Sri AruNagirinAtharKaumaram dot com - Dedicated Website for Lord Muruga and His Devotees

திரு அருணகிரிநாதர் அருளிய
திருவகுப்பு

Sri AruNagirinAthar's
Thiruvaguppu

Sri Kaumara Chellam
திரு அருணகிரிநாதர் அருளிய திருவகுப்பு
19 - மயில் வகுப்பு
தமிழில் பொருள் எழுதியது
  'திருப்புகழ் அடிமை' ஸ்ரீ சு. நடராஜன், சென்னை, தமிழ்நாடு  


Sri AruNagirinAthar's Thiruvaguppu
mayil vaguppu
Meanings in Tamil by
'Thiruppugazh adimai' Sri S. Nadarajan, Chennai, Tamil Nadu

'Thiruppugazh adimai' Sri S. Nadarajan
 அட்டவணை   எண்வரிசை   முழுப்பாடலுக்கு   PDF   தேடல் 
contents numerical index complete song  PDF  search
previous page next page
இச் செய்யுளின் ஒலிவடிவம்

audio recording of this poem
Ms Revathi Sankaran பாடலைப் பதிவிறக்க 

 to download 

   (மயிலின் ஆற்றலைக் கூறுவது).

ஆதவனும் அம்புலியும் மாசுறவி ழுங்கியுமிழ்
    ஆலமரு வும்பணியி ரண்டும் அழுதே

ஆறுமுகன் ஐந்துமுகன் ஆனைமுகன் எங்கடவு
    ளாமெனமொ ழிந்தகல வென்று விடுமே  ...... 1

ஆர்கலிக டைந்தமுது வானவர்அ ருந்தஅருள்
    ஆதிபக வன்துயில்அ நந்தன் மணிசேர்

ஆயிரம் இருந்தலைக ளாய்விரிப ணங்குருதி
    யாகமுழு துங்குலைய வந்த றையுமே  ...... 2

வேதமுழு தும்புகல் இராமன் ஒரு தம்பிமிசை
    வீடணன் அருந்தமையன் மைந்தன் இகலாய்

வீசும்அர வஞ்சிதறி யோடவரு வெங்கலுழன்
    மேல்இடி எனும்படிமு ழங்கி விழுமே  ...... 3

மேதினிசு மந்தபெரு மாசுணம யங்கநக
    மேவுசர ணங்கொடுல கெங்கு முழுமெ  ...... 4

வேலியென எண்டிசையில் வாழும்உர கந்தளர
    வேஅழலெ னுஞ்சினமு டன்ப டருமே  ...... 5

போதினில் இருந்தகலை மாதினைம ணந்தவுயர்
    போதனை யிரந்துமலர் கொண்டு முறையே

பூசனைபு ரிந்துகொடி யாகிமகிழ் ஒன்றுதுகிர்
    போல்முடிவி ளங்கவரும் அஞ்சம் அடுமே  ...... 6

பூதரொடு கந்தருவர் நாதரொடு கிம்புருடர்
    பூரணக ணங்களொடு வந்து தொழவே

போரிடுவ வென்றுவெகு வாரணக ணங்களுயிர்
    போயினம் எனும்படிஎ திர்ந்து விழுமே  ...... 7

கோதகலும் ஐந்துமலர் வாளிமத னன்பொருவில்
    கோலவுட லங்கருகி வெந்து விழவே

கோபமொடு கண்டவிழி நாதர் அணி யும்பணிகள்
    கூடிமனம் அஞ்சிவளை சென்று புகவே

கூவியிர வந்தம்உணர் வாழியென நின்றுபொரு
    கோழியொடு வென்றிமுறை யும்ப கருமே  ...... 8

கோலமுறு செந்தில்நகர் மேவுகும ரன்சரண
    கோகனதம் அன்பொடுவ ணங்கு மயிலே.  ...... 9

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -  top button

ஆதவனும் அம்புலியும் மாசுறவி ழுங்கியுமிழ்
    ஆலமரு வும்பணியி ரண்டும் அழுதே

ஆறுமுகன் ஐந்துமுகன் ஆனைமுகன் எங்கடவு
    ளாமெனமொ ழிந்தகல வென்று விடுமே  ...... 1


......... பதவுரை .........  top button

ஆதவனும் அம்புலியும் மாசுற விழுங்கி உமிழ் ... வெயில் பரப்பும் சூரியனும் தண்மை வரிக்கும் சந்திரனும் களங்கம் அடைய வாயில் இட்டு மீண்டும் கக்கும் குணம் அடைய,

ஆலம் மருவும் பணி இரண்டும் அழுதே ... விடம் பொருந்திய இராகு கேது எனும் இரு பாம்பு உருவ கோள்களும் அலறி அழுது,

ஆறுமுகன் ஐந்துமுகன் ஆனைமுகன் எம் கடவுள் ... ஆறுமுகப் பரமன், ஐம்முகச் சிவன், யானை முகக் கணபதிகள் எமது வழிபடு தெய்வங்கள்,

ஆம் என மொழிந் அகல வென்று விடுமே ... நிச்சயமாக சொல்கிறோம் என்று கூறி வழி விலகி ஓட முனைப்பு அகல வென்று அவர்கட்கு உயிர் பிச்சை தரும்.

(இராகு கேது வரலாறு:

விமல காசிபர் மகன் விப்ர சித்தி. அவன் சிமிக்கை என்பாளை மணந்து இராகு, கேது எனும் இருவரைப் பெற்றனர். திருமால் மோகினி உருவம் கொண்டு அமரர்க்கு அமுது பகிர்தளித்த காலத்தில் இராகு தேவ உருவம் கொண்டு சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையே அமர்ந்து புத்தமிர்தம் வாங்கிப் புசித்தனர். மேலோர் உண்பதற்கு முன் உண்ணலும் உண்பதற்கு முன் கொள் அனுட்டானங்கள் இன்மையும் அசுர சாயலை உடைய இராகுவை சந்திர சூரியர் கண்டு திருமாலுக்கு அதை சமிக்கையால் உணர்த்தினர். உடனே அப்பெருமான் சட்டுவத்தால் அடித்து ராகுவின் தலையை நிலத்தில் தள்ளினார். அமுதுண்டு இறவாத தன்மை எய்திய அத்தலை இராகு எனவும், உடல் கேது எனவும் பெயர் பெற்றனர். உடன் பிறந்தவன் பெயர் கேது. அதே பெயர் தலையுடன் ஒன்றிப் பிறந்த கேதுவுக்கும் உரியதாயிற்று.

அதன் பின் இராகுவும் கேதுவும் பெரும் தவம் செய்து திருமால் அருளால் கரும்பாம்பு - செம்பாம்பு உருவாயினர். தம்மைக் காட்டித் தந்த காரணத்தால் மகத்தான பகை கொண்டு சந்திர சூரியர் ஆட்சியை மறைப்பதுவே தொழிலாகக் கொண்டனர். சாயாக் கிரகங்களான இவர்களது தொல்லை தாங்காத சந்திர சூரியர் அவர்கள் தம்மை பிடிக்க வரும் காலத்தில் சண்முக நாமம் ஜெபிக்கின்றனர். ஜெபத்தின் முடிவில் விந்துத் தத்துவம் மயில் உருவம் வெளிப்படுகிறது. அதைக் கண்டதும் பல்லில் விஷமுடைய பாம்புகட்கு அச்சம் மனதில் அதிகரிக்கின்றது. உடனே, ஆறுமுகச் சிவனார் என் தெய்வம், ஐந்துமுகச் சிவனார் எம் இறைவர், கணபதி எம் கடவுள், வாய்மையே எங்கள் வார்த்தை - என வினயமோடு விளம்பி ஒதுங்கிச் செல்ல நம்பன் நாம நலம் கேட்டு அவைகட்கு உயிர் பிச்சை அளித்து வாகை மாலை சூடும் மயில் என்றபடி. ஆறுமுகன் சடாக்சரன், ஐந்து முகன் பஞ்சாட்சரன், ஆனைமுகன் ஏகாட்சரன் என்க. அதன்படி சூரிய சந்திர கிரண காலங்களில் ஷடாச்சர, பஞ்சாட்சர, ஏகாட்சர ஜெபம் செய்தால் கிரகண பீடை நீங்கும்).

ஆர்கலிக டைந்தமுது வானவர்அ ருந்தஅருள்
    ஆதிபக வன்துயில்அ நந்தன் மணிசேர்

ஆயிரம் இருந்தலைக ளாய்விரிப ணங்குருதி
    யாகமுழு துங்குலைய வந்த றையுமே  ...... 2


......... பதவுரை .........  top button

ஆர்கலி கடைந்து அமுது வானவர் அருந்த அருள் ... நிறைந்த பாற்கடலைக் கடைந்து அமரர் அமுது உண்ண உதவிய

ஆதி பகவன் துயில் அநந்தன் மணி சேர் ... திருமால் துயில் கொள்ளும் படுக்கையான ஆதிஷேடனின் மாணிக்கங்கள் உடைய

ஆயிரம் இரும் தலைகளாய் விரி பணங்குருதி ஆக ... வன்மை உள்ள 1000 தலைகளில் இருந்து மலரும் 1000 படங்களும் குருதி குளம்பு மயமாக

முழுதும் குலைய வந்து அறையுமே ... அப்பாம்பின் உடல் முழுதும் நெறிய வந்து மோதும்.

(ஆயுள் நீட்டிக்க உதவுவது அமுதம். கடல் கடைந்து அதை அமரருக்கு அருளியவர் ஆதிமூலர். அப்பெருமானது அயர்வு அகற்றி அரி துயில் கொள்ள அவருக்கு தனது உடலை உதவுகிறான் ஆதிசேடன்.அக்தன்றி, - சென்றால் குடையான், இருந்தால் சிங்காசனமாம், நின்றால் திருவடியாம், நீள் கடவுள் என்றும் புனையான், மணிவிளக்கான் பூம்பட்டான், புங்கும் அணையான் திருமாலுக்கு அரவு - என்று பொய்கையார் கூறி புனிதத் திருப்பணி அளவிலாது செய்தலின் ஆதிசேடன் அநந்தன் எனும் பெயர் எய்தினான். இத்துடன் பூமியைத் தாங்கும் புனித நலமும் பெற்றான். இதனால் உலகம் அவனை உவந்து புகழ்ந்தது. முதிர்ந்த புகழ்ச்சி முனைப்பை அளித்தது. அந்த முனைப்பு அகில தலத்தையும் அலமறச் செய்தது. அந்நிலையில் அமைதியை விளைவிக்க விந்து த்துவ மயில் வெளிவந்து மோதிய அளவில் அநந்தன் ஆதிசேடன் என்றபடி.

பாம்புருவான இராகு கேதுக்கள் முருக நாமம் கூறி உய்தி பெற்ற வரலாற்றை முன் கூறினார். கூற இயலாத ஆதிசேடன் செய்தியை இந்த அடியில் கூறஒச் சென்றார். ஆர் = நிறைவு, கலி = தோஷம், எனவே நிறைவு தரு போரொலி தரும் கடல். திரு, ஐஸ்வரியம், புகழ், வீரம், ஞானம், வைராக்கியம் எனும் ஆறு குணங்கள் அதையவன் எனும் பொருட்டு).

வேதமுழு தும்புகல் இராமன் ஒரு தம்பிமிசை
    வீடணன் அருந்தமையன் மைந்தன் இகலாய்

வீசும்அர வஞ்சிதறி யோடவரு வெங்கலுழன்
    மேல்இடி எனும்படிமு ழங்கி விழுமே  ...... 3


......... பதவுரை .........  top button

வேதம் முழுதும் புகல் இராமன் ஒரு தம்பி மிசை ... எல்லா வேதங்களும் துதிக்க இராமபிரானின் ஒப்பற்ற தம்பியாகிய இலட்சுமணன் மேல்

வீடணன் அரும் தமையன் மைந்தன் இகலாய் ... அருமையான விபீடணனின் தமையனாகிய இராவணனது மகனாகிய இந்திரஜித்து பகை மிகுந்து

வீசும் அரவம் சிதறி ஓட வரு வெம் கலுழன் மேல் ... விட்ட நாக கணை சிதறுண்டு ஓடு ஒழிய உவந்து வந்த உக்ரமான கருடன் மேல்

இடி எனும்படிமு ழங்கி விழுமே ... இடி என்று சொல்லும்படி பெரும் முழுக்கம் செய்து மேல் வந்து மோதும்

(இராமன் தம்பி மேல் விபீடணன் அண்ணன் மகன் அரவாஸ்திரம் விட்டான். அதனால் இராமன் முதல் அனைவரும் அளவிலா கவலை அடைந்தனர். இதை அறிந்த விண்ணவர் வேண்ட வெளியேறினான் கருடன். அவன் வருகையைக் கண்டதும் பாம்பு அஸ்திரம் அச்சம் மிகுந்து இருந்த இடம் தெரியாதபடி ஓடி ஒளிந்தது. அதன் பின் லட்சுமணன் உயிரப்புடன் எழுந்தான், இராமனாதியர் மகிழ்ந்தனர். பல்லாண்டு இமையவர் பாடினர். இந்நிலையை நினைத்து இருமாந்தான் கருடன். இந்த இறுமாப்பு உலகம் அனைத்திற்கும் இடுக்கண் தந்தது. கதறியது உலகம். குறிப்பறிந்த குடிலை மயிலாகி வந்தது. கர்ஜித்து மோதியது. கருடனை அவ்வளவில் செருக்கை அடக்கியது. திருந்தினான் கருடன். உய்ந்தது உலகம்).

மேதினிசு மந்தபெரு மாசுணம யங்கநக
    மேவுசர ணங்கொடுல கெங்கு முழுமெ  ...... 4


......... பதவுரை .........  top button

மேதினி சுமந்த பெரு மாசுணம் மயங்க ... உலகைத் தாங்கிய பெரிய பாம்பான ஆதிசேடனுடைய அறிவு நிலை குலைய

நக மேவு சரணம் கொடு உலகெங்கும் உழுமெ ... நகங்களை உடைய பாதங்களைக் கொண்டு உலகம் முழுவதையும் கிளறி உழுதலைச் செய்யும்.

(வனைந்த உலகங்கள் அனைத்தையும் காக்க வலம் வருகின்றது மயில். அதன் பாதங்களில் உள்ள உறு வலி நகங்கள் நிலத்தை ஏர் போல் உழுகின்றன. அந்த அதிர்ச்சியால் ஆதி சேடனின் தலைகள் அதிர்கின்றன என்றும் உயிர்கள் நிலத்தில் வித்து இட்டு விளைவு மிக வழி செய்கின்றது என்றபடி. மதுகைடவருடைய மேதஸ் எனும் கொழுமை நிறைந்த நிலம் எனும் பொருட்டு. சிவஞான புண்டரீகம் எனும் திருப்புகழில் அழகா நகம் பொலியும் மயிலா என்பதை நகம் மேவு சரணம் கொடு உலகெங்கும் உழுமே என்கிறார்).

வேலியென எண்டிசையில் வாழும்உர கந்தளர
    வேஅழலெ னுஞ்சினமு டன்ப டருமே  ...... 5


......... பதவுரை .........  top button

வேலி என எண் திசையில் வாழும் உரகம் தளர ... உலகிற்கு இட்ட வேலி போல் எண் திசையிலும் வாழ்கின்ற எட்டு நாகங்களும் உடலும் உள்ளமும் பெரும் தளர்ச்சி அடையும்படி,

வே அழல் எனும் சினமுடன் படருமே ... மூங்கிலில் எழும் காட்டுத் தீ எனபடியான கோபக் கொதிப்புடன் பவனி வரும்.

(எண் திசைகளை வரை அறுத்தோம் யாம், தாங்குகின்றோம் யாம் இலரேல் உலகம் நிலை குலையும் எனும் பாம்புகளின் செருக்கை அடக்கிய செய்தி இது).

போதினில் இருந்தகலை மாதினைம ணந்தவுயர்
    போதனை யிரந்துமலர் கொண்டு முறையே

பூசனைபு ரிந்துகொடி யாகிமகிழ் ஒன்றுதுகிர்
    போல்முடிவி ளங்கவரும் அஞ்சம் அடுமே  ...... 6


......... பதவுரை .........  top button

போதினில் இருந்த கலை மாதினை மணந்த ... வெண் கமலத்தில் வீற்றிருந்த கலை மகளை மணந்து கொண்ட,

உயர் போதனை இரந்து ... உயர்ந்த புத்தியுள்ள பிரமனைக் குறை இரந்து (சொல்லி)

மலர் கொண்டு முறையே பூசனை புரிந்து கொடியாகி மகிழ் ஒன்றும் ... மலர் பறித்து விதிப்படி அர்ச்சித்து வழிபட்டு அதன் பயனாக அப்பிரமனுக்குக் கொடியாக விளங்கி, மகிழ்ச்சி பொருந்தும்

துகிர் போல் முடி விளங்க வரும் அஞ்சம் அடுமே ... பவளம் போல் உச்சிக் கொண்டை விளங்க வெளி வருகின்ற அன்னத்தைத் தண்டிக்கும்.

(உலகம் படைப்பானுக்கு ஊர்தியும் கொடியும் ஆனேன் எனும் செருக்கு மிகுந்து நீ எனக்கு எம்மாட்டு என்று எதிர்த்த அன்னத்தை மயில் சத்திய லோகம் வரை சென்று தண்டித்த வரலாற்றை உபதேச காண்டத்தில் உணர்க).

பூதரொடு கந்தருவர் நாதரொடு கிம்புருடர்
    பூரணக ணங்களொடு வந்து தொழவே

போரிடுவ வென்றுவெகு வாரணக ணங்களுயிர்
    போயினம் எனும்படிஎ திர்ந்து விழுமே  ...... 7


......... பதவுரை .........  top button

பூதரொடு கந்தருவர் நாதரொடு கிம்புருடர் ... பூத கணங்களுடன் கந்தர்வர்கள் நவநாத சித்தர்கள் கிம்புருடர்கள்

பூரண கணங்களொடு வந்து தொழவே ... பதிணென் கணங்களுடன் வந்து வணங்க

போரிடுவ என்று வெகு வாரண கணங்கள் ... அவர்களிடம் அமர் செய்து தடை விளைப்பம் என்று கருதி அளவிலா யானைகள்

உயிர்போயினம் எனும்படி எதிர்ந்து விழுமே ... உயிர்ப்பு ஒழிந்தோம் என பிளிறும்படி அவைகளை எதிர்த்த மோதும்.

(வாழ வல்ல கந்தர்வர் இசை வழிபாட்டில் பூத கணத்தவர்கள் கலந்து கொள்வர். பதநாதம், அபரநாதம், பரஅபரநாதம் எனும் மூன்று நாதங்களிலும் லயித்திடுவார்கள் நவ நாதர்கள். அவர்களுடன் மனித முகமும் கொண்ட கிம்புருடர்கள் எப்போதும் நயந்து நிற்பர். பின் நின்றவர் பதிணென் வகை தேவஜாதியர். இவர்களை வரிசைப் பட இந்த அடி நினைவுறுத்தும் அழகை உணர்க.

அமல முருகனை இவர்கள் வழிபட ஆரம்பிக்கும் போதெல்லாம் ஐம்புலக்களிறுகளின் எதிர்ப்பை எழுப்பி வழிபடுதலைத் தடை படுத்தும். அவ்வமயம் நோக்கி விந்துத் தத்துவமான மயில் வெளியாகும். வீரிடும்படி புலக்களிறுகளை மோதி பக்தர்களைக் காக்கும் - என்ற குறிப்பு இங்கு உணரத்தகும். 'தொண்டர் அஞ்சு களிறும் மடக்கி சுரும்பார் மலர் இண்டை கட்டி வழிபாடு செயும் இதம்' என்பதால் - சம்பந்தர் தேவாரம் நினைவிற்கு வருகிறது அல்லவா?)

கோதகலும் ஐந்துமலர் வாளிமத னன்பொருவில்
    கோலவுட லங்கருகி வெந்து விழவே

கோபமொடு கண்டவிழி நாதர் அணி யும்பணிகள்
    கூடிமனம் அஞ்சிவளை சென்று புகவே

கூவியிர வந்தம்உணர் வாழியென நின்றுபொரு
    கோழியொடு வென்றிமுறை யும்ப கருமே  ...... 8


......... பதவுரை .........  top button

கோதகலும் ஐந்துமலர் வாளி மதனன்பொருவில் ... குற்றம் அகன்ற ஐந்து மலர்களை உடைய மன்மதனது நிகரற்ற

கோல உடலம் கருகி வெந்து விழவே ... அழகிய உடல் வெந்த தீய்ந்து போகும் வண்ணம்,

கோபமொடு கண்டவிழி நாதர் அணியும் பணிகள் ... உக்ர நோக்கம் செய்த அருள் நாத வடிவினரான சிவனார் அணிந்துள்ள ஆபரணங்கள் ஆகிய பாம்புகள்

கூடி மனம் அஞ்சி வளை சென்று புகவே ... ஒருங்கு சேர்ந்து உள்ளம் பயந்து வளையில் ஓடி ஒளியும்படி

கூவி இரவு அந்தம் உணர் வாழி என நின்று ... கொக்கரக்கோ எனும் பெரும் குரல் எழுப்பி கூவி இரவின் முடிவை உணர்த்தி உயிர்கள் அதனால் வாழ்க என் கூறி நிமிர்ந்து நின்று

பொரு கோழியொடு வென்றி முறையும் பகருமே ... அறியாமையை மோதும் சேவலுடன் தனது வெற்றி முறைகளை விரிவாக எடுத்துச் சொல்லும்.

(ஆணவ இருள் விலகும் காலம் அண்மி உளது. அகக் கண் திறந்து சிவ சூரியனை தரிசிக்க சித்தமாய் இருங்கள். வாழும் வழி இது என்று சேவலான நாதத் தத்துவம் செய்தி உரைத்து ஆசியும் செய்கிறது. அதே சமயத்தில் வித்தக ஞான விமல சூரியனை இதோ கொணர்கிறேன் நான் என்று விந்துத் தத்துவமான மயில் தன் வெற்றி விருதையும் நினைவுறுத்துகிறது என்பது இங்கு போந்த பொருள்.

குற்றமற்ற மலர்களைக் கொடுங் கணைகளாக்கி தன்னைக் கோலம் செய்வதிலேயே நோக்குடைய மாமதம் பிடித்த மதன் பலம் சாம்பலாகும்படி உறுத்து நோக்கியது யோக சிவம். அதன் பின் திருமேனி அணிகளான பாம்புகள், சேவல் குரல் கேட்டு ஓடி வலையில் ஒளிந்த சேதி விஷப்பல்லர் எத்தனை உயர்ந்த பதவியில் இருந்தாலும் கரந்து வாழும் கருத்தினர் ஆவர் என்பதைக் காட்டியபடி.

மேலும் பாம்பு உருவ குண்டலிகள் அருள் நாதம் எழும் சமயம் அஞ்சி இடம் விட்டு அகலும் என்ற குறிப்பை நினைவுறுத்தியபடி என்பதும் ஒருவகை.

எதிர்த்தவர்களிடம் பொரும் சேவலுடன் சேர்ந்து அமர் செய்து விருத கூறும் என்னுமாம். எதிர்த்த வரலாற்றை உபதேச காண்டத்தில் சூராதிகள் ஒடுக்க சர்க்கத்தில் காண்க).

கோலமுறு செந்தில்நகர் மேவுகும ரன்சரண
    கோகனதம் அன்பொடுவ ணங்கு மயிலே.  ...... 9


......... பதவுரை .........  top button

கோலமுறு செந்தில் நகர் மேவு குமரன் ... அழகிய திருச்செந்தூரில் விரும்பி எழுந்தருளிய குமரப்பரமேஸ்வருடைய

சரண கோகனதம் அன்பொடு வணங்கு மயிலே ... திருவடித் தாமரைகளை அன்புடன் வணங்கும் மயிலே.

மயிலேறும் குமரன் மலரடிக்கே அடைக்கலம்.

திரு அருணகிரிநாதரின் திருவகுப்பு 19 - மயில் வகுப்பு
Thiruvaguppu 19 - mayil vaguppu
 அட்டவணை   எண்வரிசை   முழுப்பாடலுக்கு   PDF   ஒலிவடிவம்   தேடல் 
contents numerical index complete song  PDF   MP3  search
previous page next page

Sri AruNagirinAthar's Thiruvaguppu 19 - mayil vaguppu

Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
Kaumaram.com uses dynamic fonts.
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com

 download Free Azhagi software and Tamil fonts (SaiIndira) 
 download free Tamil fonts only (SaiIndira) 

... www.kaumaram.com ...

The website for Lord Murugan and His Devotees

 ஆரம்பம்   அட்டவணை   மேலே   தேடல் 
 பார்வையாளர் கருத்துக்கள்   உங்கள் கருத்து   பார்வையாளர் பட்டியலில் சேர 
 home   contents   top   search   sign guestbook   view guestbook   join our mailing list 


Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 


Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0905.2023[css]