Murugan Temple GopuramKaumaram dot com - The Website for Lord Muruga and His Devotees

உலகளாவிய
முருகன் ஆலயங்கள்

Worldwide
Murugan Temples

Sri Kaumara Chellam
Arulmigu Thandayuthapani Temple - Waterfall, Malaysiaஅருள்மிகு தண்டாயுதபாணி கோயில்
தண்ணீர்மலை பினாங்கு மாநிலம் மலேசியா

Flag of Malaysia  Arulmigu Thandayuthapani Temple  Flag of Penang State
Waterfall Penang Malaysia
history address timings special events previous-other names location map
... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   கௌமாரம் அட்டவணை   மேலே   தேடல் 
 home   Kaumaram contents   top   search 



இத்தலத்தின் முன்னாள்/மற்ற பெயர்கள்
Previous-Other names of this Venue

தண்ணீர்மலை முருகன்
Thanneermalai Murugan

ஆலயத்தைப் பற்றி
About the temple

அருள்மிகு தண்டாயுதபாணி ஆலய வரலாறு   ... பி.எல். சிங்காரம் - தமிழ் நேசன், பினாங்கு

(27-11-1995) திருக்கோயில் திருக்குட நீராட்டு நினைவு வெளியீட்டு மலரிலிருந்து)


    தண்காவில் வண்டுமது தானுண் பினாங்கில்
    தண்ணிமலை ஆண்டவர்க்குத் தைப்பூசம் - எண்ணி
    நகரத்தார் கொண்டாடும் நல்லவிழா வன்று
    நகரமெலாஞ் சேருமலை நாடி
.

தென்னாட்டுப் பழனி மலையில் கோவில்கொண்ட பால தண்டாயுதபாணிதான் பாய்மரக் கப்பலேறி, பழம்புகழ் பினாங்கு நகர் வந்து பசுமை மிக்க தண்ணீர்மலையிலே பாலதண்டாயுதபாணியாக நின்ற நிலையில் அனைவரையும் ஆசீர்வதித்து அருள் தந்து, பொருள் தந்து வாழ வைக்கிறார் என்பது நமது மூதாதையர்களின் ஒருமித்த கருத்தாகும்.

    "தீஞ்சுவைத்தேன் பூமலரும் தெளிவான பினாங்கு நகர் தேடியவன் வந்து விட்டான்
    திருக்கோவில் கொண்டபடி மலையடியில் சிலையானான் தென்னாட்டு தண்டபாணி
"

     ... என்ற கவியரசு கண்ணதாசனின் கவிதை இதற்குச் சான்றாகும்.

மூவேந்தர்களுக்கு பிறகு நாட்டுக்கோட்டை நகரத்தார்கள் சமூகம் திருக்கோவில்களை பாதுகாப்பதிலும் அதைப் பேணி முறையாக நடத்தி வரவும், ஆலயங்கள் அமைப்பதிலும், புதிப்பிப்பதிலும் இன்று வரை எடுத்துக்காட்டாக விளங்கி வந்திருக்கின்றனர்.

கோவில் வழியாக குலத்தை அமைத்துக்கொண்டு, செந்தமிழையும், சிவ நெறியையும் வளர்த்தார்கள் என்று நகரத்தார் சமூகத்தை பற்றி, அமரர் குன்றக்குடி அடிகளார் அவர்கள் மலேசியா வந்திருந்த சமயம் பேசிய பல கூட்டங்களில் பெருமையாகக் குறிப்பிட்டார்கள்.

பாரதத் தமிழ் மண்ணில் ஆட்சி செலுத்திய சோழப் பேரரசு ஒன்பதாம் நூற்றாண்டில் அலை கடலுக்கப்பாலும் சென்று மலேசியாவில் கடாரம் வரை தமிழ்க் கலையை வளர்த்த பெருமையை வரலாறு வழி நாம் அறிவோம். அந்த மரபை ஒட்டி நாட்டுக்கோட்டை நகரத்தார்களும் இன்றைக்கு சுமார் 185 ஆண்டுகளுக்கு முன்பு 1810ல் மலாக்கா நகருக்கு குடியேறினார்கள் என்றும், இந்த நாட்டின் முதலாவது இந்து ஆலயமான 350 ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட பொய்யாத விநாயகர் கோயிலை அவர்கள் போற்றி வழிபட்டு வர்த்தகம் செய்து வந்தனர் என்றும் சரித்திரம் வாயிலாக நாம் அறிய முடிகிறது.

பினாங்கில் கி.பி. 1818-ஆம் ஆண்டு ஆரம்பத்தில் தொழில் துவங்கிய நகரத்தார்கள், ஆறுபடை நாயகனான அருள்பொங்கும் தண்டாயுதபாணிக்கு, 9-8-1850ல் பினாங்கு வீதியில் 138, எண் கொண்ட கோவில் வீட்டில் தண்டாயுதபாணியின் தங்க உற்சவ மூர்த்தியை நிறுவி வழிபட்டு வந்தனர். இது மிகவும் ஆற்றல் மிக்க அருட்த்தெய்வமாகக் கருதப்படுகிறது.

அதன் பின்னர் பினாங்கு வாட்டர்பால் ரோட்டில் 5 ஏக்கர் பரப்பளவு உள்ள நிலம் ஒன்றை 1854ல் வாங்கி 12-12-1857ல் தண்ணீர்மலை தண்டாயுதபாணி ஆலயம் அமைத்து குடமுழுக்கு செய்ததாக வரலாற்றுச் சான்றுகளின் வழி அறிகிறோம்.

மேற்கண்ட இடத்தில் அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமிக்கு ஆகம முறைப்படி அழகிய திருக்கோயில் கட்டுவதற்குரிய வரை படத்தை வரைந்தனுப்புமாறு பினாங்கு நாட்டுக்கோட்டை நகரத்தார்கள், நாட்டுக்கோட்டைச் செட்டியார்களின் வேதாந்தத் திருமடமான கோவிலூர் ஆதீனத் தலைவராக விளங்கிய ஞானப் பேரொளி தவத்திரு வீரப்ப சுவாமிகளுக்கு மடல் வழி வேண்டுகோள் விடுத்து, அதற்கேற்க அன்னார் வரைந்தனுப்பிய வரைபடப்படியே தண்ணீர்மலைத் தண்டாயுதபாணி ஆலயம் அன்று அழகாகக் கட்டப்பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

நாட்டுக்கோட்டை நகரத்தார் பினாங்கு தண்டாயுதபாணி கோவிலை தமிழகம் காரைக்குடியிலிருந்து வந்த கட்டிடக் கலைஞர்கள் சிற்பிகளைக் கொண்டு, செட்டிநாட்டு நகரத்தார் கட்டிடக் கலைச்சாயலில் கட்டினார்கள். இக்கோயில் அமைப்பு முறை சொக்கட்டான் காய் ஆட்டக் கட்டம்போல (நீண்ட நேர் கோடு குறுக்கு நேர் கோடு) கூட்டல் குறி அமைப்பில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

கருவறை கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. அதனுள் பழநி மலையில் இருப்பதைப்போல பார்வதி பாலன், பத்தருக்குற்றவன், பாலதண்டாயுதன், தண்ணருட் சீலன், தண்ணீர்மலையாண்டவன் நின்ற கோலத்தில் தங்கி இருக்கிறான். அவனது நின்ற அழகுக் கோலம் நம் அகத்தைக் கவரவல்லது. இந்தக் கோவில் கருவறை அர்த்த மண்டபம் உட்பிரகாரம், வெளிப்பிரகாரம் நந்தவனம், பின்புறம் தென்னந்தோப்பு ஆகிய அமைப்பில், பினாங்கில் மிகப்பெரிய இந்துக் கோவிலாகத் திகழ்கின்றது.

தண்ணீர்மலைக் கோயிலின் மேற்புறம் உள்ளகுன்றும் பூங்காவும் குறிஞ்சிநிலக் குமரனைக் காட்டும். இயற்கையின் எழில் கொழிக்கும் இடத்தில் கோயில் கொண்டுள்ள தண்ணீர்மலை அடிவாரக் கோயிலும் மலைக் கோயிலும் பழநியை நினைவுபடுத்துகின்றன.

தண்ணீர்மலைத் தண்டாயுதபாணியின் வலது தொடையின் மேல் அழகான மச்சம் ஒன்றுள்ளது. மரகதம் பதித்தாற்போலத் திகழும் இந்த மச்சத்தை தண்ணீர்மலையானின் அளவற்ற அருட்சக்தியின் அடையாளமாகக் கருதுவர். நின்ற திருக்கோலத்தில் உள்ள திருமுருகப் பெருமானின் இத்திருவுருவம் காண்பார் கண்ணையும் கருத்தையும் ஒருங்கே கவர வல்லதாகும்.

இக்கோவிலின் சிறப்பு அம்சம், மண்டபங்கள் முழுவதும் பர்மாவிலிருந்து தருவிக்கப்பெற்ற தேக்கு மரத்தால் ஆனது. மண்டப மேல் பகுதியில் தேக்கு மரப்பலகையின் மீது பாரத தேசத்து வரலாற்றுச் சித்திரங்கள், இயற்கை வர்ணத்தில் வடித்து இருக்கிறார்கள், அடுத்த கீழ் வரிசையில் கீழ் உலகப் புகழ்பெற்ற இந்தியச் சித்திரக் கலைஞர் இரவி வர்மாவின் அழகிய சித்திரங்கள் கோவில் முழுதும் வைக்கப்பட்டுள்ளன.

செட்டி மகனே, தங்கக்கட்டி மணியே என்று நம் முன்னோர்கள் புகழ்ந்து பாடிய முருகப்பெருமானை ஏன் துறவுக் கோலத்தில் அமைத்து வழிபட்டார்கள் என்பதற்கு நல்ல கருத்துக்களும் நம்மிடையே உண்டு.

"திரை கடல் ஓடியும் திரவியம் தேடு" என்று ஔவையாரின் முதுமொழிக்கொப்ப நம் நகரத்தார்கள் தொலைதூரப் பயணம் மேற்கொள்ளும்பொழுது தங்கள் குடும்பத்தினை விட்டு தனியாகவே சென்று வரும் வழக்கமிருந்ததாலும், தொழில்துறை நடத்தி வாழும் பொழுது மனம் சலனமடையாமல் இருப்பதற்காகவும் தங்களைப்போல தாய் தந்தையாரை விட்டு தனியாக வந்து பழனி மலையில் தனிக் கோயில் கொண்டுள்ள தவக்கோலத் தண்டாயுதபாணியை தங்கள் எண்ணத்தில் வைத்து, எடுத்து வந்து, ஆலயம் கட்டி ஆராதித்து வந்தனர். அவனது அருளையே துணையாகக் கருதும் தாங்கள் அயல் நாட்டிலிருந்து தாய்நாட்டுக்கு எழுதும் கடிதங்களில், கடைசியாகத் தங்கள் கையெழுத்தைப் போடாமல், ஸ்ரீ தண்டாயுதபாணி துணை என்றே முடிப்பார்கள். இன்றும் இப்பழக்கம் நகரத்தார் கடிதங்களில் கையாளப்படுகிறது.

தண்டம் என்றால் கோல் அல்லது தடி என்பதாகும். பாணி என்றால் கை என்று பொருள். தண்டத்தை கையிலே ஆயுதமாக கொண்டிருப்பதால் தண்டாயுதபாணி என்று முருகப் பெருமானுக்கு பெயர் விளங்குகின்றது.

முருகக்கடவுள் வழிபாடு தமிழகத்தில் தொன்மையானது. பழனி மலை, மருத மலை, சென்னி மலை, வள்ளி மலை, விராலி மலை, சுவாமி மலை, கழுகு மலை திருத்தலங்களில் மூல மூர்த்தியாகப் பலகோலங்களில் தண்டாயுதபாணியே அமர்ந்திருக்கிறார். அதுபோல, இம்மலேசிய மண்ணில் முருகப் பெருமான் தண்ணீர்மலையிலே தண்டாயுதபாணியாக நின்ற கோலத்தில் அனைவருக்கும் அருட்பிரசாதம் தந்து காத்து வருகின்றார். தென் கிழக்கு ஆசியாவில் பினாங்கில்தான் முதல் தண்டாயுதபாணி கோவில் அமைந்ததாக சிறப்பித்துச் சொல்லப்படுகிறது. முருகப்பன், முத்தப்பன், குமரப்பன், தேனப்பன், பழனியப்பன், வேலாயுதம், சுப்பையா, சுப்பிரமணியன், சுவாமிநாதன், சிங்காரம், தண்ணீர்மலை என்று நகரத்தார்கள் தம் குழந்தைகளுக்கு திருமுருகன் நினைவாகவே பெயர் சூட்டி வந்திருக்கின்றார்கள்.

எல்லாம் வல்ல முருகன் எழுந்தருளியிருக்கின்ற ஆலயங்களில் எல்லாம் தைப்பூசம் வெகு சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. தைப்பூசம் பூச நட்சத்திரம் வரும் பௌர்ணமி நன்னாளாகும்.

இந்த நாளில் முருக பக்தர்கள் அனைவரும் முருகனுக்கு வேண்டிப் பிரார்த்தனை செய்வார்கள்.

தைப்பூசத்தின் சிறப்பை திருஞானசம்பந்தர்:

    மைப்பூசும் ஒண்கண் மடநல்லார் மாமயிலைக்
    கைப்பூசு நீற்றான் கபாலிச்சரம் அமர்ந்தான்
    நெய்ப்பூசும் ஒண்புழுக்கல் நேரிழையார் கொண்டாடும்
    தைப்பூசம் காணாதே போதியோ பூம்பாவாய்
.

     ... என்று பாடினார்.

தைப்பூசம் சிவபெருமானுக்கு உரிய விழாவாக இருப்பினும் குன்று தோறாடும் குமரனுக்கு கந்தக் கடம்பனுக்கே உரிய விழாவாக இன்று கொண்டாடப்படுகிறது. பக்தர்களின் குறைகளைக் களைந்து அருள்பாலிக்கின்ற புண்ணிய நாளாகவும் அன்புடன் காணிக்கையாகக் கொடுக்கின்ற பொருட்களையும், நேர்த்தி கடன்களையும் ஏற்று மனித குலத்தை உய்விக்க வந்த நன்னாளாகவும் தைப்பூசம் விளங்குகிறது.

தைப்பூசத் திருவிழா என்றால் நிச்சயம் காவடிகள் இடம்பெறும். காவடிகள் என்றால் கண்ணைக் கவரும் வண்ணக் காவடிகள், பால் காவடி, பன்னீர் காவடி, இளநீர் காவடி, கரும்புக் காவடி இப்படி இன்னும் எத்தனையோ வகைவகையான காவடிகள் திருவிழாவில் காணிக்கையாக எடுத்துவரப்படுகின்றன.

தைப்பூசத் திருவிழாவைக் காணவரும் இலட்சக்கணக்கான மக்களில் பல இனத்தவரும் கலந்து கொள்வது சிறப்பாகும். இனமத வேறுபாடு இன்றி இங்கே ஒன்று கூடுகிறார்கள். அவர்களின் நோக்கம் வேவ்வேறாக இருந்தாலும், தைப்பூசத்தன்று தண்ணீர்மலையான் சந்நிதியைத் தெரிந்தோ, தெரியாமலோ மிதிப்பவர்கள் புனிதம் அடைவார்கள் என்பது திண்ணம். மலேசிய அரசாங்கமும் தைப்பூச நாளைப் பொது விடுமுறையாகப் பிரகடனம் படுத்தியுள்ளார்கள்.

தன வணிகர்கள் என்ற சிறப்புப் பெயர் படைத்த நாட்டுக்கோட்டை செட்டியார்கள், தாம் கொண்டாடி கும்பிட்டு மகிழும் அருள்மிகு தண்டாயுதபாணிக்கு பினாங்கில் சிறப்பான விழாவாக தைப்பூசத் திருநாளை கொண்டாடி மகிழ்ந்து வருகின்றார்கள்.

பினாங்கில் தண்ணீர்மலையில் நடைபெறும் மூன்று நாள் தைப்பூசத் திருநாள் பழம் புகழ் மிக்கதும், வெளிநாட்டவர்கள் அதிகம் கலந்துகொள்ளும் தனிச்சிறப்பு வாய்ந்ததுமாகும். காரணம் நூறாண்டுகள் பழமைமிக்க வெள்ளி இரதத்தில் தண்ணீர் மலையான் வண்ணக் கோலத்தில் நகர் வலமாய் வந்து, பினாங்கு நகரின் முக்கிய சாலைகள் முழுவதும் நின்று, பக்தர்களின் காணிக்கை ஏற்று, அருள் பாலித்து, இலட்சக்கணக்கான சிதறு தேங்காய்கள் உடைபெற்று அதன் இளநீர்கழுவிய தெருப்பாதைகளின் வழியே சென்று தண்ணீர்மலை கோவிலை அடையும் காட்சி, மலையகத்தில் தனிச்சிறப்புமிக்க, இந்துப் பெருவிழாக்களில் ஒன்றாகப் போற்றப்படுகின்றது.

ஏற்கனவே சுமார் 60 ஆண்டுகளுக்கு முன்பு அருள்மிகு தண்டாயுதபாணிக்கு 5 நாட்கள் வரை தைப்பூசத் திருவிழா பெருங் கோலாகலமாக நடைபெற்றதாம். பிறகு அது 3 நாட்களாகக் குறைக்கப் பெற்றுத் தற்போதைய முறைப்படி சிறப்பாக நடைபெற்று வருகிறது. அந்தக் காலத்தில் தைப்பூச விழாவில் வழங்கும் அன்னதானத்துக்குத் தேவையான அரிசி, பருப்பு, நெய் வகையராக்களும் பரங்கிக்காய், பூசணிக்காய்களும் மெசுரா நிறுவனக் கப்பல் மூலம் சுமை கட்டணமின்றி தமிழகமிருந்து இலவசமாக வரவழைக்கப்பெற்றதாம்.

இறைவனுக்கு விழாக்கள் நடத்துவதும் அவனடியார்களுக்கு அன்னமிடுவதுமே இந்த உலகில் பிறந்தவர்கள் பெறும் பயன் என்பதை ஏற்பவர்கள் சைவ சித்தாந்திகள். அவர்களை சார்ந்தவர்கள் நாட்டுக்கோட்டைச் செட்டியார்கள். ஆகவே அவர்கள் கொண்டாடும் விழாக்களிலும் ஏழைகளுக்கு அன்னமிடுகிறார்கள்.

"செட்டி பூசம்" என்று சிறப்பாக சொல்லப்பெறும் தைப்பூச விழாவின் மூன்றாம் நாள் மாலை மின் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட வெள்ளி இரதம் இரவு முழுவதும் பினாங்கு நகரை வலம் வரும் காட்சி பெருஞ் சிறப்பு வாய்ந்ததாகும்.

பினாங்கு வெள்ளி இரதம் வலம் வரும் விழாவுக்கு சென்ற 1994-ஆம் ஆண்டு நூற்றாண்டாகும். கடந்த நூறு ஆண்டுகளாக பவனி வரும் இந்த வெள்ளி இரதத்தின் வரலாறு சரித்திரப் பெருமை வாய்ந்தது. கடந்த 1894-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தமிழ் நாட்டில், செட்டி நாட்டுப் பகுதியான காரைக்குடி நகரிலிருந்து இந்த வெள்ளி இரதம் செய்யப்பட்டு "எஸ். எஸ். ரோனா" என்ற கப்பலில் அனுப்பி வைக்கப்பட்டு பினாங்கு நகர் வந்து இரதம் பூட்டப்பெற்று இன்று வரை எந்தப் பழுதுமில்லாமல் சிறப்பாக வலம் வந்து கொண்டிருக்கிறது. இந்த இரதத்தோடு உபரிப் பாகங்களாக வந்தது, 4 சக்கரங்களும், மூக்கணைப் பகுதியும் தான். சென்ற ஆண்டுதான் (1994ல்) புதுச் சக்கரங்களை மாற்றினார்கள். பழைய சக்கரங்கள் 99 ஆண்டுகள் உபயோகப் படுத்தப்பட்டுள்ளன.

இந்த இரதத்தின் உயரம் 25 அடி, அகலம், அதாவது சுவாமி பீடமுள்ள பகுதி 10 1/2 அடி. சக்கரம் தவிர இரதத்தின் முழுப் பகுதியும் கனமான வெள்ளிக் கவசத்தால் (தகடுகளால்) பூட்டப்பெற்றது. நூறாண்டுகளாக எந்தவிதப் பெரிய பழுதுபார்ப்பும் செய்யப்படவில்லை. அது அவ்வளவு உறுதியானதாகும். ஒவ்வொரு வருடமும் இந்த இரதம் மெருகு மட்டும் போட்டு துடைத்து ஒளி பெறுகின்றது.

இத்தகைய பெருமை வாய்ந்த அருள்தரும் தண்ணீர்மலையானின் வெள்ளி இரத பவனியில் நடந்த சில சம்பவங்களில் குறிப்பிடத்தக்கது என்னவென்றால், 1941-ஆம் வருட ஆரம்பத்தில் பினாங்கு டத்தோ கிராமட் சாலை சிவன் கோயிலுக்கு அருகில் வெள்ளி இரதம் வரும் சமயம் வீதியிலுள்ள மின்சாரக் கம்பி தாக்கி இரத கலசம் கீழே விழுந்து விட்டதாகவும், அதன் அறிகுறியாக அதே ஆண்டு ஜப்பானியர் 2வது உலக மகாயுத்தம் வந்து பினாங்கு பாதிப்புற்றதாகவும், பினாங்கு ஸ்திரீட்டில், சுவாமிகள் இருந்த பகுதி தவிர பல இடங்கள் சேதமுற்றதாகவும், இதுபோல ஊர்வலத்தில் சில தடைகள் ஏற்பட்ட காலங்களில் சில அசம்பாவிதங்கள் பினாங்கில் நடைபெற்றிருக்கின்றன என்றும் பினாங்கில் தற்சமயம் இருந்து வரும் பெரியவர்கள் தங்கள் அனுபவத்தை கூறுகின்றார்கள்.

நம் முன்னோர்கள் நமக்கு வழங்கிச் சென்ற சமய விழாக்களையும் சமய போதனைகளையும் நாம் முறையோடு பின்பற்றி வருவதால் அமைதியுடன் கூடிய வாழ்வியல் முன்னேற்றம் பெருகி வருவதை நாம் ஒவ்வொருவரும் நன்கு உணரலாம்.

தொன்மைமிக்க நம் சமய விழாக்கள் மக்கள் மனதில் தெய்வீக இன்ப உணர்வுகளையும், வாழ்வின் நம்பிக்கைகளையும், பெருக்க வழி வகுப்பது, மனிதனின் முன்னேற்றத்துக்கு உறுதுணையானது. கடந்த பல வருடங்களாக வெள்ளி இரதத்தை பின் தொடர்ந்து பல ஆயிரக்கணக்கான மக்கள் நடந்து வருவதற்கும், பல இலட்சக்கணக்கில் தேங்காய்கள் உடைப்பதற்கும் இதுவே காரணம் என்பதை நம்மில் அனைவராலும் நன்கு உணர முடிகின்றது.

பினாங்கு நகரில் தைப்பூச திருநாளுக்கு அடுத்தப்படியாக சிறப்பாக நடைபெறும் கந்தர் சஷ்டி திருநாள், தண்ணீர்மலையானின் தனிப்பெறும் விழாக்களிலே சிறப்பு வாய்ந்தது.

இந்த கந்தர் சஷ்டி விழாவின் ஏழு நாட்கள் இரவிலும் அருள்மிகு தண்ணீர்மலையான் முறையே பால சுப்பிரமணியன், சுவாமிநாதன், வேலன், வேடன், விருத்தன், தெய்வானை திருமணம், வள்ளியம்மை திருமணம் ஆகிய ஏழு திருவேடங்களில் காட்சி தந்து மக்களுக்கு அருள்புரிகின்றார். திருக்கல்யாண விழாவுடன் கூடிய இந்த ஏழு நாட்களில் அவர் வழங்கும் அருள்காட்சிகள் நம் மனதை விட்டு அகலாத தெய்வீகத் திருக்காட்சிகளாகும். எம்பெருமான் முருகனை எண்ணி எண்ணி ஏங்கி வணங்கி வருவோர்க்கும் வாழ்க்கையில் வளம் பெறக் காத்துக்கிடப்போருக்கும் அருட்காட்சி தந்து ஆசீர்வதிக்கும் நல்விழா கந்தர் சஷ்டித் திருநாளாகும்.

ஒவ்வொரு தமிழ் ஆண்டுப் பிறப்பான சித்திரை முதல் நாளில் சித்திரைப் பூசை விழா அதை அடுத்து சித்திர பௌர்ணமி பூசை விழாவும் (மகேஸ்வர பூசை) சிறப்பாக நடைபெற்று எல்லோருக்கும் அன்னதானம் வழங்கப்பெறுகிறது. அடுத்து ஆடி அமாவாசையிலும் மகேஸ்வர பூசை செய்யப்பெற்று அன்னதானம் வழங்கப்பெறுகிறது.

கார்த்திகை மாதத்தில் வரும் பெரிய கார்த்திகை அன்று மகேஸ்வர பூசை நடத்தி பெருமைமிக்க தண்டாயுதபாணியின் கார்த்திகைப் பூசை விழா கோவில் முழுவதும் எண்ணெய் விளக்குகளால் தீப அலங்காரம் செய்யப்பட்டு தீபத் திருவிழாவாக சிறப்புப் பூசை, அன்னதானம் முதலியவற்றுடன் சொக்கப்பனும் கொழுத்தப்பெற்று திருவண்ணாமலை திருவிழாவை நினைவூட்டும் வண்ணம் தண்ணீர்மலையில் நிகழ்கிற திருநாளாகும். கார்த்திகை மாதத்தில் வரும் சோமவாரங்களில் சங்கு நீராட்டும் சண்முக அர்ச்சனையும் நடைபெறும்.

காலையில் காலசந்தி பூசையும், மதியம் உச்சிக்கால பூசையும், மாலையில் சாயரட்டை பூசையும், இரவு அர்த்தசாம பூசைகளும் நாள் வழிபாடுகளாக நடைபெறுகின்றன.

இந்தக் கோயிலைக் கொண்டு நடத்தல் கோயில் சொத்துக்களைப் பராமரித்தல் போன்ற செயல்களை ஏற்று நடத்த 10-10-60ல் பதிவு செய்யப்பெற்ற பினாங்கு நாட்டுக்கோட்டைச் செட்டியார்கள் கோயில்களின் அறங்காவலர்கள் நியமிக்கப்பெற்றனர். தைப்பூச விழாவுக்கு முன்பாக மேற்படி கோயிலைச் சேர்ந்த உறுப்பினர்கள், தைப்பூச விழாவுக்காக பினாங்குத் தெரு, 138-ஆம் எண் கோயில் வீட்டில் ஒன்று கூடி அவரவர்கள் தொழில் செய்யும் கடை அல்லது நிறுவனத்துக்குள்ள கடை முதல் இருப்பு இலாபம் மேம்பணம் ஆகியவற்றை அடிப்படையாக வைத்து ரிங்கிட் ஆயிரத்துக்கு ரிங்கிட் ஒன்று வீதம் மகமை (அறக்கொடை) எழுத்துவார்கள். அந்த மகமைப் பணத்தை பின்னொரு நல்ல நாளில் கோயில் நடப்பு அறங்காவலரிடம் கொடுத்துவிடுவார்கள்.

"அருள்மிகு தண்ணீர்மலை தண்டாயுதபாணியே துணை"

Brief History of Temple

This temple was first set up by the Chettiar community in Penang Street, Georgetown, in the year 1850. Later in 1854, a five-acre piece of land in Waterfall was acquired to build Chettiar quarters, with a temple dedicated to Sri Thandayuthabani. Hence the present temple was built, and consecrated in 1857. It became the destination for the Siver Chariot at the end of its procession during Thaipusam Festival.

The new temple at Waterfall became the major temple dedicated to Sri Thandayuthabani while the original temple or Kovil Veedu as it is called, was retained as a private place of worship for the Chettiars.

Directions to the temple.

Public transport is available, provided by the Rapid Bus Company, and its bus number U102 plies this route. If own transport is available, or taxi, then the best route to take would be via Macalister Road, Western Road, and after the traffic lights in front of the Muneeswarar Temple, to go straight along Waterfall Road for about 100 meters. Parking is Free.

(courtesy of the publication - 'Hindu Endowment Board and Chettiar Temples of Penang'
by Ms Anjalai Devi Nadarajan)


ஆலயத்தின் சிறப்பு விழாக்கள்

special occasions at temple

தைப்பூசம் (3 நாட்கள்)
ThaipUsam (3 days festivities)


ஆலய நேரங்கள்

temple timings

6:15 am – 12:30 pm
4:15 pm – 8:45 pm


ஆலயத்தின் முகவரி

Address of temple

Sri Thandayuthapani Koil,
Waterfall Road,
Jalan Kebun Bunga,
Penang,
Pulau Pinang,
MALAYSIA
Postcode: 10350
Telephone: +6 017 455 5450

Mailing Address:

Nattukottai Chettiars Temples,
138 Penang Street,
Penang,
MALAYSIA
Postcode: 10200
E-Mail: rtnctpenang@gmail.com

Official Temple Website:  http://pttemple.com 


ஆலயம் இருக்கும் இடம்
(கூகள் மேப்ஸ்க்கு நன்றி)

temple location
(courtesy of Google Maps)

scan the QR image on the right,
using a QR reader app on your
smart phone to copy the GPS co-ordinates
5.432844, 100.298235

Arulmigu Thandayuthapani Temple - Waterfall, Malaysia

For help in making this:  PC  -  Android  -  IPHONE & IPAD 
இந்த ஆலயத்தைப்பற்றி மேலும் விவரங்கள் தங்களுக்கு தெரிந்தால் தயவுசெய்து
அவற்றை எங்களுக்கு அனுப்பிவைக்குமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம்.
மிக்க நன்றி ... இணைய ஆசிரியர்கள்.
send note to Kaumaram Webmasters

A kind request from the Webmasters of Kaumaram.com
Please send us other details about this temple.
Thank You.
மலேசியா சிங்கப்பூர் இந்தியா மொரீஷஸ் இலங்கை ஐரோப்பா மற்ற நாடுகள்
Malaysia Singapore India Mauritius Sri Lanka Europe Other Countries

Worldwide Murugan temples and temples with Murugan Sannithis
Arulmigu Thandayuthapani Temple - Waterfall, Penang, Malaysia
(kdcmya02)

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   கௌமாரம் அட்டவணை   மேலே   தேடல் 
 home   Kaumaram contents   top   search 


   Kaumaram.com சமீபத்தில் DDOS தாக்குதலால் பாதிக்கப்பட்டது.
எனவே, படங்கள் மற்றும் ஆடியோ தற்காலிகமாக கிடைக்காது.
நான் இதை படிப்படியாக சரிசெய்ய முயற்சிக்கிறேன்.
உங்கள் பொறுமைக்கும் புரிந்துணர்வுக்கும் நன்றி. ... வலைத்தள நிர்வாகி.  




  Kaumaram.com was recently affected by DDOS attack.
As such, images and audio will be temporarily unavailable.
I am trying to correct this progressively.
Thank you for your patience and understanding. ... webmaster.  



Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

© Copyright Kaumaram dot com - 2001-2040

COMMERCIAL USE OF MATERIAL IN THIS WEBSITE IS NOT PERMITTED.

Please contact me (the webmaster), if you wish to place a link in your website.

email: kaumaram@gmail.com

Disclaimer:

Although necessary efforts have been taken by me (the webmaster),
to keep the items in www.kaumaram.com safe from viruses etc.,
I am NOT responsible for any damage caused by use of
and/or downloading of any item from this website or from linked external sites.
Please use updated ANTI-VIRUS program to rescan all downloaded items
from the internet for maximum safety and security.

-[W3]-