Kaumaram dot com - The Website for Lord Muruga and His Devotees

Kandha Puranam
by
Sri Kachiyappa
Sivachariyar

ஸ்ரீ கச்சியப்ப சிவாச்சாரியார்
அருளிய
கந்த புராணம்

Lord MuruganSri Kaumara Chellam

காண்டம் - படலம் பட்டியலுக்கு அகர வரிசையில் முதற்குறிப்புக்கு செய்யுள் முதற்குறிப்பு pdf வடிவம்

kANdam - padalam List Tamil alphabetical index verse index pdf version

previous kandam   6 - தக்ஷ காண்டம்   next kandam6 - dhaksha kANdam

previous padalam   7 - உமை தவம்புரி படலம்   next padalamUmai dhavampuri padalam

Ms Revathi Sankaran (4.02mb)




(கொண்டுதன தில்லி)

கொண்டுதன தில்லில் குறுகியபின் வேதவல்லி
     மண்டுபெருங் காதலொடு மகண்மையாவ ளர்த்தனளால்
          அண்டமள வில்லனவும் அலகிலா உயிர்த்தொகையும்
               பண்டுதன துந்தியினால் படைத்தருளும் பராபரையை. ......    1

(வளருமதிக் குழவி)

வளருமதிக் குழவியென மாநிலமேல் தவழ்தலொடுந்
     தளருநடை பயில்கின்ற தாறுமுடன் தப்பியபின்
          முளையெயிறுள் ளெழுபோத முளைத்ததெனத் தோன்றுதலும்
               அளவிலுயிர் முழுதீன்றாள் ஐந்தாண்டு நிரம்பினளால். ......    2

(ஆறான ஆண்டெல்)

ஆறான ஆண்டெல்லை அணைதலும்அம் பிகைதனக்கோர்
     கூறான பிரான்றன்னைக் கோடன்முறை குணித்தனளாய்
          மாறாது நோற்பலென மனங்கொண்டி யாய்தனக்கும்
               பேறான தக்கனெனும் பெருந்தவற்கும் இஃதுரைத்தாள். ......    3

(கூறுவதொன் றுமக்கு)

கூறுவதொன் றுமக்குண்டால் குரவீர்காள் இதுகேண்மின்
     ஆறுபுனை செஞ்சடிலத் தண்ணலுக்கே உரித்தாகும்
          பேறுடையேன் அவன்வதுவை பெறுவதற்கு நோற்பலியான்
               வேறொருசார் கடிமாடம் விதித்தென்னை விடுத்திரென. ......    4

(நன்றென்று மகிழ்)

நன்றென்று மகிழ்சிறந்து நல்லாயுந் தந்தையுமாய்ப்
     பொன்துஞ்சு தமதிருக்கைப் பொருவில்நகர்ப் புறத்தொருசார்
          அன்றங்கொர் கடிமாடம் அணிசிறக்கப் புனைவித்துச்
               சென்றங்கண் தவமியற்றச் சேயிழையை விடுக்கின்றார். ......    5

(முச்சகமுந் தருகின்ற)

முச்சகமுந் தருகின்ற முதல்விதனைத் தம்மகளென்
     றிச்சைகொடு நனிபோற்றி இருவரும்நா ரொடுநோக்கி
          உச்சியினைப் பன்முறைமோந் துயிர்த்தம்மோ உன்னுளத்தின்
               நச்சியநோன் பியற்றுகென நாரியரோ டேகுவித்தார். ......    6

(மாதவர்பால் விடை)

மாதவர்பால் விடைபெற்று வல்விரைவுற் றேகுதலும்
     வேதவல்லி அதுகாணா மெய்க்கணவன் தனைநோக்கிப்
          பேதையிவள் சிவனையுணர் பெற்றிமைஎன் மொழிகென்ன
               ஈதனையள் நிலைமையென யாவுமெடுத் தியம்புகின்றான். ......    7

(பொங்குபுனல் தடத்தி)

பொங்குபுனல் தடத்திடையான் புரிகின்ற தவங்காணூஉச்
     சங்கரன்அங் கெய்திடலுந் தாழ்வில்வரம் பலகொண்டுன்
          பங்கினள்என் மகளாகப் பண்ணவநீ என்மருகாய்
               மங்கலநல் வதுவையுற மறையவனாய் வருகென்றேன். ......    8

(அற்றாக நின்பாலென்)

அற்றாக நின்பாலென் றருள்செய்தான் அம்முறையே
     கற்றாவின் ஏறுயர்த்த கண்ணுதலோன் முழுதுலகும்
          பெற்றாளை யமுனையென்னும் பெருநதியில் உய்ப்பநம்பால்
               உற்றாள்மற் றெஞ்ஞான்றும் உணர்வினொடு வைகினளால். ......    9

(மாதவமோர் சிலவை)

மாதவமோர் சிலவைகல் பயின்றுமதிக் கோடுபுனை
     ஆதிதனக் கன்பினளாய் அருந்துணைவி யாகின்றாள்
          பேதையென நினையற்க பெருமாட்டி தனையென்னக்
               காதலிவிம் மிதமெய்திக் கரையிலா மகிழ்சிறந்தாள். ......    10

(இந்நிலைசேர் முது)

இந்நிலைசேர் முதுகுரவர் ஏவலினால் சிலதியராங்
     கன்னியர்கள் சூழ்போதக் கடிமாடம் போந்துமையாள்
          சென்னிநதி புனைந்தபிரான் திருநாமம் உள்ளுறுத்தி
               நன்னியமந் தலைநின்று நாளுநனி நோற்கின்றாள். ......    11

வேறு

(ஈண்டுறு மடவார்)

ஈண்டுறு மடவார் சூழ இம்முறை இருத்த லோடும்
     ஆண்டுபன் னிரண்டு சென்ற அம்பிகைக் கனைய காலை
          வேண்டிய வேண்டி யாங்கு விரதருக் குதவும் வண்மை
               பூண்டிடு பரமன் அன்னாள் புரிந்திடு தவத்தைக் கண்டான். ......    12

(கண்டு மற்றவளை)

கண்டு மற்றவளை ஆளக் கருதியே கயிலை யென்னும்
     விண்டினை இகந்து முந்நூல் வியன்கிழி தருப்பை யார்த்த
          தண்டுகைக் கொண்டு வேதத் தலைநெறி ஒழுக்கம் பூண்ட
               முண்டவே தியனில் தோன்றி முக்கண்எம் பெருமான் வந்தான். ......    13

(தொக்குலாஞ் சூல)

தொக்குலாஞ் சூலத் தண்ணல் தொல்புவி உய்ய வேதச்
     செக்கர்நூ புரத்தாள் பின்னுஞ் சேப்புற மண்மேற் போந்து
          தக்கமா புரத்தின் நண்ணிச் சங்கரி யென்னுந் தொல்பேர்
               மைக்கணாள் நோற்குந் தெய்வ மல்லல்மா ளிகையிற் புக்கான். ......    14

(அன்னைநோற் கின்ற)

அன்னைநோற் கின்ற கோட்டத் தணுகியே அளப்பில் மாதர்
     முன்னுறு காவல் போற்றும் முதற்பெருங் கடையிற் சாரக்
          கன்னியர் எவரும் வந்து கழலிணை பணித லோடும்
               என்னிலை தலைவிக் கம்ம இயம்புகென் றிசைத்து நின்றான். ......    15

(நிற்றலுங் கடைகாக்)

நிற்றலுங் கடைகாக் கின்ற நேரிழை மகளிர் சில்லோர்
     பொற்றொடி உமைபால் எய்திப் பொன்னடி வணங்கி ஈண்டோர்
          நற்றவ மறையோன் நின்பால் நண்ணுவான் விடுத்தான் என்ன
               மற்றவன் தன்னை முன்கூய் வல்லைநீர் தம்மின் என்றாள். ......    16

(தம்மினீர் என்ற)

தம்மினீர் என்ற லோடுந் தாழ்ந்தனர் விடைபெற் றேகி
     அம்மினேர் கின்ற நாப்பண் அரிவையர் கடைமுன் னேகி
          வம்மினோ அடிகள் எம்மோய் வரவருள் புரிந்தாள் என்னச்
               செம்மலும் விரைவிற் சென்று தேவிதன் னிருக்கை சேர்ந்தான். ......    17

(தேவர்கள் தேவன் அங்)

தேவர்கள் தேவன் அங்கோர் சீர்கெழு மறையோன் போலாய்
     மேவிய காலை அம்மை விரைந்தெதிர் ஏகி மற்றென்
          காவலர் தம்பால் அன்பர் இவரெனக் கருதி அன்னான்
               பூவடி வணங்கி வேண்டும் பூசனை புரிந்து நின்றாள். ......    18

(நேயமொ டருச்சி)

நேயமொ டருச்சித் தேத்தி நின்றவள் தன்னை நீல
     ஞாயிறு நிகர்த்த மேனி நகைமதி முகத்தாய் ஈண்டியாம்
          ஏயின தொன்றை வெஃகி விரைந்தருள் புரிதி என்னின்
               ஆயது புகல்வம் என்ன அம்மையிங் கிதனைச் சொல்வாள். ......    19

(எனக்கிசை கின்ற)

எனக்கிசை கின்ற தொன்றை இசைத்தியே என்னின் இன்னே
     நினக்கது கூடும் இங்ஙன் நினைத்ததென் மொழிதி என்ன
          உனைக்கடி மணத்தின் எய்த உற்றனன் அதுவே நீஎன்
               தனக்கருள் புரியு மாறு தடுத்தெதிர் மொழியல் என்றான். ......    20

வேறு

(அத்தன் ஈதுரை)

அத்தன் ஈதுரைத் தலோடும் அம்மை அங்கை யாற்செவி
     பொத்தி வெய்தெனக் கனன்று புந்தி நொந்து யிர்த்துநீ
          இத்தி றம்புகன்ற தென்னை என்னை யாளு கின்றதோர்
               நித்தன் வந்துவதுவை செய்ய நீள்த வஞ்செய் தேனியான். ......    21

(என்ன லோடும் இனை)

என்ன லோடும் இனையன் என்றி யாருமென்றும் இறையுமே
     முன்னொ ணாதுநின்ற ஆதி முதல்வன் நின்னை வதுவையால்
          மன்னு கின்றதரிது போலும் மாத வங்கள் ஆற்றியே
               கன்னி நீவருந்தல் என்று கழற மாது புகலுவாள். ......    22

(பரம னேவிரும்பி)

பரம னேவிரும்பி வந்து பாரின் மாம ணஞ்செய
     அரிய மாதவங்கள் செய்வல் அன்ன தற்கு முன்னவன்
          வருகி லாதுதவிர்வன் என்னின் வலிதின் ஆவிநீப் பன்யான்
               சரதம் ஈது பித்தனோ சழக்கு ரைத்தி ருத்திநீ. ......    23

(போதி போதிஎன்)

போதி போதிஎன் றுதானொர் புடையின் ஏக உவகையாய்
     மாது நின்தன் அன்பு முள்ள வன்மை தானும் நன்றெனா
          ஆதி தேவன்ஏ னையோர்கள் அறிவு றாத வகையவள்
               காதல் நீடு தனதுதொல் கவின்கொள் மேனி காட்டினான். ......    24

(ஆதி தன்தொல்)

ஆதி தன்தொல் உருவுகாட்ட அமலை கண்டு மெய்பனித்
     தேதி லாரெ னாநினைந் திகழ்ந்த னன்எ னாவவன்
          பாத பங்க யங்களிற் பணிந்து போற்றி செய்தியான்
               பேதை யேனு ணர்ந்திலேன் பிரான்ம றைந்து வந்ததே. ......    25

(உன்ன ருட்கண்)

உன்ன ருட்கண் எய்துமேல் உணர்ச்சி யெய்தி நிற்பன்யான்
     பின்னொர் பெற்றி இல்லையாற் பிழைத்த துண்டு தணிதிநீ
          என்னு நற்றவத் திதன்னை இனிதின் எந்தை கண்ணுறீஇ
               நின்னி யற்கைநன் றுநன்று நீது ளங்கல் என்றனன். ......    26

(என்ற நாத னைப்பி)

என்ற நாத னைப்பினும் இறைஞ்சி யெம்பி ராட்டிபால்
     நின்ற மாதரைத் தனாது நேத்தி ரத்தின் நோக்கலாள்
          ஒன்றும் உன்னல் செய்திலாள் உலப்பில் எந்தை தொல்புகழ்
               நன்று போற்றெடுத் துநிற்ப நாட்டம் நீரு குத்தரோ. ......    27

(கண்டு பாங்க)

கண்டு பாங்க ராயமாதர் கன்னி எம்மை நோக்கலாள்
     மண்டு காதல் அந்தணாளன் மாயம் வல்ல னேகொலோ
          பண்டு நேர்ந்துளா ரையுற்ற பான்மை போலும் மேலியாம்
               உண்டு தேரு மாறதென் றுளத்தில் ஐயம் எய்தினார். ......    28

(சிலதி யர்க்குள்)

சிலதி யர்க்குள் விரைவிரைந்து சிலவர் சென்று தக்கனென
     றுலகு ரைக்கும் ஒருவன்வைகும் உறையுள் நண்ணி உன்மகள்
          நிலைமை ஈது கேளெனா நிகழ்ந்த யாவும் முறையினால்
               வலிது கூற மற்றவன் மனத்தி லோர்தல் உற்றனன். ......    29

(போத நீடு புந்தி)

போத நீடு புந்தியால் புலப்ப டத்தெ ரிந்துழி
     ஆதி யந்த மின்றிநின்ற அண்ணல் வந்த தாகலும்
          ஏதி லாம கிழ்ச்சிபெற் றெழுந்து துள்ளி யான்பெறு
               மாதை அங்கவற் களிப்பன் வதுவை ஆற்றி என்றனன். ......    30

ஆகத் திருவிருத்தம் - 8570




(எண் = செய்யுளின் எண்)

*1-1. மகண்மைஆ(க) - மகள் தன்மையாக.

*1-2. பராபரை - அம்பிகை.

*2. போதம் - ஞானபோதம்.

*3. யாய் - தாய்; வேதவல்லி.

*4-1. குரவீர்காள் - பெற்றோர்களே!.

*4-2. வதுவை - திருமணம்.

*4-3. கடி - காவல்.

*6-1. முச்சகம் - மூவுலகம்.

*6-2. நார் - அன்பு.

*6-3. அம்மோ - அன்னையே.

*8. மறையவனாய் - அந்தணனாய்.

*9. கற்றாவின் ஏறு - எருது (கன்று+ஆ=கற்றா - கன்றுடைய பசு).

*11-1. முது குரவர் - தாய் தந்தையர்.

*11-2. சிலதியர் - தோழியர்.

*11-3. நனி - மிகுதி.

*13-1. விண்டு - மலை.

*13-2. கிழி - கோவணம்.

*13-3. வேதத்தலை நெறி யொழுக்கம் - பிரமசரியம்.

*15-1. கோட்டம் - தவச்சாலை.

*15-2. என்நிலை - எனது வருகை.

*17-1. அம் மின் நேர்கின்ற நாப்பண் - அழகிய மின்னலை யொத்த இடையினராகிய.

*17-2. எம்மோய் - அமது அன்னை.

*17-3. செம்மல் - இறைவனாகிய பிரமசாரி.

*20. கடிமணம் - விவாகம்.

*23. சழக்கு உரைத்து - குற்றமான மொழிகளைக் கூறி.

*25-1. அமலை - அம்பிகை; தாட்சாயணி.

*25-2. ஏதிலார் - அயலார்.

*25-3. பிரான் - தேவரீர்.

*26-1. பிழைத்தது - குற்றம் செய்தது.

*26-2. துளங்கல் - நடுங்காதே.

*27. உன்னல் - நினைத்தல்.

*30. போத நீடு புந்தியால் - ஞான திருஷ்டியினால்.



previous padalam   7 - உமை தவம்புரி படலம்   next padalamUmai dhavampuri padalam

previous kandam   6 - தக்ஷ காண்டம்   next kandam6 - dhaksha kANdam

காண்டம் - படலம் பட்டியலுக்கு அகர வரிசையில் முதற்குறிப்புக்கு செய்யுள் முதற்குறிப்பு pdf வடிவம்

kANdam - padalam List Tamil alphabetical index verse index pdf version

Kandha Puranam - The Story of Lord Murugan

Sri Kachchiappa Sivachariyar

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



   Kaumaram.com சமீபத்தில் DDOS தாக்குதலால் பாதிக்கப்பட்டது.
எனவே, படங்கள் மற்றும் ஆடியோ தற்காலிகமாக கிடைக்காது.
நான் இதை படிப்படியாக சரிசெய்ய முயற்சிக்கிறேன்.
உங்கள் பொறுமைக்கும் புரிந்துணர்வுக்கும் நன்றி. ... வலைத்தள நிர்வாகி.  




  Kaumaram.com was recently affected by DDOS attack.
As such, images and audio will be temporarily unavailable.
I am trying to correct this progressively.
Thank you for your patience and understanding. ... webmaster.  



Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

© Copyright Kaumaram dot com - 2001-2040

COMMERCIAL USE OF MATERIAL IN THIS WEBSITE IS NOT PERMITTED.

Please contact me (the webmaster), if you wish to place a link in your website.

email: kaumaram@gmail.com

Disclaimer:

Although necessary efforts have been taken by me (the webmaster),
to keep the items in www.kaumaram.com safe from viruses etc.,
I am NOT responsible for any damage caused by use of
and/or downloading of any item from this website or from linked external sites.
Please use updated ANTI-VIRUS program to rescan all downloaded items
from the internet for maximum safety and security.

[W3]