Kaumaram dot com - The Website for Lord Muruga and His Devotees

Kandha Puranam
by
Sri Kachiyappa
Sivachariyar

ஸ்ரீ கச்சியப்ப சிவாச்சாரியார்
அருளிய
கந்த புராணம்

Lord MuruganSri Kaumara Chellam

காண்டம் - படலம் பட்டியலுக்கு அகர வரிசையில் முதற்குறிப்புக்கு செய்யுள் முதற்குறிப்பு pdf வடிவம்

kANdam - padalam List Tamil alphabetical index verse index pdf version

previous kandam   2 - அசுரகாண்டம்   next kandam2 - asura kANdam

previous padalam   27 - காவிரி நீங்கு படலம்   next padalamkAviri neenggu padalam

Ms Revathi Sankaran (7.05mb)




(செங்கை தூங்கிய)

செங்கை தூங்கிய தீர்த்த நீரொடுங்
     கொங்கின் பாற்செலக் குறிய மாமுனி
          மங்கு கின்றஅம் மைந்தர் நேருறா
               அங்கண் மேவினார் அருந்த வத்தர்போல். ......    1

(நேரு மைந்தர்கள்)

நேரு மைந்தர்கள் இருவர் நீனிறக்
     காரின் மேனியர் கறங்கு கண்ணினர்
          தீரர் ஆற்றவுஞ் சினத்தர் ஒல்லென
               ஆர வாரஞ்செய் தணுகி னாரரோ. ......    2

(அண்மை யாகுவர்)

அண்மை யாகுவர் அகல்வர் மாமுனி
     கண்முன் எய்துவர் கரந்து காண்கிலார்
          விண்மு கிற்குளே மேவி ஆர்ப்பரால்
               மண்மி சைப்பினும் வருவர் சூழ்வரே. ......    3

(கோதில் ஆற்றல்)

கோதில் ஆற்றல்சேர் கும்ப மாமுனி
     ஈது நோக்கியே இவரை முன்னமே
          காதி னாம்நமைக் கருதி வந்தனர்
               மாத வத்தினோன் மைந்தர் ஆதலால். ......    4

(பேர்கி லாதஇப்)

பேர்கி லாதஇப் பிரம கத்திநோய்
     தீரு மாற்றினால் சிவன தாள்களை
          ஆர்வ மோடிவண் அருச்சிப் பாமெனா
               நேரின் மாமுனி நினைந்து நின்றரோ. ......    5

(ஆசில் கொங்கி)

ஆசில் கொங்கினுக் கணித்தின் ஓரிடை
     வாச மீதென மகிழ்ந்து வீற்றிரீஇ
          ஈச னார்தமை இலிங்க மேனியில்
               நேச நெஞ்சினான் நினைந்து தாபித்தான். ......    6

(தூய குண்டிகை)

தூய குண்டிகைத் தோயம் அன்றியே
     சேய மாமலர் தீபந் தீம்புகை
          ஆய போனகம் ஆதி யானவை
               ஏயு மாற்றினால் இனிது தேடினான். ......    7

(விழுமி தாகிய)

விழுமி தாகிய விரதர் வீயவே
     வழியி ருந்திடும் வஞ்சர் ஆவிகொள்
          பழிய கன்றிடப் பரமன் தாள்மிசை
               அழிவில் அன்பொடே அருச்சித் தானரோ. ......    8

(மங்கை பாகனை)

மங்கை பாகனை மற்றும் பற்பகல்
     சிங்கல் இன்றியே சிறந்த பூசைசெய்
          தங்கண் மேவினான் அவன்க ணாகிய
               துங்க வெம்பவந் தொலைந்து போயதே. ......    9

(அனைய காலையில் அரிய)

அனைய காலையில் அரிய தீந்தமிழ்
     முனிவ ரன்செயல் முற்றும் நாடியே
          துனியில் நாரதன் தொல்லை வானவர்க்
               கினிய கோமகன் இருக்கை எய்தினான். ......    10

(தாணு வின்பத)

தாணு வின்பதந் தன்னை உன்னியே
     வேணு வாகியே மெய்த்த வஞ்செயுஞ்
          சேணின் மன்னவன் செல்லு நாரதற்
               காணும் எல்லையிற் கழல்வ ணங்கினான். ......    11

(எழுதி மன்னவென்)

எழுதி மன்னவென் றெடுத்து மார்புறத்
     தழுவி நன்றிவட் சார்தி யோவெனா
          உழுவ லன்பினால் உரைப்ப வாசவன்
               தொழுத கையினான் இனைய சொல்லுவான். ......    12

(இன்று காறுநின்)

இன்று காறுநின் னருளின் யானிவண்
     நன்று மேவினன் நாதன் பூசனைக்
          கொன்ற துண்டுதீங் குரைப்பன் கேட்டியால்
               குன்ற மன்னதோர் குணத்தின் மேலையோய். ......    13

(கோதின் மாமலர்)

கோதின் மாமலர் குழுவு தண்டலைக்
     கேது நீரிலை இறந்து வாடுமால்
          போதும் இல்லையால் பூசை செய்வதற்
               கீத ரோகுறை யென்றி யம்பினான். ......    14

வேறு

(இன்னவை பலவுங்)

இன்னவை பலவுங் கூறி இந்திரன் தவிசொன் றிட்டு
     முன்னுற இருத்தித் தானும் முனிவரன் பணியால் வைக
          அன்னதோர் அறிஞன் நின்னூர் அரசியல் பிறவும் ஈசன்
               தன்னருள் அதனால் மேனாள் வருவது தளரேல் மன்னோ. ......    15

(ஆறணி சடை)

ஆறணி சடையி னானுக் கருச்சனை புரிதற் கிங்கோர்
     ஊறுள தென்றே ஐய உரைத்தனை அதுவும் வல்லே
          மாறிடுங் காலம் ஈண்டு வந்ததப் பரிசை யெல்லாங்
               கூறுவன் கேட்டி யென்னாக் கோமகற் குரைக்க லுற்றான். ......    16

(தன்னிகர் இலாத)

தன்னிகர் இலாத முக்கட் சங்கரன் பொதிய வெற்பின்
     முன்னுறை கென்று கும்ப முனிவனை விடுத்த வாறும்
          அன்னவன் விந்தந் தன்னை அகன்பிலத் திட்ட வாறும்
               துன்னெறி புரிந்த வெஞ்சூர் மருகரைத் தொலைத்த வாறும். ......    17

(அப்பழி தீரு மாற்றா)

அப்பழி தீரு மாற்றால் ஐதெனக் கொங்கின் நண்ணி
     முப்புர மெரித்த தொல்லை முதல்வனை அருச்சித் தேத்தி
          மெய்ப்பரி வாகி அங்கண் மேவிய திறனும் முற்றச்
               செப்பினன் பின்னும் ஆங்கோர் செய்கையை உணர்த்த லுற்றான். ......    18

(அருந்தவ முனிவன்)

அருந்தவ முனிவன் கொங்கின் அமலனை அருச்சித் தங்கண்
     இருந்திடு கின்றான் நாடி ஏகினன் அவன்பா லாகப்
          பொருந்துகுண் டிகையின் மன்னும் பொன்னியா றதனை இங்கே
               வரும்பரி சியற்றின் உன்றன் மனக்குறை தீரு மென்றான். ......    19

(குரவன்ஈ துரைத்த)

குரவன்ஈ துரைத்த லோடுங் குறுமுனி கொணர்ந்து வைத்த
     வரநதி தனையிக் காவில் வரவியற் றிடுமா றென்கொல்
          பெருமநீ யுரைத்தி யென்னப் பேரமு தருத்தி யேத்திக்
               கரிமுகத் தேவை வேண்டில் கவிழ்த்திடும் அதனை என்றான். ......    20

(குணப்பெருங் குன்ற)

குணப்பெருங் குன்ற மன்ன கோதிலா அறிவன் இன்ன
     புணர்ப்பினை இசைத்த லோடும் புரந்தரன் பொருமல் நீங்கிக்
          கணிப்பிலா மகிழ்ச்சி யெய்திக் காசிபன் சிறுவர் கொண்ட
               அணிப்பெருந் திருவும் நாடும் அடைந்தனன் போன்று சொல்வான். ......    21

(எந்தைநீ இனைய)

எந்தைநீ இனைய எல்லாம் இயம்பினை அதனால் யானும்
     உய்ந்தனன் கவலை யாவும் ஒருவினன் முனிவன் பாங்கர்
          வந்திடு மாறும் ஈண்டு வரவுன தருளால் இன்னே
               தந்திமா முகற்குப் பூசை புரிகுவன் தக்கோய் என்றான். ......    22

(அருள்முனி இதனை)

அருள்முனி இதனைக் கேளா அன்னதே கருமம் வல்லே
     புரிகரி முகவற் கைய பூசனை யென்று கூறிப்
          பரவிய இமையோர் கோனைப் பார்மிசை நிறுவிப் போந்து
               சுரரெலாம் பரவு கின்ற தொல்லையம் பதத்தி னுற்றான். ......    23

(சேறலும் புணர்ப்பு)

சேறலும் புணர்ப்பு வல்லோன் திங்களும் அரவுங் கங்கை
     யாறொடு முடித்த அண்ணல் அருள்புரி முதல்வன் றன்னை
          மாறகல் மேனி கொண்டு வரன்முறை தாபித் தன்னான்
               சீறடி அமரர் கோமான் அருச்சனை செய்து பின்னர். ......    24

(இக்கொடு தென்ன)

இக்கொடு தென்னங் காயும் ஏனலின் இடியுந் தேனும்
     முக்கனி பலவும் பாகும் மோதக முதல முற்றுந்
          தொக்குறு மதுர மூலத் தொடக்கமுஞ் சுவைத்தீம் பாலும்
               மிக்கபண் ணியமு மாக விருப்புற நிவேதித் தானால். ......    25

(இவ்வகை நிவேதி)

இவ்வகை நிவேதித் தேபின் எம்பிரான் றன்னை ஏத்த
     மைவரை யனைய மேனி மதகரி முகத்துத் தோன்றல்
          கவ்வையோ டனந்த கோடி கணநிரை துவன்றிச் சூழ
               அவ்விடை விரைவால் தோன்ற அஞ்சினன் அமரர் கோமான். ......    26

(அஞ்சலை மகவா)

அஞ்சலை மகவா னென்ன ஐங்கரக் கடவுள் கூற
     நெஞ்சகந் துணுக்கம் நீங்கி நிறைந்தபே ருவகை யெய்தி
          உஞ்சன னென்று வள்ளல் உபயமா மலர்த்தாள் மீது
               செஞ்செவே சென்னி தீண்டச் சென்றுமுன் வணக்கஞ் செய்தான். ......    27

(பூண்டிகழ் அலங்க)

பூண்டிகழ் அலங்கல் மார்பில் பொன்னகர்க் கிறைவன் முக்கண்
     ஆண்டகை சிறுவன் தாள்மேல் அன்பொடு பணிந்து போற்ற
          நீண்டதோர் அருளால் நோக்கி நின்பெரும் பூசை கொண்டாம்
               வேண்டிய பரிசென் என்றான் வேழமா முகனை வென்றான். ......    28

(இந்திரன் அதுகே)

இந்திரன் அதுகேட் டைய எம்பிராற் காக ஈண்டோர்
     நந்தன வனத்தை வைத்தேன் அன்னது நாரம் இன்றிச்
          செந்தழ லுற்றா லென்னத் தினகரன் சுடரால் மாய்ந்து
               வெந்துக ளான தண்ணல் மேலடு புரமே யென்ன. ......    29

(என்னலும் ஏந்தல்)

என்னலும் ஏந்தல் கேளா ஏழ்பெருந் தலத்தின் நீரும்
     முன்னுறத் தருகோ வான முழுப்பெருங் கங்கை தானும்
          பன்னதி பிறவும் இங்ஙன் விளித்திடோ பரவை யாவுந்
               துன்னுறு விக்கோ ஒன்று சொல்லுதி வேண்டிற் றென்றான். ......    30

(ஐங்கரக் கடவுள்)

ஐங்கரக் கடவுள் இவ்வா றறைதலும் அனைத்தும் நல்கும்
     பங்கயத் தயனு மாலும் பரவுறு பழையோய் இங்ஙன்
          அங்கவற் றொன்றும் வேண்டேன் அதுநினக் கரிதோ யானொன்
               றிங்குனைக் கேட்ப னென்னா இனையன இசைக்க லுற்றான். ......    31

(சகத்துயர் வடபொன்)

சகத்துயர் வடபொன் மேருச் சாரலின் நின்றும் போந்து
     மிகத்துயர் எவர்க்குஞ் செய்யும் வெய்யவள் சிறுவர்ச் செற்று
          மகத்துயர் விதியின் சேய்க்கு வருவித்த நிமலன் பொற்றாள்
               அகத்தியன் கொங்கின் பால்வந் தருச்சனை புரிந்து மேவும். ......    32

(அன்னவன் தனது மாட்)

அன்னவன் தனது மாட்டோர் அணிகமண் டலத்தி னூடே
     பொன்னியென் றுரைக்குந் தீர்த்தம் பொருந்தியேஇருந்த தெந்தாய்
          நன்னதி யதனை நீபோய் ஞாலமேற் கவிழ்த்து விட்டால்
               இன்னதோர் வனத்தின் நண்ணும் என்குறை தீரு மென்றான். ......    33

(பாகசா தனன்)

பாகசா தனன்இம் மாற்றம் பகர்தலும் பிறைசேர் சென்னி
     மாகயா னனத்து வள்ளல் மற்றிது செய்து மென்னா
          ஓகையால் அவனை அங்கண் நிறுவிப்போய் ஒல்லை தன்னில்
               காகமாய் முனிபா லான கமண்டல மிசைக்கண் உற்றான். ......    34

(கொங்குறு முனிவன்)

கொங்குறு முனிவன் பாங்கர்க் குண்டிகை மீதிற் பொன்னி
     சங்கரன் அருளின் வந்த தன்மையும் புணர்ப்பு முன்னி
          ஐங்கரன் கொடியாய் நண்ண அகத்தியன் அவனென் றோரான்
               இங்கொரு பறவை கொல்லாம் எய்திய தென்று கண்டான். ......    35

(கண்டனன் பிள்ளை)

கண்டனன் பிள்ளை செல்லக் கரதல மெடாநின் றோச்ச
     அண்டருக் கலக்கண் செய்த கயமுகத் தவுணற் செற்றோன்
          குண்டிகை அதனைத் தள்ளிக் குளிர்புனற் கன்னி யன்னான்
               பண்டையில் இசைவு செய்தான் பாரில்நீ படர்தி என்றான். ......    36

(என்னலுங் காஞ்சி)

என்னலுங் காஞ்சி தன்னில் எம்பிரான் உலகம் ஈன்ற
     அன்னைதன் அன்பு காட்ட அழைத்திட வந்த கம்பை
          நன்னதி போல விண்ணும் ஞாலமும் நடுங்க ஆர்த்துப்
               பொன்னியா றுலகந் தன்னில் பொள்ளெனப் பெயர்ந்த தன்றே. ......    37

(பெயர்தலும் உமை)

பெயர்தலும் உமைதன் பிள்ளை பிள்ளையின் உருவம் நீத்துப்
     பயிறரு மறைநூல் வல்ல பார்ப்பன மகன்போற் செல்லச்
          சயமிகு தவத்தின் மேலோன் தன்மையங் கதனை நோக்கி
               உயிர்முழு தடவே தோன்றும் ஒருவன்போல் உருத்து நின்றான். ......    38

(தேவனோ அவுணன்)

தேவனோ அவுணன் தானோ அரக்கனோ திறலின் மேலோன்
     யாவனோ அறிதல் தேற்றேன் ஈண்டுறு நதியைச் சிந்திப்
          போவனோ சிறிது மெண்ணா அகந்தையன் போலும் அம்மா
               யாவனோ வன்மை தன்னை அறிகுவன் விரைவின் என்றான். ......    39

(விரைந்தவன் பின்ன)

விரைந்தவன் பின்ன ரேக மெய்வழி பாடு செய்வோர்
     அரந்தையை நீக்கும் எங்கோன் அச்சுறு நீரன் போல
          இரிந்தனன் போத லோடும் இருகையுங் கவித்த மாக்கித்
               துரந்தனன் முனிவன் சென்னி துளக்குறத் தாக்க உன்னி. ......    40

(குட்டுவான் துணி)

குட்டுவான் துணிந்து செல்லுங் குறுமுனிக் கணிய னாகிக்
     கிட்டுவான் விசும்பி னூடு கிளருவான் திசைக டோறும்
          முட்டுவான் பின்பு பாரின் முடுகுவான் அனையன் கைக்கும்
               எட்டுவான் சேய னாகி ஏகுவான் எவர்க்கும் மேலோன். ......    41

(இப்படி முனிவன்)

இப்படி முனிவன் சீற்றத் தலமர யாண்டு மேகித்
     தப்பினன் திரித லோடுஞ் சாலவுந் தளர்ச்சி யெய்திச்
          செப்பரி திவன்றன் மாயஞ் செய்வதென் இனியா னென்னா
               ஒப்பருந் தவத்தோன் உன்ன எந்தையஃ துணர்ந்தான் அன்றே. ......    42

(ஓட்டமோ டுலவு)

ஓட்டமோ டுலவு முன்னோன் ஒல்லையில் தனது மேனி
     காட்டினன் முனிவன் காணாக் கதுமெனக் கலங்கி அந்தோ
          கோட்டிப முகனோ ஈண்டுக் குறுகினன் அவனை யானோ
               ஈட்டொடு துரந்தேன் கொல்லென் றேங்கினன் இரங்கு கின்றான். ......    43

(இரங்கிய முனிவன்)

இரங்கிய முனிவன் முன்னம் ஏந்தலைப் புடைப்பான் கொண்ட
     கரங்களை எடுத்து வானில் காருரும் ஏறு வெற்பின்
          உரங்கிழி தரவே நீங்கா துரப்பினில் வீழ்வ தேபோல்
               வரங்கெழு தனாது நெற்றி வருந்துறத் தாக்கல் உற்றான். ......    44

(தாக்குதல் புரிந்த)

தாக்குதல் புரிந்த காலைத் தாரகப் பிரம மான
     மாக்கய முகத்து வள்ளல் வரம்பிலா அருளி னோடு
          நோக்கியுன் செய்கை என்னை நுவலுதி குறியோய் என்னத்
               தேக்குறு தமிழ்தேர் வள்ளல் இனையது செப்பு கின்றான். ......    45

(அந்தண குமரன்)

அந்தண குமரன் என்றே ஐயநின் சிரமேல் தாக்கச்
     சிந்தனை புரிந்தேன் யாதுந் தெளிவிலேன் அதற்குத் தீர்வு
          முந்தினன் இயற்று கின்றேன் என்றலும் முறுவல் செய்து
               தந்தியின் முகத்து வள்ளல் அலமரல் தவிர்தி யென்றான். ......    46

(என்றலுந் தவிர்ந்து)

என்றலுந் தவிர்ந்து முன்னோன் இணையடி மிசையே பல்கால்
     சென்றுசென்றிறைஞ்சி யன்னோன் சீர்த்திய தெவையும் போற்றி
          உன்றிறம் உணரேன் செய்த தவற்றினை உளத்திற் கொள்ளேல்
               நன்றருள் புரிதி என்ன நாயகன் அருளிச் செய்வான். ......    47

(புரந்தரன் எந்தை)

புரந்தரன் எந்தை பூசை புரிதரு பொருட்டால் ஈண்டோர்
     வரந்தரு காமர் தண்கா வைத்தனன் அதுநீ ரின்றி
          விரைந்தது பொலிவு மாழ்கி வெறுந்துகள் ஆத லோடும்
               இரந்தனன் புனல்வேட் டெம்மை இயல்புடன் வழிபட் டிந்நாள். ......    48

(ஆதலின் கொடி)

ஆதலின் கொடிபோல் யாமுன் னரும்புனற் குடிகை மீது
     காதலித் திருந்து மெல்லக் கவிழ்த்தனம் அதனை ஈண்டுப்
          போதலுற் றிடவுஞ் சொற்றாம் பொறாதுநீ செய்த வற்றில்
               யாதுமுட் கொள்ளேம் அவ்வா றினிதென மகிழ்தும் அன்றே. ......    49

(ஈண்டுநீ புரிந்த)

ஈண்டுநீ புரிந்த தெல்லாம் எமக்கிதோ ராட லென்றே
     காண்டுமா லன்றி நின்பால் காய்சினங் கொண்டேம் அல்லேம்
          நீண்டசெஞ் சடையெம் மையன் நேயன்நீ எமக்கும் அற்றே
               வேண்டிய வரங்கள் ஈதுங் கேண்மதி விரைவின் என்றான். ......    50

வேறு

(என்னா இதுசெப்)

என்னா இதுசெப் பலும்எம் பெருமான்
     முன்னா கியதோர் முனிவன் பணியா
          உன்னா ரருள்எய் தலின்உய்ந் தனன்யான்
               நன்னா யகனே எனவே நவில்வான். ......    51

(நின்பா லினும்)

நின்பா லினும்அந் நெடுமா லுணரான்
     தன்பா லினுமே தமியேன் மிகவும்
          அன்பா வதொர்தன் மையளித் தருள்நீ
               இன்பால் அதுவெஃ குவன்எப் பொழுதும். ......    52

(இன்னே தமியேன்)

இன்னே தமியேன் எனவே இனிநின்
     முன்னே நுதலின் முறையால் இருகை
          கொன்னே கொடுதாக் குநர்தங் குறைதீர்த்
               தன்னே யெனவந் தருள்செய் யெனவே. ......    53

(முத்தண் டமிழ்தேர்)

முத்தண் டமிழ்தேர் முனிஈ தறைய
     அத்தன் குமரன் அவைநல் கினமால்
          இத்தன் மையவே அலதின் னமும்நீ
               சித்தந் தனில்வேண் டியசெப் பெனவே. ......    54

(கொள்ளப் படுகுண்)

கொள்ளப் படுகுண் டிகையிற் குடிஞை
     வெள்ளப் பெருநீர் மிசையுற் றடிகள்
          தள்ளக் கவிழ்வுற் றதுதா ரணிமேல்
               எள்ளிற் சிறிதும் இலதென் றிடவே. ......    55

(ஊனாய் உயிராய்)

ஊனாய் உயிராய் உலகாய்*1 உறைவோன்
     மேனாள் அருள்செய் வியன்மா நதிதான்
          போனா லதுபோற் புனலொன் றுளதோ
               நானா டிடவே நலமா னதுவே. ......    56

(அந்நீர் மையினால்)

அந்நீர் மையினால் அடியேற் கிவண்நீ
     நன்னீர் நவையற் றதுநல் கெனவே
          கைந்நீர் மையினாற் கடுகின் துணையாம்
               முந்நீர் அயிலும் முனிவன் மொழிய. ......    57

(காகத் தியல்)

காகத் தியல்கொண் டுகவிழ்த் திடமுன்
     போகுற் றபுதுப் புனலாற் றிடையே
          மாகைத் தலநீட் டினன்வா னுலவும்
               மேகத் திறைமால் கடல்வீழ்ந் தெனவே. ......    58

(அள்ளிச் சிறிதே)

அள்ளிச் சிறிதே புனலம் முனிவன்
     கொள்ளப் படுகுண் டிகையுய்த் திடலும்
          உள்ளத் தைநிரப் பியொழிந் ததெலாம்
               வெள்ளத் தொடுபார் மிசைமே வியதே. ......    59

(முன்னுற் றதுபோல்)

முன்னுற் றதுபோல் முனிகுண் டிகைநீர்
     துன்னுற் றதுமேல் தொலையா வகையால்
          என்னிப் புதுமை யெனநோக் கினனால்
               தன்னுற் றமனத் தவமா முனியே. ......    60

(பேருற் றிடுமி)

பேருற் றிடுமிப் பெருநீர் அதனில்
     வாரிச் சிறிதே வருகுண் டிகையில்
          பாரித் தனன்இப் படிமுற் றுறுவான்
               ஆரிப் படிவல் லவரா யினுமே. ......    61

(அந்தத் திருமால்)

அந்தத் திருமால் அயனே முதலோர்
     வந்தித் திடவே வரமீந் தருளி
          முந்துற் றிடுமூ லமொழிப் பொருளாம்
               எந்தைக் கரிதோ இதுபோல் வதுவே. ......    62

(என்றே நினையா)

என்றே நினையா இபமா முகவற்
     சென்றே பணியாச் சிறியேன் குறையா
          ஒன்றே துமிலேன் உதவுற் றனைநீ
               நன்றே கவிழும் நதிநீ ரையுமே. ......    63

(முந்தே முதல்வா)

முந்தே முதல்வா முழுதுன் னருளால்
     அந்தே யளவும் அளியில் சிறியேன்
          உய்ந்தேன் இனியும் முனையுன் னுழிநீ
               வந்தே அருள்கூர் மறவேல் எனவே. ......    64

(அற்றா கவென)

அற்றா கவென அருள்செய் தயலே
     சுற்றா வருதொல் படையோ டுமெழாப்
          பற்றா னவர்நா டுபரம் பொருள்சேய்
               மற்றா ரும்வியப் பமறைந் தனனே. ......    65

வேறு

(மறைகின்ற எல்லை)

மறைகின்ற எல்லைதனில் குறுமுனிவிம் மிதமாய்மன் னுயிர்கள் எங்கும்
     உறைகின்ற தனிமுதல்வன் புதல்வன்றன் கோலத்தை உணர்ந்து போற்றி
          அறைகின்ற காவிரியைக் கண்ணுற்று நகைத்து வெகுண் டருள்கை நாடி
               உறைகின்ற கொங்குதனை ஒருவித்தென் றிசைநோக்கி யொல்லை சென்றான். ......    66

ஆகத் திருவிருத்தம் - 3116




*1. சிவஞானிகள், "மரத்தை மறைத்தது மாமத யானை" என்று திருமூலர் கூறியதுபோல்
   உலகாதிகளையும் சிவபெருமானாகவே காண்கின்றார்கள்.
   அல்லாதவர்கள் உலகாதிகளாகவே காண்கின்றார்கள்;
   ஆதலின் "உலகாய்" என்றார்.



previous padalam   27 - காவிரி நீங்கு படலம்   next padalamkAviri neenggu padalam

previous kandam   2 - அசுரகாண்டம்   next kandam2 - asura kANdam

காண்டம் - படலம் பட்டியலுக்கு அகர வரிசையில் முதற்குறிப்புக்கு செய்யுள் முதற்குறிப்பு pdf வடிவம்

kANdam - padalam List Tamil alphabetical index verse index pdf version

Kandha Puranam - The Story of Lord Murugan

Sri Kachchiappa Sivachariyar

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



   Kaumaram.com சமீபத்தில் DDOS தாக்குதலால் பாதிக்கப்பட்டது.
எனவே, படங்கள் மற்றும் ஆடியோ தற்காலிகமாக கிடைக்காது.
நான் இதை படிப்படியாக சரிசெய்ய முயற்சிக்கிறேன்.
உங்கள் பொறுமைக்கும் புரிந்துணர்வுக்கும் நன்றி. ... வலைத்தள நிர்வாகி.  




  Kaumaram.com was recently affected by DDOS attack.
As such, images and audio will be temporarily unavailable.
I am trying to correct this progressively.
Thank you for your patience and understanding. ... webmaster.  



Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

© Copyright Kaumaram dot com - 2001-2040

COMMERCIAL USE OF MATERIAL IN THIS WEBSITE IS NOT PERMITTED.

Please contact me (the webmaster), if you wish to place a link in your website.

email: kaumaram@gmail.com

Disclaimer:

Although necessary efforts have been taken by me (the webmaster),
to keep the items in www.kaumaram.com safe from viruses etc.,
I am NOT responsible for any damage caused by use of
and/or downloading of any item from this website or from linked external sites.
Please use updated ANTI-VIRUS program to rescan all downloaded items
from the internet for maximum safety and security.

[W3]