Kaumaram dot com - The Website for Lord Muruga and His Devotees

Kandha Puranam
by
Sri Kachiyappa
Sivachariyar

ஸ்ரீ கச்சியப்ப சிவாச்சாரியார்
அருளிய
கந்த புராணம்

Lord MuruganSri Kaumara Chellam

காண்டம் - படலம் பட்டியலுக்கு அகர வரிசையில் முதற்குறிப்புக்கு செய்யுள் முதற்குறிப்பு pdf வடிவம்

kANdam - padalam List Tamil alphabetical index verse index pdf version

 முதல் காண்டத்திற்கு   next kandam

previous padalam   4 - ஆற்றுப் படலம்   next padalamAatRuppadalam

Ms Revathi Sankaran (4.38mb)




(செக்கரஞ் சடை)

செக்கரஞ் சடைமுடிச் சிவனுக் கன்பராய்த்
     தக்கவ ரறிஞர்க டவத்தர் செல்வராய்த்
          தொக்கவர் யாரும்வாழ் தொண்டை நாட்டினின்
               மிக்கதோ ரணியிய லதுவி ளம்புகேன். ......    1

(சுந்தர மாயவன்)

சுந்தர மாயவன் றுயிலு மாழிபோல்
     இந்திர னூர்முகி லியாவு மேகியே
          அந்தமில் கடற்புன லருந்தி யார்த்தெழீஇ
               வந்தன வுவரியின் வண்ண மென்னவே. ......    2

(பார்த்தெனதுலக)

பார்த்தென துலகடும் பரிதி யென்னொடும்
     போர்த்தொழில் புரிகெனப் பொங்கு சீற்றத்தால்
          வேர்த்தெனப் பனித்துவெள் ளெயிறு விள்ளநக்
               கார்த்தென வேதடித் தசனி கான்றவே. ......    3

(சுந்தர வயிரவ)

சுந்தர வயிரவத் தோன்றன் மீமிசைக்
     கந்தடு களிற்றுரி கவைஇய காட்சிபோல்
          முந்துறு சூன்முகில் முழுது முற்றுற
               நந்தியம் பெருவரை மீது நண்ணிய. ......    4

வேறு

(வாரை கான்ற)

வாரை கான்றநித் திலமென வாலிகண் மயங்கச்
     சீரை கான்றிடு தந்திரி நரம்பெனச் செறிந்த
          தாரை கான்றவோ ரிருதுவி னெல்லையுந் தண்பால்
               வீரை கான்றிடு தன்மைய தாமென மேகம். ......    5

(பூட்டுகார் முகந்)

பூட்டு கார்முகந் தன்னொடுந் தோன்றிய புயல்வாய்
     ஊட்டு தண்புன னந்தியங் கிரிமிசை யுகுத்தல்
          வேட்டு வக்குலத் திண்ணனார் மஞ்சனம் விமலற்
               காட்டு கின்றதோர் தனிச்செயல் போன்றுள தன்றே. ......    6

(கல்லென் பேரிசை)

கல்லென் பேரிசைப் புனன்மழை பொழிதலாற் கானத்
     தொல்லும் பேரழல் யாவையு மிமைப்பினி லொளித்த
          வெல்லுந் தீஞ்சல மருவுமிக் காருக்கு வியன்பார்
               செல்லுங் காலையி லங்கண்வீற் றிருப்பரோ தீயோர். ......    7

(தேக்கு தெண்டி)

தேக்கு தெண்டிரைப் புணரிநீர் வெம்மையைச் சிந்தி
     ஆக்கி வாலொளி யுலகில்விட் டேகலால் அடைந்தோர்
          நீக்க ரும்வினை மாற்றிநன் னெறியிடைச் செலுத்திப்
               போக்கின் மேயின தேசிகர்ப் பொருவின புயல்கள். ......    8

(கழிந்த பற்றுடை)

கழிந்த பற்றுடை வசிட்டன திருக்கையாக் கவிஞர்
     மொழிந்த நந்தியம் பெருவரை மொய்த்தசூல் முகில்கள்
          பொழிந்த சீதநீர் பொற்புறு சாடியிற் பொங்கி
               வழிந்த பாலெனத் திசைதொறு மிழிந்தன மன்னோ. ......    9

(சீலமேதகு பகீரதன்)

சீல மேதகு பகீரதன் வேண்டலுஞ் சிவன்றன்
     கோல வார்சடைக் கங்கையம் புனலினைக் குன்றின்
          மேலை நாள்விட வந்தென நந்திவீழ் விரிநீர்
               பாலி யாறெனும் பெயர்கொடு நடந்தது படிமேல். ......    10

(வாலிதாகிய)

வாலி தாகிய குணத்தினன் வசிட்டனென் றுரைக்குஞ்
     சீல மாமுனி படைத்ததோர் தேனுவின் றீம்பால்
          சால நீடியே தொல்லைநாட் படர்ந்திடு தன்மைப்
               பாலி மாநதிப் பெருமையான் பகர்வதற் கெளிதோ. ......    11

(எய்யும் வெஞ்சிலை)

எய்யும் வெஞ்சிலைப் புளிஞரை எயிற்றியர் தொகையைக்
     கைய ரிக்கொடு வாரியே சிறுகுடி கலக்கித்
          துய்ய சந்தகில் பறித்துடன் போந்தது தொன்னாள்
               வெய்ய சூர்ப்படை வான்சிறை கவர்ந்துமீண் டதுபோல். ......    12

(காகபந்தரிற்)

காக பந்தரிற் கருமுகிற் காளிமங் கஞலும்
     மாக நீள்கரி யாவையுங் குழுவொடும் வாரிப்
          போகன் மேயின மேற்றிசைப் புணரியுண் டமையா
               மேக ராசிகள் குணகடல் மீதுசெல் வனபோல். ......    13

(குவட்டு மால்கரி)

குவட்டு மால்கரிக் குருகுதே ரரிபுலிக் குவையுண்
     டுவட்டி யுந்திடு திரைப்புனல் மதூகநல் லுழிஞ்சில்
          கவட்டி னோமைசாய்த் தாறலை கள்வரூர் கலக்கித்
               தெவிட்டி வந்தது பாலையுட் கொண்டிடு செருக்கால். ......    14

(காலை வெம்பகல்)

காலை வெம்பகல் கதிரவன் குடதிசைக் கரக்கும்
     மாலை யாமம்வை கறையெலாஞ் செந்தழல் வடிவாய்
          வேலை யும்பரு கியவெழும் வெம்மைபோய் விளிந்து
               பாலை காண்கிலா வாரியின் பெருமையார் பகர்வார். ......    15

(குல்லை மாலதி)

குல்லை மாலதி கொன்றைகா யாமலர்க் குருந்து
     முல்லை சாடியே யானிரை முழுவது மலைத்து
          மெல்ல மற்றவை நீந்தலுங் கரைக்கண்விட் டுளதால்
               தொல்லை மாநதி யான்வழித் தோன்றிய தொடர்பால். ......    16

(சுளையுடைப்பல)

சுளையு டைப்பல வாசினி பூகமாந் துடவை
     உளைம லர்ச்சினை மருதமோ டொழிந்தன பிறவுங்
          களைத லுற்றுமாட் டெறிந்தது கண்ணகன் குடிஞை
               அளவின் மிக்குறு பாணிபெற் றதற்கவை யரிதோ. ......    17

(இலைவி ரித்துவெண்)

இலைவி ரித்துவெண் சோறுகால் கைதையு மெழுதுங்
     கலைவி ரித்திடு பெண்ணையுங் களைந்திடுங் களைபோய்
          அலைவி ரித்திடு கடல்புக வொழுகுமா றனந்தன்
               தலைவி ரித்துழி யுடனெளித் தன்னதோர் தகைத்தால். ......    18

(கொங்குலா மலர்)

கொங்கு லாமலர்க் கொன்றைகூ விளைகுர வுழிஞை
     பொங்கு மாசுணந் தாதகி பாடலம் புன்னை
          துங்க மார்திருத் தலைமிசைக் கொண்டுறுந் தொடர்பால்
               எங்க ணாயகன் றன்னையு மொத்ததவ் விருநீர். ......    19

(கொலை கொள்வேன்)

கொலைகொள் வேன்மற வீரர்த மிருக்கையிற் குறுகாச்
     சிலையும் வாளொடு தண்டமுந் திகிரிவான் படையும்
          நிலவு சங்கமுங் கொண்டுசென் றடல்புரி நீரால்
               உலக மேழையு முற்பக லயின்றமா லொக்கும். ......    20

(தேன் குலாவிய)

தேன்கு லாவிய மலர்மிசைப் பொலிதரு செயலால்
     நான்க வாமுகந் தொறுமறை யிசையொடு நணுகிக்
          கான்கு லாவிய கலைமரை மான்றிகழ் கவினால்
               வான்கு லாமுல களிப்பவ னிகர்க்குமால் வாரி. ......    21

(மீது போந்திரி)

மீது போந்திரி சங்கைவிண் ணிடையின்மீ னோடும்
     போத லாயுற வீசலாற் சலமிகும் புலனால்
          தீதின் மாக்களைச் செறுத்தலா லளித்திடுஞ் செயலாற்
               காதி காதல னிகர்க்குமாற் கன்னிமா நீத்தம். ......    22

(தெழித்த மால்கரி)

தெழித்த மால்கரி யினங்கட மெயிற்றினாற் சிதையக்
     கிழித்த பேரிறால் சொரிந்ததேன் கிரியுள வெல்லாங்
          கொழித்து வந்துற வணைதரும் பாலியின் கொள்கை
               சுழித்த நீர்க்கங்கை யமுனையைக் கலந்தெனத் தோன்றும். ......    23

(சங்க மார்ந்திடத்)

சங்க மார்த்திடத் திரையெழ நதியுறுந் தகைமை
     அங்கம் வெம்பினை பனிக்கதி ரல்லைநீ யழலோய்
          இங்கு வாதிளைத் தேகுதி யெனக்கர மெடுத்தே
               பொங்கும் வாய்விடா விரவியை விளிப்பது போலும். ......    24

(வேதமே முதல்)

வேத மேமுதல் யாவையு முணர்கினு மேலாம்
     ஆதி வானவன் கறைமிடற் றிறையென வறியாப்
          பேதை மாக்கட முணர்வென வலைந்து பேர்கின்ற
               சீத நீரெலாந் தெளிதலின் றாயது சிறிதும். ......    25

(செம்பொன் மால்)

செம்பொன் மால்வரை யல்லன கிரிகளுந் திசையும்
     உம்பர் வானமுந் தரணியுந் துளங்கவந் துறலால்
          எம்பி ரான்முனம் வருகென நதிகளோ டெழுந்த
               கம்பை மாநதி யொத்தது கரைபொரு பாலி. ......    26

(உதிருகின்ற சிற்று)

உதிரு கின்றசிற் றுண்டிகொண் டொலிபுனற் சடைமேல்
     மதுரை நாயகன் மண்சுமந் திட்டமா நதியின்
          முதிரு முத்தமிழ் விரகன தேடென மொய்ம்மீன்
               எதிர்பு குந்திடப் போவது பாலியா மியாறு. ......    27

வேறு

(மாசறத் துளங்கு)

மாசறத் துளங்கு துப்பு மரகதத் திடைவந் தென்னப்
     பாசடை நடுவட் பூத்த பங்கயத் தடாகம் யாவுந்
          தேசுடைத் தரங்க நீத்தச் செலவினாற் சிதைந்த மன்னோ
               பேசிடிற் சிறுமை யெல்லாம் பெருமையா லடங்கு மன்றே. ......    28

(வளவயன் மருத)

வளவயன் மருத வைப்பின் வாவியங் கமலம் யாவுங்
     கிளையொடும் பறித்து வாரிக் கேழுறப் பொலிந்த தோற்றம்
          விளைதரு பகையிற் றோலா வெவ்வழற் சிறுமை நோக்கிக்
               களைதலைப் புரிந்து பற்றிப் பெயர்ந்தெனக் காட்டிற் தன்றே. ......    29

(திரைகட னீத்த)

திரைகட னீத்தங் கொண்மூ வினத்தொடு சேண்போய் நோக்கித்
     தரையிடை யிழிந்து சென்று தன்பொருள் கொடுபோந் தென்னப்
          பரதவ ரளவர் வாரிப் படுத்தமீ னுப்பின் குப்பை
               இருபுடை யலைத்து வௌவி யேகிய தெறிநீர்ப் பாலி. ......    30

(பாரிடை யினைய)

பாரிடை யினைய பண்பிற் படர்ந்திடு பாலி யந்தத்
     தாருயி ரனைத்துந் தத்த மருவினைக் கமைத்த நீராற்
          சேருறு கதிக ளென்ன*1 மரபினிற் றிறமே யென்னத்
               தாருவின் கிளைக ளென்னத் தனித்தனி பிரிந்த தன்றே. ......    31

(கால்கிளர் கின்ற)

கால்கிளர் கின்ற நீத்தங் கவிரிதழ்க் கலசக் கொங்கைச்
     சேல்கிளர் கரிய வுண்கட் டிருநுதல் மிழற்றுந் தீஞ்சொல்
          மேல்கிளர் பரவை யல்குன் மெல்லிய லறன்மென் கூந்தல்
               மால்கிளர் கணிகை மாதர் மனமெனப் போயிற் றாமால். ......    32

(பாம்பளை புகுவதே)

பாம்பளை புகுவ தேபோற் பாய்தரு பரவைத் தெண்ணீர்
     தூம்பிடை யணுகு மாற்றாற் சொன்முறை தடைசெய் வோரில்
          தாம்புடை பெயரா வண்ணந் தலைத்தலை தள்ளு மள்ளர்
               ஏம்பலோ டார்க்கு மோதை யுலகெலா மிறுக்கு மாதோ. ......    33

(பணையொலி யிரலை)

பணையொலி யிரலை யோதை பம்பையின் முழக்க மங்கட்
     கிணையொலி மள்ள ரார்ப்புக் கேழ்கிளர் தரங்க நன்னீர்
          அணையொலி யவற்றை வானத் தார்ப்பொலிக் கவனி தானும்
               இணையொலி காட்டிற் றோவென் றெண்ணுவார் விண்ணுளோரும். ......    34

(இயல்புகுங் களிநல்)

இயல்புகுங் களிநல் யானை யினந்தெரிந் தெய்து மாபோல்
     கயல்புகுந் துலவுஞ் சின்னீர்த் தடம்புகுங் காமர் காவின்
          அயல்புகுங் கோட்ட கத்தி னகம்புகு மார்வத் தோடி
               வயல்புகுங் களிப்பு நீங்கா மாக்களின் மயங்கு மாதோ. ......    35

(எங்கணு நிறைந்து)

எங்கணு நிறைந்து வேறோ ரிடம்பிறி தின்மை யாகச்
     சங்கமா யீண்டு மள்ளர் தாங்குபல் லியமு மார்ப்பப்
          பொங்கிய நகரந் தோறும் புறமெலாம் வளைந்த நீத்தம்
               அங்கண்மா ஞாலஞ் சூழு மளக்கரை நிகர்த்த தாமே. ......    36

(மாறடு மள்ள)

மாறடு மள்ள ருய்ப்ப மருதத்தி னிறைந்து விஞ்சி
     ஏறிய நார மீட்டு மிருங்கட னோக்கிச் சென்ற
          வேறுகொள் புலனை வென்றோர்*2 மேலைநன் னெறியுய்த் தாலுந்
               தேறிய வுணர்வி லாதோர் செல்வுழிச் செல்வ ரன்றே. ......    37

(வாளெனச் சிலைய)

வாளெனச் சிலைய தென்ன வால்வளை யென்னத் தெய்வக்
     கோளெனப் பணிக ளென்னக் குலமணி குயிற்றிச் செய்த
          மீளிவெஞ் சரங்க ளென்ன வேலென மிடைந்து சுற்று
               நாளெனப் பிறழு மீன்க ணடவின நார மெங்கும். ......    38

(மாண்டகு பொய்)

மாண்டகு பொய்கை தோறும் வயறொறு மற்று மெல்லாம்
     வேண்டிய வளவைத் தன்றி மிகுபுனல் விலக்கு கின்ற
          ஆண்டகை மள்ளர் தம்பா லமைந்திடுங் காலை யெஞ்சி
               ஈண்டிய வெறுக்கை வீசும் இடைப்படு வள்ள லொத்தார். ......    39

ஆகத் திருவிருத்தம் - 89




*1. சர்வ சங்கார காலத்தில் எல்லா உயிர்களும் ஒடுங்குங்கால், தத்தம்
   வினைக்கு அமைந்த கதிகளை அடையும் என்பது நூற்றுணிபு.

*2. புலனை வெல்லுதல் - மெய், வாய், கண், மூக்கு, செவி என்னும்
   ஐம்புலன்களின் வழியே மனத்தைச் செலுத்தாமல் அடக்கித் தன்வசப்படுத்தல்.



previous padalam   4 - ஆற்றுப் படலம்   next padalamAatRuppadalam

 முதல் காண்டத்திற்கு   next kandam

காண்டம் - படலம் பட்டியலுக்கு அகர வரிசையில் முதற்குறிப்புக்கு செய்யுள் முதற்குறிப்பு pdf வடிவம்

kANdam - padalam List Tamil alphabetical index verse index pdf version

Kandha Puranam - The Story of Lord Murugan

Sri Kachchiappa Sivachariyar

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 
Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] .[css]