிக்கொண்டு

உயர் சயமகள் விளங்கு வேல் கரத்தை மொழிவன ... மேலான விஜய லக்ஷ்மி திகழும் வேலாயுதத்தையும் அதைப் பிடித்திருக்கும் கரத்தைப் பற்றியும் போற்றி துதிப்பன

    (போர்க் களத்தில் அலகையே).

திரிகட தொங்கிட திரிகட திங்கிட தித்தீ செக்கண
    செககண மொழிந்து கூத்த னைத்து நவில்வன  ...... 23


......... பதவுரை .........  top button

திரிகட தொங்கிட திரிகட திங்கிட தித்தீ செக்கண செககண மொழிந்து ... பல ஜதி சுரங்களைக் கூறி

கூத்து அனைத்து நவில்வன ... பல வகை கூத்துக்களை நடித்துக் காட்டுவன

    (போர்க் களத்தில் அலகையே).

சிலைமலி திண்புய அசுரர்சி ரங்கள் அடுப்பா வைத்தவர்
    செறிகுடர் நிணங்கள் காய்ச்சி மிக்க அயில்வன  ...... 24


......... பதவுரை .........  top button

சிலை மலி திண்புய அசுரர் சிரங்கள் அடுப்பா வைத்து ... மலை போன்ற வலிய தோல்களை உடைய அரக்கர்களின் தலைகளை அடுப்பாக வைத்து

அவர் செறி குடர் நிணங்கள் காய்ச்சி மிக்க அயில்வன ... அவர்களுடைய செறிந்த குடல்களையும் கொழுப்பையும் காய்ச்சி மிகுதியாக உண்பன

    (போர்க் களத்தில் அலகையே).

நிகரில் அறம்புரி குருகுல பஞ்சவர் மெய்த்தூ துக்கொரு
    நிமிடம திலன்று போய்க்க வித்த மணிமுடி  ...... 25


......... பதவுரை .........  top button

நிகரில் அறம் புரி குருகுல பஞ்சவர் ... ஒப்பில்லாத தான தர்மங்களை மேற்கொண்டு வரும் குரு வம்சத்தினரான பஞ்ச பாண்டவர்களுக்கான

தூதுக்கு ஒரு நிமிடமதில் அன்று போய்க் கவித்த மணிமுடி ... சத்தியத்தை நாட்டும் தூதுவனாக மிக வேகத்துடன் சென்று முன்னாளில் அஸ்தினாபுரம் சென்று ரத்ன கிரிடங்களை அணிந்துள்ள,

நிருபர்ப யங்கொள நெறுநெ றெனும்படி பொற்பீடத்திடை
    நிலைபெற இருந்து நூற்று வர்க்கும் அவரறி  ...... 26


......... பதவுரை .........  top button

நிருபர் பயங்கொள ... துரியோதனனின் ராஜ சபையில் இருந்த அரசர்கள் அச்சம் அடையும்படிக்கு

நெறு நெறு எனும்படி பொற்பீடத்திடை நிலைபெற இருந்து ... வஞ்சனையாக போடப்பட்டிருந்த (ஆசனம்) நெறு நெறு என்று கீழெ நிலவறையில் இறங்க அந்த அழகிய பீடத்தில் அச்சமில்லாமல் அதில் நிலையாக வீற்றிருந்து, (நிலவறையில் பதுங்கி இருந்த அரக்கர்களையும் மல்லர்களையும் கிழித்துப் போட்டு)

நூற்றுவர்க்கும் அவர் அறி ... துரியோதனாதியர்கள் நூறு கெளரவர்கள் அறிந்து

நினைவுற வன்புறும் ஒருபதி னெண்குண அக்ரோ ணிப்படை
    நிகிலமு மடிந்து கூற்று வற்கு நிறைவுற  ...... 27


......... பதவுரை .........  top button

நினைவுற வன்புறும் ஒரு பதினெண்குண அக்ரோணிப்படை ... நினைவில் கொள்ளும்படி வலிமை மிக்க ஒப்பற்ற பதினெட்டு அக்ரோணிப் படை

நிகிலமும் மடிந்து கூற்றுவற்கு நிறைவுற ... எல்லாமும் இறந்து எமனுக்கு விருந்தாக அமைய

(பதினெண்குண அக்ரோணிப்படை நிகிலமும் மடிந்து பாண்டவர் பக்கம் 7 கெளரவர்கள் பக்கம் 11 ஆக 18 அக்ரோணி படைகள் அனைத்தும் யுத்தத்தில் அழிந்தன

அக்ரோணிப்படை

    1 யானை, 1 தேர், 3 குதிரை, 5 காலாள் ... 1 பதாதி
    3 பதாதி ... 1 சேனாமுகம்
    3 சேனாமுகம் ... 1 குமுதம்
    3 குமுதம் ... 1 கனகம்
    3 கனகம் ... 1 வாகிணி
    3 வாகிணி ... 1 பிரளயம்
    3 பிரளயம் ... 1 சமுத்திரம்
    3 சமுத்திரம் ... 1 சங்கம்
    3 சங்கம் ... 1 அனிகம்
    3 அனிகம் ... 1 அக்ரோணி)

நிலமகள் வன்பொறை கடியுமு குந்தன்மு தற்சேண் முட்டவு
    நெறிபட நிமிர்ந்த ஆக்கை யற்கு மருமகன்  ...... 28


......... பதவுரை .........  top button

நிலமகள் வன்பாறை கடியும் முகுந்தன் ... பூமா தேவிக்கு பெரும் பாரமாய் இருந்தவர்களை கோபித்து அழித்த திருமால்,

முதல் சேண் முட்டவும் நெறிபட நிமிர்ந்த ஆக்கையற்கு மருமகன் ... முன்னொரு நாளில் ஆகாய கபாலம் இடிக்கும்படி வளர்ந்து தர்மம் நிலை பெற விஸ்வ ரூபம் கொண்ட உடலை உடைய திரிவிக்ரமற்கு மருமகன்

நிமலைத்ரி யம்பகி கவுரிதி கம்பரி நிர்ப்பா வக்குண
    நிருமலி யிரங்கு தாய்ப்ரி யத்தன் அறுமகன்  ...... 29


......... பதவுரை .........  top button

நிமலை ... மலமற்றவள்

த்ரியம்பகி ... முக்கண்ணி

கவுரி ... பொன் நிறத்தவள்

திகம்பரி ... திக்குகளையே ஆடையாகக் கொண்ட நிர்வாணி

நிர்ப்பாவக் குண நிருமலி ... எண்ணங்களுக்கும் முக்குணங்களுக்கும் அப்பாற்ப்பட்ட பரிசுத்தை,

இரங்கு தாய் ... ஜீவ ராசிகளுக்கு கருணை புரியும் அன்னையாகிய பார்வதிக்கு

ப்ரியத்தன் அறுமகன் ... பிரியத்தை அளிக்கும் சண்முகன்

நிகரக னங்குல சிகரிதொ டும்பெரு வெற்பார் உற்பல
    நிறையருவி கொஞ்ச ஓச்சி யத்தில் ஒளிர்சுனை  ...... 30


......... பதவுரை .........  top button

நிகர ... திரளான

கனங்குல சிகரி தொடும் பெரு வெற்பு ... பொன் மயமான சிறந்த மேரு மலையைத் தொடும் அளவிற்கு பெருமை மிக்க மலை

ஆர் உற்பல நிறை அருவி கொஞ்ச ஓச்சியத்தில் ஒளிர் சுனை ... நெருங்கிய நீலோற்ப மலர்கள், நீர் மிகுந்த அருவிகள் பாயும் தேஜஸுடன் ஒளி வீசும் சுனையில்

நியதியின் நன்கலர் தணிகைஎ னும்பதி நிற்பான் முற்பட
    நெடுமகர சிந்து தீப்பறக்க வெகுவித  ...... 31


......... பதவுரை .........  top button

நியதியின் நன்கு அலர் தணிகை எனும் பதி நிற்பான் ... காலை உச்சி மாலை எனும் வேளை தப்பாது நன்கு நீலோற்பல மலர்கள் மலர்கின்ற திருத்தணியில் நிற்பவன்

முற்பட நெடு மகர சிந்து தீப் பறக்க ... யுத்தத்திற்கு முற்பட்டு எழுந்து பெரிய மகர மீன்கள் உலாவும் மகா சமுத்திரம் அக்னி ஜ்வாலை பாய

நிபுடது ரங்கக சஇரத சங்க்ரம நிட்டூ ரக்கொலை
    நிருதரை முனிந்த போர்க்க ளத்தில் அலகையே.  ...... 32


......... பதவுரை .........  top button

வெகுவித நிபுட ... நெருங்கி வந்த பல வகையான

துரங்க கச இரத சங்க்ரம ... குதிரை, யானை, தேர் படைகளுடன் கூடி வந்து

நிட்டூரக் கொலை நிருதரை முனிந்த போர்க்களத்தில் அலகையே ... கொடூரமாகக் கொலைத் தொழில் புரியும் அரக்கர்களை தண்டித்த போர்க்களத்தில் இருந்த பேய்க் கூட்டங்களே.

திரு அருணகிரிநாதரின் திருவகுப்பு 9 - போர்க்களத் தலகை வகுப்பு
Thiruvaguppu 9 - pOrkkaLath thalagai vaguppu
 அட்டவணை   எண்வரிசை   முழுப்பாடலுக்கு   PDF   ஒலிவடிவம்   தேடல் 
contents numerical index complete song  PDF   mp3  search
previous page next page

Sri AruNagirinAthar's Thiruvaguppu 9 - pOrkkaLath thalagai vaguppu


   Kaumaram.com சமீபத்தில் DDOS தாக்குதலால் பாதிக்கப்பட்டது.
எனவே, படங்கள் மற்றும் ஆடியோ தற்காலிகமாக கிடைக்காது.
நான் இதை படிப்படியாக சரிசெய்ய முயற்சிக்கிறேன்.
உங்கள் பொறுமைக்கும் புரிந்துணர்வுக்கும் நன்றி. ... வலைத்தள நிர்வாகி.  




  Kaumaram.com was recently affected by DDOS attack.
As such, images and audio will be temporarily unavailable.
I am trying to correct this progressively.
Thank you for your patience and understanding. ... webmaster.  



Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

PLEASE do not ask me for songs about other deities or for BOOKS - This is NOT a bookshop - sorry.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

© Copyright Kaumaram dot com - 2001-2040

COMMERCIAL USE OF MATERIAL IN THIS WEBSITE IS NOT PERMITTED.

Please contact me (the webmaster), if you wish to place a link in your website.

email: kaumaram@gmail.com

Disclaimer:

Although necessary efforts have been taken by me (the webmaster),
to keep the items in www.kaumaram.com safe from viruses etc.,
I am NOT responsible for any damage caused by use of
and/or downloading of any item from this website or from linked external sites.
Please use updated ANTI-VIRUS program to rescan all downloaded items
from the internet for maximum safety and security.

 மேலே   top