Thiru. RamasubbuKaumaram dot com - The Website for Lord Muruga and His Devotees

மருதமலை மாமணியே
முருகையா!

திரு. ராமசுப்பு - சென்னை

Marudhamalai

Thiru Ramasubbu - Chennai

Valli-Murugan-Devayanai


    இப்பக்கத்தை TSCII தமிழில் காண   கௌமாரம் இணையத்தில் தேடல் 
 இப்பக்கத்தை PDF தமிழ் எழுத்துருவில் காண (பிரிண்டரில் அச்சிட) 
    view this page in TSCII Tamil 
 search Kaumaram Website 



  மருதமலை மாமணியே முருகையா!  

(திரு. ராமசுப்பு - சென்னை)

   தமிழுக்கென்று ஒரு தனிக்கடவுள் இருக்கிறான் என்றால் அவன்தான் முருகன். திருப்புகழும் தேனாக இனிக்கிறது என்றால்
அதில் உள்ளிருப்பவன் தமிழ்க்குமரன் என்பதால்தான். நாளையபொழுது நல்லபொழுதாக இருக்கவேண்டுமென்றால் இன்று இரவு
நீ படுக்கைக்குப் போகும் முன் "முருகா" என்று சொல்லிவிட்டுப் படு. காலையில் படுக்கையைவிட்டு எழுந்திருக்கும்பொழுது "முருகா"
என்று சொல்லிக்கொண்டே எழுந்திரு. அன்று நடப்பவையெல்லாம் நல்லதாகவே இருக்கும். உன் நினைவிலும் கனவிலும் முருகனே
தெரியவேண்டும். உன் சொல்லிலும் செயலிலும் அவனே இருக்கவேண்டும். அடுக்கடுக்கான துன்பங்கள் ஆயிரம் வந்தாலும், அதைத்
தடுத்து நிறுத்தி, நமக்கு ஆறுதல் அளித்து நம்மைக் கரையேற்றுபவன் அந்தக் கந்தன், குமரன், வடிவேலன்தான். நாம் கண்ணீர்விட்டு
கதறி அழுதால் கவலை தீர்ந்துவிடப்போவதில்லை. அக்கம் பக்கத்தில் இருப்பவனிடம் அழுது புலம்பினால், அவன் நம்மீது பரிவு
காட்டுவதுபோல நடிப்பான். நாம் அப்பால் சென்ற பிறகு "இவனுக்கு இதுவும் வேண்டும், இன்னமும் வேண்டும்" என்று சொல்லிக் கேலி
செய்வான், பூரிப்படைவான். ஆனால், முத்துக்குமரா, வடிவேல் முருகா, உன்னிடம் சொன்னால் என்னை அரவணைத்து உன்
அருட்பெருங் கருணையை எனக்கு அள்ளிக் கொடுப்பாய்.

சித்தர்களும் யோகிகளும், பண்பட்ட சிந்தனை கொண்ட ஞானிகளும் "முருகா" உன்னைப்பற்றி எத்தனையோ சொல்லிவிட்டுப்
போய் இருக்கிறார்கள். வானம், பூமி, நடுவினில் உலகம். இந்த உலகத்தில் நீ எனக்காக வகுத்துவைத்த பாதையிலே நான்
போய்க்கொண்டிருக்கிறேன். அதில் கல்லுமிருக்கும், முள்ளுமிருக்கும். சிலசமயம் பூவுமிருக்கும், மிருதுவான பஞ்சைப்போல
மெத்தையுமிருக்கும். உன் திருவடியே சரணமென்று உன்னைப் பக்தி செய்தால் அந்த மலரடியே எனக்கு முக்தியைக் கொடுக்கும்.

எத்தனை மலைமீது நீ நின்றிருந்தாலும், அந்த மருதமலை மீது உன்னைக் காணும்போது நான் என்னை மறந்து, உன்னை
நினைக்கிறேன். "மருதமலைக்கு நீங்க வந்து பாருங்க .. உங்க தீராத நோயெல்லாம் தீர்ந்து போகுங்க" என்று சொல்வதையும் நான்
கேட்டிருக்கிறேன்.

கொங்கு நாட்டுத் தலைநகரம் கோவையெனும் கோயமுத்தூருக்கு மேற்கிலே, மேற்குத் தொடர்ச்சி மலைகளால் மூன்று பக்கமும்
சூழ்ந்த காட்டுப் பகுதியிலே நட்ட நடுவே அமைந்த இந்த மலைதான் மருதமலை. மருத மரங்களும் பிணிதீர்க்கும் குடிநீரும்,
மூலிகைச் செடிகளும் இங்கே இருப்பதால் இந்த மலை மருதமலையென்றும், இங்கே குடிகொண்ட முருகனை மருதாச்சலமூர்த்தி,
மருதமலையான், மருதப்பன் என்ற பல பெயர்களாலும் அழைக்கிறார்கள்.

அசுரர்களில் எத்தனையோபேர் இருந்தாலும், சூரபத்மன் என்ற அசுரன் மட்டும் முருகனுக்கெதிராகவே "கொக்கரித்து"
கொடிபிடித்தான். அவனுடைய அட்டகாசம் அதிகரித்துக்கொண்டே போனது. தேவர்களும், இந்திரனும் திருமாலை நாடிப்போய்
முறையிட்டார்கள். திருமாலோ தானும் சேர்ந்து அவர்களோடு சிவபெருமானை நாடிப்போனார். சிவபெருமானோ அவர்களை முருகனாய்
நிற்கும் மருதமலையானை நோக்கித் தவம் செய்யுங்கள். முத்தான முருகன் அருள் புரிவான் என்றார். திருமாலும், இந்திரனும் மற்ற
தேவர்களும் அவ்வாறே செய்ய, முருகனும் அருள் பாலித்தான் என்று மருதமலை புராணம் கூறுகிறது. இது ஒரு பழமையான முருகன்
ஸ்தலம் என்பது திருப்பூரை அடுத்த திருமுருகன்பூண்டி என்ற இடத்திலுள்ள கல்வெட்டுகளின் மூலம் தெரியவருகிறது. கச்சியப்பர்
என்ற முனிவர் இயற்றிய பேரூர்ப் புராணத்திலும் இக் கோயில் பற்றி "மருதமலை" என்ற படலத்தில் மிகச் சிறப்பாகப் பாடியுள்ளார்.
இதில் முருகனின் கைவேல் மருதமரம் என்றும், "அருகில் வேலும் மருதமாயதே" என்று இந்த மரத்தின் அடியிலிருந்து பெருகும் நீர்
"மருந்து" என்றும் கூறப்பட்டுள்ளது. இதை அருந்தி மருதாசல மூர்த்தியான முருகனை வழிபட்டால் குழந்தை இல்லாதவர்களுக்கு
குழந்தை உண்டாகும். தீராத நோயும் தீர்ந்துபோகும் என்றும் சொல்லப்பட்டுள்ளது.

பதினென் சித்தர்களில் பாம்பாட்டிச் சித்தர் மருதமலையில் தவமிருந்து முருகனின் அருள் பெற்றார். இந்த மலைமீது ஏறிச் செல்ல
படிகளுமுண்டு. வாகனங்களில் செல்ல சாலை வசதியுமுண்டு. மருதப்பன் என்ற மருதமலை ஆண்டவனாகிய சுப்ரமணியர் இங்கே
நின்ற கோலத்தில் கொலுவிருக்கிறார். அலங்கார வடிவத்தில் மணிமகுடம் தரித்து வேலோடும், சேவற்கொடியோடும் தரிசனம்
தருகிறார். இதை திருமுருகப் பெருமானின் ஏழாவது வீடு என்றும் பெருமையோடு அழைக்கிறார்கள்.

இங்கு தைப்பூசம், தமிழ் வருடப்பிறப்பு, ஆடிக்கிருத்திகை, கார்த்திகை தீபம் போன்ற நாட்கள் விசேஷமாகக் கொண்டாடப்படுகிறது.
தங்கரதத்தில் முருகனை வைத்து இழுத்து வருவது இங்கு சிறப்பு தரிசனமாகும்.

மகப்பேறு அருளும் மருதமலையானை துதித்து அருள்பெறலாம்.

குருவாய் வருவாய் அருள்வாய் குகனே.

 ஆலய பக்கத்திற்கு இங்கே சொடுக்கவும். 

Articles in Kaumaram dot com - The Website for Lord Murugan and His Devotees

Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com

If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com

 download Free Azhagi software and Tamil fonts (SaiIndira) 
 download free Tamil fonts only (SaiIndira) 


... www.kaumaram.com ...

The website for Lord Murugan and His Devotees

top

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] .[css]