ARumugam with VaLLi DeivanaiKaumaram dot com - The Website for Lord Muruga and His Devotees

முருகனுக்கான
கவிதைகள்

Poems for
Lord Murugan

Sri Kaumara Chellam
 வெங்காட்டிலுனையன்றி
venkAttilunaiyandRi
 
Poems Songs for Lord Murugan    திரு. D. சுரேஷ்
    பிள்ளையார் பாளையம், தமிழ்நாடு

   Thiru D. Suresh
   Tamil Nadu
 English 


previous page next page
 பட்டியல் 
 தேடல் 

 list 
 search 

வெங்காட்டி லுனையன்றி தனிநின்று உழன்றாலும்
  செங்காடு தருகின்ற பொடிபூசித் திரிவேனே
    மங்காத புகழ்கொண்ட வடிவேல னடியார்கள்
      எங்காணு மங்கேயு முடன்வந்து உறைவோனே.      (1)

அன்றன்று புரிய நற் பணியீன்றான் சிவமே
  என்னென்று அறியேன் நன்மாற்ற மிக்கணமே
    பனையன்று மாற்றிய பண்கொண்டு னடியேன்
      உனையென்று தொழுதெந்தன் வினையென்று களைவேன்.      (2)

எவைகளை கண்டுயா னஞ்சி நின்றேனோ
  அவைகளை ஈந்து நீ அஞ்ச லென்றாயே
    அவைகளை ஈந்து நீ அஞ்சல் புரிந்தமை
      சுவைபட யெழுதிட நற்கவிஞ னல்லனே.      (3)

நின்னை யுணரும் நினதன் பருளால்
  தன்னை யுணரும் தவசீலர் தங்கள்
    முன்னை வினையின் முடியவிழ்த்தப் பின்னர்
      அன்னை வயிர்புகு மவல மறுப்பாயே.      (4)

கற்றுத் தெளியு மபரஞான மனுபவ
  முற்றுத் தெளியும் பரஞான மிவை
    அற்றுத் தெளினும் வறியோர் பிணி
      சற்றுக் களையி னருள்பெற்று விடலாமே.      (5)

உந்தன் பெருமை யுணராம லன்று
  எந்தன் நிலைமை யிறங்கி சென்றேனே
    இந்த நிலைமை மறவாயிருக்க யென்றும்
      எந்த னுணர்வில் கலந்து நின்றானே.      (6)

சிந்தை மகிழும் புகழ்கொண்டத் திருக்கச்சிக்
  கந்த னெனது வினைகளைய யருள்கொண்டு
    கந்தை யணிந் ததற்மேற் துண்டோடு
      தந்தை யெனவே யெதிரிற் வந்தணைந்தாரோ.      (7)

வினைக்கு முதனாகி வினையின் பயனாகி
  நினையு மடியார்கள் வினையைக் களைவோனே
    வினையேன் விதைக்கின்ற வினைக்குப் பொருளாக
      உனையே நினைக்கின்ற மனத்தை யருள்வாயே.      (8)

தீய நினைவிற்கெலா மோரிடமாகி யென்றும்
  ஆய பலகலைகள் பயிலாது உழலும்
    மாய கடற்கயலேனை காக்கவரல் வேண்டும்
      தூய நினதிருபாதம் தூக்கிதரல் வேண்டும்.      (9)

தோன்றி மறையும் மனத்தகத்தே மீண்டும்
  தோன்றா திருந்து விடுவாயோ எனயெண்ணி
    ஊன்றி உணர்ந்துருகும் அடியார்பால் தீவினைகள்
      தோன்றா நிலையை அருளும் இறையோனே.      (10)

தொழுதறியா கரங்கள் கொண்ட மலரும்
  உழுதறியா னொருவன் கொண்ட விதையும்
    அழுதறியா அடியேன் கொண்ட உணர்வும்
      எழுதறியா ஊமை கண்ட கனவே.      (11)

உனையே நினைந்துருகும் நிலைபேறுக்(கு) அழுவாமல்
  வினையே னுழல்கின்றேன் நிலையில்லாப் பொருள்தேடி
    பனைமீது நீர்கொண்ட பெருங்கருணைக் கடலிலே
      தினையேனு மென்மீது கொள்ளக் கருத்தாமோ.      (12)

பொருள் விளக்கம்:

1.

வெங்காட்டில் உனையன்றி தனிநின்று உழன்றாலும் = வெம்மை நிறைந்த காட்டில் (நல்வினை - தீவினை எனும் இரு வினைகள் நிறைந்த வாழ்வில்) வேறு ஒருவர் துணையின்றி உந்தன் துணையோடு சுற்றி வந்தாலும்,

செங்காடு தருகின்ற பொடி = திருநீறு,

மங்காத புகழ் = திருப்புகழ்,

எங்காணும் அங்கேயும் உடன் வந்து உறைவோனே = எந்த ஊரிலிருந்தாலும் அவர்களுடன் வந்து இருப்பவனே.

திருப்புகழைப் பாடிப் பரவுகின்ற வடிவேலனுடைய அடியவர்கள் எங்கு வாழ்ந்திருந்தாலும் அவர்களுடன் இருப்பவனே! வெம்மை நிறைந்தக் கானகத்தில் உந்தன் துணையன்றி, வேறொருவர் துணையின்றி, தனியே சுற்றி வந்தாலும் திருநீற்று நெறியை மறவேன்!

விளக்கம்:

கற்றுணர்ந்த பெரியோரே! உங்களுக்கு திருநீற்றின் பெருமையை அடியேன் கூறவும் உளதோ? திருஞான சம்பந்தரின் 'மந்திரமாவது நீறு' பதிக்கத்தை விளக்கத்திற்குப் பார்க்க! அப்படி உயர்ந்த இத்திருநீற்றை இறைவா! இருவினை சூழ்ந்த வெம்மை நிறைந்தக் காடாகிய இவ்வுலக வாழ்நாளில் வேறொருவர் துணையின்றி எனது தீவினைகளின் காரணமாக தனியே (உற்றார், சுற்றம், நண்பர்கள், நாள், கோள் துணையற்று) போராடிக்கொண்டிருந்தாலும் என் உள்ளத்திருந்து வழிகாட்டியாக நீயே இருப்பதனால், அதனை அணிந்து மகிழ்கின்றேன்.

முருகன்! திருப்புகழைப் பாடுகின்ற அடியவரிடத்து அவர்களுடைய எண்ணமாய் இருக்கின்றான். எனவே அடியவரைக் கனவிலும் பிரியமாட்டான்.

2.

கருத்துரை:

ஒவ்வொரு நாளும் நாம் செய்வதற்குக் கடமைகளை இறைவன் வகுத்துளான். அதை உணர்ந்தக் கணமே என்னுள்ளே இனம் புரியாத நன்மாற்றத்தைக் கண்டேன். அன்று ஆண் பனை மரங்களை தேவாரம் பாடி திரு ஞானசம்பந்தர் பெண் பனைகளாக்கினார். அத்தேவாரத்தை கொண்டு உனை பாடி, தொழுது என் இருவினைகளை என்று களைவேன்?

விளக்கம்:

'கடமையைச் செய் பலனை எதிர்பாராதே' என்பது எல்லோருக்கும் தெரிந்ததே. தெரிந்தவைகளை பெரும்பாலும் உணர்வதில்லை. 'இறைவனெங்கு உள்ளான்' என்று அவனை உணர தலைபடும்போது எண்ணுகின்ற எண்ணமாய் இருப்பதை உணரமுடியும்.

இவ்வுலகிலே வாழ வேண்டுமானால் சிலவற்றைக் கட்டாயமாக செய்தாக வேண்டும். ஒவ்வொரு நாளும் நாம் இருக்கின்ற நிலையிலிருந்து நம்மை உயர்த்திக்கொள்ள வேண்டும். நம்மை சுற்றியுள்ளவர்களையும் உயர்த்த வழி செய்ய வேண்டும். இறைவனை உணர்ந்து அவன் நிழலடி சேர வேண்டும்.

மேற்சொன்னவைகளை ஒவ்வொருவரும் செய்ய வேண்டும். இதுவே இறைவன் நமக்கிட்டப் பணி. அதை எப்படி செய்ய வேண்டும் என்பது அவரவர் சூழ்நிலைகளைப் பொருத்தது. கல்வி கற்கும் மாணவன் தனது கல்வியில் உள்ள பின்னடைவுகளை நீக்க வேண்டும். கல்வியில் சிறந்து விளங்க அவனால் முடிந்த அளவு முயற்சி செய்ய வேண்டும், தனது பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும். சக நண்பர்களும் முன்னேற உதவவேண்டும். முயற்சியில் ஏற்படும் இன்ப துன்பங்களை பெரிது படுத்தாது இடைவிடாது முன்னேற வேண்டும்.

அது போல ஒவ்வொருவரும் தனது பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும் என்பதே இறைவன் நமக்கிட்ட கடமை.

இதை நான் உணர்ந்த பொழுது என்னில் இனம் புரியாத மாற்றத்தைக் கண்டேன். உயர வளர்ந்து பனை போல யாருக்கும் உதவாது நிற்கின்றேனே, அய்யனே! உனது தேவார திருப்புகழைப் பாடி எனது இருவினைகளை நீக்கி உன்தாள் சேர்வது எப்போதோ?

3.

கருத்துரை:

எவைகளைப் பார்த்து நான் பயந்து விலகி நின்றேனோ, அவற்றிலேயே ஈடுபடுத்தி, 'யாமிருக்க பயமேன்' என்றாயே. அவற்றிலே என்னை ஈடுபடுத்தி அவைகளை உணர்த்திய தன்மையை, எல்லோருக்கும் விளங்கும்படியும் விரும்பும்படியும் எழுத நற்கவிஞன் நான் அன்றே!

விளக்கம்:

பெரும்பாலும் பொறுப்புகளை சுமப்பது என்றால் எல்லோருக்கும் கசப்பாகத்தான் இருக்கும். நானும் அப்படித்தான். ஆனால் இறைவன் 'எதற்காக பொறுப்புகளைக் கண்டு பயம் கொள்கின்றாய்?, பொறுப்புகளை சுமந்து இருப்பவனால்தான் என்னை எளிதில் உணரமுடியும்' என்று பொறுப்புகளை சுமத்திவிட்டான். அவைகளை நிற்வகிக்க தெரியாது தடுமாறியப் போது, அறிவையும் பக்குவத்தையும் என் எண்ணத்தினுள்ளே இருந்து வெளிப்படுத்திய தன்மையை அடியேன் எவ்வாறு எடுத்துறைப்பேன்? சிறியேனால் முடியுமோ?

4.

கருத்துரை:

உனது அன்பாலும் அருளாலும் தன்னையும் தனது கடமைகளையும் உணர்ந்த, எண்ணத்தாலும் செயலாலும் உயர்ந்த, புலன்களைக் கட்டுப்படுத்தியவர்களுக்கு உன்னை உணர்த்தி முன்வினைகளின் விளைவுகளை அறுத்து பிறவா நிலையருளுபவனே.

விளக்கம்:

இறைவனுடைய அன்பையும் அருளையும் பெற்று அவனை உணரவேண்டும். அதற்கு முதலில் நாம் நம்மை உணர வேண்டும். மனமானது புலன்களின் வழி செல்லுகின்ற போது ஒரு நிலையான வழியில் செல்லவொட்டாது, மன அமைதியை குலைத்து, சஞ்சலத்தையும் சபலத்தையும் ஏற்படுத்தி, நடுனிலையை குலைத்துவிடும். மனிதன் அமைதி அற்று அலைவதற்கும், தோல்விகளை தாங்கமுடியாது மனம் உடைந்து வருந்துவதற்கும், நிற்வகிக்க முடியாமல் தடுமாறுவதற்கும், சோம்பலுக்கும் அவனது உறுதியற்ற தன்மையே காரணம்.

புலன்களைக் கட்டுப்படுத்தி, மனதை ஒருமுகப்படுத்தி, இறைவனைத் துதிக்கின்றவர்கள் மன உறுதியும் அமைதியும் பெருவதைக் கண்கூடாகக் காணலாம். சிலர் துன்ப காலத்தே மன ஆறுதலுக்காக ஆலயம் செல்வதை பார்த்திருப்பீர்கள். அவ்வாறு சென்று வந்தவர்கள் மன அமைதி பெருவதையும் காணலாம். மனம் வருந்தும்போது அதை எவ்வாறு நீக்குவது என்று ஒருமுகத்துடன் இறைவனை எண்ணித் துதிப்பதினால் ஏற்படுகின்ற மனத்தெளிவே அதற்குக் காரணம். அதுவே காலம் முழுவதும் ஒன்றிய மனத்தோடு இறைவனைத் துதிப்பவர்கள் தன்னை உணர்வது மட்டுமல்லாது, அவ்விறைவனையும் உணர்ந்திடுவர். அவ்வாறு இறைவனை உணர்ந்தகாலையில் இவ்வுலக வாழ்வுடன் பிணைத்திருக்கின்ற வினையை அவன் அவிழ்த்து விட்டு 'பிறவா நிலையை' அருளி என்றும் தன்னுடனே இருத்திக்கொள்வான். அவ்வாறு பெறுவதற்கும் அவனுடைய அன்பே காரணமென உணர்க.

5.

தெளிவுரை:

     அபரஞானம் - நூலறிவு
     பரஞானம் - அனுபவறிவு
     வறியோர் பிணி - பசி, அறியாமை

கருத்துரை:

நல்ல நூல்களை கற்பதினால் வருகின்ற அபரஞானமும் அனுபவத்தினால் வருகின்ற பரஞானமும் இல்லாவிட்டாலும் வறியோர்களின் பிணியாகிய பசியையும், அறியாமையும் போக்குவதற்கு இயன்ற அளவு முயன்றால் எளிதில் இறையருளை பெற்றிடலாம்.

விளக்கம்:

இறைவன் கருணையே உருவானவன். பிற உயிர்களிடத்து நாம் காட்டுகின்ற அன்பே இறைவன் நம் உள்ளத்தே உறைவதற்கு தகுந்த ஆதாரம். பிற உயிருக்கு துன்பம் விளைந்தபோது அதைக் கண்டு இறையன்பர்கள் தனக்குற்றதுபோல் துடித்துப் போவர். அதனைப் போக்கத் தன்னால் இயன்ற அளவு போராடுவர். தன்னால் இயலாதபோது இறையிடம் முறையிட்டு குறை களைவர். இறையுணர்வு பெற்று தன்னை உணர வேண்டின் பிற உயிரிடத்து நாம் கொள்ளும் கருணையே போதும்.

வினையின் காரணமாக பசியிலும், அறியாமையிலும் வாடுவோரின் குறைகளைய நம்மால் இயன்ற அளவு முயன்றால் அப்பரமனின் அருளை பெறுவதில் சந்தேகமில்லை.

6.

விளக்கம்:

நீ எண்குணத்தான்! உனது குணங்கள் என்னவென்று தெரியுமே தவிர உணர்ந்தானில்லை. அதனால் ஆசைகளினால் தீவினைகளை புரிந்து துன்பமுற்றேன். பிறகு உனதருளினால் உண்மையை உணர்ந்து உளம் உருகி நின்றேன். நீ உணர்விலே கலந்து நின்றாய். இதனை மறப்பேனோ!

7.

கருத்துரை:

கற்போர் சிந்தை மகிழும் வண்ணம் சிறப்பினைக் கொண்ட திருப்புகழையுடைய காஞ்சிமேவும் கந்தவேள் எனது வினைகளை களையும் பொருட்டு கந்தை போன்ற காவி வேட்டி அணிந்து மேற்துண்டணிந்து தந்தையாகவே வந்து எனை காக்கின்றார்.

விளக்கம்:

பெற்றோரே கண் கண்ட தெய்வம். நமக்கு அருள்புரியும் பொருட்டு இறைவன் தாய் தந்தையாக இருக்கின்றார். நமது செயல்களை பெரும்பாலும் தாய் தந்தையாக இருந்து நிற்வகிக்கின்றார்.

8.

கருத்துரை:

எல்லா வினைகளுக்கும் மூல காரணமாகவும், அவைகளின் பயனாகவும் இருந்து எண்ணுகின்ற அடியவரின் வினையை களைபவனே! வினைகளை புரிகின்ற அடியேன், செய்கின்ற எல்லா வினைகளுக்கும் மூலப் பொருளாக உனையே எண்ணுகின்ற மனத்தை அருள்வாயே.

விளக்கம்:

இவ்வுலகிலே நிகழ்கின்ற எல்லா வினைகளுக்கும் மூல காரணமாக நீங்கள் எதை எண்ணுகின்றீர்களோ அது வேறொன்றும் இல்லை, நம் இறையவனே. எல்லா இயக்கங்களின் உயிருக்கு உயிராக இருந்து அவ்வியக்கங்களை கட்டுப்படுத்துகின்றார். மனதளவில் நாம் ஒன்றுபட்டு செய்கின்ற செயல்களின் நோக்கங்களை நிறைவேற்றுகின்றார்.

பசிக்கு காரணம் அவனே. உண்டபின் உள்ள உணர்வாய் இருப்பவன் அவனே. அவனின்றி ஓரணுவும் அசையாது என்பதன் பொருள், அணுவுக்குள் உள்ள சக்தி அவனென்பதே. அணுவில் தொடங்கி பேரண்டமாய் விளங்குகின்ற விசையும் அவனே.

அவனையே எண்ணி உருகுகின்ற அடியவர்களுக்கு அவன் அவனையே அருளுகின்றான். ஒவ்வொரு சிறு சிறு செயலையும் பார்த்துப் பார்த்துஅவனுக்காகவே செய்கின்ற போது அந்த செயல்களின் விளைவு எவ்வாறு அடியவர்களை பாதிக்கும்?

முருகா! நான் செய்கின்ற செயல்களின் நோக்கமாக உன்னை மட்டுமே எண்ணுகின்ற மனதை அருளிடப்பா!

9.

கருத்துரை:

தீய எண்ணங்களுக்கெல்லாம் ஒரிடமாகி, கற்க வேண்டிய கலை நூல்களை கல்லாது இம்மாய உலகே நிலையென்று எண்ணி உழலுகின்ற சிறியேனை, தூய உனது இருபாதமலர் கொண்டு மாயை நீக்கி அருளவேண்டும்.

விளக்கம்:

இறைவா! காம, க்ரோத, கோப, லோப, மத மற்றும் மாச்சர்யங்கள் - இவைகளுக்கு ஓரிடமுண்டு எனில் அது என் மனமே. இத்தகைய எண்ணங்களால் கற்க வேண்டிய அறநூல்களைக் கல்லாது திரிகின்றேன். அறநூல்களைக் கல்லாததால், அறியாமையால் பொய்யான நிலையில்லாதவைகளை உண்மையென்று நம்பி, அவைகளிலே திளைக்கின்றேன். அடியேனுடைய அறியாமையை அகற்றி, உனது பாதமலரை அளித்திடுமாறு உனை பணிகின்றேன்.

10.

கருத்துரை:

உனைப்பற்றிய எண்ணங்கள் இவ்வுலக எண்ணங்களால் மறைந்து மீண்டும் தோன்றாது இருந்துவிடுமோ என பயந்து ஆழமாக உன்னையே எண்ணி உருகுகின்ற அடியவரின் உள்ளத் துயரை மாற்றி அவருடைய தீவினைகளின் தன்மையை நீக்கி அருளும் முருகோனே.

விளக்கம்:

நம்மில் பல பேருக்கு இறைவனைப் பற்றிய சிந்தனைகள் எழுந்தாலும் நம்முடைய அன்றாட குடும்ப பொறுப்புகளின் காரணமாக அதை பெரிதாக எண்ணாமல் விட்டுவிடுகின்றோம். ஆனால் அடியவர்கள் இத்தகைய உலக விஷயங்காளால் எங்கு தனது பக்தி குறைந்து விடுமோ என்கின்ற உள்ளுணர்வினால் இறைவனை ஆழமாக பக்தி செய்து உருகி வழிபடுவர். அத்தகையவரின் தீவினைகளை இறைவன் மாற்றி அருள்வான்.

உண்மையான பக்தி கொண்ட அடியவரின் உணர்வு எந்நிலையிலும் மாறாது எனினும் வாழ்வில் தான் அறியாமலும் தீமை புரிந்துவிடக்கூடாது என்கின்ற எச்சரிக்கை உணர்வின் காரணமாக அவர்கள் மேலும் பக்தி செய்வர். அத்தகையவரின் உணர்வை புரிந்து கொண்ட இறைவன் அவ்வடியவருடனே இருப்பதால் தீவினைகள் நெருங்காது என உணர்க.

11.

கருத்துரை:

இறைபக்தி இல்லாத ஒருவன் கொண்ட மலரும், விவசாயம் அறியாத ஒருவன் கொண்ட விதையும், அழுதுதறியாத அடியேன் கொண்ட உணர்வும் எழுத படிக்கத்தெரியாத ஊமை கண்ட கனவு போலவே.

விளக்கம்:

எழுதப்படிக்க தெரியாத ஊமை கனவு கண்டால் அதை எப்படி பிறருக்கு விளங்க வைக்க முடியாதோ, அதைப் போல இறையுணர்வு வேண்டி அழுது அறியாத சிறியேன் கொண்ட உணர்வை பிறரிடம் விளங்க வைக்க முடியாது தவிக்கின்றேன். அதனால் எனது இறைவனைப் பற்றிய சிந்தனை உழுதறியாதவனிடம் உள்ள விதை போலவும், பக்தி இல்லாதவனிடம் உள்ள மலர் போலவும் வீணாகின்றன.

12.

கருத்துரை:

உன்னைமட்டுமே எண்ணி உருகுகின்ற நிலைபேறுக்கு அழாது நிலையில்லாத பொருட்களைத் தேடி வினையேன் திரிகின்றேன். பனை மரத்தின் மீது நீர் கொண்ட பெருங்கருணையில் தினை அளவேனும் என் மீது காட்டுவதற்கு எண்ணமிருக்கின்றதோ?

விளக்கம்:

இவ்வுலகில் நிலயான ஒன்று எது? நாம் எதை நோக்கி போய் கொண்டிருக்கின்றோம்? ஒவ்வொருவரும் தன்னை நோக்கி கேட்க வேண்டிய கேள்விகள் இவை.

இறைவனை எண்ணி துதித்து அவனுக்காக அழுகின்ற நிலையே நிலையான பேறு. ஏனையவை இடையே தோன்றி இடையே மறைந்துவிடுபவை. ஆனால் சிறியேன் நிலையில்லாத பொருட்களைத் தேடி அவமே வாணாளை கழிக்கின்றேன்.

செய்யாற்றங்கரை - திருவோத்தூர் எனும் இடத்திலே, இறை அடியவரின் துயர் களையும்பொருட்டு ஆண் பனை மரங்களை பெண் மரங்களாக்கி அவைகளுக்கும் முக்தி அளித்தனையே. பனை போன்று வளர்ந்து உபயோகமற்று இருக்கும் அடியேனின் மீது கருணை கொள்ள எண்ணம் ஏதேனும் உளதோ?


English transliteration to come
go to top
 பட்டியல் 
 List 

Poems for Lord Murugan

venkAttilunaiyandRi
Thiru D. Suresh

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] .[css]