|  | உ
 
 ஓம் குஹப்ரமணே நமஹ
 ஓம் குமரகுருதாச குருப்யோ நமஹ
 ...... ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ......ஸ்ரீமத் பாம்பன் குமரகுருதாச சுவாமிகள் முருகப் பெருமானின் பேரருள் விளைவினில் சைவம் தழைக்கும் பொருட்டு நம் தமிழகத்தில் அவதரித்தார்.
 
 திருமுருகப் பெருமானின் குகப்பிரம்ம நெறிக்கும் நம் தெய்வ மொழியாகிய தமிழ் மொழிக்கும் தமது கவி திறத்தால் பேரொளி கூட்டியவர். தமது பாடல்களிலும் சாத்திரங்களிலும் சுப்பிரமணிய தத்துவத்தையும் அதன் மேன்மையையும் தெளிவுற விளக்கியுள்ளார்.
 
 ஸ்ரீமத் பாம்பன் குமரகுருதாச சுவாமிகள் என வழங்கப்படும் சுவாமிகளது இயற்பெயர் செவ்வேள் பரமனின் திருப்பெயராகிய 'அப்பாவு' என்பதாம் (*அப்பாவு = தந்தைக்கும் இறைவன்). இவர் தம் பெற்றோர் திரு சாத்தப்ப பிள்ளை திருமதி செங்கமல அம்மாள். இவர் பிறந்த வருடம் 1847 அல்லது 1848 என்று அறியப் படுகிறது.
 
 பிள்ளை பருவத்தில் திரு முனியாண்டியா பிள்ளை என்பவரிடம் கல்வி பயின்றார். உயர் கல்வியை அவ்வூர் கிறிஸ்த்தவ கல்வி நிலையத்தில் பயின்றார்.
 
 அவர் தம் ஆன்மா சிவமணம் கமழ்ந்திருந்தது. திருமுருகப்பெருமானிடம் நிலைகொண்டிருந்தது. திருப்புகழில் ஊறித் திளைத்திருந்தார். தமது குருவாக ஸ்ரீமத் அருணகிரிநாதப் பெருமானையே திருஉளத்தில் இருத்தினார். தானும் முருகவேளைப் பாடும் பணியை பெற திருமுருகப் பெருமானை இறைஞ்சினார். தான் இயற்றும் ஒவ்வொரு பதிகத்தையும் ஸ்ரீமத் அருணகிரிநாதப் பெருமானின் பெயரை வைத்தே முடிப்பதாக உறுதி பூண்டார். குருவருளும் திருவருளும் சித்தித்தது. தமது அதி இளமை பருவத்திலேயே (13 ஆம் வயதில்) 'கங்கையை சடையிற் பறித்து' எனத் தொடங்கும் முதல் பாடலை இயற்றினார்.
 
 இவ்வகையில் தம் வாழ்நாளில் மொத்தம் 6666 பாடல்களையும் 32 வியாசங்களையும் திருமுருகப்பெருமானின் புகழ் மணக்க இயற்றி அருளியுள்ளார். இவைகள் ஆறு மண்டலங்களாக தொகுக்கப்பட்டுள்ளன.
 
 இரண்டாம் மண்டலத்தில், திருவலங்க திரட்டு முதல் கண்டம் இசைத்தமிழாக மலர்ந்துள்ளது. தேவாரப் பதிகங்களின் பண் அடிப்படையில் இவற்றினை இசைக்கலாம்.
 
 ஸ்ரீமத் பாம்பன் குமரகுருதாச சுவாமிகள் அருளியவைகளுள் பகைகடிதல், குமாரஸ்தவம், சண்முக கவசம், பரிபூஜன பஞ்சாமிர்த வண்ணம் முதலானவை மந்திரங்களின் சாரங்களாக திகழ்பவை, திருமுருகப்பெருமானின் திருஉளத்தில் நம்மை கொண்டு சேர்ப்பவை என்றால் அது மிகையன்று.
 
 குகசாயுச்யம்: சுவாமிகள் குகசாயுச்யம் அடைந்த நாள் 30.05.1929 வியாழக்கிழமை காலை 07.15 மணி, வைகாசி மாதம் தேய்பிறை சஷ்டி திதி.
 
 
 
 ஸ்ரீமத் பாம்பன் குமரகுருதாச சுவாமிகள் அருளிய தோத்திர சாத்திர வடிவான செயுட்பாக்கள் 6666.
 
 முதல் மண்டலம்:
 
 குமரகுருதாச சுவாமிகள் பாடல்கள்.
 
 ஸ்ரீ சண்முகக் கவசம்
 ஸ்ரீ குமாரஸ்தவம்
 பகை கடிதல்
 பரிபூரண பஞ்சாமிர்த வண்ணம்
 திருவடித் துதி
 ஸ்ரீ சண்முக நாமாவளி
 
 இரண்டாம் மண்டலம்:
 
 திருவலங்க திரட்டு - முதல் கண்டம்.
 இசைத்தமிழ் திருவலங்க திரட்டு - இரண்டாம் கண்டம்.
 பல்சந்த பரிமளம்.
 
 முன்றாம் மண்டலம்:
 
 காசியாத்திரை,
 பரிபூரணானந்த போதம்,
 தகராலய ரகசியம்.
 
 நான்காம் மண்டலம்:
 
 சிறுநூல் திரட்டு,
 சேந்தன் செந்தமிழ்,
 பத்துப் பிரபந்தம்,
 செக்கர்வேள் செம்மாப்பு,
 செக்கர்வேள் இறுமாப்பு,
 சீவயாதனா வியாசம்.
 
 ஐந்தாம் மண்டலம்:
 
 திருப்பா - முதல் மற்றும் இரண்டாம் புத்தகம்
 
 ஆறாம் மண்டலம்:
 
 ஸ்ரீமத் குமாரசுவாமியம்
 
 உரை நூல்கள்:
 
 சிவஞான தீபம்,
 செவியறிவு,
 சைவ சமய சரபம்,
 நாலாயிர பிரபந்த விசாரம்,
 சுத்தாத்வைத நிர்ணயம்,
 மற்றும் வியாசங்கள் 32.
 
 ஏனைய பாடல்கள்:
 
 சண்முகக் கோட்டம் திருப்பதிகம் 1
 கட்டளைக் கலிப்பா
 
 சண்முகக் கோட்டம் திருப்பதிகம் 2
 பதின்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்.
 
 பொன்மயிற்கண்ணி
 
 
 |  |