Kaumaram dot com - The Website for Lord Muruga and His Devotees

Kandha Puranam
by
Sri Kachiyappa
Sivachariyar

ஸ்ரீ கச்சியப்ப சிவாச்சாரியார்
அருளிய
கந்த புராணம்

Lord MuruganSri Kaumara Chellam

காண்டம் - படலம் பட்டியலுக்கு அகர வரிசையில் முதற்குறிப்புக்கு செய்யுள் முதற்குறிப்பு pdf வடிவம்

kANdam - padalam List Tamil alphabetical index verse index pdf version

previous kandam   2 - அசுரகாண்டம்   next kandam2 - asura kANdam

previous padalam   8 - அசுரர் யாகப் படலம்   next padalamasurar yAgap padalam

Ms Revathi Sankaran (7.49mb)
(1 - 60)



Ms Revathi Sankaran (5.93mb)
(61 - 166)




(அன்னைதன் ஏவ)

அன்னைதன் ஏவலால் அழல்ம கஞ்செய
     உன்னின் னாகியே ஒல்லை ஏகிய
          முன்னவன் இளைஞர்தம் முகத்தை நோக்கியே
               இன்னது கேண்மென இசைத்தல் மேயினான். ......    1

(அடல்கெழு பெரு)

அடல்கெழு பெருமகம் அதனை ஆற்றவே
     வடதிசை செல்வுழி மல்கு தானையின்
          கடையொடு நெற்றியில் காவ லாகியே
               படருதி ராலெனச் சூரன் பன்னினான். ......    2

(இனிதென அடி)

இனிதென அடிதொழு திளவல் தாரகன்
     அனிகம தீற்றினில் அடைவல் என்றனன்
          முனிதரு கோளரி முகத்து மொய்ம்பினான்
               தனியகல் நெற்றியிற் சார்வல் என்றனன். ......    3

(பின்னர் இருவரும்)

பின்னர் இருவரும் பேசி இத்திறம்
     முன்னவன் விடைகொடு முறையிற் போயினார்
          அன்னவர் பணியினால் ஆர்ப்புற் றேயெழீஇச்
               சென்னெறி படர்ந்தன சேனை வெள்ளமே. ......    4

வேறு

(தானவர் அனிக)

தானவர் அனிக வெள்ளந் தரைமிசைப் பெயர்த லோடும்
     மானில மடந்தை ஆற்றாள் வருந்தினள் பணிக ளோடு
          கோனுமங் கயரா நின்றான் குலவரை கரிகள் மேரு
               ஆனவுஞ் சலித்த ஆதிக மடமும் அழுங்கிற் றன்றே. ......    5

(மண்டுறு பூழி)

மண்டுறு பூழி ஈட்டம் மலரயன் உலகந் தாவி
     விண்டல மீது போதல் மேதினி அசுர வெள்ளம்
          எண்டரு நிலைமைத் தன்றால் யான்பொறுக் கல்லேன் என்னாக்
               கொண்டல்வண் ணத்த னோடு கூறுவான் சேறல் போலும். ......    6

(காழுறும் அவுணர் தானை)

காழுறும் அவுணர் தானைக் கனைகழல் துழனி முன்னர்
     ஆழியங் கடலும் நேரா ஆர்த்திடுங் கொல்லோ என்னா
          ஊழுறு சினங்கொண் டென்ன உலப்பிலா அவுணர் தாளில்
               பூழிய தெழுந்து சென்று புணரிவாய் பொத்திற் றன்றே. ......    7

(மரந்துகள் பட்ட)

மரந்துகள் பட்ட மேரு வரையெனச் சிறந்த மெய்ப்பூ
     தரந்துகள் பட்ட யாதுந் தனதெனத் தாங்கு சேடன்
          உரந்துகள் பட்ட நேரும் உயிர்துகள் பட்ட தொன்னாட்
               புரந்துகள் பட்ட தேபோல் புவிதுகள் பட்ட தன்றே. ......    8

(ஆடலின் அவுண)

ஆடலின் அவுண வெள்ளத் தரவமும் அனையர் செல்ல
     நீடிய பூழி தானும் நெறிப்பட வருத லோடும்
          நாடிய அமரர் அஞ்சி நடுக்குறா நமது வேதா
               வீடினன் கொல்லோ நீத்தம் விண்ணுறும் போலும் என்றார். ......    9

(மாசகல் திருவின்)

மாசகல் திருவின் மிக்க மாயவள் முன்னந் தந்த
     தேசுறும் அவுண வெள்ளந் திசையெலாம் அயுதம் என்னும்
          யோசனை யெல்லை யாக உம்பரி னிடத்து மற்றைக்
               காசினி யிடத்து மாகிக் கலந்துடன் தழுவிச் சென்ற. ......    10

(அஞ்சினன் அமரர்)

அஞ்சினன் அமரர் வேந்தன் அயர்ந்தனன் அங்கிப் புத்தேள்
     எஞ்சினன் வன்மை கூற்றன் இனைந்தனன் நிருதி எய்த்தான்
          தஞ்சமில் வருணன் வாயுத் தளர்ந்தனன் தனதன் சோர்ந்தான்
               நெஞ்சழிந் தன்னஈ சானன் நிருதர்பேர் அரவஞ் சூழ. ......    11

(வள்ளுறு மெயிற்று)

வள்ளுறு மெயிற்றுச் செங்கண் வலிகெழும் அவுணர் தானை
     வெள்ளம தேகப் பூழி விரிந்தெழீஇ யாண்டும் போகிப்
          பொள்ளென மெய்யே தீண்டிப் புறத்தெழில் அழித்த வானோர்
               உள்ளுணர் வழித்த தன்றே அனையர்கள் ஆர்க்கும் ஓதை. ......    12

(பேருமிவ் வவுணர்)

பேருமிவ் வவுணர் தானைப் பெருக்கின தணியின் முன்னர்
     ஆரழல் வெருவு சீற்றத் தரிமுகன் செல்லக் கூழை
          தாரக விறலோன் செல்லத் தலையளி புரிந்து நாப்பட்
               சூரனென் றுரைக்கும் வெய்யோன் துண்ணென ஏகி னானால். ......    13

வேறு

(ஆன பொழுதத் தவர்)

ஆன பொழுதத் தவர்க்கா ணியநினைந்து
     தானவர்கள் போற்றுந் தனிக்குரவன் தண்டரள
          மானமிசை யூர்ந்து வந்தணுகி வல்லவுணர்
               சேனையெனச் செல்லுந் திரைக்கடலைக் கண்ணுற்றான். ......    14

(கண்ணின்ற வீரர்)

கண்ணின்ற வீரர் கடுப்பும் பெருமிடலும்
     உண்ணின்ற காழ்ப்பும் உரனுங் கொடுந்திறலும்
          எண்ணங்கொள் வேர்வும் இகலுந் தெரிவுற்றுத்
               துண்ணென்ன நெஞ்சம் புகரும் துளக்குற்றான். ......    15

(கண்டேன் இவர்)

கண்டேன் இவர்தங் கடுந்திறலின் ஆட்சிதனைப்
     பண்டே அவுணர் அளப்பிலரைப் பார்த்துணர்வேன்
          தண்டே னிதழியான் தன்னருளின் வண்ணமோ
               உண்டே இவருக் கொருவர்நிகர் உற்றாரே. ......    16

(வானோர் இறையு)

வானோர் இறையுடனும் மாலுடனும் மற்றுள்ள
     ஏனோ ருடனும் இகலாடி வென்றிடுகை
          தானோர் பொருளோ தமையெதிர்ந்த மாற்றலர்தம்
               ஊனோ டுயிரை யொருங்குண்ணுந் தீயவர்க்கே. ......    17

(இன்னோர் தம்வன்)

இன்னோர் தம்வன்மைக் கிறுதி யிலவேனும்
     முன்னோர் தமைப்போல் முயலுந் தவவலியும்
          பின்னோர் வரமும் பெரும்படையுங் கொண்டிலரால்
               அன்னோ இவர்க்குங் குறையுண்மை ஆகியதே. ......    18

(தண்டத் திறை)

தண்டத் திறையைக் கடந்த தனியாற்றல்
     கொண்டுற் றவற்கே குறைகண் டிலம்ஏனை
          அண்டத் தவர்க்கும் அனைவர்க்கும் ஒவ்வொர்குறை
               உண்டத் தகைமை எவரும் உணர்குவரால். ......    19

(ஆதலின்இன் னோர்)

ஆதலின்இன் னோர்பால் அடைவுற் றிடும்வறுமை
     போதுசில நோன்பு புரியின் அகன்றிடுமால்
          ஈதுநிலைத் தன்றே இழிந்தோர் உயர்ந்திடுவர்
               காதி புதல்வன் இதற்குக் கரியன்றோ. ......    20

(என்னப் பலவும் இசை)

என்னப் பலவும் இசைத்துநின்று தானவர்கள்
     மன்னர்க்கு மன்னாக வாழ்வெய்து சூரபன்மன்
          முன்னுற் றிடவும் முகமன் மொழிந்திடவும்
               உன்னுற் றனனால் உணர்வுசேர் காப்பியனே. ......    21

(தீயின் திறமுரு)

தீயின் திறமுருக்குஞ் சீற்றத் தவுணன்எதிர்
     போயங் குறவும் புகன்றிடவுந் தானரிதால்
          ஏயுந் தகுவருடன் என்னுழையிற் சார்வதற்கோர்
               மாயங்கொள் விஞ்சை புரிவேன் எனமதித்தான். ......    22

(மண்ணில் உயிரை)

மண்ணில் உயிரை வசிகரிக்கும் மந்திரமொன்
     றெண்ணி விதிமுறையே நோக்கி யெதிர்சென்று
          நண்ணிய வெஞ்சேனை நரலைநடு வட்புக்கான்
               அண்ணல் அவுணற் கணித்தாய் அடைகுற்றான். ......    23

(கள்ள மிகுமவுணர்)

கள்ள மிகுமவுணர் சிந்தையெனுங் காழிரும்பா
     யுள்ள உருகி உரைகெழுமா யத்தீயின்
          எள்ள வருங்கறையும் ஏகிநயந் திட்டனவால்
               வெள்ளி மிகப்புணர்க்கின் மேலையுரு நின்றிடுமோ. ......    24

(சூழிக் கடலில்)

சூழிக் கடலில் துவன் றும்அவு ணப்படைஞர்
     காழற்ற புந்தியொடு கைதொழலும் கேசரிக்கும்
          பூழைக் கரன்றனக்கும் முன்னைப் புரவலன்முன்
               கேழுற்ற வாசி குரவன் கிளத்திடுவான். ......    25

(வாலாதி மான்தேர்)

வாலாதி மான்தேர் மகபதிக்கும் ஏனையர்க்கும்
     மேலாதி தானவர்கள் வெய்யதுயர் நோயகற்ற
          ஏலாதி யேகடுகம் என்றுரைக்கும் இன்மருந்து
               போலாதி யென்ன அவுணன் புகன்றிடுவான். ......    26

(காரையூர் கின்ற)

காரையூர் கின்ற கடவுளர்கோன் வைகலுறும்
     ஊரையோ மேலை உலகுதனில் உள்ளாயோ
          பாரையோ கட்செவிகள் பாதலத்தை யோஎந்தாய்
               யாரைநீ தேற்றேன் இவணுற்ற வாறென்னோ. ......    27

(உன்பால்என் நெஞ்)

உன்பால்என் நெஞ்சம் உருகும் அஃதன்றி
     என்பா னதும்உருகா நிற்கும் எனையறியா
          தன்பாகி நின்ற தருந்தவத்தை ஆற்றவனம்
               தன்பால் அணுகுதற்குத் தாளுமெழு கின்றிலவே. ......    28

(நன்னேயம் பூண்டு)

நன்னேயம் பூண்டு நடந்தாய் உயிரெல்லாம்
     அன்னே யெனவந் தளிக்குந் தகையாயோ
          இன்னே யுனையெதிர்ந்தேன் யாக்கை மிகவருந்தி
               முன்னே தமியேன் புரிந்ததவம் மொய்ம்பன்றோ. ......    29

வேறு

(என்றலுங் கவிஞன்)

என்றலுங் கவிஞன் கேளா இருவிசும் பாற்றிற் செல்வேன்
     உன்றனி மரபிற் கெல்லாம் ஒருபெருங் குரவ னானேன்
          நன்றிகொள் புகரோன் என்னும் நாமமுற் றுடையேன் நின்பாற்
               சென்றனன் உறுதி யொன்று தெளித்திடல் வேண்டி யென்றான். ......    30

(அவுணர்கள் முதலா)

அவுணர்கள் முதலா யுள்ளோன் ஆங்கது வினவி யாற்ற
     உவகைய னாகி எந்தாய் உய்ந்தனன் இவண்யான் என்னாக்
          கவிஞனை அணுகி நின்று கைதொழூஉப் பரவ லோடுஞ்
               சிவனருள் நெறியால் அன்னோன் இத்திறஞ் செப்ப லுற்றான். ......    31

(நூறொடர் கேள்வி சான்)

நூறொடர் கேள்வி சான்றோய் நோற்றுநீ இருக்கு மெல்லை
     ஊறுசெய் கிற்பர் ஒன்னார் உனையவை குறுகா வண்ணங்
          கூறுதுந் திறனொன் றென்னாக் கூற்றுவற் கடந்த மேலோன்
               மாறின்மந் திரம தொன்று மரபுளி வழாமல் ஈந்தான். ......    32

(மொய்கெழு கூற்றை)

மொய்கெழு கூற்றை வென்ற முதல்வன்மந் திரத்தை நல்கி
     வைகலும் இதனை யுன்னி மனத்தொடு புலனொன் றாக்கிப்
          பொய்கொலை களவு காமம் புன்மைகள் உறாமே போற்றிச்
               செய்குதி தவத்தை யென்னாச் செவியறி வுறுத்தல் செய்தான். ......    33

(அப்பரி சனைத்து)

அப்பரி சனைத்துந் தேரா அவனடி வணங்கி எந்தாய்
     இப்பணி புரிவன் என்ன எல்லைதீர் ஆசி கூறி
          மெய்ப்புகர் மீண்டு சென்றான் மேதகும் அவுணர் சூழ
               ஒப்பரு மாயை செம்மல் வடபுலத் தொல்லை போனான். ......    34

(வழிமுறை பயக்க)

வழிமுறை பயக்க நோற்கும் வடபுலந் தன்னி லேகிப்
     பழுமர வனத்தில் ஆங்கோர் பாங்கரில் குறுகிச் சூரன்
          அழல்கெழு மகத்தை யாற்ற அயுதயோ சனையுள் வைத்துச்
               செழுமதி லதுசூழ் பான்மை செய்திடச் சிந்தை செய்தான். ......    35

(அடல்கெழு தானை)

அடல்கெழு தானை யாகும் அவுணர்தங் குழுவைக் கூவிப்
     படிதனில் அடுக்கல் யாவும் பறித்தனர் கொணரு வித்து
          வடவரை நிவப்பிற் சூழ வாரியாப் புரிவித் தாங்கே
               நடுநெடு வாயில் போக்கி ஞாயிலும் இயற்று வித்தான். ......    36

(நூற்படு செவ்வி)

நூற்படு செவ்வி நாடி நொய்தென அங்கட் செய்த
     மாற்பெரு மதிலைச் சூழ வரம்பறு தானை தன்னை
          ஏற்புடை அரண மாக இயற்றுவித் தியாருஞ் செல்ல
               நாற்பெருந் திசையி னூடு நலனுற வாய்தல் செய்தான். ......    37

(பூமியும் வானும்)

பூமியும் வானும் ஒன்றப் பொருப்பினாற் புரியப் பட்டு
     நாமியம் புரிதா நின்ற நாமநீள் காப்பும் அப்பால்
          ஏமுறும் அவுண வெள்ளத் தெடுத்திடும் எயிலுஞ் சேர்ந்து
               நேமியங் கிரியுஞ் சூழ்ந்த நிசியுநேர்ந் திருந்த வன்றே. ......    38

(ஞாயிலின் வேலி)

ஞாயிலின் வேலி மான நகங்களால் அடுக்கல் செய்த
     பாயிரு நொச்சி தன்னிற் படைகுலாம் புரிசை தன்னில்
          வாயில்க டோறும் போற்ற மந்திர முறையாற் கூவி
               நேயமொ டடுபோர் மாதை நிறுவினன் நிகரி லாதான். ......    39

(ஆளரி முகத்தன்)

ஆளரி முகத்தன் முன்னோன் அடுக்கலாற் படையாற் செய்த
     நீளிகல் வாரி முன்னர் நெறிகொள்மந் திரத்தாற் கூவிக்
          கூளிகள் தொகையும் மோட்டுக் குணங்கரின் தொகையுஞ் சீற்றக்
               காளிகள் தொகையுஞ் சூழ்போய்க் காப்புற நிறுவி விட்டான். ......    40

(கயிரவ மனைய)

கயிரவ மனைய செங்கட் காளிகள் முதலோர் தம்மைச்
     செயிரற நிறுவிப் பின்னர்ச் சீர்கொள்மந் திரத்தாற் பன்னி
          அயிரற நெடிது போற்றி அவுணர்கோன் அங்கண் வந்த
               வயிரவ கணத்தை வேள்வி காத்திட வணங்கி வைத்தான். ......    41

வேறு

(தள்ளரி தாகிய)

தள்ளரி தாகிய காப்பிவை செய்திடு தனிவீரன்
     உள்ளுற ஆயிர வாயிர யோசனை யுறுநீளங்
          கொள்வதொ ராழமு மாயிட வோரோம குண்டந்தான்
               நள்ளிடை யேபுரி வித்தனன் மாமகம் நலமாக. ......    42

(ஆதித னக்கனல்)

ஆதித னக்கனல் வேள்வி இயற்றிட அடுசூரன்
     வேதித னைப்புரி வித்திடு காலையில் வியன்ஞாலம்
          பாதகர் எம்மை வருத்தினர் என்று பதைப்புற்றுப்
               பேதுற வெய்தி இரங்கி ஒடுங்கினள் பெயர்வில்லாள். ......    43

(ஆழம தாயிரம்)

ஆழம தாயிரம் யோசனை யாவவண் அகழ்செய்கை
     ஊழுற நாடிய சேடனும் ஆயிடை உறைவோருங்
          கீழுறு வார்இவண் எய்துவர் தானவர் கிளையென்னாத்
               தாழுற வேகினர் முன்னுறு தொன்னிலை தனைநீங்கி. ......    44

(ஆழ்ந்திட அம்ம)

ஆழ்ந்திட அம்மக வேதியி யற்றலும் அதுபோழ்தில்
     தாழ்ந்திடு நீத்தமெ ழுந்திட நாடிய தனிவேந்தன்
          சூழ்ந்தனர் நுங்களை உண்குவர் மீதெழல் துணிபன்றே
               போழ்ந்தனை பாதல மேகென அவ்வழி போகிற்றால். ......    45

(போதலும் அப்புனல்)

போதலும் அப்புனல் அவ்வழி கீழிடை போகின்ற
     பாதலம் ஈறெனும் ஏழ்நிலை யோரது பாராநின்
          றீதிவண் வந்துள தென்னென அற்புத வியல்எய்தாப்
               பேதுறு கின்றனர் தீங்கிது வென்று பிடித்தாராய். ......    46

(சீறரி மாமுகன்)

சீறரி மாமுகன் முன்னவ னாகிய திறன்மேலோன்
     மாறகல் குண்டம திவ்வகை நாப்பண் வகுப்பித்தே
          நூறுடன் எட்டது சூழ்தர ஆக்குபு நுவல்வேதி
               வேறுமொ ராயிர வெட்டவை சுற்ற விதிப்பித்தான். ......    47

(மூவகை வேதியும்)

மூவகை வேதியும் ஆனபின் வேள்வியை முயல்வானாய்
     ஆவதொர் பல்பொருள் வேண்டி நினைந்தனன் அருள்யாயைப்
          பாவனை பண்ணலும் அங்கது கண்டனள் பரிவெய்தித்
               தேவர்கள் தேவன தின்னரு ளால்இவை சேர்விப்பாள். ......    48

(சீயம் வயப்புலி)

சீயம் வயப்புலி யாளியொ டெண்கு திறற்கைம்மாப்
     பாய்பரி செச்சைகள் ஆதிய வாகிய பன்மாவின்
          தூய புழுக்கலின் ஊனவி நேமி தொகுப்பித்தாள்
               ஆய வுடற்குரு திக்கடல் தன்னையும் அமர்வித்தாள். ......    49

(பழிதரும் எண்ணெ)

பழிதரும் எண்ணெயெ னுங்கடல் ஓரிடை பயில்வித்தாள்
     இழுதெனும் வாரிதி தானுமொர் சாரில் இருப்பித்தாள்
          தொழுதகு பால்தயிர் நேமியும் ஓரிடை தொகுவித்தாள்
               வழிதரு மட்டெனும் வேலையும் ஓரிடை வருவித்தாள். ......    50

(ஐயவி காருறு)

ஐயவி காருறு தீங்கறி யேமுதல் அழல்காலும்
     வெய்யன பல்வளன் யாவையும் ஓர்புடை மிகுவித்தாள்
          நெய்யுறு முண்டியின் மால்வரை யோர்புடை நிறைவித்தாள்
               மையறு தொல்பசு யாவையும் ஓர்புடை வருவித்தாள். ......    51

(அரும்பெறல் நாயக)

அரும்பெறல் நாயக மாகிய வேதியின் அகல்நாப்பண்
     வரும்பரி சால்நிறு வுற்றிட மேலுயர் வடிவாகிப்
          பெரும்புவி உண்டுமிழ் கண்ண பிரான்துயில் பெற்றித்தாய்
               உரம்பெறு வச்சிர கம்பம தொன்றினை உய்த்திட்டாள். ......    52

(தெரிதரு செந்நெலி)

தெரிதரு செந்நெலின் வால்அரி யோர்புடை செறிவித்தாள்
     அரிசனம் நீவிய தண்டுல மோர்புடை அமைவித்தாள்
          மருமலர் மான்மத மாதிய ஓர்புடை வருவித்தாள்
               சுருவையும் நீடுத ருப்பையும் ஓர்புடை தொகுவித்தாள். ......    53

(ஆலமு யிர்க்கும்)

ஆலமு யிர்க்கும் வரம்பில தாருவின் அணிகொம்பர்
     வாலிதின் மெய்ச்சமி தைக்குல மாமென வரையேபோல்
          சாலமி குத்தனள் ஓர்புடை வேள்வி தனக்கென்றோர்
               பாலின்நி ரைத்தனள் கொள்கல மாகிய படியெல்லாம். ......    54

(பொன்னின் அகந்)

பொன்னின் அகந்தொறும் வெள்ளி முளைத்திடு பொருளேபோல்
     செந்நெலின் உற்றிடு தீம்பொரி யோர்புடை செறிவித்தே
          துன்னிய வெண்முதி ரைக்குல மோர்புடை தூர்த்திட்டாள்
               பின்னரும் வேண்டுவ யாவையும் நல்கினள் பெருமாயை. ......    55

(மூவகை யாயிர)

மூவகை யாயிர யோசனை எல்லையின் முரண்வேள்விக்
     காவன நல்கினள் போதலும் யாய்செய லதுநோக்கி
          ஓவிது யாரின் முடிந்திடும் வேண்டுவ உய்த்தாளே
               ஏவரு மெண்ணஇவ் வேள்வியி யற்றுவன் இனியென்றான். ......    56

(ஊன்புகு பல்வகை)

ஊன்புகு பல்வகை ஆவியும் ஈண்டிய வுலகெல்லாந்
     தான்புகு தன்விறல் காட்டிய நாட்டிய தாணுப்போல்
          மேன்புகு சூரன் நடுத்திகழ் வேதியின் மிகுநாப்பண்
               வான்புகு வச்சிர கம்பம் நிறீஇயினன் வலிதன்னால். ......    57

(வச்சிர கம்பம்)

வச்சிர கம்பம் நிறீஇயின பின்னர் மகம்போற்றும்
     நொச்சியின் நாற்றிசை வாயில் தொறுந்தொறும் நொய்திற்போய்
          அச்சுறு வீர மடந்தையை உன்னி அருச்சித்துச்
               செச்சைக ளாதிய ஊன்பலி நல்குபு செல்கின்றான். ......    58

வேறு

(செல்லுஞ் சூரன்)

செல்லுஞ் சூரன் நொச்சியின் நாப்பட் செறிகின்ற
     கல்லென் வெஞ்சொற் பூதர் தொகைக்குங் கணமென்றே
          சொல்லும் பேயின் பல்குழு வுக்குஞ் சோர்வின்றி
               ஒல்லும் பான்மை ஊன்பலி யாவையும் உதவுற்றான். ......    59

(சீற்றத் துப்பிற்)

சீற்றத் துப்பிற் காளிக ளுக்குந் தென்பாலில்
     கூற்றைக் காயும் வயிரவர் தங்கள் குழுவுக்கும்
          ஏற்றத் தோடும் அர்ச்சனை செய்தே யினிதாகப்
               போற்றிப் போற்றி ஊன்பலி வேண்டுந புரிகுற்றான். ......    60

(சூழாம் எட்டே)

சூழாம் எட்டே யாயிர வேதி தொறுநாப்பட்
     காழார் நஞ்சின் இந்தனம் இட்டுக் கனல்மூட்டித்
          தாழா மேதன் தம்பிய ரோடுந் தகுசூரன்
               ஊழால் நாடுற் றூனவி வர்க்க முறநேர்ந்தான். ......    61

(நேருந் தோறும்)

நேருந் தோறும் எந்தைதன் நாம நெறிசெப்பிச்
     சேரும் அன்பா லன்ன தவன்பாற் செலவுய்த்துச்
          சூரன் பின்னர் இம்மகம் ஆற்றுந் தொழில்வல்லோன்
               ஆரென் றுன்னித் தாரக னைப்பார்த் தறைகின்றான். ......    62

(ஏற்றஞ் சேரி)

ஏற்றஞ் சேரிவ் வேதிகள் தோறும் இறைதாழா
     தூற்றங் கொண்டே ஏகினை வேள்வி யுலவாமல்
          ஆற்றுந் தன்மை வல்லவன் நீயே அதுவல்லே
               போற்றிங் கென்னாக் கூறி நிறுத்திப் போகுற்றான். ......    63

(அப்பா லேகி நூறு)

அப்பா லேகி நூறுடன் எட்டாம் அகல்வேதி
     துப்பா லெய்தி முன்னவை யேபோல் தொடர்வேள்வி
          தப்பா தாற்றிச் சீய முகத்தோன் றனைநோக்கி
               இப்பா லுற்றிம் மாமகம் ஆற்றாய் இனிதென்றான். ......    64

வேறு

(தெரிய இன்னண)

தெரிய இன்னணஞ் செப்பி அவுணர்கோன்
     அரியின் மாமுகத் தானை அவண்நிறீஇப்
          பெரிது நள்ளுறு பெற்றியிற் செய்ததன்
               உரிய வேதியின் ஒல்லையின் மேவினான். ......    65

(வேதி யெய்தி)

வேதி யெய்தி விதியுளி அர்ச்சனை
     யாது மோர்குறை இன்றியி யற்றியே
          மாதொர் பங்குடை வள்ளலை உன்னியோர்
               ஏதில் வேள்வி இயற்றுதல் மேயினான். ......    66

(நஞ்சு பில்கு)

நஞ்சு பில்கு நவையுடைத் தாருவின்
     விஞ்சு சாகை வியன்துணி யாவையும்
          புஞ்ச மோடு பொருக்கென வேதியில்
               துஞ்சி டும்வகை சூரனுந் தூவினான். ......    67

(ஆல மாகி அமர்)

ஆல மாகி அமர்தரு வின்ஞெலி
     கோலின் ஆக்கிய கொந்தழ லிட்டுமுன்
          ஏல மூட்டி இழுதெனு மாமழை
               சீல மந்திரத் தோடு சிதறினான். ......    68

(அன்ன தற்பினர் அம்பொ)

அன்ன தற்பினர் அம்பொற் குழிசிகள்
     துன்னு கின்ற துணிபடும் ஊன்தொகை
          வன்னி யின்கண் மரபின்நின் றுய்த்தனன்
               செந்நி றக்குரு திக்கடல் சிந்தியே. ......    69

(செய்ய தோர்மக)

செய்ய தோர்மகச் செந்தழல் மீமிசைத்
     துய்ய ஓதனஞ் சொன்முறை தூர்த்தனன்
          நெய்யும் எண்ணெயும் நீடிய சோரியும்
               வெய்ய பாலுந் ததியும் விடுத்துமேல். ......    70

(மேன சாலியின்)

மேன சாலியின் வெண்பொரி யின்குவை
     ஆன நல்கி அழிதரும் ஈற்றினில்
          வானு லாய மறிகட லாமெனத்
               தேனும் ஆலியுந் தீமிசைச் சிந்தியே. ......    71

(தோரை ஐவன)

தோரை ஐவனஞ் சூழ்தடத் துற்றநீ
     வாரம் ஏனல் இறுங்கொடு மற்றவும்
          மூரி யெள்ளு முதிரையின் வர்க்கமுஞ்
               சேர வுய்த்தனன் நெய்க்கடல் சிந்தினான். ......    72

(கொடிய ஐய)

கொடிய ஐயவி கூர்கறி யாதியாப்
     படியில் வெய்ய பலபொருள் யாவையும்
          நெடிதும் ஓச்சினன் நேயம தாகிய
               கடலை வன்னி கவிழ்த்தன னென்பவே. ......    73

(இன்ன பல்வகை யாவு)

இன்ன பல்வகை யாவும் இயல்பினாற்
     பொன்னு லாஞ்சடைப் புண்ணியன் றன்னையே
          முன்னி வேள்வி முயன்றனன் ஞாலமேல்
               துன்னு சீர்த்தியன் சூரபன் மாவென்பான். ......    74

வேறு

(சூர னாமவன்)

சூர னாமவன் அவ்வழிப் பெருவளஞ் சுட்டி
     வீர வேள்வியை வேட்டலுஞ் செந்தழல் விரைவின்
          ஆரும் அச்சுற வெழுந்துமீச் சென்றன அடுதீப்
               பாரை நுங்கிவா னுலகெலாம் உணவெழும் பரிசின். ......    75

(வானம் புக்கது)

வானம் புக்கது மாதிரம் புக்கது மலரோன்
     தானம் புக்கதெவ் வுலகமும் புக்கது தரைக்கீழ்
          ஏனம் புக்குமுன் நாடருங் கழலினாற் கியற்றுங்
               கானம் புக்கதோர் வேள்வியின் எழுங்கொழுங் கனலே. ......    76

(பானு வின்பத)

பானு வின்பதஞ் சுட்டது பனிமதி பதமும்
     மீனெ னும்படி நின்றவர் பதங்களும் மேலோர்
          போன மேக்குயர் பதங்களுஞ் சுட்டது புலவோர்
               கோனு றும்பதஞ் சுட்டது வேள்வியிற் கொடுந்தீ. ......    77

(செற்று வாசவன்)

செற்று வாசவன் பதந்தனைச் சுட்டபின் சேண்போய்
     மற்றை மேலவர் பதமெலாஞ் சுட்டது மருங்கில்
          சுற்று பாலர்தம் புரங்களுஞ் சுட்டது சூரன்
               அற்ற மில்வகை ஆற்றிய வேள்வியுள் அனலே. ......    78

(காலம் எண்ணில)

காலம் எண்ணில தவம்புரி காசிப முனிவன்
     பாலன் ஈண்டையில் வலியினோர் மகமது பயில
          ஏல நீடுதீ யுலகெலாம் முருக்கிய தென்னில்
               மேல வன்செயும் பரிசெலாம் யாவரே விதிப்பார். ......    79

(கார்ம றைத்தன)

கார்ம றைத்தன கதிர்மதி மறைத்தன கரியோன்
     ஊர்ம றைத்தன அயன்பதம் மறைத்தன உலவா
          நீர்ம றைத்தன நெருப்பையும் மறைத்தன நீடும்
               பார்ம றைத்தன இடையிடை யெழும்புகைப் படலை. ......    80

(சொற்ற வேதி)

சொற்ற வேதிஇவ் வியற்கையால் எரிந்தது சூரன்
     பிற்றை யோர்கள்தம் எட்டுநூ றாயிரபேதம்
          உற்ற வேதிகள் யாவையும் எரிந்தன ஒருங்கே
               முற்றும் வன்னிகள் இறுதிநாள் உலகின்மொய்த் தெனவே. ......    81

(வேள்வி இத்திற)

வேள்வி இத்திறஞ் சூர்புரி தன்மையை விரைவில்
     கேள்வி யாலுணர் இந்திரன் அச்செயற் கேடு
          சூழ நாடினன் முடிப்பருந் தன்மையில் துளங்கி
               ஆழ்வ தோர்துயர்க் கடலிடை அழுந்தினன் அயர்ந்தே. ......    82

(சூன்மு கக்கொண்ட)

சூன்மு கக்கொண்டல் மேனியும் முனிவரர் தொகையும்
     நான்மு கத்தனுஞ் சூரபன் மன்செயல் நாடிப்
          பான்மை மற்றிது யாவரே புரிவர்இப் பதகன்
               மேன்மை பெற்றிட முயன்றனன் கொல்லென வெருண்டார். ......    83

(இந்த வண்ணத்தின்)

இந்த வண்ணத்தின் ஒருபதி னாயிரம் யாண்டு
     முந்து சூர்தன திளைஞரோ டருமகம் முயல
          அந்தி வார்சடைக் கண்ணுதல் நின்மலன் அவன்பால்
               வந்தி லானது தேர்ந்தனன் நிருதர்கோன் மாதோ. ......    84

(கண்ணு தற்பரன்)

கண்ணு தற்பரன் அருள்செயாத் தன்மையை கருத்தில்
     எண்ணி இச்செயற் குறுவனோ சிவனென இசையாப்
          பண்ணு மத்தொழில் பின்னவர் தங்கள்பாற் பணித்து
               விண்ண கத்தின்மீச் சென்றனன் கடவுளர் வெருவ. ......    85

(வான கத்திடை)

வான கத்திடை நிற்புறு சூரபன் மாவாந்
     தான வர்க்கிறை வாள்கொடே ஈர்ந்துதன் மெய்யின்
          ஊன னைத்தையும் அங்கிமேல் அவியென ஓச்சிச்
               சோனை யொத்ததன் குருதியை இழுதெனச் சொரிந்தான். ......    86

(சோரி நெய்யவா)

சோரி நெய்யவா ஊன்களே அவியவாச் சூரன்
     வீர மாமகம் புரிவுழித் தனதுமெய்ம் மிசையூன்
          ஈர ஈரவே முன்னையின் வளர்தலும் இதுகண்
               டாரும் அச்சுறத் தெழித்தனன் விம்மித மானான். ......    87

(சிந்தை யிற்பெரு)

சிந்தை யிற்பெரு மகிழ்ச்சிய னாகியிச் செய்கை
     எந்தை யற்புறு நிலையதோ வெனமனத் தெண்ணா
          மந்த ரப்புய நிருதர்கோன் பின்னும்அம் மரபால்
               அந்த ரத்திடைத் தசைப்பெரு வேள்வியை அயர்ந்தான். ......    88

(ஆண்டொ ராயிரம்)

ஆண்டொ ராயிரம் இம்மகம் அந்தரத் தியற்ற
     நீண்ட மாலுடன் நான்முகன் தேடரும் நிமலன்
          ஆண்டும் வந்திலன் சூரன்அத் தன்மைகண் டழுங்கி
               மாண்டு போவதே இனிக்கட னெனமனம் வலித்தான். ......    89

(உன்னி இத்திற)

உன்னி இத்திறஞ் சூரபன் மாவெனும் ஒருவன்
     வன்னி சுற்றிய ஆதிகுண் டத்திடை வதிந்து
          செந்நி றத்ததாய் ஆணையால் அங்கியிற் சிதையாக்
               கொன்னு னைத்தலை வச்சிர கம்பமேற் குதித்தான். ......    90

(கடிதின் உச்சி)

கடிதின் உச்சிநின் றுருவியே வச்சிர கம்பத்
     தடித னிற்சென்று சூரபன் மாவெனும் அவுணன்
          படிவ முற்றுநுண் துகளுற உளம்பதை பதைத்து
               முடிய மற்றது கண்டனன் மடங்கல்மா முகத்தோன். ......    91

(கண்ட காலையின்)

கண்ட காலையின் உளம்பதை பதைத்தது கண்கள்
     மண்டு சோரிநீர் கான்றன கரங்களும் வாயுங்
          குண்ட வேள்வியில் தொழில்மறந் திட்டன குறிப்போர்
               உண்டு போலுமென் றையுற ஒதுங்கிய துயிரே. ......    92

(துயர்ப்பெ ருங்கடல்)

துயர்ப்பெ ருங்கடல் நடுவுற ஆழ்ந்துதொல் லுணர்ச்சி
     அயர்த்து மால்வரை யாமென மறிந்தனன் அறிவு
          பெயர்த்தும் வந்துழிப் பதைபதைத் தலமந்து பெரிதும்
               உயிர்த்து வாய்திறந் தன்னவன் புலம்புதல் உற்றான். ......    93

வேறு

(மாயை தரும்புதல்)

மாயை தரும்புதல்வா மாதவஞ்செய் காசிபற்கு
     நேய முருகா நிருதர் குலத்திறைவா
          காயமுடன் நின்னையான் காணேனால் எங்கொளித்தாய்
               தீய மகம்பலநாட் செய்துபெற்ற பேறிதுவோ. ......    94

(தாயுந் தலையளி)

தாயுந் தலையளிக்குந் தந்தையுநீ தானவரை
     ஆயுந் தலைவனும்நீ ஆவியும்நீ என்றிருந்தோய்
          நீயங் கதனை நினையா திறந்தனையே
               மாயுஞ் சிறியோர்க்கு மற்றிங்கோர் பற்றுண்டோ. ......    95

(வீரனே தானவர்)

வீரனே தானவர்க்குள் மிக்கோனே மிக்கபுகழ்ச்
     சூரனே நின்போல் தொடங்கிஇந்த வேள்விதனை
          ஆரனே கம்வைகல் ஆற்றினார் ஆற்றியநீ
               ஈரநே யங்கொள்ளா தெம்மைஅகன் றேகினையே. ......    96

(நின்கண் அருளி)

நின்கண் அருளில்லா நீர்மையுண ராய்பன்னாட்
     புன்கண் உறுவாய் புரமூன்று முன்னெரித்த
          வன்க ணரைக்குறித்தே மாமகஞ்செய் தாய்அதற்கோ
               உன்கண் உளதாம் உயிர்தனையுங் கொண்டனரே. ......    97

(உன்போல் உயிர்)

உன்போல் உயிர்விட் டுயர்மகஞ்செய் தோரும்அரன்
     தன்போல் அருளாத் தகைமையரும் ஆங்கவைகண்
          டென்போல் உயிர்கொண் டிருந்தோரும் இல்இவருள்
               வன்போ டியமனத்து வன்கண்ணர் ஆர்ஐயா. ......    98

(ஈசன் அருளால் எரி)

ஈசன் அருளால் எரிவேள் வியைஓம்பிப்
     பேசரிய வன்மைதனைப் பெற்று நமதுயிரும்
          ஆசில் வளனும் அகற்றுவரென் றேயயர்ந்த
               வாசவனும் இன்றோ மனக்கவலை தீர்ந்ததுவே. ......    99

(எல்லாரும் போற்ற)

எல்லாரும் போற்ற எரிவேள் வியைஓம்பிப்
     பல்லா யிரநாட் பழகி எமக்குமிது
          சொல்லா திறந்தாய் துணைவராய் நம்முடனே
               செல்லார் இவரென்று சிந்தைதனிற் கொண்டனையோ. ......    100

(ஈண்டாருங் காண)

ஈண்டாருங் காண எரியினிடைத் தம்பமிசை
     வீண்டாய் உயிர்போய் விளிந்தாய் மிகும்வன்கண்
          பூண்டாய்நின் மெய்யும் ஒளித்தாய் புலம்புமியாம்
               மாண்டாலும் உன்றன் மதிவதனங் காண்போமோ. ......    101

(என்றின் னனசொற்)

என்றின் னனசொற் றிரங்கி அரிமுகத்தோன்
     முன்றன்னை நல்கி முலையளிக்குந் தாய்காணாக்
          கன்றென்ன வீழ்ந்தழுங்கக் கண்டதனைத் தாரகனுங்
               குன்றென்னத் தன்கை குலைத்தரற்றி வீழ்ந்தனனே. ......    102

(வீழ்ந்தான் உயிர்)

வீழ்ந்தான் உயிர்த்தான்அவ் வேள்விக் களமுற்றுஞ்
     சூழ்ந்தான் புரண்டான் துளைக்கையி னால்நிலத்தைப்
          போழ்ந்தா னெனவே புடைத்தான் துயர்க்கடலுள்
               ஆழ்ந்தான்விண் ணஞ்ச அரற்றினான் தாரகனே. ......    103

(சிங்க முகனு)

சிங்க முகனுந் திறல்கெழுவு தாரகனுந்
     தங்கண் முதல்வன் தவறுற் றதுநோக்கி
          அங்கண் அரற்ற அதுகண்ட தானவர்கள்
               பொங்குங் கடல்போல் பொருமிப் புலம்பினரே. ......    104

(தாரகனுஞ் சீயத்)

தாரகனுஞ் சீயத் தனிவீ ரனும்அவுணர்
     ஆரும் நெடிதே அரற்றும் ஒலிகேளாச்
          சீரில் வியனுலகில் தேவர்கோன் தன்னொற்றால்
               சூரன் மகத்தீயில் துஞ்சு செயல்உணர்ந்தான். ......    105

(தண்டார் அகல)

தண்டார் அகலச் சதமகத்தோன் தானவர்கோன்
     விண்டா னெனவே விளம்புமொழி கேளா
          அண்டா மகிழ்ச்சியெனும் ஆர்கலியிற் பேரமுதம்
               உண்டா னெனவேதன் உள்ளங் குளிர்ந்தனனே. ......    106

(சிந்தை குளிர்ந்து)

சிந்தை குளிர்ந்து செறியுமுரோ மஞ்சிலிர்த்து
     முந்து துயர முழுதுந் தொலைத்தெழுந்து
          வந்து புடைசூழும் வானோ ருடன்கடவுள்
               தந்தி மிசையெய்தித் தனதுலகம் நீங்கினனே. ......    107

(பொன்னுகம் நீங்கி)

பொன்னுகம் நீங்கிப் புரைதீர் மதிக்கடவுள்
     தன்னுலகம் நீங்கித் தபனன் பதங்கடந்து
          துன்னும் அவுணர் துயருஞ் செயல்காண்பான்
               மின்னுலவு மேக வியன்பதத்தில் வந்தனனே. ......    108

(விண்ணாடர் தங்க)

விண்ணாடர் தங்களுடன் வேள்விக் கிறைவிசும்பின்
     நண்ணா மகிழா நகையாத்தன் நற்றவத்தை
          எண்ணா வியவா இரங்கும் அவுணர்தமைக்
               கண்ணார நோக்கிக் களிப்புற்று நின்றனனே. ......    109

(நின்றதொரு காலை)

நின்றதொரு காலை நிருத ருடன்அரற்றித்
     துன்றுதுயர் மூழ்கிச் சோர்கின்ற சீயமுகன்
          நன்றெனுயிர் போக நானிருப்ப தேயிங்ஙன்
               என்று கடிதுமனத் தெண்ணி எழுந்தனனே. ......    110

(அன்ன திறல்அவு)

அன்ன திறல்அவுணன் ஆயிரமென் றுள்ளஅகன்
     சென்னிபல வுந்தனது செங்கைவா ளால்ஈர்ந்து
          முன்னம் முதல்வன் முயன்ற பெருவேள்வி
               வன்னி அதனுள் மறம்பேசி இட்டனனே. ......    111

(ஈர்ந்து தலைகள்)

ஈர்ந்து தலைகள் எரியில் இடுமுன்னர்ச்
     சேர்ந்த வனையான் சிரங்கள் அவைமுழுதும்
          பேர்ந்தும் அரிந்து பிறங்கு தழலினிடை
               நேர்ந்து தனிநின்றான் நிருதர்க் கிறையோனே. ......    112

(முன்னோன் எழுந்து)

முன்னோன் எழுந்து முயலுஞ் செயல்நோக்கிப்
     பின்னோன் தனது பெருஞ்சிரமுந் தான்கொய்து
          மன்னோன் மகமியற்றும் வான்தழலி னுள்ளிட்டான்
               அன்னோ வெனவே அவுணர் குழுஇரங்க. ......    113

(சென்னி தனையரி)

சென்னி தனையரிந்து செந்தழலின் நாப்பணிடு
     முன்ன மதுபோல வேறே முளைத்தெழலும்
          பின்னும் அனையான்அப் பெற்றிதனை யேபுரிய
               அன்ன படிகண்ட அவுணர் தமிற்சிலரே. ......    114

(தங்கள் சிரமுந்)

தங்கள் சிரமுந் தனிவாளி னால்துணியா
     அங்கி மிசையிட்டும் அதன்கண் உறவீழ்ந்தும்
          அங்கி உயிரதனை மாற்றிடலுஞ் சூரன்போல்
               சிங்க முகனும்எரி செல்லத் துணிந்தனனே. ......    115

(மோனத்தின் வேள்வி)

மோனத்தின்*1 வேள்வி முயன்றதொரு முன்னவன்போல்
     வானத் தெழுவான் வலித்துமனங் கொண்டிடலுங்
          கானக் கடுக்கை கலைமதிசேர் செய்யசடை
               ஞானப் பொடி*2 புனையும் நாதனது கண்டனனே. ......    116

ஆகத் திருவிருத்தம் - 2426




*1. மோனம் - மௌனம்.

*2. ஞானப்பொடி - விபூதி.



previous padalam   8 - அசுரர் யாகப் படலம்   next padalamasurar yAgap padalam

previous kandam   2 - அசுரகாண்டம்   next kandam2 - asura kANdam

காண்டம் - படலம் பட்டியலுக்கு அகர வரிசையில் முதற்குறிப்புக்கு செய்யுள் முதற்குறிப்பு pdf வடிவம்

kANdam - padalam List Tamil alphabetical index verse index pdf version

Kandha Puranam - The Story of Lord Murugan

Sri Kachchiappa Sivachariyar

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



   Kaumaram.com சமீபத்தில் DDOS தாக்குதலால் பாதிக்கப்பட்டது.
எனவே, படங்கள் மற்றும் ஆடியோ தற்காலிகமாக கிடைக்காது.
நான் இதை படிப்படியாக சரிசெய்ய முயற்சிக்கிறேன்.
உங்கள் பொறுமைக்கும் புரிந்துணர்வுக்கும் நன்றி. ... வலைத்தள நிர்வாகி.  




  Kaumaram.com was recently affected by DDOS attack.
As such, images and audio will be temporarily unavailable.
I am trying to correct this progressively.
Thank you for your patience and understanding. ... webmaster.  



Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

© Copyright Kaumaram dot com - 2001-2040

COMMERCIAL USE OF MATERIAL IN THIS WEBSITE IS NOT PERMITTED.

Please contact me (the webmaster), if you wish to place a link in your website.

email: kaumaram@gmail.com

Disclaimer:

Although necessary efforts have been taken by me (the webmaster),
to keep the items in www.kaumaram.com safe from viruses etc.,
I am NOT responsible for any damage caused by use of
and/or downloading of any item from this website or from linked external sites.
Please use updated ANTI-VIRUS program to rescan all downloaded items
from the internet for maximum safety and security.

[W3]