Kaumaram dot com - The Website for Lord Muruga and His Devotees

Kandha Puranam
by
Sri Kachiyappa
Sivachariyar

ஸ்ரீ கச்சியப்ப சிவாச்சாரியார்
அருளிய
கந்த புராணம்

Lord MuruganSri Kaumara Chellam

காண்டம் - படலம் பட்டியலுக்கு அகர வரிசையில் முதற்குறிப்புக்கு செய்யுள் முதற்குறிப்பு pdf வடிவம்

kANdam - padalam List Tamil alphabetical index verse index pdf version

previous kandam   2 - அசுரகாண்டம்   next kandam2 - asura kANdam

previous padalam   43 - அமரர் சிறைபுகு படலம்   next padalamamarar siRaipugu padalam

Ms Revathi Sankaran (7.87mb)
(1 - 74)



Ms Revathi Sankaran (6.88mb)
(75 - 141)




(எழிலிகள் மொய்)

எழிலிகள் மொய்த்ததன் இருக்கை போகிய
     மழவுறு சூர்மகன் மாறி லாதபேர்
          அழகினை மெய்கொள அணிந்து தொல்படை
               விழுமிய கொண்டனன் மிலைச்சித் தும்பையே. ......    1

(இருவகைப் பத்து)

இருவகைப் பத்துநூ றிவுளி பூண்டிடும்
     ஒருதனித் தேர்தனை ஒல்லை ஊர்ந்துராய்த்
          திருமுதற் கடைதனிற் செல்லும் எல்லையில்
               விரைவினில் சுற்றின அனிக வெள்ளமே. ......    2

(நிரைத்தெழு தான)

நிரைத்தெழு தானவர் நீத்தம் ஆயிரம்
     பரித்தொகை அன்னதே பாதி தேர்கரி
          உரைத்தஅத் தானையோ டொல்லை ஏகினான்
               திருத்தகும் இரவியைச் சிறையில் வீட்டினான். ......    3

(கிளர்ந்தன தூளி)

கிளர்ந்தன தூளிகள் கெழீஇய வீரர்தோள்
     வளர்ந்தன அவரணி மாலை யிற்படீஇ
          உளர்ந்தன வண்டினம் உம்பர் தம்மனந்
               தளர்ந்தன நெளிந்தனன் தரிக்குஞ் சேடனே. ......    4

(பொள்ளென ஆண்)

பொள்ளென ஆண்டெழு பூழி பாரினுந்
     தள்ளரும் விசும்பினும் நிரந்த தானவர்
          எள்ளுறும் அமரர்தம் மிருக்கை நாடிய
               உள்ளொடு பவத்துகள் ஒருங்கு சென்றபோல். ......    5

வேறு

(ஏறிய பூழி நாப்பண்)

ஏறிய பூழி நாப்பண் ஈண்டிய இவுளி வாயில்
     வீறுகொள் களிற்றுக் கையின் விலாழியுங் கரிக்க போலத்
          தூறிய கடமும் ஒன்றாய் ஒழுகுதன் மழைசூழ் குன்றின்
               ஆறுகள் இழிந்து வையத் தடைவது போலு மன்றே. ......    6

(பானிற முதல வாய)

பானிற முதல வாய பல்வகை வண்ணத் துள்ள
     கானிமிர் துவசக் காடுங் கவிகையின் கானு மொய்த்த
          சேனமுங் கழுகும் ஏனைச் சிறைகெழு புள்ளும் வெம்போர்
               ஊனுகர் பொருட்டுத் தாமும் உம்பருற் றிடுவ தேபோல். ......    7

(மண்ணுறு துகளி)

மண்ணுறு துகளின் மாலை மகேந்திர மூதூர் முற்றுந்
     துண்ணென மறைத்த லோடுந் துளங்கியே சூரற் கஞ்சி
          விண்ணிடை மதிபல் கோடி மேவல்போல் வெளிய செய்ய
               தண்ணிழற் கவிகை ஈட்டந் தலைத்தலை ஈண்டிற் றன்றே. ......    8

(முறையிது நிகழ)

முறையிது நிகழ மைந்தன் முதியமா நகரம் நீங்கி
     அறைகடல் அகழி தாவி அவனியின் எல்லை யேகிச்
          சிறைவரு துன்மு கத்துத் தெரிவையை நோக்கி நுங்கை
               எறிசுடர் வாளால் இற்ற தெவ்விடை இயம்பு கென்றான். ......    9

(என்னலுங் குமர)

என்னலுங் குமர கேண்மோ எங்கரந் துணித்தோர் வீரன்
     மன்னினன் சசியும் உற்றாள் மதுமலர்ப் பொதும்ப ரொன்றில்
          அன்னதும் இஃதே என்றோர் அணிவிரல் சுட்டிக் காட்டப்
               பன்னிரு பெயர்ச்சீ காழி*1 ப் பழுமரக் காவிற் சேர்ந்தான். ......    10

(தேசுறும் இரவி)

தேசுறும் இரவி தன்னைச் செயிர்த்திடு சிறுவன் தானைத்
     தூசிமுன் சென்று காவைத் தொலைத்துவெள் ளிடைய தாக்க
          வாசவன் மனையைக் கூர்வாள் வயவனை நாடிக் காணான்
               காசினி யாண்டுந் தேர்ந்து காமர்பொன் னுலகிற் போனான். ......    11

வேறு

(அந்நிலை அவுணர்)

அந்நிலை அவுணர்கள் அனிகம் யாவையும்
     முன்னுற ஏகியே மொய்ப்ப ஆங்கவர்
          மெய்ந்நிறை மணிவெயில் விரிந்து சூழ்தலாற்
               பொன்னகர் வேறொர்பொன் னகரம் போன்றதே. ......    12

(எழுந்திடு முனி)

எழுந்திடு முனிவினர் இமைக்கும் வெவ்வழல்
     வழிந்திடு கண்ணினர் மடித்த வாயினர்
          கழிந்திடு திறலினர் ககன வாணர்கள்
               அழிந்திடும் ஆர்ப்பினர் அவுணர் எய்தினார். ......    13

(மண்டல மேமுதல்)

மண்டல மேமுதல் வகுத்த வான்கதி
     கொண்டிடு கந்துகக் குழுவின் மாலைகள்
          விண்டொடர் செலவினில் விரவு பூழியால்
               அண்டமும் புவியென வையம் ஆக்கிய. ......    14

(இலகிய பொன்)

இலகிய பொன்னகர் எல்லை எங்கணும்
     அலைதரு மதநதி யாக்கி யாயிடை
          நிலவிய கங்கைமா நீத்தம் யாவுமுண்
               டுலவுத லுற்றன ஒருத்தல் யானையே. ......    15

(வெங்கரி சொரி)

வெங்கரி சொரிமதம் விரும்பும் வண்டினங்
     கொங்கிவர் தருமலர்க் கூந்தல் வாசத்தால்
          அங்குள மாதர்மேல் அணுகி வையக
               மங்கையர் கொல்லென மால்செய் கின்றவே. ......    16

(அற்றமில் வலிய)

அற்றமில் வலியரைச் சிறிய ராயினோர்
     பற்றிடின் மேல்நெறிப் பால ராவரால்
          வெற்றிகொள் அவுணர் கோன்வேழத் தின்குழாஞ்
               சுற்றிய பறவையுந் துறக்கம் புக்கவே. ......    17

(மன்னவன் ஓடி)

மன்னவன் ஓடினன் மைந்த னேயுளன்
     முன்னுறு பகையினை முடித்தும் யாமெனா
          இந்நில வரையெலாம் ஏகிச் சூழ்ந்தபோற்
               பொன்னகர் வளைந்தன பொலம்பொற் றேர்களே. ......    18

(விடர்நெறி ஒழுகி)

விடர்நெறி ஒழுகிய வெய்யர் மேலையோர்
     இடமுறு மகளிரை எய்திப் பற்றல்போற்
          கடிகமழ் தருவினைக் கலந்து சுற்றிய
               கொடியினை ஈர்த்தன கொடியின் கானமே. ......    19

வேறு

(செந்தோ டவி)

செந்தோ டவிழுந் தாரான்இச் செய்கை நிகழச் சேண்புகலும்
     அந்தோ என்று பதைபதையா அலமந் தேங்கி அறிவழிந்து
          வந்தோன் பானுப் பகைவனெனா மகவான் செம்ம லொடுவானோர்
               நொந்தோ டினர்போய் உரைத்திடலும் அனையோன் இனைய நுவல்கின்றான். ......    20

(எந்தை யாகுங்)

எந்தை யாகுங் குரவன்இலை இமையோர் குழுவிற் பலரில்லை
     தந்தை எம்மோ யிங்கில்லை தமியேன் நும்மோ டிருந்தேனால்
          அந்த அசுரன் சென்றமையும் அல்லல் புரியுந் திறம்போலும்
               முந்தை விதியை அறிவேனோ என்னோ இன்று முடிந்திடுமே. ......    21

(பாடின் றோங்கு)

பாடின் றோங்கு திருநீங்கப் பயந்தோர் கரக்கப் பழிவேலை
     வீடின் றாகத் தமர்பரிய வெஞ்சூர் முதல்வன் பணிபோற்றி
          ஈடின் றாயும் இப்பகல்கா றிந்த நகரத் திருந்தேனாற்
               கேடின் றாகும் என்செய்கேன் கிளத்தீர் புரைதீர் உளத்தீரே. ......    22

(தாயும் பயந்த)

தாயும் பயந்த தொல்லோனுந் தமரா குற்ற அமரர்களும்
     பாயுங் கடல்சூழ் நிலவரைப்பிற் கரந்தார் அதனைப் பல்லவுணர்
          ஆயும் படியே திரிந்தனரால் அற்றாம் எல்லை அளியேமும்
               போயெங் குறைவோம் நமையெல்லாம் போற்றும் படிக்கோர் புகலுண்டோ. ......    23

(போவ தில்லை)

போவ தில்லை யாண்டும்இனிப் புலம்பு மாறும் இல்லையதின்
     ஆவ தில்லை வருவதெல்லாம் அடையும் அன்றி அகலுவதோ
          ஈவ தில்லை யவர்க்குவெரிந் இறைஞ்சிப் புகழ்வ திலையெதிர்ந்து
               சாவ தல்லால் உய்ந்திடுதல் இரண்டே உறுதி தமியேற்கே. ......    24

(அஞ்சேன் மன்னோ)

அஞ்சேன் மன்னோ அவர்க்கினியான் ஆவி பொருளாக் கொள்ளாதார்
     நஞ்சே பொருவுந் தீங்குறினும் நடுக்கஞ் செய்யார் இடர்ப்படியார்
          தஞ்சே வகத்தின் நெறிபிழையார் அஃதே போலத் தானவர்கோன்
               வெஞ்சே னைகளேற் றெதிர்செல்வேன் வெல்வேன் பலரைக் கொல்வேனே. ......    25

(செருவீ ரமுடன்)

செருவீ ரமுடன் அவர்ப்பொருவான் செல்வன் நீரும் எற்போற்றி
     வருவீர் வம்மின் வல்லாதீர் வல்லை இன்னே வழிக்கொண்மின்
          ஒருவீ ரன்றி எல்லீரும் உள்ளத் தஞ்சி ஒருவிஅழி
               தருவீரேனும் நன்றிறையுந் தளரேன் துணிந்த தமியேனே. ......    26

(என்று சயந்தன்)

என்று சயந்தன் மொழிந்திடலும் இமையோர் கேளா இடருழவா
     உன்றன் உள்ளம் ஈதாயின் எமக்கு வேறோர் உணர்வுண்டோ
          வென்றி அவுணர் பணிபுரிந்து வீடா விழுமந் துய்ப்பதினும்
               பொன்றி விடுதல் இனிதம்மா எழுதி கடிதே போர்க்கென்றார். ......    27

வேறு

(சயந்தனது கேட்ட)

சயந்தனது கேட்டமரர் தங்குழுவை நோக்கித்
     துயர்ந்தநும சிந்தனை துணிந்ததுகொல் என்னா
          வியந்துகன கத்தவிசின் மேவுதல்வி டாத்தன்
               கயந்தனை நினைப்பஅ துணர்ந்தது கருத்தில். ......    28

(கல்கெழு நுதற்)

கல்கெழு நுதற்சிறிய கண்சுளகு கன்னம்
     மல்கிய கறைப்பத மருப்பிணை இரட்டை
          மெல்கிய புழைக்கரம் வெளிற்றுடலின் வேழம்
               பில்கிய மதத்தொடு பெயர்ந்துளதை அன்றே. ......    29

(இந்திர குமாரனை)

இந்திர குமாரனை இறைஞ்சி எதிராகி
     வந்திட அதன்பிடரில் வல்லைதனில் ஏறி
          உந்தினன் நடாத்திஅயல் உம்பர்புறம் மொய்ப்பப்
               புந்திகெழு வேர்வினொடு பொள்ளென அகன்றான். ......    30

(போகிதரு காளை)

போகிதரு காளைபசும் பொற்புயல் நிறத்தான்
     ஆகம்வெளி றாகும்அயி ராவதமி சைக்கண்
          வாகுபெற மேவுவது மன்னுநெடு மால்பாற்
               சீகரஅளக் கரிடை செவ்விதிருந் தன்ன. ......    31

(பாங்கருறு வானவர்)

பாங்கருறு வானவர்கள் பல்படையும் ஏந்தி
     வீங்குதுயர் கொண்டகல வேறொரிடை காணார்
          நீங்கல்வசை என்பது நினைந்துதுணி வாகி
               ஆங்கவ னொடேகினர்கள் அச்சமில ரேபோல். ......    32

(பெருந்தவள மெய்)

பெருந்தவள மெய்க்கரி பிளிற்றொலியும் உள்ளத்
     தரந்தையுறு வானவர்தம் ஆர்ப்பொலியும் ஆற்றப்
          பரந்தபகு வாய்முரசு பண்ணொலியும் ஒன்றாய்
               வருந்தவறெ னக்ககனம் வாய்விடுதல் போலும். ......    33

(ஊழிவரு கால்)

ஊழிவரு கால்அனைய உம்பர்படை செல்லப்
     பூழிநிமிர்ந் தேகின பொலத்துயர் நிலத்த
          வாழிகொள் சுவர்க்கமெரி வௌவுநமை என்னாக்
               கேழிலுயர் மேனிலை கிளர்ந்தெழுதல் போலும். ......    34

(முறையிது நிகழ்)

முறையிது நிகழ்ந்திட முரட்களிறு மேலான்
     வறியமக வான்மதலை மாநகரம் நீங்கி
          எறிகதிர் அருக்கனை இருஞ்சிறையில் வீட்டுஞ்
               சிறுவன்அனி கத்தினெதிர் சென்றுபுக லோடும். ......    35

(வற்புறு தயித்தி)

வற்புறு தயித்தியர் வருஞ்சுரரை நோக்கி
     முற்பகலின் எல்லையும் முறைப்பணி புரிந்தார்
          தற்பமுடன் நின்றுசமர் உன்னிவரு வாரோ
               அற்புதம் இதற்புதம் இதென்றறையல் உற்றார். ......    36

(கிட்டினர்கள் வான)

கிட்டினர்கள் வானவர் கிடைத்ததமர் என்னா
     முட்டினர் தெழித்தவுணர் முன்பினிரு பாலார்
          ஒட்டினர் முனிந்தயில்கள் உய்த்தனர்கை வாளால்
               வெட்டினர் குனித்துவில் வடிக்கணை விடுத்தார். ......    37

(எழுப்படை விடு)

எழுப்படை விடுத்தனர் எடுத்தகதை விட்டார்
     மழுப்படை எறிந்தனர் வயிர்க்குலிசம் உய்த்தார்
          நிழற்பரவு முத்தலை நெடும்படைகள் தொட்டார்
               சுழற்றினர் உருட்டினர் சுடர்ப்பரிதி நேமி. ......    38

(மாரியென இப்படை)

மாரியென இப்படை வழங்கியிமை யோருஞ்
     சீரவுண ராயினருஞ் சேர்ந்துபொரும் எல்லைச்
          சோரியது தோன்றியது தூயவிரும் பெற்றும்
               பாரிய உலத்திடை பரந்தெழு கனற்போல். ......    39

(அங்கமெழு செங்கு)

அங்கமெழு செங்குருதி ஆற்றின் நிமிர்ந்தோடி
     எங்கணும் நிரந்தன இமைப்பிலவர் வைகுந்
          துங்கமிகும் உம்பரிடை சூர்மதலை சீற்ற
               வெங்கனல் எழுந்துமுன் மிசைந்திடுவ தேபோல். ......    40

(நீடிரு திறத்தரும்)

நீடிரு திறத்தரும் நெடும்படைகள் ஏந்தி
     ஆடல்புரி காலையழிந் தாற்றலில ராகி
          ஓடினர்கள் வானவர்கள் ஒல்லைதொடர்ந் தேபின்
               கூடினர்கள் வெவ்வவுணர் குற்றினர்கள் பற்றி. ......    41

(சேண்கொடு முரி)

சேண்கொடு முரிந்துபடர் தேவர்குழு வோரை
     ஏண்கொடு வருந்தகுவர் யாத்தனர் புயங்கள்
          நாண்கொடு திரும்பினர் நலங்கொள்கலை மானை
               மாண்கொடு வரித்தொகுதி வவ்விஅகன் றென்ன. ......    42

(இடுக்கணுறு தேவர்)

இடுக்கணுறு தேவர்தமை ஈர்த்தனர்கொ டேகி
     மிடற்கதிர் அருக்கனை வெகுண்டவன்முன் உய்ப்பக்
          கடக்கரிய வன்மையொடு காவல்கொளு மென்றான்
               தடக்களிறு மேல்வரு சயந்தன்இவை கண்டான். ......    43

வேறு

(கண்டான் வெகு)

கண்டான் வெகுண்டான் புகையாரழல் கல்லென் மேகம்
     உண்டான் எனவே உமிழ்ந்தான் ஒருதன் சிலைக்கைக்
          கொண்டான் குணத்தின் இசைகாட்டினன் கோட்டி நேர்போய்
               அண்டார் வெருவக் கணைமாரிகள் ஆர்ப்பொ டுய்த்தான். ......    44

(பொழியும் பொழு)

பொழியும் பொழுதத் தவுணப்படை போந்த வீரர்
     மொழியும் மனமும் நனிதாழ்த்திட முன்ன ரேகி
          ஒழியுங் கடைநாள் அரன்வெற்பை உறாது சூழ்போஞ்
               சுழியுங் கடல்போல் அவனூர்கரி சுற்றி ஆர்த்தார். ......    45

(சயந்தன் மிசையும்)

சயந்தன் மிசையும் பொலங்கிம்புரித் தந்த வெள்ளைக்
     கயந்தன் மிசையுஞ் சிலைவாங்கிக் கணைகள் கோடி
          பயந்தந் திடத்தூர்த் தனர்சோமனைப் பன்ன கங்கள்
               வயந்தன் னொடுபோய் முயலோடு மறைக்கு மாபோல். ......    46

(கல்லென் றரற்று)

கல்லென் றரற்றுங் கழல்வீரர் கனைந்து சுற்றிச்
     செல்லென் றுவிட்டகணை யாவையுஞ் சிந்தி வல்லே
          மல்லொன் றுமொய்ம்பிற் சயந்தன்சர மாரி தூண்டி
               வில்லும் மனையோர் தனுவும்புவி வீட்டி னானால். ......    47

(வீட்டிக் கணைகள்)

வீட்டிக் கணைகள் அவுணப்படை மீது தூர்த்து
     மோட்டுக் களிற்றின் தொகைதன்னை முகங்கொள் பாய்மா
          வீட்டத் தினைத்தேர் களைவீரர் இனத்தை யெல்லாம்
               வாட்டிப் பின்வெள்ளம் ஒருநூற்றினை மாய்வு செய்தான். ......    48

(வாலிற் புடைக்கும்)

வாலிற் புடைக்கும் புழைக்கைகொடு வாரி எற்றுங்
     காலிற் படுக்கும் மருப்பாலடுங் கந்த ரம்போல்
          ஓலிட் டுயிருண் டிடுமாங்கவன் ஊர்ந்த வேழஞ்
               சீலக் கதிரைச் சிறையிட்டவன் சேனை தன்னை. ......    49

(நூறாய்ப் புகுதா)

நூறாய்ப் புகுதா னவர்வெள்ளம் நொடிப்பின் மாய
     வீறாய்ப் படையும் பலபூண்களும் மீன மாக
          ஆறாய்க் குருதி பெயர்ந்தேயகல் வான நீத்தம்
               மாறாய்ப் பொருது மிசையோடி வளைந்து கொண்ட. ......    50

(காய்கொல் இப)

காய்கொல் இபமேற் சயந்தன்அடு காலை தன்னில்
     பேய்கொல் உனைத்தீண் டினமேல்வரும் பெற்றி யோராய்
          தீகொல் பறவை புரைவாய்எமர் சேனை தன்னை
               நீகொல் லடுதி யெனவந்தனன் நீல கேசன். ......    51

(எண்ணத் தவரை)

எண்ணத் தவரை அலைக்கின்ற இருண்ட கேசன்
     தண்ணத் தவரை நிகர்கின்ற சயந்தன் முன்போய்
          விண்ணத் தவரை முகில்தாங்குறும் வேட மென்ன
               வண்ணத் தவரைக் குனித்தம்பெனும் மாரி தூர்த்தான். ......    52

(தூர்த்தான் அதுகால்)

தூர்த்தான் அதுகால் சயந்தன்எதிர் தூண்டி வாளி
     தீர்த்தான் சரமாரி யையன்றியுஞ் சின்ன மாக்கி
          ஆர்த்தான் கவசம் அவனிட்டதை அம்பு நூறால்
               வேர்த்தான் உயிர்த்தான் இருட்குஞ்சியன் மேக மொப்பான். ......    53

(பாசம் பிணித்த)

பாசம் பிணித்த அரணம் பரிவெய் தநீல
     கேசன் விடுத்தோர் பிறையம்பினைக் கேடில் விண்ணோர்
          ஈசன் சிறுவன் சிலைநாணை இறுத்தி சைத்தான்
               காசொன் றரவந் துணியப்பகை கௌவு மாபோல். ......    54

(சின்னம் படலும்)

சின்னம் படலும் பெருநாண்சிலை வீழ விட்டுத்
     தன்னந் தனியாஞ் சயந்தன்சமர் செய்வ தற்கு
          முன்னம் பயிற்றும் ஒருமாயையை முன்னி யாற்றித்
               துன்னந் தருபல் லுருவங்கொடு தோன்றி யுற்றான். ......    55

வேறு

(ஒன்றேயெனுங் கரி)

ஒன்றேயெனுங் கரிமேல்வரும் ஒருவன்பல வுருவாய்ச்
     சென்றேதிறம் பலவால்அடச் செறிபேரிருட் குடுமிக்
          குன்றேபுரை அவுணர்க்கிறை குறிப்பால்இது மாயம்
               என்றேநினைந் தவைமாற்றிட யாதுஞ்செயல் இல்லான். ......    56

(மலைவுற்றெதிர்)

மலைவுற்றெதிர் நின்றார்த்திட வாயற்றனன் மயங்கித்
     தொலைவுற்றனன் இருட்குஞ்சியன் சூரன்மகன் அனிகம்
          மலைவுற்றன விரிகின்றன அலமந்தன வெருவி
               உலைவுற்றன இறுதிப்பகல் ஒழிவுற்றிடும் உயிர்போல். ......    57

(சோமாசுரன் மாயா)

சோமாசுரன் மாயாபலி சுரகேசரி பதுமன்
     மாமாருத பலிதண்டகன் வாமன்மதி வருணன்
          தீமாகதன் முதலாகிய சேனைப்பெருந் தலைவர்
               ஆமாயமி தெனவந்தனர் அவ்விஞ்சையை உணரார். ......    58

(தாங்கற்றிடு மாய)

தாங்கற்றிடு மாயப்பெருந் தனிவிஞ்சைகண் முன்னி
     ஆங்குற்றிடு மரபாற்பொரு தன்னான்புரி மாயம்
          நீங்கற்கரு நிலையாதலும் நெஞ்சந் தடுமாறி
               ஏங்குற்றனர் என்செய்குதும் யாமென்று நினைந்தார். ......    59

(அந்நேருறு கால)

அந்நேருறு காலந்தனில் ஆகின்றதுந் தலைவர்
     தன்னேவலின் மெலிவுற்றதும் சயந்தன்பெரும் திறலும்
          கொன்னேதன தனிகக்கடல் குறைகின்றதும் கண்டான்
               முன்னேயிர வியைஓர்பகற் சிறைவீட்டிய முதல்வன். ......    60

வேறு

(அந்த ரந்தனில்)

அந்த ரந்தனில் இரவியைச் செயிர்த்திடும் அவுணன்
     இந்தி ரன்மகன் மாயைகொல் இதுவென எண்ணா
          முந்தை நாட்புகர் உதவிய மூலமா ஞான
               மந்தி ரந்தனை உளந்தனில் விதிமுறை மதித்தான். ......    61

(மதித்து வெஞ்சுடர்)

மதித்து வெஞ்சுடர்ப் பகையினன் சேறலும் மாயை
     விதித்த பல்லுருப் போயின தமியனாய் விடலை
          கதக்க ளிற்றின்மேல் தோன்றினன் ஆயிரங் கதிரோன்
               உதித்த காலையில் கலையிலாக் குறைமதி யொப்ப. ......    62

(ஆன காலையில் இதுபுக)

ஆன காலையில் இதுபுகர் விஞ்சையென் றறிந்து
     மான முஞ்சின முஞ்சுடச் சயந்தன்உள் மறுகித்
          தான வேழமேல் இருந்துழித் தேரொடுஞ் சார்ந்து
               பானு கோபனாம் பெயரினான் இனையன பகர்வான். ......    63

(வருதி இந்திரன்)

வருதி இந்திரன் மதலைநின் மாயையும் வலியும்
     கருதி யான்வரு முன்னரே போயின கண்டாய்
          பரிதி போலவே நின்னையும் இருஞ்சிறைப் படுப்பன்
               பொருதி வல்லையேல் என்றனன் சூர்தரு புதல்வன். ......    64

(வல்ல ராயினோர்)

வல்ல ராயினோர் வெல்வதும் மற்றஃ தில்லோர்
     அல்ல ராகியே தோற்பதும் இல்லையால் அரனே
          தொல்லை யூழ்முறை புணர்த்திடும் நின்னைநீ துதிக்கச்
               செல்லு மோவென உரைத்தனன் சயந்தனாந் திறலோன். ......    65

(தேற்ற மோடிவை)

தேற்ற மோடிவை புகறலும் இரவியைச் செயிர்த்தோன்
     ஆற்றல் இல்லவர் மொழிதிறம் புகன்றனை அன்றே
          ஏற்ற வீரரும் இத்திறம் உரைப்பரோ என்னாக்
               கூற்ற மேயென இருந்ததோர் தன்சிலை குனித்தான். ......    66

(சிலைவ ணக்கி)

சிலைவ ணக்கிய காலையில் சயந்தனுஞ் சினத்து
     மலைவ ணக்குதன் புயங்கொடே ஒருசிலை வளைத்தான்
          அலைவ ணக்கரும் ஞமலியெம் மடிகளை அடைந்தோர்
               தலைவ ணக்கியே தத்தமில் இருவர்தாழ் வதுபோல். ......    67

(பாற்றி ருஞ்சிறை)

பாற்றி ருஞ்சிறைக் கணைபல பரிதியம் பகைஞன்
     ஊற்ற மோடுவான் புயலெனச் சொரிதலும் ஒருத்தன்
          மேற்றி கழ்ந்திடு சயந்தனும் அனையன விசிகங்
               காற்றெ னும்படி தூண்டியே விலக்கினன் கடிதின். ......    68

(அன்ன வன்விடு)

அன்ன வன்விடுஞ் சரமெலாஞ் சூர்மகன் அறுத்துத்
     துன்னு பல்கணை தூண்டினன் அவனவை தொலைத்தான்
          இன்ன தன்மையின் இருவரும் பொருதனர் இருளும்
               மின்னு மாகவே முறைமுறை மலைந்திடும் விதிபோல். ......    69

(இனைய வாறமர்)

இனைய வாறமர் புரிவுழி இரவியம் பகைஞன்
     வினைய நீரினால் சொரிந்திடு பகழியை விலக்கித்
          துனைய இந்திரன் மதலைஆ யிரங்கணை தூண்டி
               அனையன் ஏந்திய சிலைப்பெரு நாணினை அறுத்தான். ......    70

(அறுத்த காலை)

அறுத்த காலையில் ஞாயிறு வெகுண்டுளோன் அழலிற்
     செறுத்து வேறொரு சிலைவளைஇக் கணைமழை சிதறி
          மறுத்தும் ஆங்கவன் விடுஞ்சரம் சிந்திமற் றவன்மெய்
               உறுத்தி னான்என்ப ஒராயிரஞ் சிலீமுகம் உய்த்து. ......    71

(உய்த்த காலை)

உய்த்த காலையில் சயந்தனும் ஒராயிரங் கணைதூய்ப்
     பத்தி யோடவன் தேர்கெழு பாய்பரி படுத்து
          மெத்து பல்சரந் தானைமேல் வீசினன் விளிவோர்
               வைத்த மாநிதி யாவர்க்கும் வழங்குமா றென்ன. ......    72

(வாய்ந்த தோர்)

வாய்ந்த தோர்தன திரதமீ றாகமற் றொருதேர்
     பாய்ந்து வெய்துயிர்த் தழலென வெகுண்டுபற் கறித்துச்
          சேந்த மெல்லிதழ் அதுக்கிவா னுருமெனத் தெழியா
               ஏந்து வார்சிலை குனித்தனன் எறிகதிர்ப் பகைஞன். ......    73

(கூனல் வெஞ்சிலை)

கூனல் வெஞ்சிலை குனித்துநூ றாயிர கோடி
     சோனை வெங்கணை தூண்டிவிற் றூணியைத் துணித்துச்
          தான வெங்கரி தன்னுடன் முழுவதுஞ் சயந்தன்
               மேனி முற்றவும் அழுத்தினன் பகலினை வெகுண்டோன். ......    74

வேறு

(வெய்ய வற்சிறை)

வெய்ய வற்சிறை இட்டவன் விட்டகோல்
     சைய மொத்த சயந்தன்மெய்ம் மூழ்கலும்
          மைய லுற்றனன் மற்றொரு வெஞ்சமர்
               செய்வ தற்குத் தெளிதலின் றாயினான். ......    75

(நீண்ட வாளிக)

நீண்ட வாளிக ளான நிறத்திடை
     ஆண்ட காலை அரிமகன் தந்திமேல்
          வீண்டு விம்மி உணர்ச்சியும் விட்டனன்
               மாண்டி லான்அமு தங்கொண்ட வன்மையால். ......    76

(நண்ணு பாசடை)

நண்ணு பாசடை நாப்பணி டந்தொறுந்
     தண்ணென் மாமலர்த் தாமரை பூத்தென
          விண்ண வர்க்கிறை மாமகன் மெய்யிடைத்
               துண்ணெ னப்படு சோரி பொலிந்ததே. ......    77

(கற்ற வாசவன்)

கற்ற வாசவன் காளைதன் சீற்றம்நாம்
     முற்ற ஓத முடியுங்கொல் தன்னுணர்
          வற்ற போதும் அவன்சினக் கண்ணழல்
               வற்று வித்தமெய் வார்குரு திப்புனல். ......    78

(சயந்தன் அவ்வழி)

சயந்தன் அவ்வழி தன்னுணர் வின்றியே
     அயர்ந்த போதத் தனையவன் ஊர்தியாம்
          கயந்தன் நக்கிறை கண்டு கலங்கியே
               துயர்ந்து நின்று சுளித்தெதிர் புக்கதே. ......    79

(காய்ந்த தொன்மை)

காய்ந்த தொன்மைக் கதிரை முனிந்திடும்
     ஏந்தல் ஊர்தரும் எந்திரத் தேர்மிசைப்
          பாய்ந்த காலைப் பரித்தொகை பாகுடன்
               வீய்ந்து போன தெழித்தது வேழமே. ......    80

(பாண்டில் சேர்தரு)

பாண்டில் சேர்தரு பண்ணமை செய்யதேர்
     மாண்ட காலையில் வல்லையிற் கீழுறத்
          தாண்டி வெள்ளையந் தந்தியைச் சீறினான்
               மூண்டு பானுவை முன்சிறை செய்துளான். ......    81

(மற்ற வன்றன்)

மற்ற வன்றன் மணியணி மார்பிடைச்
     செற்ற மால்கரி சென்றுமுன் தாக்கலும்
          பொற்றை யின்கட் புழைத்திடுஞ் சூசியின்
               இற்ற வால்அதன் ஈரிரு தந்தமும். ......    82

(தந்தம் நான்கு)

தந்தம் நான்குஞ் சடசட ஆர்ப்பொடு
     சிந்தல் உற்றன சீர்கெழு சூர்மகன்
          உந்து தொண்டலம் பற்றிமற் றோர்கையால்
               தந்தி வேந்தன் கவுளிடைத் தாக்கினான். ......    83

வேறு

(காழ்ந்த நெஞ்சி)

காழ்ந்த நெஞ்சினன் கரங்கொடு தாக்கலுங் கயமா
     ஆழ்ந்த தெண்டிரைப் பாற்கடல் உடைந்தென அரற்றி
          வீழ்ந்த யர்ந்தது சயந்தனும் அறிந்தனன் விரைவில்
               சூழ்ந்த தொல்லுணர் வெய்தலும் அவனிவை சொல்லும். ......    84

(மாயை போயது)

மாயை போயது தனித்தனங் குறைந்தது வன்மை
     தீயர் பற்றுவர் அழியுமிந் நகரெனச் சிறிது
          நீயி ரங்கலை இனிமன னேவிதி நெறிகாண்
               ஆயின் இங்கிவை என்றனன் சயந்தனாம் அறிஞன். ......    85

(நுனித்து நாடியே)

நுனித்து நாடியே இத்திறம் நுவன்றுநூற் றுணிபு
     மனத்தில் வைத்திடும் இந்திரன் கான்முளை மயங்கித்
          தனித்த நீர்மையுங் களிற்றொடு வீழ்ந்ததுந் தளர்வும்
               அனைத்தும் நோக்கியே தானவத் தலைவர்கள் ஆர்த்தார். ......    86

(ஆர்த்த தானவ)

ஆர்த்த தானவத் தலைவர்கள் சயந்தனை அயலே
     போர்த்த தாமெனச் சுற்றினர் பற்றினர் புவிமேல்
          கூர்த்த வாலெயிற் றரவினம் யாவையுங் குழீஇப்போய்ச்
               சீர்த்த வெல்லையில் இரவியைக் கரந்திடுந் திறம்போல். ......    87

(தடித்த மொய்ம்)

தடித்த மொய்ம்புடைச் சயந்தனைத் தானவத் தலைவர்
     பிடித்த காலையிற் கைதவன் கைதவன் பெரிதும்
          அடித்தி டுங்கள்குற் றிடுங்கள்இங் கிவனுயிர் அதனைக்
               குடித்தி டுங்களென் றார்எலா வவுணரும் குழுமி. ......    88

(மன்னர் மன்னவன் திரும)

மன்னர் மன்னவன் திருமகன் அவ்வழி மற்றோர்
     பொன்னெ டும்பெருந் தேர்மிசைப் பொள்ளென ஏகிப்
          பன்ன ரும்புகழ் படைத்திடு சயந்தனைப் பற்றித்
               துன்னி நின்றிடும் அவுணருக் கொருமொழி சொல்வான். ......    89

(வரிவில் வாங்கியே)

வரிவில் வாங்கியே யான்விடுஞ் சரம்பட மயங்கிப்
     பெரிது மெய்தளர் வுற்றனன் பேசவுங் கில்லான்
          கருத லானென இவன்றனை வருத்தலிர் கடிதே
               சுரர்கு ழாத்தொடு புரிமினோ சிறையெனச் சொற்றான். ......    90

(கொற்ற வன்மொழி)

கொற்ற வன்மொழி வினவியே மந்தரக் குன்றைச்
     சுற்று பாந்தள் போல் இந்திரன் திருமகன் துணைத்தோள்
          இற்ற கொல்லென நாணினால் யாத்தனர் இமையோர்
               உற்று நின்றதோர் குழுவினுள் ஒருங்குற உய்த்தார். ......    91

வேறு

(தொழிலிது புரிந்த)

தொழிலிது புரிந்த காலைச் சூர்மகன் தனது மாடே
     தழியகா வலரை நோக்கிச் சயந்தனும் இவரும் அல்லால்
          ஒழியநின் றோரை எல்லாம் ஒல்லையில் தருதிர் பின்னர்
               அழியஇம் மூதூர் செந்தீ அரசனுக் களித்திர் என்றான். ......    92

(என்றலும் இறை)

என்றலும் இறைஞ்சி யன்னோர் எழிலுடைத் துறக்கம் யாண்டுஞ்
     சென்றனர் நாடி யேனைத் தேவரை மகளீர் தம்மை
          ஒன்றொரு வரையும் வீடா துடனுறப் பற்றி நாணால்
               பொன்றிரள் தடந்தோள் யாத்துப் புரவலன் முன்னர் உய்த்தார். ......    93

(உய்த்தபின் பதும)

உய்த்தபின் பதுமச் செல்வி உறைதரும் உறையுள் போலச்
     சித்திரங் கெழுவு பொன்னந் திருநகர் எல்லை யெங்கும்
          புத்தழல் கொளுவ லோடும் பொள்ளெனப் பொடிபட் டன்றே
               முத்திற வரைப்பும் எங்கோன் முறுவலான் முடிந்த வாபோல். ......    94

(ஊழியின் அன்றி)

ஊழியின் அன்றி என்றும் ஒழிவுறாத் துறக்க மூதூர்
     பூழிய தான தன்றே புரந்தரன் வறியன் போனான்
          வீழுறு சிறையின் உற்றார் மிக்கவ ரென்றால் யாரும்
               வாழிய செல்வந் தன்னை நிலையென மதிக்க லாமோ. ......    95

(அளிபட லின்றி)

அளிபட லின்றி யென்றும் அலர்தரு நிழற்றும் மூதூர்
     வெளிபடு சுடலை போலாய் வேற்றுருக் கோட லோடுங்
          களிபடு பானு கோபன் கண்டனன் அவுணர் தம்மில்
               ஒளிபடு காவ லோரை நோக்கியீ துரைக்கல் உற்றான். ......    96

(தாதுலாந் தெரிய)

தாதுலாந் தெரிய லாகச் சயந்தனை அவனோ டுற்ற
     ஏதிலார் தம்மைப் பின்னோர் யாரையுங் கொடுமுன் நீவிர்
          போதிரால் என்ன அற்றே போயினர் உவணை நீங்கி
               ஆதவன் பகைஞன் மீளா அனிகமோ டவனி வந்தான். ......    97

(மாநில மதிக்கும்)

மாநில மதிக்கும் வீர மகேந்திர புரத்துப் புக்குக்
     கோனகர் முன்னம் ஏகிக் கொடிஞ்சிமான் தேரின் நீங்கிச்
          சேனையை நிறுவி வானச் சிறையினைக் கொண்டு சென்று
               தானவர் மன்னன் முன்போய்த் தாள்முறை வணக்கஞ் செய்தான். ......    98

(தண்டுளி நறவ)

தண்டுளி நறவ மாலைத் தாதைதாள் வணங்கி எந்தாய்
     கண்டிலன் சசியை வானோர் காவலன் தனையுங் காணேன்
          அண்டரைச் சயந்தன் தன்னை யாரையுங் கொண்டு சென்றேன்
               விண்டொடர் துறக்க முற்றும் வெங்கனல் கொளுவி என்றான். ......    99

(என்றலும் மகிழ்ந்து)

என்றலும் மகிழ்ந்து சூரன் இளஞ்சிறு குமரற் புல்லித்
     தன்றிரு முன்னர் இட்ட சயந்தனை முதலி யோரைக்
          கன்றினன் உருத்து வாட்கைக் காவலர் சிலரை நோக்கித்
               துன்றிய இனையர் அங்கம் யாவையுந் துணித்திர் என்றான். ......    100

(இரலைமான் தொகு)

இரலைமான் தொகுதி தன்மேல் இருஞ்சிறை வீடு பெற்ற
     உருகெழு புலிபாய்ந் தொப்ப ஒப்பிலா அரசன் சொல்லால்
          விரைவுடன் அவுணர் பல்லோர் விண்ணவர் தம்பால் மேவித்
               துருவையின் முகத்தி காணத் துண்ணெனத் துணிக்கல் உற்றார். ......    101

(கரத்தினைத் தாளை)

கரத்தினைத் தாளைத் தோளைக் கன்னமூ லத்தைக் கல்லென்
     றரற்றுறு கண்டந் தன்னை அணிகெழு துண்டந் தன்னைச்
          சிரத்தினைத் துணிப்ப அன்னோர் சிறியரோ செய்த நோன்பின்
               உரத்தினில் அவைக ளெல்லாம் உடனுடன் பொருந்த லுற்ற. ......    102

(செல்லரு நெறிக்கண்)

செல்லரு நெறிக்கண் நின்ற சேணுளார் தம்மை யாருங்
     கொல்லரி திறையும் அங்கங் குறைத்தலும் அரிதா மென்றாற்
          சொல்லரி தினையர் வன்மை தொலைந்ததெம் வரத்தா லென்னா
               வல்லரி புரைவெஞ் சூரன் மதித்துமற் றதனைக் கண்டான். ......    103

(கண்டனன் முனிந்தின்)

கண்டனன் முனிந்தின் னோரைக் காலமொன் றானும் வீடா
     எண்டரு நிரயம் போலும் இருஞ்சிறை இடுதி ரென்றே
          திண்டிறல் அசுரர் கேட்பச் செப்பலுஞ் சயந்தன் றன்னை
               அண்டரைப் பிடர்தொட் டுந்தி ஆங்ஙனங் கொண்டு போனார். ......    104

(போயினர் சிறையின்)

போயினர் சிறையின் எல்லை போற்றினர் தம்மை நோக்கி
     ஏயினன் நங்கோன் இன்னோர் யாரையுங் காவல் கொண்மின்
          நீயிர்க ளென்னா ஒற்றர் நீங்கினர் நின்றோர் தம்மை
               ஆயவர் வல்லி பூட்டி அருஞ்சிறைக் களத்தில் உய்த்தார். ......    105

(மன்னவன் அத)

மன்னவன் அதற்குப் பின்னர் மைந்தனை அன்பால் நோக்கி
     நின்னக ரத்திற் போதி நீயென அனையன் போனான்
          அன்னதோர் சூர பன்மன் அவையொரீஇ உறையுள் புக்கான்
               இன்னலங் கடலில் உற்றார் இருஞ்சிறைப் பட்ட வானோர். ......    106

வேறு

(காடு போந்தனன்)

காடு போந்தனன் இந்திரன் பொன்னகர் கரிந்து
     பாடு சேர்ந்தது சயந்தனுஞ் சிறையிடைப் பட்டான்
          நாடில் விண்பதச் செய்கையீ தெம்பிரான் நல்கும்
               வீட தேயலால் துன்பறும் ஆக்கம்வே றுண்டோ. ......    107

வேறு

(படவர வனையதோர்)

படவர வனையதோர் பரும அல்குலார்
     இடுகிய நுண்ணிடை எழில ணங்கினோர்
          கொடுமைசெய் அவுணரூர் குறுகி வேடர்பால்
               பிடியுறு மஞ்ஞையிற் பெரிதும் அஞ்சினார். ......    108

(சூரன்வாழ் பெரு)

சூரன்வாழ் பெருநகர் துன்னிக் காப்பொடு
     சீரிலா ஏவல்கள் செய்து மேவினார்
          கூரும்வாய் வெங்குரீஇக் குடம்பை உய்த்திடப்
               பேருறா திலகுமின் மினியின் பெற்றிபோல். ......    109

(வாடிய மகபதி)

வாடிய மகபதி மதலை வானுளோர்
     ஆடுறு துயர்க்கடல் அழுந்திச் சூரர்கோன்
          வீடருஞ் சிறையிடை மேவி னாரவர்
               பாடுறு திறத்தையார் பகரற் பாலினோர். ......    110

(இன்னலங் கடலி)

இன்னலங் கடலினும் எடுத்து வீடுதந்
     தன்னவர் பெருஞ்சிறை அகற்றும் வன்மையார்
          பின்னெவர் உண்டுயிர் பெற்றுக் காத்திடு
               முன்னவர் தமக்கெலா முதல்வ நீயலால். ......    111

(வியந்தரு கதி)

வியந்தரு கதிரைமுன் வெகுண்டு ளானொடு
     சயந்தன்விண் ணுலகிடைச் சமர்செய் தெய்த்துழி
          வயந்தரு கோடுகண் மாய்ந்து தந்திவீழ்ந்
               தயர்ந்தது புவியிடை அணுகிற் றத்துணை. ......    112

(வாலிய ஒளிகெழு)

வாலிய ஒளிகெழு வனத்தில் ஏகியே
     மூலம தாகிய முக்கண் மூர்த்தியை
          மேலுள தாணுவின் மேவச் செய்துபின்
               சீலமொ டருச்சனை செய்து வைகிற்றே. ......    113

(அறிவுள மால்)

அறிவுள மால்கரி அமலன் தந்திர
     முறையது நாடியே முதிரும் அன்பினால்
          மறையுற வழிபடீஇ வைகும் எல்லையில்
               குறைபடு நாற்பெருங் கோடும் வந்தவே. ......    114

(பார்ப்பதி மருங்கு)

பார்ப்பதி மருங்குறு பகவன் ஆணையால்
     மாற்பெருங் களிற்றிடை வல்லை முன்புபோல்
          நாற்பெருந் தந்தமும் நண்ண நோக்கியே
               ஏற்பரு மகிழ்ச்சியோ டிருந்த தவ்விடை. ......    115

வேறு

(ஆயதோர் அமைதி யின்கண்)

ஆயதோர் அமைதி யின்கண் அணங்கொடு மேரு வெற்பிற்
     போயின அமரர் கோமான் பொன்னகர் சூரன் மைந்தன்
          காயெரி கொளுவி அங்கட் கடவுளர் குழுவி னோரைச்
               சேயொடு பற்றி ஏகிச் சிறைசெய்த தன்மை தேர்ந்தான். ......    116

(தேர்ந்தனன் தளர்ந்து)

தேர்ந்தனன் தளர்ந்து மேருச் சிலம்பினின் மகவான் பன்னாள்
     வார்ந்திடு கங்கை வேணி வள்ளலை உன்னி நோற்பச்
          சார்ந்துநிற் கென்னை வேண்டுஞ் சாற்றென முதல்வன் நீதி
               பேர்ந்தசூர் கிளையைச் செற்றெம் பேதுற வகற்று கென்றான். ......    117

(என்றலும் எந்தை)

என்றலும் எந்தை சொல்வான் யாமுமை தன்னை மேவி
     ஒன்றொரு குமரன் றன்னை உதவுவம் அவனே போந்து
          வென்றிகொள் சூர னாதி அவுணரை விரைவிற் செற்று
               மன்றநும் முரிமை ஈவன் வருந்தலென் றுரைத்துப் போனான். ......    118

(சாதலுந் தொலை)

சாதலுந் தொலைவும் இல்லாத் தானவர்க் கிறைவன் ஏனோர்
     ஏதிலர் தம்மால் வீடான் என்றுதன் உளத்தி லெண்ணிச்
          சோதிகொள் பரம மாகித் தோன்றிடு முதல்வன் நீயே
               ஆதலின் விமல மூர்த்தி அவரைமே லடுதி யென்றான். ......    119

(அவ்வுரை மகவான்)

அவ்வுரை மகவான் தேறி அரியய னோடு சூழ்ந்து
     மைவரு களத்தோன் தன்பான் மதனனை உய்ப்ப அன்னோன்
          மெய்விழி எரியின் மாய்ந்து வெறுந்துகள் படலுந் தேவர்
               எவ்வெவ ரும்போய் வேண்ட இரங்கியே கருணை செய்தான். ......    120

(அரியயன் மகவான்)

அரியயன் மகவான் தேவர் அருங்கணத் தலைவர் யாரும்
     பரவுற இமய வெற்பிற் படர்ந்துபின் உமையை வேட்டுப்
          பிரிவருங் கயிலை நண்ணிப் பின்னெம திரக்கம் நாடிக்
               கருணையால் எந்தை நின்னை நெற்றியங் கண்ணால் தந்தான். ......    121

(எந்தைநீ வந்த)

எந்தைநீ வந்த பின்றை இந்திரன் அயன்மால் தேவர்
     அந்தமில் முனிவர் ஏனோர் அனைவர்க்கும் அகன்ற ஆவி
          வந்தது போன்ற தம்மா வலியவெஞ் சூரற் செற்றுத்
               தந்தம தரசு பெற்ற தன்மையர் போல வுற்றார். ......    122

(ஆழ்தரு முந்நீர்)

ஆழ்தரு முந்நீர் நேமி அகன்கடல் அழுவம் புக்கு
     வீழ்தரு வோர்கள் தம்பால் வியன்கல மொன்று சேர
          ஊழ்தரு தொடர்பாற் பற்றி உய்ந்தெனத் துன்ப வேலைக்
               கீழ்தரு வோர்கள் நின்னாற் கிளர்ந்துமேல் எழுதல் உற்றார். ......    123

(புரந்தரன் முதலா)

புரந்தரன் முதலா உள்ள புங்கவர் எம்ம னோர்கள்
     அரந்தையை அகற்ற உன்னி ஐயநீ போந்த பின்னுந்
          தெரிந்திடு துணிபிற் சேர்ந்துந் தெம்முனைச் சூரற் கஞ்சிக்
               கரந்தனர் இருந்தார் காணிற் கடுஞ்சிறைப் பிணிப்ப னென்னா. ......    124

(எம்பிரான் நின்னை)

எம்பிரான் நின்னை முக்கண் எந்தையை வணங்க நேரில்
     தம்பெரு வடிவங் காணச் சாருவர் ஒழிந்த காலை
          உம்பர்கோன் முதலோர் தத்தம் உருக்கரந் துழல்வர் வான்மேல்
               வெம்பணி சிலைகண் மாறாம் வெய்யவர் நிலைமை யேபோல். ......    125

(மறைந்திடு பாங்கர்)

மறைந்திடு பாங்கர் இன்ன வாசவன் முதலோர் யாரும்
     அறந்தவிர் சூர பன்மன் அடுபடைத் தலைவர்க் காணிற்
          பறைந்திட மார்பம் உள்ளம் பனித்திட வியர்ப்ப யாக்கை
               இறந்தன ராகிப் பின்னர் இன்னுயிர் பெறுவர் அன்றே. ......    126

(வினைப்பவம் உழ)

வினைப்பவம் உழந்த விண்ணோர் வெந்தொழில் அவுணர் கோனை
     நினைப்பினும் அவச மாவர் நெடுந்துயில் பெறாத நீரால்
          மனப்படு கனவு நீத்தார் மற்றது வருமேல் அங்கண்
               உனப்படு சூரற் காணின் உயிரையும் இழப்பர் அம்மா. ......    127

(பொன்னகர் இறுதி)

பொன்னகர் இறுதி செய்து புதல்வனை அமர ரோடு
     துன்னருஞ் சிறையுட் சேர்த்தித் துயர்ப்பெருங் கடலுள் வீட்டி
          மன்னிய வெறுக்கை வவ்வி மனையொடு கரப்பச் செய்தும்
               இன்னமும் அவுணர் கோமான் இந்திரற் கலக்கண் சூழும். ......    128

(ஒப்பரும் வெறுக்கை)

ஒப்பரும் வெறுக்கை தன்னால் ஓங்கிய விறலாற் சீரான்
     மெய்ப்படு மிடலால் யார்க்கும் மேன்மையால் அழியா வாற்றால்
          இப்பகல் வானோர்க் கெல்லாம் இடர்புரி கொடுமை நீரால்
               அப்பெருஞ் சூரற் கென்றும் ஆரும்நேர் அன்று மாதோ. ......    129

(ஏயதோ ரண்ட)

ஏயதோ ரண்ட மொன்றின் இழைத்தன இவ்வா றேனை
     ஆயிரத் தோரேழ் அண்டத் தவன்செயல் அறிதல் தேற்றாந்
          தூயதோர் பரத்தின் மேலாஞ் சோதியாய் எம்மைக் காப்பான்
               மேயின ஒருநீ அன்றி வேறியார் தெரிதற் பாலார். ......    130

(தொடர்ந்திடு சீர்)

தொடர்ந்திடு சீர்பெற் றுள்ள சூரன தாணை என்னில்
     கடந்திடல் புரியார் மாலுங் கமலமேல் அயனும் வானோர்
          அடங்கலும் முனிவர் யாரும் ஆயிர விருநா லண்டத்
               தொடுங்கிய உயிரும் அன்னோன் பெருமையார் உரைக்கற் பாலார். ......    131

(முடிவிலிவ் வளம்)

முடிவிலிவ் வளம்பெற் றுள்ள முரண்கெழு சூர பன்மன்
     கெடுகிலன் அன்று மேலோன் கிளத்திய வரத்தின் சீராற்
          படியறும் அமல மேனிப் பரஞ்சுடர் குமர நீயே
               அடுவதை அன்றிப் பின்னர் அவனையார் முடிக்கற் பாலார். ......    132

(ஐந்தியல் அங்க)

ஐந்தியல் அங்கஞ் சூரற் கயன்புகன் றுழல்வான் நாளும்
     இந்திரை கேள்வன் போர்செய் தெஞ்சினன் எவர்க்கும் மேலாய்
          முந்திய சிவன்அன் னோற்கு முதல்வரம் அளித்தான் பின்னர்
               வந்தடல் புரியான் நீயே மற்றவற் கோறல் வேண்டும். ......    133

(ஆவதோர் சூரன்)

ஆவதோர் சூரன் றன்னை அவன்றுணை வோரை மைந்தர்
     ஏவர்கள் தமையும் அட்டே எழில்பெறு சயந்த னோடும்
          தேவர்தஞ் சிறையை நீக்கித் திசைமுகன் மகவா னாதிக்
               காவலர் பதங்கள் நல்கிக் காத்தருள் எம்மை யென்றான். ......    134

(இவ்வகை முகமா)

இவ்வகை முகமா றுள்ள எம்பிரான் உளத்திற் கேற்ப
     உய்வுறும் அன்பாற் பொன்னோன் உரைப்பமுன் அறிந்த தொன்றை
          மெய்வரு தொடர்பால் ஈன்றோர் விழைவினான் மழலை ஒவாச்
               செவ்வியல் மகார்வாய்க் கேட்குந் திறனென வினவிச் சொல்வான். ......    135

(புன்றொழில் அவு)

புன்றொழில் அவுணர் தன்மை புறத்தவர் செய்கை யாவும்
     ஒன்றிடை விடாது முற்றும் உள்ளவா றுரைத்தாய் நம்மு
          னன்றிது பனுவற் கெல்லாம் நாதனை ஒருநீ அன்றோ
               வென்றவன் புறத்தை நீவி இனிதருள் புரிந்தான் எங்கோன். ......    136

(அறிவினுள் அறி)

அறிவினுள் அறிவாய் வைகும் அறுமுக அமல வெஞ்சூர்
     இறுசெயல் நினைக்கி லாகும் ஈண்டையோர் ஆடல் உன்னிக்
          குறுகினை யதுபோல் அன்னோன் கொள்கையுந் தேர்ந்தாய் நிற்கோர்
               சிறியனேன் உரைத்தேன் என்னுந் தீப்பிழை பொறுத்தியென்றான். ......    137

(பொறுத்தியென்)

பொறுத்தியென் குற்றம் என்று பொன்னடித் துணையைப் பொன்னோன்
     மறத்தலில் அன்பிற் பூண்டு வணங்கினன் தொழுது போற்ற
          வெறித்தரு கதிர்வேல் அண்ணல் எம்முரை கொண்டு சொற்றாய்
               உறத்தகு பிழையில் யாதும் உன்னலை இருத்தி என்றான். ......    138

வேறு

(பொன்னெனும் பெய)

பொன்னெனும் பெயரினான் பொருவில் கந்தவேள்
     இன்னருள் நிலைமைபெற் றிருந்த பின்னரே
          தன்னயல் நிற்புறு சதம கத்தனை
               அந்நிலை நோக்கியே அன்பிற் கூறுவான். ......    139

(ஈண்டிது கேண்)

ஈண்டிது கேண்மனத் தேதும் எண்ணலை
     மூண்டிடு சூர்குல முடிய வானுளோர்
          மீண்டிட இருஞ்சிறை விண்ப தத்தைநீ
               ஆண்டிட நல்குதும் ஐயுறேல் என்றான். ......    140

(இகபரம் உதவுவான்)

இகபரம் உதவுவான் இதனைச் சாற்றலும்
     மகபதி பரிவொடு வணங்கி வானவத்
          தொகையொடு போற்றியே துன்பெலாம் ஒரீஇப்
               புகலரும் மகிழ்ச்சியுட் பொருந்தல் மேயினான். ......    141

ஆகத் திருவிருத்தம் - 3712




*1 பன்னிரு பெயர்ச் சீகாழி - பன்னிரண்டு பெயர்களில் ஒன்றாகிய சீகாழிப்பதி.

அசுரகாண்டம் முற்றுப்பெற்றது

ஆகக் காண்டம் இரண்டுக்குத் திருவிருத்தம் - 3,712

கச்சியப்ப சிவாசாரியர் திருவடி வாழ்க



previous padalam   43 - அமரர் சிறைபுகு படலம்   next padalamamarar siRaipugu padalam

previous kandam   2 - அசுரகாண்டம்   next kandam2 - asura kANdam

காண்டம் - படலம் பட்டியலுக்கு அகர வரிசையில் முதற்குறிப்புக்கு செய்யுள் முதற்குறிப்பு pdf வடிவம்

kANdam - padalam List Tamil alphabetical index verse index pdf version

Kandha Puranam - The Story of Lord Murugan

Sri Kachchiappa Sivachariyar

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



   Kaumaram.com சமீபத்தில் DDOS தாக்குதலால் பாதிக்கப்பட்டது.
எனவே, படங்கள் மற்றும் ஆடியோ தற்காலிகமாக கிடைக்காது.
நான் இதை படிப்படியாக சரிசெய்ய முயற்சிக்கிறேன்.
உங்கள் பொறுமைக்கும் புரிந்துணர்வுக்கும் நன்றி. ... வலைத்தள நிர்வாகி.  




  Kaumaram.com was recently affected by DDOS attack.
As such, images and audio will be temporarily unavailable.
I am trying to correct this progressively.
Thank you for your patience and understanding. ... webmaster.  



Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

© Copyright Kaumaram dot com - 2001-2040

COMMERCIAL USE OF MATERIAL IN THIS WEBSITE IS NOT PERMITTED.

Please contact me (the webmaster), if you wish to place a link in your website.

email: kaumaram@gmail.com

Disclaimer:

Although necessary efforts have been taken by me (the webmaster),
to keep the items in www.kaumaram.com safe from viruses etc.,
I am NOT responsible for any damage caused by use of
and/or downloading of any item from this website or from linked external sites.
Please use updated ANTI-VIRUS program to rescan all downloaded items
from the internet for maximum safety and security.

[W3]