Kaumara ChellamKaumaram dot com - The Website for Lord Muruga and His Devotees

வையகத்தை
உய்ய வைப்போன்!
வைதாரையும்
வாழ வைப்போன்!!

கனக - மனோகரம்
(சட்டத்தரணி)

vaiyagathai
uyya vaippohn

Aarumuga


    இப்பக்கத்தை TSCII தமிழில் காண   கௌமாரம் இணையத்தில் தேடல் 
 இப்பக்கத்தை PDF தமிழ் எழுத்துருவில் காண (பிரிண்டரில் அச்சிட) 
    view this page in TSCII Tamil 
 search Kaumaram Website 



  வையகத்தை உய்ய வைப்போன்! வைதாரையும் வாழ வைப்போன்!!  

(கனக - மனோகரம் (சட்டத்தரணி))

   இந்துக்கள் இந்த உலகினில் எங்கெலாம் பரந்து வாழ்கிரார்களோ அங்கெலாம் சிறந்து விளங்குவது முருக வழிபாடு. ஆஃது பரத
கண்டத்திலும் பரவலாக இடம்பெறுவது. இந்தியாவின் வட புலத்தில் ஸ்கந்த வழிபாடு. தமிழ் நாட்டவர்களோ தமிழ்க் கந்தனைக் கை
தொழுகின்றார்கள். அழகன் முருகனிடம் ஆசை வைக்கின்றார்கள். அவனும் கோல மயிலோடு மட்டுமல்ல, பைந்தமிழ்ப் பண்பாட்டு
கோல எழிலோடும் அவர்கட்குக் காட்சி தருகின்றான்.

முருகு எனில் அருந் தமிழில் அழகையும் குறிக்கும். இளமையையும் குறிக்கும். அழகில் தமிழும் ஆடாத ஆய்மயில்; அசையாத
பூந்தளிர்; ஓடாத வள கங்கை; ஒயிலான இள மங்கை எனலாம். அவள்தான் வாழும் மொழிகளின் வயதான இளமகள். சுந்தரத் தமிழ்
அணங்கின் சீர் இளமைத் திறம் தனை வியந்து செயல் மறந்து வாழ்த்தியவர் மனோன்மணிய ஆசிரியர் சுந்தரனார் மட்டுமல்லவே!

தெய்வக் கனலில் கரு ஆனவன்! பொய்கைப் புனலில் உரு ஆனவன்!!

சூரர் குலம் அழிய, தேவர் துயர் அகல, முக்கண்ணன் தனது மூன்றாம் கண் திறக்க, ஆங்கு மூவிரு அனற் பொறிகள் பிறக்க, அவை
சரவணப் பொய்கையில் தாமரை மலர்களில் ஆறு திருமுருகன்கள் ஆகி பின்னர் மூவிரு முகங்கள் உள ஒரு முருகனாக உரு
எடுக்கிறது. இவ்வுண்மையை இச்செகத்தார் கச்சிதமாய் அறிந்திட கச்சியப்பர் வடித்த கவிதை வரிகள்,

   "அருவமும் உருவுமாகி ...
   அனாதியாய்ப் பலவாய் ஒன்றாய் ...
   பிரமமாய் நின்ற சோதிப் பிழம்பதோர் மேனியாகக் ...
   கருணை கூர் முகங்களாறும் ...
   கரங்கள் பன்னிரண்டுங் கொண்டே ...
   ஒருதிரு முருகன் வந்தாங் குதித்தனன் ...
   உலகம் உய்ய."


கலியுகத்தார் கலி அகற்ற வந்த திரிபுரம் எரித்த சிவமைந்தன் கலியுகக் கந்தன் எனும் அழைபெயரும் கொண்டவன்.

கலியுக வரதன்! கவின் தமிழ்க் குமரன்!!

கந்தவேள் கலியுகத்திற்கு மட்டுமல்ல, கவின்தமிழ் உலகிற்கும் தலைவனாக எல்லவராலும் ஏற்கப்படுபவன், ஏற்றியும் போற்றப்படுபவன்.

தமிழரின் தகை சால் வாழ்வு ஒரு மதம் சார் வாழ்வு. தமிழ் மாந்தருள் இல்லறத்தார் அடிமுடி இலானை முழுமுதற் பிரானாக
நினைப்பவர்கள். துறவறத்தார் அந்த ஆதி அந்தமிலான் நினைவில் சொந்த பந்தங்களைத் துறப்பவர்கள். இந்த இருசாரார் வாழ்விலும்
முருக வழிபாடு அதீ முக்கியத்துவம் பெற்றிருக்கின்றது.

அவர்கள் வண்ண மயிலினில் வருவானை அண்ணாமலைப் பெருமாளதும் உண்ணா முலை உமையாளதும் அரும்பெறல் பேறாக
அங்கீகரித்திருக்கிறார்கள். கந்தவேளை எந்தவேளையும் தொழுதால் நொந்த வேளை அந்த வேள் வருவான், அருள் தருவான் என
நம்புகின்றார்கள்.

அவர்கள் மனம் உருகி வழிபடும் முருகன், பிரணவ மந்திரத்தின் பொருள் அறியாத பிரமனையே வருத்தியவன். அப்பொருளை மெய்ப்
பொருளான அப்பனுக்கே உணர்த்தியவன்.

அவர்களைப் பொறுத்தமட்டில் பரமசிவனும் சிவகுருநாதன். அவன் இளையமகனும் சிவகுருநாதன். முன்னவன் சிவனாகிய
குருநாதன், பின்னவன் சிவனுக்கே குருவாய் அமைந்த நாதன்.

சைவப் பெருமக்கள் தொந்தி உள நாயகனை "முந்தி விநாயகன்" என விழிக்கிறார்கள். அவர்களுள் ஒருசாரர் "முதல் வணக்கம் எங்கள்
முருகனுக்கே" அளிக்கிறார்கள்.

ஆறு படைவீடு உடையான்! ஆறுதல் தரு பீடு உடையான்!!

தமிழ் நாட்டில் ஆயிரக் கணக்கில் ஆறுமுகனுக்கு ஆலயங்கள் உண்டு. அவற்றினுள், மேதாவிலாசமும், மேலான அருள்வாசமும்
கொண்டமைந்தவை ஆறுபடை வீடுகள். ஆறு தலைமீது கொண்டவன் பரமன். ஆறு படைவீடுகள் கொண்டவன் அவன் குமரன்.

தகப்பன் சாமிக்கு உவப்பான ஒரு மலை சுவாமிமலை. பன்னிரு கையோனின் இன்னோர் இருக்கை திருத்தணிகை. திருத்தணிகையில்
தனைப் பணிபவர் துயர் களைகிறான். ஞானப்பழம் நீ என அருகணைவோர்க்கு பழநியில் அருள்மழை பொழிகிறான். திருப்பரங்குன்றில்
அவன் சிரிக்கிறான். திருத்தமுள தமிழைத் தினம் ரசிக்கிறான்.

முருகனை "குன்றிருக்கும் இடம் எல்லாம் குடி இருக்கும் குமரன்" என்பர். குன்று தோராடல் கொண்டிருப்பவன் எங்கள் குன்றுருவ
வேலவன். இந்த மால் மருகன் மலைகளில் ஆசையோடு வீற்றிருக்கின்றான். அதேவேளையில் அலைகடல் ஓசையையும்
கேட்டிருக்கின்றான்.

   "கடல் ஆடும் இடம் என்றால் கந்தனுக்கும் ஆசை, அவன் வாழும் இடமெல்லாம் அலைகடலின் ஓசை"

பண்ணொடு அமைந்த பாடலடிகள் இவை.

   "ஆசை தரும் இன்பம் ஓர் ஆயிரங்கள் கண்டதிலே, ஓசை தரும் இன்பம் உவமையிலா இன்பமன்றோ?"

என்ற உண்மையை ஓசை நயம் கொண்ட இந்த கவிதை வரிகள் ஒப்புறுதி செய்கின்றன.

கூர்வேல் முருகன் திருச்சேந்தூர் நகரில் சந்தக் கடல் நீர்த் திவலைகளில் தான் நனைந்தும் இருக்கின்றான். பக்திப் பரவசக் கடலில்
தன் பக்தரை நனைத்தும் இருக்கின்றான்.

கோவில் வீடு ஆனது, வீடும் கோவில் ஆவது

மனிதர் உறையும் மனைகளை வீடுகள் என்கின்றோம். புனிதத் தெய்வங்கள் உறையும் இடங்களைக் கோ + இல்கள் என்கின்றோம்.
இந்த விதிக்கு விலக்காக ஆறுமுகப் பெருமான் உறைகின்ற ஆறு கோவில்களை ஆறு படைவீடுகள் என்கின்றோம். ஏன்?

   "பள்ளித் தலம் அனைத்தும் கோவில் செய்குவோம்."

நாமகள் உறையும் கூடங்களை நான்மாடக் கோவில்களாகக் காண விழைந்தவன் பாரதி என்ற பாட்டுக்கு ஒரு புலவன். நேருஜி என்ற
பாரத நாட்டு நல்முதல்வன் கல்விக்கூடங்களில் மட்டுமல்ல, உற்பத்திச் சாலைகளிலும் கோவில்களைக் கண்டு மகிழ்ந்தனன். பள்ளித்
தலங்கள் மட்டுமல்ல தனிமனிதர் அகங்கள்கூட கோவில்கள் ஆகிட முடியும். நாம் வையகத்தில் வாழ்வாங்கு வாழ்வோம் என்னில்,
எமது உள்ளங்கள் கபடங்கள் இலாத இதய கமலங்கள் ஆக இருக்கும் என்னில், எங்கள் இல்லங்கள் தானங்கள் தர்மங்கள் தங்கும்
தடாகங்கள் ஆக நிலைக்கும் என்னில், எங்கள் மங்கையர்கள் மா தவர்களாக இருப்பர் என்னில், அவர்தம் பங்கயக் கைநலம் பாரில்
அறங்கள் வளர்க்கும் என்னில், அன்பினதும் அறத்தினதும் இருப்பிடங்களாக அவர்கள் இருப்பிடங்கள் இருக்கும் என்னில், அங்கு
வடிவேலன் வருவான்; வள்ளி தெய்வானையோடு உறைவான். மைந்தனைக் காண திரிசூலனும் திரிபுரசுந்தரியுடன் வருகை தருவான்.
மருகன் இடத்து மனையவள் அலைமகளோடு மாலவனும் வந்துபோவான். இந்நிலையில் எங்கள் வீடுகள் கல்லாய் மண்ணாய் கதவாய்
நிலையாய் நிமிர்ந்து நிற்கும் வீடுகளாக அல்ல கடவுள்கள் நிசமாய் - நிலையாய் அமர்ந்திருக்கும் கோவில்களாக மாறிவிடும்.

"கோ" கள் வந்தால், உறைந்தால் அந்த இல் எலாம் கோவில்கள் கோவில்கள் தாமே?

Articles in Kaumaram dot com - The Website for Lord Murugan and His Devotees

Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com

If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com

 download Free Azhagi software and Tamil fonts (SaiIndira) 
 download free Tamil fonts only (SaiIndira) 


... www.kaumaram.com ...

The website for Lord Murugan and His Devotees

top

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] .[css]